நுகர்வோரை அவர்களின் இயல்பான வாழ்வில் இருந்து திசை திருப்புகின்றன என்று நவீன ஆண்டிராய்டு மொபைல் போன்கள் மீது அடிக்கடி குற்றம் சொல்லப்படுகிறது. ஆனால் இத்தொழில்நுட்பம் நம்மை இயற்கை உலகுடன் இணைக்கும் வலிமையான கருவியாக உள்ளது. செயலிகள் உயிரினங்களை அடையாளம் காண, தாவரங்களை ஆவணப்படுத்த, பறவை அழைப்புகளைக் கண்டுபிடிக்க, காட்டில் சிங்கம், புலி, யானைகளின் நடமாட்டத்தைத் தெரிந்து வனக்காட்சிகளை அறிய, ஆராய உதவுகின்றன.
விரல் நுனியில் நம் மொபைல் போன் இருக்கும்போது உலகின் எந்த மூலையில் இருக்கும் ஆழ்கடல் உயிரினத்தை, அமேசான் காட்டில் பறந்து திரியும் ஒரு அபூர்வ பறவையின் குரலைக் கேட்க, ஆஸ்திரேலியாவில் ஏதோ ஒரு தீவில் இருக்கும் ஒரு தனிமரத்தை அறிய நமக்கு உதவுகிறது. இப்போது ஒரு மொபைல் போனின் உதவியுடன் இதெல்லாம் சாத்தியமே. மர்மமான உயிரினத்தை அறிவது முதல் மெல்லிய குரலில் பாடும் ஒரு பறவையின் பாடலை ரசிக்கலாம்.
நாம் காணும் மதிப்புமிக்க தகவல்கள், உலகில் வாழும் உயிரினங்கள் பற்றி நாம் வழங்கும் விவரங்கள் அறிவியல் ஆய்வுகளுக்கு, சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உதவும். பொதுவாக போன்கள் அவற்றை பயன்படுத்துவோரின் இயல் சூழலைப் பாதிக்கிறது என்று கருதப்படுகிறது. ஆனால் இத்தொழில்நுட்பம் ஒருவரை இயற்கையுடன் இணைக்கவும் உதவுகிறது. இதோ சில எடுத்துக்காட்டுகள்.சீக் (Seek)
தங்களைச் சுற்றியுள்ள பல்வேறு வகை தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் குழந்தைகளுக்கு இந்த செயலி ஒரு வரப்பிரசாதம். போனின் மூலம் போட்டோ எடுக்கலாம். செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உயிரினங்களை அடையாளம் காண, வகைப்படுத்த உதவுகிறது, சில முக்கிய தகவல்களையும் தருகிறது. நாம் வாழும் பகுதியைப் பொறுத்து இந்த செயலி எந்தெந்த உயிரினங்களைப் பார்க்க முடியும் என்று ஆலோசனை வழங்குகிறது. இத்தகவல்கள் ஆண்டு முழுவதும் நமக்குக் கிடைக்கும்.
இதன் மூலம் மண்ணில் வாழும் மக்கிகள் (decomposers), நகர வாழ் உயிரினங்கள், குளத்தில் வாழும் உயிரினங்கள், மகரந்த சேர்க்கை செய்யும் உயிரினங்களை அறியலாம். வளர்ந்த குழந்தைகளுக்கு, வளர்ந்தவர்களுக்கு ஐ நேச்சுரலிஸ்ட் (iNaturalist) என்ற செயலி உதவுகிறது. உள்ளூர் பகுதி இயற்கையை அறிய இது துணைசெய்கிறது.
சிர்ப்போமேடிக் செயலி (ChirpOMatic)
அதிகாலைப் பறவைகளின் கோரஸ் பாடல்களைக் கேட்கும்போது அவை பற்றி அறிய நமக்கு ஆர்வம் ஏற்படும். அல்லது இரண்டு பறவைகளின் குரல்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை, வேற்றுமையையும் நாம் இச்செயலியின் உதவியால் அறிய முடியும். இதைப் பயன்படுத்தி பாடல்களைக் கேட்டால் எல்லா விவரங்களும் நமக்குக் கிடைக்கும். ஐ போன்களில் இந்த செயலியைப் பயன்படுத்தி பறவைகளைப் பற்றிய தகவல்களை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது.
காதுக்கு அருகில் போனை வைத்து போனில் வரும் ஓர் அழைப்பைப் போல செயலியைக் கேட்டால் அந்த சத்தம் பறவைகளை, அவற்றின் கூட்டில் உள்ள குஞ்சுகளைப் பாதிக்காது. இந்த ஒலிகளை மீண்டும் கேட்கும்போது ஏதேனும் குழப்பம் இருந்தால் அவை தீர்ந்துவிடும். விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட இந்த செயலி மிக எளிமையானது. இதில் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஆஸ்திரேலிய பறவை அழைப்புகள் உள்ளன.
விலங்குகளின் இருப்பிடம் அறிய உதவும் செயலி (Animal Tracker)
நிகழ்நேரத்தில் வன விலங்குகளின் நடமாட்டத்தை அறிய இது பயன்படுகிறது. இதன் உதவியுடன் இங்கிலாந்தில் உள்ள கடற்கரை விலங்குகள் முதல் நமீபிய காடுகளில் வலசை செல்லும் சிங்கங்கள் வரை தெரிந்து கொள்ளலாம். காணும் ஒவ்வொரு காட்சியும் ஆய்வு தரவு ஆய்வு வங்கியில் (movie bank research data base) சேகரிக்கப்பட்டிருக்கும். இதில் இருவழி தொடர்புக்கு உதவும் இலவச இணைய வழி வரைபட கருவி ஒன்று உள்ளது. இச்செயலி ஜெர்மனி மேக்ஸ் ப்ளாங்க் ஆய்வுக்கழக (Max Planck Institute) விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்லது.
சூழலியலாளர்கள், வன அலுவலர்கள், மக்கள் அறிவியலாளர்களுக்கு (People scientists) இத்தகவல்கள் பயன்படுகின்றன.
இ ஃபேர்ட் (eBird)
பறவை உற்றுநோக்கலில் தீவிர ஆர்வமுடையவர்களுக்கு உதவும் செயலி இது. இது 27 மொழிகளில் கிடைக்கிறது. நம் சுற்றுப்புறங்கள், காடுகளில் காணப்படும் பறவைகள் பற்றிய விவரங்களை ஆண்டுதோறும் புதுப்பித்து இதன் மூலம் நாம் அறியலாம். பன்னாட்டு மற்றும் உள்ளூர் இனப் பறவைகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். சுற்றுப்புறத்தில் இருக்கும் பன்மயத்தன்மை செழுமை மிகுந்த இடங்களை இதன் மூலம் நாம் இடம் விட்டு இடம் செல்லும்போதும் பெறலாம். அரிய பறவை தென்பட்டால் அது பற்றிய உடனடியான நிகழ்நேர அறிவிப்புகளை இந்த செயலி வழங்குகிறது.
லீஃப் ஸ்னாஃப் (LeafSnap)
வழக்கத்திற்கு மாறாக இருக்கும் தாவரங்களை அறிய இச்செயலி பயன்படுகிறது. ஒரு சமயத்தில் ஒரே ஒரு தாவரத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தி பயன் பெறலாம். இலை, பூ, பழம் அல்லது தண்டை க்ளிக் செய்தால் இந்த செயலி தாவரத்தை வகைப்படுத்தி தகவல் தரும்.
பார்க்கும் தாவரத்திற்கு அருகில் இருக்கும் இதே போன்ற மற்ற தாவரங்களைப் பற்றியும் தகவல் தரும். ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் ஒப்பிட்டுப் பார்த்து நாம் காணும் தாவரம் எது என்று முடிவு செய்யலாம். ஆரோக்கியமாக தாவரத்தை வளர்ப்பது பற்றிய சிறிய குறிப்புகளை இச்செயலி தருகிறது. செடிக்குத் தண்ணீர் ஊற்ற, உரம் போட இது நமக்கு நினைவூட்டுகிறது.
கடற்புற்களை அடையாளம் காண (Seagrass Spotter)
கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போது, வெய்யில் காயும்போது நம் காலுக்கு கீழ் இருக்கும் புல்வெளிப் பகுதியில் வளர்ந்திருக்கும் கடற்புற்களை அடையாளம் காண இந்த செயலி பயன்படுகிறது. கடல் நீரில் வாழும் பூக்கும் தாவரங்கள் இவை மட்டுமே. கடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நீருக்கடியில் வாழும் இத்தாவரங்களைப் பாதுகாப்பது முக்கியம்.
உலகில் எந்த இடத்தில் இருக்கும் கடற்புற்கள் நிறைந்த படுகையையும் இச்செயலியைப் பயன்படுத்தி அறியலாம். இந்த செயலி கடற்புற்கள் பாதுகாப்பு திட்டம் (Sea Grass) அமைப்பால் தொடஞ்கப்பட்டது. காணும் கடற்புற்களின் வகை, விவரங்களை இச்செயலியின் உதவியுடன் நாம் அறியலாம். கடல் மாசு, கடற்கழிவுகள் போன்றவற்றால் இத்தாவரங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன.
கடல் சார் விஞ்ஞானிகளால் இவற்றைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்க விநியோகத்தை மேம்படுத்த நம்மால் வழங்கப்படும் புதிய தகவல்கள் உதவும். ஒரு காலத்தில் கடற்புற்கள் அதிகம் காணப்பட்ட பகுதிகளில் இன்று அவை அருகி வருகின்றன. ஆய்வாளர்களுக்கு இது பற்றி நாம் அளிக்கும் விவரங்கள் இவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த பேருதவியாக அமையும்.
வானத்தைக் காண (SkyView Lite)
இரவு வானத்தைப் பார்க்க வீட்டு சாளரத்தின் கதவுகளைத் திறந்து இதைப் பயன்படுத்தலாம். போனில் உள்ள கேமராவை வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிக் காட்டினால் அந்த இடத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், விண்மீன் திரள்களை இச்செயலி காட்டும். நாம் இருக்கும் இடத்திற்கு மேல் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையம் (ISS) எப்போது வரும், தொலைதூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்கள் எவை என்பதை அறியலாம்.
இந்த செயலியை எப்போதும் இரவில் பயன்படுத்தும் வகையில் (nightmode) வைக்க வேண்டும். இச்செயலி wifi வசதி இல்லாமலேயே செயல்படுகிறது. அதனால் வான் உற்றுநோக்கல் முகாம்களில் பங்கேற்பவர்கள், மிகத் தொலைவில் உள்ள வான் பொருட்களை ஆராய்பவர்களுக்கு இந்தச் செயலி பெரிதும் பயன்படுகிறது.
உலக வனங்களை அறிய (WWF Forests)
உலக வனநிதிய அறக்கட்டளையால் (WorldWide Fund for Nature WWF) இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் முதல் தரமான வன அனுபவங்களைப் பெறலாம். கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல் காட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இது இயங்குகிறது.
நாம் இருக்கும் அறையில் இருந்தபடியே குறியீடுகளை க்ளிக் செய்தால் வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் செயல்கள் பற்றிய தகவல்களுடன் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் காடுகள் பற்றிய விவரங்களைப் பெறலாம். வனப்பயணத்தின்போது மரவாழ் குரங்குகளையும் புலிகள் போன்றவற்றின் நடமாட்டத்தையும் கண்டு ரசிக்கலாம்.
இந்த செயலிகள் பலவும் இலவசமாகவும் சில சிறியதொரு தொகை செலுத்தியும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பகுதியில் இது போன்ற பல செயலிகள் உள்ளன. 'தாவரத்தை படம் வரைந்து அடையாளம் காட்டு' (Picture this plant identifier), தாவரங்களை அடையாளம் காண உதவும் ப்ளாண்ட் ஸ்னாப் (Plant snap) போன்றவை சில எடுத்துக்காட்டுகள். இவற்றை அறிந்து இயற்கையைப் பாதுகாத்து அதனுடன் இணைந்து வாழ்வோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்