இரண்டு முகங்கள் உடைய ஒரு நட்சத்திரத்தின் கண்டுபிடிப்பு விண்வெளியியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெள்ளைக் குள்ள நட்சத்திரம் (White dwarf) ஒரு பக்கம் முழுமையாக ஹைடிரஜனையும், மற்றொரு பக்கம் ஹீலியத்தையும் கொண்டுள்ளது. ஒற்றை நட்சத்திரம் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு உள்ளடக்கங்களை கொண்ட இரண்டு முகங்களுடன் காணப்படுவது இதுவே முதல் முறை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த விண்மீனின் தரைப்பரப்பு ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது என்று இது பற்றி ஆராயும் கால்டெக் (Caltech) அமைப்பின் ஆய்வுக்குழு தலைவர் மற்றும் வானியல் இயற்பியலாளர் டாக்டர் இலாரியா ஸெயாஸோ (Dr Ilaria Zaiazzo) கூறுகிறார். இந்த நட்சத்திரம் ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் சிக்னஸ் (Cygnus) விண்மீன் கூட்டத்தில் உள்ளது.two faced white dwarfகிரேக்க கடவுளின் பெயர்

மாறிக் கொண்டேயிருக்கும் இரண்டு முகங்களுடன் உள்ள ஜனஸ் (Janus) என்ற கிரேக்க கடவுளின் பெயர் இதற்கு பட்டப் பெயராக வைக்கப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் ZTF J1901+1458. இந்த நட்சத்திரம் யு எஸ் சாண்டியாகோவிற்கு அருகில் இருக்கும் கால்டெக் நிறுவனத்தின் பலாமர் (Palomar) என்ற இடத்தில் உள்ள ஸ்விஸ்கி ட்ரான்ஸ்சியண்ட் மையத்தால் (Zwizky Transient Facility ZTF) முதல்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

நட்சத்திரங்களைத் தேடிக் கொண்டிருந்தபோது தன்னந்தனியாக பிரகாசித்துக் கொண்டிருந்த இதன் இரண்டு முகங்களை இலாரியா கண்டுபிடித்தார். தொடர்ந்து ஆராய்ந்தபோது ஜனஸ் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக் கொள்வது கண்டறியப்பட்டது.

ஒரு நட்சத்திரத்தின் வேதிக்கூறுகள் (Chemical finger prints) பற்றிக் கூறும் ஸ்பெக்ட்ராமெட்ரி அளவுகளின் உதவியுடன் இதன் ஒருபக்கம் முழுமையாக ஹைடிரஜனாலும், மற்றொரு பக்கம் ஹீலியம் வாயுவினாலும் நிறைந்திருப்பதை அறிய முடிந்தது.

நெருக்கமாகப் பார்க்கும்போது இதன் இரண்டு பக்கங்களும் நீல நிறத்துடன் இருப்பது போலத் தோற்றமளிக்கிறது. இரண்டு பக்கங்களிலும் பிரகாசத்தின் அளவு ஒரேபோல் உள்ளது. ஆனால் உண்மையில் ஹீலியம் இருக்கும் பக்கம் சூரியனின் தோற்றத்தில் உள்ளது போல திட்டுகளுடன் காணப்படுகிறது. ஹைடிரஜன் வாயு நிரம்பிய மற்றொரு பக்கம் மிருதுவாகக் காட்சி தருகிறது.

அதிசயிக்க வைக்கும் மாற்றங்கள்

வெளிப்புறம் சுழலும் வாயுக்களால் ஆனதால், ஜனஸ் விண்மீனின் இந்த வினோதமான இரண்டு முகங்களுடன் உள்ள தோற்றத்தை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குவது கடினம். இவ்வாயுக்களை ஒன்றில் இருந்து மற்றொன்றைப் பிரிப்பது மிகக் கடினம். ஒரு நட்சத்திரம் மரணமடையும்போது நிகழும் பரிணாம மாற்றத்தில் அது வெள்ளைக் குள்ள நட்சத்திரமாக மாறுவது இயல்பு. ஜனஸில் இப்போது இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று இலாரியா கூறுகிறார்.

இன்று நம் சூரியன் செயல்திறனுடன் இயங்குவது போல ஒருகாலத்தில் செயல்பட்ட நட்சத்திரம் இறக்கும்போது உருவாகும் மீஉயர் வெப்பத்தால் புழுங்கப்பட்டு அவற்றின் மிச்சம் மீதிகள் வெள்ளைக் குள்ள நட்சத்திரமாக மாறுகிறது. விண்மீன்கள் மேலும் வயதாகும்போது அவை சிவப்பு ராட்சச நட்சத்திரங்களாக மாறுகின்றன. அந்த நிலையில் அவற்றின் நிறை குறைந்த வெளிப்பொருட்கள் உயர் வேகத்துடன் வீசியெறியப்பட்டு வெளித்தள்ளப்படுகின்றன.

கருப்பகுதியில் இருக்கும் பொருட்கள் அடர்த்தி மிகுந்த, தீப்பற்றி எரியும், சூடான வெள்ளைக் குள்ளனாக மாறுகின்றன. அந்த நிலையில் அவற்றின் நிறை சூரியனின் நிறையைப் போல ஏறக்குறைய சமமானதாக இருக்கும். ஆனால் அவற்றின் அளவு நம் பூமியின் அளவே இருக்கும். நட்சத்திரத்தின் அதிதீவிர காந்தப்புலம் கனமான பொருட்களை உட்கருவில் மூழ்கச் செய்கின்றது. லேசான பொருட்களை மிதக்கச் செய்கின்றது.

இதனால் இந்த நட்சத்திரம் கீழடுக்கு ஹீலியத்தாலும், மேலடுக்கு லேசான ஹைடிரஜனின் மெல்லிய அடுக்காலும் ஆக்கப்பட்ட இரு அடுக்கு வாயு மண்டலத்தைக் கொண்டதாக மாறுகிறது. இது 30,000 டிக்ரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவாக குளிர்ச்சி அடையும்போது அடர்த்தியான ஹீலியம் அடுக்கு குமிழ்களாக மாறுகிறது. வெளிப்புற ஹைடிரஜன் அடுக்கு இதனுடன் கலந்து நீர்க்கத் தொடங்கி பார்வைப்புலத்தில் இருந்து மறையும்.

எல்லா நட்சத்திரங்களிலும் இது போல நடப்பதில்லை என்றாலும் ஒரு சில வெள்ளைக் குள்ள நட்சத்திரங்களின் மேற்பரப்பில் இது போல ஹைடிரஜனில் இருந்து ஹீலியமாக மாறும் நிகழ்வு ஏற்படுகிறது. இந்நிகழ்வே இப்போது ஜனஸில் நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவ்வாறு நிகழும்போது நட்சத்திரத்தின் சமச்சீரற்ற காந்தப்புலம் இந்த வாயு மாற்றத்தை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஏற்படுத்துகிறது.

காந்தப் புலமும் வெப்பச் சலனமும்

காந்தப் புலம் ஒருபக்கம் வலுவுடன் இருந்தால் அது விண்மீனில் தோன்றும் வெப்பச் சலனத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் ஹீலியம் அடுக்கில் வாயுக்கள் குமிழ்களாக மாறுவதன் வேகம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிகழும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வெப்பச் சலனம் அதிகமானால் ஹைடிரஜன் அடுக்கு விண்மீனால் இழக்கப்படும். விண்வெளியில் நிகழும் இந்த அரிய நிகழ்வு பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

எல்லையில்லாமல் பரந்து விரிந்திருக்கும் அண்டவெளியில் ஒவ்வொரு நொடியிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற நிகழ்வுகளில் இது போன்ற அதிசயங்களும் உண்டு என்று விண்வெளியியலாளர்கள் கூறுகின்றனர். மனிதர்களான நமக்கு மட்டும் இல்லை இரண்டு முகங்கள், விண்மீன்களுக்கும் உண்டு! ஒரே நேரத்தில் ஒருபக்கம் ஹைடிரஜனையும், மற்றொரு பக்கம் ஹீலியத்தையும் கொண்டுள்ள இந்த நட்சத்திரம் பற்றிய ஆய்வுகள் சூரியன் மற்றும் பூமியின் வருங்காலம் பற்றி அறிய உதவும் பல அரிய தகவல்களைப் பெற வழி வகுக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/jul/19/two-faced-star-with-helium-and-hydrogen-sides-baffles-astronomers-janus?CMP=Share_AndroidApp_Other

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It