பூமிக்கு வெளியே அண்டவெளியில் பயணிக்கும் நாசாவின் இரண்டு விண்கலங்களில் ஒன்றான வாயேஜர் 2 கலனில் இருந்து சமிக்ஞைகள் மீண்டும் கேட்கத் தொடங்கியுள்ளது. இதனுடனான முழுத்தொடர்பையும் பெறும் நாசா விஞ்ஞானிகளின் தீவிர முயற்சி தொடர்கிறது. கட்டுப்பாட்டு மைய விஞ்ஞானிகள் சமீபத்தில் கலனுடன் தொடர்பை இழந்தனர். தவறாக அனுப்பப்பட்ட கட்டளையால் வாயேஜர் 2ன் ஆண்டெனா பூமியை நோக்கிய தன் இலக்கில் இருந்து இரண்டு டிகிரி சரிந்தது. இந்த சிறிய மாற்றமே பூமியுடனான இதன் தொடர்புகள் அனைத்தையும் துண்டிக்கப் போதுமானதாக இருந்தது.
வாயேஜர் ஒன்றும் இரண்டும்
வாயேஜர் 2 1977 ஆகஸ்ட் 20ல் ப்ளோரிடா கேப் கனேபரல் ஏவுதளத்தில் இருந்து டைட்டன் செண்டோரோ ஏவுவாகனத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அடுத்த செப்டம்பரில் இதன் சகோதர விண்கலனான வாயேஜர் 1 ஏவப்பட்டது. வாயேஜர் 2 வியாழன், சனிக் கோள்களை ஆராய்ந்து படமெடுக்கவும், சூரியக் குடும்பத்தின் வெளிப்பகுதியை ஆராயவும் அனுப்பப்பட்டது. இது ஆழ் விண்வெளிப் பரப்பை 2018ல் சென்றடைந்தது. வாயேஜர் 1 பூமியில் இருந்து 15 பில்லியன் மைல்/24 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வாயேஜர் 2 கலன் பூமியில் இருந்து 12 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது.இன்னும் உயிருடன் செயல்படும் கலன்
வழக்கமாக நாசா ஆய்வாளர்கள் விண்வெளியை ஸ்கேன் செய்தபோது வாயேஜரில் இருந்து அதன் இதயத் துடிப்புகளை கேட்க நேர்ந்தது. வாயேஜெர்2 இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
விண்கலனில் இருந்து சமிக்ஞைகளைப் பெற ஆழ் விண்வெளி பொருட்களைத் தேடும் வலையமைப்பு (deep space network) மற்றும் ரேடியோ சமிக்ஞைகளை ஆராயும் குழுக்களின் உதவி கோரப்பட்டது என்று வாயேஜரின் திட்ட மேலாளர் சூசன் டாட் (Suzanne Dodd) கூறுகிறார். கலனில் இருந்து துடிப்புகள் கேட்டதால் அது இன்னும் உயிருடன் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்ததில் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விண்வெளியின் ஆழ்பரப்பில்
சூரியனுக்கு அப்பால் இருக்கும் கோள்கள், அவற்றின் நிலவுகளை ஆராய ஒரு சில வார இடைவெளியில் வாயேஜர் 2 மற்றும் வாயேஜர் 1 கலன்கள் அனுப்பப்பட்டன. வாயேஜெர் 1, 2012ல் நட்சத்திரங்கள், அண்டவெளியில் இருக்கும் அணுக்கள், மூலக்கூறுகள், மின்சுமையுடைய துகள்கள், கறுப்பு ஆற்றல் (dark matter) போன்றவை அடங்கிய விண்வெளிப் பரப்பை (Interstellar space) ஆராயந்தது.
பூமியில் இருந்து விண்வெளியில் மிகத் தொலைவில் பயணம் செய்து கொண்டிருக்கும் விண்கலன் இதுவே. 2018ல் வாயேஜர் 2 வியாழனின் புதிய நிலவு, யுரேனசின் பத்து நிலவுகள், நெப்டியூனின் ஐந்து நிலவுகளை கண்டுபிடித்த பிறகு ஆழ் விண்வெளிப் பரப்பை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியது.
சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லா நான்கு பெரிய கோள்களையும் நெருங்கிச் சென்று ஆராய்ந்த ஒரே கலன் வாயேஜர் 2 கலனே. இந்த கலனில் இருந்து அது செயல்படுவதற்கு அடையாளமாக அதன் இதயத்துடிப்புகள் கேட்டன என்றாலும், விஞ்ஞானிகளின் புதிய கட்டளைகளை ஏற்று அது இன்னும் செயல்படத் தொடங்கவில்லை.
மீட்பில் புதிய முயற்சி
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆழ் விண்வெளிப் பரப்பை ஆராயும் கேன்பரா டிஷ் விரைவில் சரியான கட்டளையை அனுப்பி கலனின் ஆண்டெனாவை பூமியை நோக்கி திருப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று கலிபோர்னியா பாசடினா (Pasadena) ஜெட் உந்துவிசை ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தங்கள் நாற்பது ஆண்டு கால விண்வெளிப் பயணத்தில் இரண்டு வாயேஜர் கலங்களும் எண்ணற்ற சவால்களை சந்தித்துள்ளன. வாயேஜர் 1 இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வியாழனுக்கு செல்லும் பயணத்தின்போது இதன் ரேடியோ ஏற்பியின் சேகரம் தவறுதலாக இயக்கப்பட்டதால் அது எரிந்து போனது. மீண்டும் விஞ்ஞானிகள் இதை சரிசெய்தனர்.
சனிக்கோள் வழியாக பயணித்த பிறகு வாயேஜர் 2 கலனின் புகைப்படக்கருவி மசகு எண்ணெய் பற்றாக்குறையால் இயங்காமல் நின்றுபோனது. 2010ல் இந்த கலனில் ஏற்பட்ட மற்றொரு கோளாறால் அதன் அறிவியல் தரவுகளின் சேகரம் தற்செயலாக பழுதடைந்தது. மற்ற நாசா திட்டங்களில் இருந்து பொறியியலாளர்கள் இந்த பிரச்சனைகளை சரிசெய்ய அவ்வப்போது வந்து பணி புரிவதால் இந்த இரண்டு கலன்களையும் விண்வெளியில் பறக்க வைப்பது மகத்தான ஒரு அறிவியல் கலையாக மாறியுள்ளது.
காலத்தின் ஓட்டத்தில்
இவை ஏவப்பட்டபோது நாசாவில் பணிபுரிந்த விஞ்ஞானிகள் பலரும் இப்போது அங்கு இல்லை. இவை இரண்டிற்கும் 4 கிலோ பைட் சேமிப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது. இவற்றின் கணினித்தொகுப்பு ஆற்றல் (computing power) இப்போது உள்ள நவீன ஸ்மார்ட் போன்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு மெதுவாகவே செயல்படுகிறது.
இது சூரியனால் உருவாக்கப்பட்ட குமிழ்களாலான துகள்கள் மற்றும் காந்தப்புலப் பாதுகாப்பு பகுதியைக் கொண்ட ஹெலியாஸ்பியர் (heliosphere) என்று அழைக்கப்படும் விண்வெளிப் பகுதியைக் கடந்து சென்ற பிறகு ஆழ் விண்வெளியில் நுழைந்தது. என்றாலும் இரண்டு கலன்களும் இன்னும் சூரிய குடும்பம் அடங்கிய வான் பரப்பைத் தாண்டிச் செல்லவில்லை. ஊர்ட் (Oort) மேகங்களுக்கு அப்பால் இருக்கும் பகுதியே சூரியக் குடும்பத்தின் எல்லை முனையாகக் கருதப்படுகிறது.
ஹேலியோஸ்பியர்
இங்கு சூரியனின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு இயங்கும் சிறிய காச்மிக் பொருட்கள் உள்ளன. வாயேஜர் 2 ஊர்ட் மேகங்கள் உள்ள பகுதியை அடைய இன்னும் 300 ஆண்டுகளும் இதைக் கடந்து செல்ல 30,000 ஆண்டுகளும் ஆகும் என்று நாசா கணக்கிட்டுள்ளது.
வாயேஜர் 2 ஒளியின் வேகத்தில் பயணம் செய்தாலும் பூமியில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் இதில் இருந்து சமிக்ஞைகள் பூமியை வந்தடைய 18 மணி நேரமாகிறது. இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி பலனளிக்கவில்லை என்றால், வரும் ஒருசில மாதங்களில் விண்கலன் தானியங்கி முறையில் தன்னை மறுசீரமைப்பு செய்யும்போது பூமிக்கும் இதற்குமான தொடர்புகள் மீட்கப்படும் என்ற நம்பிக்கையுடன் நாசா ஆய்வாளர்கள் காத்திருக்கின்றனர்.
மேற்கோள்கள்:
&
https://www.mathrubhumi.com/science/news/nasa-hears-signal-from-voyager-2-spacecraft-1.8784672
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்