அறிவியல் உலகில் பார்ப்பனரல்லாத, ஓடுக்கப்பட்ட அல்லது தாழ்நிலைச் சாதியில் ஓருவன் பிறந்து தன் முயற்சியினால் போராடி, அறிவியலறிஞனாக முயன்றால், அவனைச் சகிக்காமல், மேல்சாதி ஆதிக்கவாதிகள் எப்படியெல்லாம் ஓடுக்க முடியுமோ, அழிக்க முடியுமோ ஊடகத் தளங்களிலிருந்து அவனை அப்புறப்படுத்த முயலுமோ, - அவ்வனைத்தையும் செய்தேதீரும் என்று எடுத்துக் காட்டுவதுதான் தேவிகாபுரம் சிவா அவர்களெழுதி, சென்னை, தேனாம்பேட்டை, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை எனும் ஒரு ஓப்பற்ற நூல்,
பொதுவுடமைவாதியான சாகா ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக, தம்மை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு தன்மான வீரரும், அறிவியல் அறிஞருமாவார். தன்னலமற்ற பண்பாளர். பன்முகத்தன்மை கொண்ட இவரின் வரலாற்றைப் புகழ்ந்து ஆய்வு செய்து, ஒரு நூலாகக் கொணர்ந்திருக்கும் தேவிகாபுரம் சிவாவிற்கு பாராட்டுகள்! இடதுசாரி எழுத்தாளர் அழகியபெரியவன் அவர்கள் ஒரு சிறப்பான அணிந்துரை நல்கியுள்ளார் என்பதே இந்நூலின் கூடுதல் சிறப்பு.
வங்கதேசத் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவரே சாகா. தந்தை நடத்தி வந்ததோ ஒரு பெட்டிக் கடை. சாகா இளமையில் கண்டதோ வெறும் வறுமை. ஆனால், வறுமையிலும் நேர்மையாக, விடாப்பிடியாகப் படித்து, சமூகப் பொறுப்புணர்வுடன் மேற்படி நிலையை எய்தியவர் சாகா. பாடப்படிப்பாகக் கணிதம் படித்திருந்தாலும். இயற்பியலில் பலநவீன ஆய்வுகளைச் செய்து, புதிய கோட்பாடுகளை வெளியில் கொணர்ந்தார் சாகா!
அணுசக்தித் துறையில் இரகசியம் கூடாது, வெளிப்படைத்தன்மை மட்டுமே இருக்க வேண்டும், அணுசக்தியானது மருத்துவத்துறை வளர்ச்சிக்கு மட்டுமே பயன்பட வேண்டும், மனிதகுல அழிவிற்குப் பயன்படுத்தப்படக்கூடாது என சாகா, பாராளுமன்ற உறுப்பினராயிருந்தபோது, நேரடியாகப் பண்டித நேருவிடமே எதிர்த்து வாதிட்டவர் என நாமறியும் போது, சாகாவின் நெஞ்சுரம் போற்றவைக்கிறது,
அவ்வளவு ஏன் அப்துல்கலாம் அவர்கள் முதல் ஏவுகணை முயற்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ஆய்வுசெய்தபோது, சாகாவின் கோட்பாடுகள்தான் பல தீர்வுகளை அளித்தது என்று கலாம் அவர்களே சான்றுரைப்பது சாகா அவர்கள் நவீன இயற்பியலின் தந்தை என நிறுவுகிறது.
பொதுவாகவே சி.வி. இராமன், ஹோமிபாபா போன்ற இந்திய விஞ்ஞானிகளால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலவழிகளில் வலிந்து தாக்கப்பட்டவர்தான் சாகா ஆவர்கள்.
ராக்பெல்லர் அறக்கட்டளையின் அறிவியல் நிதியுதவிப் பிரிவின் தலைவராக இருந்த ஆன்ட்ரியு மில்லிக்கனுக்குச் சாகா, தாம் மேற்கொண்டிருக்கும் புற ஊதாக் கதிர் தொடர்பான ஆய்வு செய்வதற்கு மேற்படி நிதியுதவி தேவையெனக் கடிதம் எழுதியிருந்தார். மிலிக்கன் அக்கடிதத்தை சி.வி. இராமனிடம் காட்டியதற்கு, சி.வி. இராமன் அலட்சியமாக சாகா ஓரு நல்ல கோட்பாட்டு அறிவியலாளர் மட்டுமே ! மற்றபடி ஆராய்ச்சியாளர் அல்லர் என நிதியுதவி கிடைப்பதைக் கூடத்தடுத்தது சி.வி. இராமன்தான் என நாமறியும்போது. அவரின் ஆளுமை உடைந்து சிதிலமாவது மட்டுமின்றி, ‘இராமனின்’ சுயத்துவம் வெளிப்படுகின்றதே!
அன்று புராண இராமன், தவம் செய்த தாழ்த்தப்பட்ட சாதி சம்பூகனை அம்பெய்திக் கொன்றது போல, இந்த இராமன், சாகாவை முன்னேற விடாமல் அழுத்தியது விளங்குகிறது!
1915-ல் எம்.எஸ்.சி. முடித்த சாகா, தம் குடும்பத்தின் வறுமையை மீட்க, அரசு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். அக்கால அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால். இந்திய குடிமைப்பணி (ஐசிஎஸ்) அல்லது இந்திய நிதித்துறைப்பணி (ஐஎப்எஸ்) இரண்டிலொன்றில் தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும், சாகா ஐஎப்எஸ் தேர்ந்தெடுத்தார். பல்கலைக் கழக அளவில் 2ஆம் இடம் பெற்ற சாகாவால், எளிதில் அரசுப் பணியை பெற்றிருக்க முடியும்.
ஆனால், சாகா வங்கப் பிரிவினையை எதிர்த்துப் போராடி, பள்ளிநாட்களில் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட காரணத்தினாலும், மேலும் பயங்கரவாத, புரட்சிகர அமைப்புகளோடு தொடர்பு கொண்டிருந்தவர் என்று பிரிட்டிஷ் அரசு கருதியதால், சாகாவின் விண்ணப்பத்தை நிராகரித்து அரசுப் பணியை கிடைக்காமற் பறித்துக்கொண்டது,
இதுபற்றி அவரின் பேராசிரியர் குறிப்பிடும்போது. உண்மையில் அரசு வேலை கிடைக்காததுகூட தீமையில் ஓரு நன்மை, ஓரு திறமையான நிதித்துறை அதிகாரியை இந்நாடு இழந்துவிட்டாலும், திறமையான விஞ்ஞானியைப் பெற்றுவிட்டதே எனப் பெருமிதத்துடன் கூறியிருப்பதே, சாகாவின் மீதான மதிப்பீட்டை உயர்த்துகின்றது!
இந்நூலாசிரியர் தேவிகாபுரம்சிவா அவர்கள், சட்டத்துறை அறிஞரென்பதைவிட, இயற்பியல் இளங்கலையில் தேர்ச்சிபெற்றவரென்பதால், இந்நூலில் வேதியியல், இயற்பியல் சார்ந்த ஆய்வுகளை / கோட்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அந்தந்த ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ப, நல்ல தமிழ்க் கலைச்சொற்களைத் தேர்வு செய்து கையாண்டிருப்பது ஏற்புடையதாயிருக்கிறது என்பதுடன். அவரின் அறிவியலார்வமும் விளங்குகின்றது.
உடனடியாக இந்நூலினை ஆங்கில மொழியாக்கம் செய்து, இந்திய உபகண்டம் முழுக்க உள்ள இதர மாநிலங்களின் கல்வித்துறை நிறுவனங்களுக்கும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கும் கிடைக்கச் செய்து, அவர்களின் பாடத் திட்டங்களிலும் சாகாவின் அறிவியல் கோட்பாடு உலகறிய இணைக்கப்படுவதுதான் சிறப்பாக இருக்க முடியும்,
தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், இதன் பின்னர் மாற்றம் செய்யப்படப்போகும் அனைத்து உயர்நிலைப் பள்ளி, கல்லூரி / பல்கலைக்கழகப் பாடதிட்டங்களிலும் மேக்நாத் சாகாவின் அறிவியல் ஆய்வுகள், கோட்பாடுகள் குறித்து விளக்கமாக இணைத்து வெளிக்கொணர்ந்து வேண்டும்!
வரப்போகும் அரசு இதை உடனே நிறைவேற்றும் என ஆவலாக எதிர்பார்க்கிறோம்.