மனிதன் வேட்டையாடும் சமூகநிலையில் இருந்து விடுபட்டு நாகரிக உலகத்தைக் காண்பதற்கு முதல் படிக்கட்டாக இருந்தது பகுத்தறிவு நெறியே ஆகும். மனிதன் கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தித் தனக்குத் தேவையான பொருட்களை சேகரிக்கும் திறன் பெற்ற காலத்தில், அவனது கைகள் உட்பட உடல் உறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டது. இதனை உடல் கூறுகளின் மாற்றத்தின் தொடக்கம் என்றும் மானுட இயலாளர்கள் குறிக்கிறார்கள்.
பொருள் உற்பத்தி முறையில் மாற்றங்கள் ஏற்பட ஏற்பட, மூளை உட்பட பல உறுப்புகளின் செயல்களில் வளர்ச்சிப் பரிமாற்றம் பற்றிப் பல மானுட இயலாளர்கள் தரவுகளுடன் ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். பொருளியல் அறிஞர்களில் காரல் மார்க்சு, மானுட இயல் நெறியை இணைத்துத் தனது கொள்கைகளைக் குறிப்பிட்டார் என்று அமெரிக்க நாட்டின் மானுட இயல் பேராசிரியர் தாமஸ் பேட்டர்சன் தனது நூலில் உடல் சார்ந்த அமைப்புகள், சமூக உறவுகளின் பொதுத் தோற்றம், தனி நபரின் சமூகம் சார்ந்த உறவு முறை, மானுட சமூகத்தின் வரலாற்று இயல் வேறுபாடுகள் அயலாடும் தன்மை புறநிலை கூறுகள், உற்பத்தி உழைப்பு, மறு உருவாக் கம், சுதந்தரமான நடைமுறைச் செயல்கள் வரலாற்றுச் சார்பியல் கூறுகள் சமூக உறவுகள் ஆகியன பற்றி மெய்யியல் சார்ந்த மானுட இயலை மார்க்சு முதன்முத லாக விளக்கினார். Karl Marx – Anthropologist.
குறிப்பாக, சமணமும் பௌத்தமும் பகுத்தறிவின் வெளிப்படையாகவே தோன்றின. காலப்போக்கில் பார்ப்பனியமும் மதக் கோட்பாடுகளும் இணைந்து, சமுதாயத்தில் ஏற்பட்ட நல்ல நெறிகளைச் சிதைத்தன. பகுத்தறிவு வளர்ச்சியும் மானுடத்தின் பல்வேறு கூறு களின் வளர்ச்சியில் இணைந்தே வந்தது. மானுட விடியலின் பயணம் தொடரும் போதே ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பே மதக்கோட்பாடுகளும் சமூகங்களில் நாடுகளில் செல்வாக்கைச் செலுத்தின.
அசோகர் காலத்திற்குப் பிறகு பௌத்தத்தின் செல்வாக்கு சிதைந்தது இக்கூற்றிற்குச் சான்றாகும். ராஜகுருக்கள் மாறுவதில்லை என்பதை அறிஞர் அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தில் குறிப்பிட்டார். பெரும் பாலான உலக நாடுகளிலும் மதகுருமார்கள் மக்களுக்கு எதிராகச் செய்த கொடுங்கோல்களைப் பல வரலாற்று ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். இவ்வாறாக மன்னர் களும் மக்களும் மத போதகர்களின் மடியில் சாய்ந்தனர்.
இடைக்காலத்தில் மதம் ஒரு பெரும் சக்தியாக சமுதாயத்தில் உருக்கொண்டது. 15ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பிய நாடுகளில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தாக்கத்தால் அறிவியல், பண்பாட்டு, வரலாற்றுப் பொருளாதாரத் தளங்களில் முற்போக்கான மாற்றங்கள் தோன்றின. அறிவியலின் தாக்கம் உயர்ந்து வளர ஆரம்பித்தது. அறிவியல் அறிஞர்களான கலிலியோ, கோப்பர் நிக்கஸ் போன்ற அறிஞர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் வழியாக மதம் கூறிவந்த மூடக்கருத்துகள் பொய் என்பதை மெய்ப்பித்துக் காட்டினர்.
உண்மையைக் கூறியதற்காக கிறித்தவ திருச்சபை தலைமை இந்த அறிவியல் அறிஞர்களைத் தண்டித்தது. ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பின்பற்றப்படுகிற மத நம்பிக்கைகளுக்கும் கடவுளுக்கும் எதிராக இவர்கள் செயல்படுகிறார்கள் என்று கூறியது. அறிவியல் தகவல் புரட்சி மேலோங்கி மூடநம்பிக்கைகளைப் புரட்டிப் போடுகிற 21ஆம் நூற்றாண்டில்தான் அறிவியல் அறிஞர்களைத் துன்புறுத்தியது தவறு என்று வாட்டிகன் தலைமை கிறித்துவத் திருச்சபை மன்னிப்புக் கோரியது.
ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை, புரட்டுகளாக மாற்றி மதவாத சக்திகள் மேலோங்கி நடுவண் அரசின் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு உயர்த்தி வருகிறது. மீண்டும் இந்தியத் துணைக்கண்டத்தை இருட்டறையில் தள்ள முற்படுகிறது. வெறுப்பது, பிரிப்பது, முட்டாள்தனத்தை முதன்மைப்படுத்துவது, கற்பனையை உண்மை என்பது அறிவியல் நெறிகளுக்கு மதச்சாயம் பூசுவது போன்ற பணிகள் நடுவண் அரசின் துணையோடு அரங்கேறி வருகின்றன.
இந்திய அறிவியல் மாநாட்டில் நாட்டின் பிரதமர் மோடி கலந்துகொண்டு வேதகால அறிவியல் உண்மையானது என்று கூறுகிறார். தற்காலத்தில் குழந்தை பிறப்பிற்காகச் செயற்கை கருவூட்டல் முறை வெற்றிபெற்று வருகிறது. இம்முறை மகாபாரத காலத்திலேயே இருந்தது அதனால் தான் கர்ணன் தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்கிறார். தற்கால நெகிழி அறுவை சிகிச்சைவழியாக (Plasitic Surgery) முகம் உடல் உறுப்பு மாற்றங்கள் செய்யப் படுகின்றன. இந்த அறிவியல் புரட்சி வேதகாலத்திலேயே தொடங்கப்பட்டது. யானையின் தலையை, பிள்ளையார் உடலில் இணைத்தனர் என்றும் மோடி குறிப்பிட்டு, இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு உலை வைக்கிறார்.
மேலும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி ஆய்வு மையங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வரலாற்றுத் திரிபுவாதம் விரைவுபடுத்தப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் சரசுவதி வழிபாடு எல்லா அரசு பள்ளிகளிலும் உருது வழிக் கல்விப் பள்ளிகளிலும் கட்டாயப்படுத்தப்படுகிறது. மதச்சார்பற்ற தன்மையை மாநில அரசே புதைகுழிக்கு அனுப்புகிறது. சத்திஸ்கர் மாநிலத்தில் கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் சரசுவதி படங்களை மாட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அப்பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர்களை அருள்தந்தை என்று அழைக்கக்கூடாது என்று கட்டளையிடுகிறார்கள்.
சில ஆயிரம் பேர்கள் கூட எழுதப்படிக்கத் தெரியாத சமஸ்கிருத மொழியை நடுவண்அரசின் பள்ளிகளில் கட்டாயப் பாடாமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்காலக் கட்டத்தில் பகுத்தறிவு நெறியையும்சமதர்ம நெறி யையும் உயர்த்திப் பிடித்து அதற்கான களத்தை உருவாக்கும் முயற்சியில் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் முன்னின்று போராட வேண்டும்.
இவ்வகையில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு தனது 80வது ஆண்டு நிறுவன விழாவை திருப்பதியில் ஆகஸ்ட் 2015 12 முதல் 14 வரை காவிமயமாக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தும் சாதிமத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் அகில இந்திய அளவில் மாண வர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.
ராஜா ராம்மோகன் ராய் ஜோதிபாய் புலே, பகத் சிங், காரல் மார்க்சு, லெனின் போன்ற சமூகச் சிற்பிகளின் படங்களை மாநாட்டுப் பந்தலில் வைத்திருப்பது போற்று தற்குரியது. தந்தை பெரியாரின் படத்தையும் இம்மாநாட் டின் அரங்கில் வைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் மத சாதி மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பெரும் களத்தை கட்டியமைத்துத் தொடர் பரப்புரைகளால் செய்த சமூக மாற்றங்களை சாதனை களை யாரும் மறுத்துவிட முடியாது.
சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்களின் முன்னிலையில் 26.12.1931 அன்று நடைபெற்ற சென்னை சுயமரியாதை மாநாட்டில் சிங்கார வேலர் தனது உரையில், அறியாமை இருள் இருப்பதால்தான் எல்லா மதங்களும் தத்துவங்களும் சாத்திரங்களும் இயக்கங்களும் இந்த நாட்டில் தோன்றி யுள்ளன; மதங்களே அறியாமையில் இருந்து புறப்பட்ட வை, சாதி இந்தியாவில் முளைத்த ஒரு கற்பனை என்றே கூற வேண்டும் எனக்கோர் வழித் தோன்றுகிறது.
பகுத்தறிவை உயர்தரக்கல்வி மூலமாக வளரச் செய்ய வேண்டுமென்பது; இதிலும் கபடமிருக்கிறது. சென்ற 50 ஆண்டுகளாக உயர்தரக் கல்வியில் தேர்ச்சியடைந்து வரும் பிராமணர்கள் சாதியை விட்டபாடில்லை. நமது ராஜகோபாலச்சாரியும் சத்தியமூர்த்தியும் புணூலைக் கழற்றி எறிந்தார்களா? இல்லை என்றால் எங்கே உயர்தரக் கல்வியின் பயன்?...பாமர மக்களுக்குச் சுடரொளியாக உங்கள் இயக்கம் வந்துள்ளதாக எண்ணு கிறேன். நீங்கள்தான் இந்த ஆயிரம் தலையுடைய விஷப்பாம்மை நசுக்க வேண்டும்.
உங்களால் ஆகா விட்டால் உலகிற்கு இனி எந்த நம்பிக்கையும் கிடையாது-சமதர்மமே அதாவது மதமற்ற சாதி வேற்றுமையற்ற பொருளாதார வேற்றுமையற்ற தருமமே நமது நாட்டையும் மற்ற நாடுகளையும் காப்பாற்றவல்ல இயக்கமாகும் (சிங்காரவேலர் சொற்பொழிவு புலவர் பா.வீரமணி 2014).
பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலரின் இந்த முற்போக்கான சிந்தனையை-கருத்தைக் கடைபிடிக்க வேண்டியதும் பரப்புவதும் இளைஞர்களின் கடமையாக வேண்டும். பகுத்தறிவு பொதுவுடைமை நெறிகள் உயர் கல்வி பாடங்களில் இன்றளவும் இடம் பெறவில்லை. அதற்கு மாறாக இந்துத்துவா கருத்துகள் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை திணிக்கப்படும் மிகவும் ஆபத்தான நிலைதான் உள்ளது.
அறிஞர் அமர்த்தியா சென் போன்றவர்களை நாளந்தா பல்கலைக் கழகத்தில் இருந்து விலகச் சொல்லிவிட்டார்கள். காரணம் அக்பர் தனது ஆட்சிக்காலத்தில் ஆக்ரா நகரில் இந்துக்கள் இசுலாமியர்கள் கிறித்துவர்கள் பார்சிகள் சமணர்கள் பௌத்தர்கள் யூதர்கள் கடவுள் பற்றிய கவலையற்ற வர்கள் நாத்திகர்கள் ஆகியோரிடம் கருத்தறிந்து ஒரு நடுநிலையான மதச்சார்பற்ற முறையை உருவாக்க முனைந்தார். இந்தக் கருத்துத் தான் இந்திய அரசியலின் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற தன்மைக்கு அடிப்படையாக அமைந்தது என்று சென் தனது நூலில் குறிப்பிட்டார்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதாரச் சிந்தனையாளராக இருந்தால் என்ன? எங்கள் கருத்துக்கு எதிர் கருத்தை முன்மொழிவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடிவும் என்று கூறி நாளந்தா பல்கலைக் கழகத்தையும் காவிமயமாக்க முற்படுகின்றனர். இது போன்று மூடநம்பிக்கைக் கருத்துகளுக்கு எதிராகக் களமாடிய அறிஞர்களான மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் நரேந்திர தபோல்கர் (2013) கோலாப்புரில் பொதுவு டைமை எழுத்தாளரும் பகுத்தறிவாளருமான கோவிந்த பன்சாரே, கர்நாடக மாநிலத்தின் சிறந்த கல்வியாளரும் முன்னாள் துணைவேந்தரும் பகுத்தறிவாளருமான கல்புர்கி ஆகியோர் இந்து வெறியர்களால் கொல்லப்பட் டார்கள். இன்றளவும் கொலையாளிகளைக் காவல் துறையினர் கண்டுபிடிக்கவில்லை என்பது இந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கு விடப்படுகிற பெரும் அறைகூவ லாகும்.
இந்தியா விடுதலைப் பெற்று 69 ஆண்டுகளாகியும் எல்லோருக்கம் கட்டாயக் கல்வி வழங்கப்படவில்லை. சமூகத்தின் அடித்தளத்தில் வாழும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச்சத்தும் கல்வி பெறும் உரிமையையும் இன்றளவும் அளிக்கவில்லை. நிரந்தரமாக தில்லியில் உள்ள ஆதிக்கச் சாதியினர் தங்களது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
புதுதில்லியின் நிர்வாகத்தை மேற் கொண்டிருக்கிற பெரும்பான்மையான உயர் அலுவலர் கள் உயர்சாதியைச் சார்ந்தவர்களாக உள்ளனர். 65 ஆண்டுக்கால இடஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்டவர்களுக் கும் பழங்குடியினர்க்கும் வழங்கப்பட்டும் கூட, உயர் நிலைப் பதவிகளில் இன்னும் இந்தப் பிரிவினர் 15 விழுக்காடு கூட இடம் பெற முடியவில்லை.
1994க்கு பிறகு இதர பிற்படுத்தப்பட்டோர்க்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டும் அவர்கள் உயர் பதவிகளில் 6 விழுக்காடு கூட இடம் பெறவில்லை. உயர்சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம் மீண்டும் மோடி அரசின் உருவில் புத்துணர்வு பெற்று வருகின்றன. பெரும்பாலான மக்களின் நிலம் போன்ற வாழ்வாதாரங்களைப் பறிப்பதில்தான் நடுவண் அரசு அக்கறையாக உள்ளது. முதலாளித்துவம் உலகமயமாதல் கொள்கை என்ற பெயரில் இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடிப் பதில் உள்நாட்டு பன்னாட்டு முதலாளிகள் கைகோத்து உள்ளனர்.
தனியார் அச்சு ஒளி ஊடகங்கள் அனைத்தும் ஆரிய மத மாயைகளை நிலைநிறுத்தப் படாதபாடுபடு கின்றன. காலையில் வானொலி, தொலைக்காட்சிகளில் மதக்கடவுள் பாடல்கள் சோதிட கருத்துகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. முதலாளித்துவமும் மதவாதமும் இன்று இந்தியாவில் கைகோத்து நிற்பது போல் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்பதை மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள் கல்வியாளர்கள் நடுநிலையாளர்கள் இன்றும் உணரவில்லை. பெரும்பான்மை மக்களுக்கு எதிராக நச்சுப் பாம்பு போல சமுதாயத்தில் ஊடுருவும் இவ்வித எண் ணங்களுக்கு எதிராகக் களம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவேஇல்லை.
19ஆம் நூற்றாண்டில் காரல் மார்க்சும் ஏங்கல்சும் தங்களின் படைப்புகளில் முதலாளித்துவம் ஏற்படுத்தும் வளர்ச்சியையும் தொழில்நுட்பத்தையும் உணர்ந்து அதனால் ஏற்படும் இறுதி விளைவுகளைத் தெளிவாக உலகிற்குச் சுட்டினார்கள். தனது உற்பத்தி முறையால் முதலாளித்துவம் சமூகத் தளத்தில் ஏற்றத்தாழ்வையும் வர்க்கப் போராட்டங்களையும் உருவாக்குகிறது. முதலாளித்துவம் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தாலும் உழைப்பாளியின் இரத்தத்தை உறிஞ்சுகிறது. மூலதனம் என்பது இழந்துவிட்ட உழைப்பு. குருதியைக் குடிக்கும் வெளவால் போன்று உயிர்ப்புமிக்க உழைப்பை மேலும்மேலும் உறிஞ்சினால்தான் மூலதனம் வாழும் என்று சுட்டினர்.
உற்பத்திச் சாதனங்கள் ஒருவரிடமே, ஒரு மையத்திலேயே குவிக்கப்பெறுதல் நிகழ்ச்சி (Centralization) நடைபெறுகிறது (மூலதனம் தொகுதி 1 பக்.1146-தமிழாக் கம் க.ரா.ஜமதக்னி). இன்றைக்கு இந்தியாவில் ஒரு சிலர் கையில் உற்பத்திச்சாதனங்கள் குவிந்து வருகின்றன. மார்க்சு எதிபார்த்ததற்கு மேல் முதலாளித்துவ ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. இந்திய அரசினுடைய பல சட்ட விதிகள், வரி அமைப்பு முறைகள் முதலாளிகள் நலனிற் காகவே மாநிலங்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. நடுவண் அரசிடம் அதிகாரம் குவிக்கப்படுகிறது.
இதன் விளைவு என்னவாக இருக்க வேண்டும் முதலாளித்து வத்தனியுடைமை அழிவதற்குச் சாவுமணி அடிக்கப்பட வேண்டும் என்று மார்க்சு விரும்பினார். பாட்டாளிகளின் தனியுடைமைகளைப் பறிமுதல் செய்த முதலாளிகளின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பறிமுதல் செய்தோர் பறிமுதல் செய்யப்படுகின்றனர் (The expropriators are expropriated) என்ற மார்க்சின் கனவு நிறைவேறுமா? இத்தகைய உண்மைகளைப் பொருளா தார சமூக புரட்சியை இளைஞர்கள்தான் எடுத்துச் செல்ல முடியும்.
மார்க்சும் பெரியாரும் விரும்பிய மாற்றங்களை இந்தியா பெறுவதற்குப் பகுத்தறிவும் பொதுவுடைமை நெறியும் தழைத்தோங்க வேண்டும். மாணவர்கள் இளைஞர்கள் சமுதாயப் பொருளாதார தளங்களில் நடை பெறும் மக்கள் விரோதச் சட்டங்களை, நடவடிக்கை களைப் புரிந்து கொண்டு முறியடிக்க வேண்டும். அப்போது தான் புரட்சியாளர் களின் கனவு நனவாகும். பெரியோர் சிந்திக்கின்றனர் இளைஞர்கள் வென்றெடுக்கின்றனர் என்ற இரவீந்தரநாத் தாகூரின் வரிகளை இச்சூழலில் நினைவுகூர்வது அவசியம். பகுத்தறிவும் பொதுவுடைமையும் வெல்க!
(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் கருத்தரங்கு பேச்சின் கருத்தாக்கம்)