மதவெறிக்கு உயிர்ப் பலியான கழகத் தோழர் ஃபாரூக் நினைவு நாளில் நிகழ்த்தப்பட்ட உரை இது:

மறைந்த தோழர் பற்றி சில தகவல்களை கூற வேண்டும். எனக்கு முன்னால் பேசியவர்கள் ஃபாருக் கொல்லப்படது மற்றும் குற்றவாளிகளினுடைய மனநிலை பற்றியெல்லாம் கூறினார்கள். எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இருந்தது, ஃபாருக்கை வெறும் நான்கு அல்லது பத்து நபர்கள் மட்டும் கொன்றிருக்க முடியாது, இதற்கு பின்னால் ஒரு மிகப் பெரிய இயக்கத்தின் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை நான் ஆரம்பத்திலிருந்தே எழுப்பி வந்துள்ளேன். நீண்ட நாட்களுக்கு பின் தான் அது உண்மை எனத் தெரிந்தது. எனக்கு கிடைத்த தகவல்படி அதற்கு பின்னால் எந்த அமைப்பு இருந்தது என்பதை கண்டுபிடித்து விட்டோம். காரணம் ஊழல் செய்தவனை தகுந்த ஆதாரத்துடன் சொன்னால்தான் உண்மை வெளியே வரும் இல்லாவிட்டால் ஊழல் செய்தவன், செய்யாதவன் என்றாகி விடுவான் அது போல வெளிப்படையான ரகசியம் என்ற அடிப்படையில்தான் இன்றைக்கு இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற ராகுல்ஹேங்கியா கொலையாக இருந்தாலும் சரி , ஃபாருக் கொலைக்கு பின் இஸ்லாமிய இயக்கங்களைக் கூர்ந்து கவனித்தேன், பலரிடம் நான் உரையாடியும் இருக்கிறேன் அப்போதுதான் தெரிந்தது அவர்களுடைய (இஸ்லாமிய அமைப்புகள்) இரட்டை வேடம் என்னவென்று. அனைவருமே அந்தக் கொலையை மறைமுகமாக ஆதரிக்கத்தான் செய்கிறார்கள். காரணம், கேரளா மாதிரியான சூழல் இங்கு உருவாகி விடக்கூடாது.

தமிழ்நாடு என்பது வறட்டுத்தனமான மாநிலம், பெரியார் தோன்றினாலும் கூட பகுத்தறிவு பூமியாக இருந்தாலும் கூட இஸ்லாம் என்பது பாதுகாக்கப்பட்டுத்தான் வந்துள்ளது என்பது வரலாற்றைப் பார்த்தோமானால் தெரிகிறது. பெரியாரைக்கூட இழுத்தார்கள், பெரியார் ஆரம்பத்தில் இஸ்லாத்துக்கு ஆதரவாகப் பேசியதை வைத்துக் கொண்டு பெரியாரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார் என்று பிரச்சாரம் செய்தார்கள். பெரியார்தாசனை வைத்து காணொளியையும் வெளியிட்டார்கள். பெரியார் இஸ்லாத்தை விமர்சனம் செய்ததெல்லாம் மறைக்கப்பட்டு விட்டது. இன்னொரு முக்கியமான விசயம் பெரியாரைப் பற்றி ஆராயும்போது, அவர் காலத்தில் இஸ்லாமிய அடிப்படை பிரதிகள் பெரிய அளவில் மொழிபெயர்க்கப்படவில்லை, குர்ஆன் மட்டும் தான் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அதிலும் ஒரு பகுதி தான் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அதுவும் அவருக்கு சரியான முறையில் சென்று சேரவில்லை, பெரியாருக்கு முன் இருந்த முஸ்லிம் இயக்கத் தலைவர்கள் சொன்னதைத்தான் பெரியார் கேட்டிருக்கிறார் என்றுதான் வரலாற்றை ஆராயும்போது தெரிகிறது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில், நவீன காலகட்டத்தில், இணையதளம் பெருகிய காலகட்டத்தில், அனைத்து அரபி நூல்களும் ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படக் கூடிய இந்த காலத்தில் இஸ்லாத்தைப் பற்றி அனைவரும் படிக்கலாம். அதற்கான சூழல் தற்போது உருவாகிவிட்டது. இணையதளத்திலும் சரி, ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட 70 நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. எளிமையாக இஸ்லாத்தைப் பற்றி தற்போது படிக்கலாம். பெரியாருடைய காலகட்டத்திற்குப் பிறகு, இஸ்லாம், கிருத்துவ மத அடிப்படைவாதத்தைப் பற்றிய விமர்சனங்கள் திராவிடர் கழகத்தில் மௌனமாக்கப்பட்டு வருகிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் அபு அப்துல்லா என்பவர் நாத்திகர்களைக் கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார்; அதற்கு மறுப்பு திராவிடர் கழக ஏடான ‘விடுதலை’யில் வெற்றியழகன் என்பவர் எழுதத் தொடங்கியவுடன் முஸ்லிம் இயக்கத்தைச் சேர்ந்த பெரியவர்கள் பெரியார் திடலுக்கு சென்று ஆசிரியர் வீரமணியிடம் முறையிட்டவுடன் அந்த மறுப்புத் தொடர் நிறுத்தப்பட்டது. இப்படியும் சில சம்பவங்கள் நடந்தது. ஆக, தமிழ்நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பற்றி விமர்சனம் என்பது அறவே இல்லையென்றே சொல்லலாம். கேரளா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களின் சூழல் இங்கே இல்லையென்றே சொல்லலாம்.

 அறிவுப் பாரம்பரியமான மாநிலமாக இருந்தாலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விமர்சிக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது. அதைத்தான் இங்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ஃபாருக் போன்ற தோழர் கொல்லப்படுவதற்கான மிக முக்கியமான காரணமாகவும் அமைந்தது. உலகம் முழுக்கவே இது போன்ற அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் உரிய பாதுகாப்பு இருக்கும். ஆனால் இங்கே குற்றவாளிகள் எந்த பதற்றமும் இன்றி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தைரியமாக நடக்கக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது வேதனைக்கும் அவலத்துக்கும் உரியதாகும்.

தலைப்புக்கு வருவோம்,

மதம் என்பது நம்பிக்கை சார்ந்த ஒன்று. அறிவியல் என்பது நம்பிக்கையை மட்டும் ஏற்காததது. விஞ்ஞானத்துக்கும் மதத்துக்கும் இடையில் பாரதூரமான இடைவெளி உள்ளது. எதிரானது, அறிவியல் என்பது மதங்களுடன் ஒத்துப் போகாது. மதங்கள் எப்போதும் விதிகளை நம்பும், அது எந்த மதமாக இருந்தாலும், விதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் அறிவியல் என்பதும் பகுத்தறிவு என்பதும் காலத்தின் இயக்கம் மார்க்சியத்தில் சொல்வார்கள், அது அதன் போக்கில் நடைபெறுகிறது, இயக்கவியல் விதி, இயக்கவியலின் விதிப்படிதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மதவாதிகளைப் பொறுத்த வரையில் அறிவியலை, அவர்கள் ஒரு கட்டத்தில் தன் பக்கம் இழுத்துக் கொள்ளப் பார்த்தார்கள். இதை கிருஸ்துவம்தான் முதன் முதலில் செய்தது.

அறிவியலை தன்பக்கம் இழுத்துக் கொள்வதின் மூலம் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள அவை அறிவியலை எடுத்துக் கொள்கின்றன. வரலாறுகளில் கிருஸ்துவத்தை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு அறிவியல் விஞ்ஞானியையும் கொன்றார்கள். அய்ரோப்பியர் வரலாறுகளிலும், ப்ருனோவைக் கொன்றார்கள், கலிலியோவைச் சிறைபடுத்திக் கொடுமைபடுத்தினார்கள். இதில் நியூட்டன் தான் பைபிளையும் ஏற்றுக் கொண்டதால் விட்டுவிட்டார்கள். அதற்கு பிறகு 19-ஆம் நூற்றாண்டில் தான் அய்ரோப்பாவில் விஞ்ஞானிகள் சுதந்திரமாக செயல்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

 இஸ்லாத்தை எடுத்துக் கொண்டால் 20ஆம் நூற்றாண்டில்தான் அடிப்படைவாதம் மேலெழுந்து வருகிறது. காலனி ஆதிக்க விடுதலைக்குப் பிறகுதான் இஸ்லாமிய அடிப்படைவாதம் மேலெழுந்து வருகிறது. அதற்குப் பின்தான் அறிவியலோடு மதத்தை ஞாயப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். அதற்கு முன் 19-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இஸ்லாமிய நூல்கள் அதிகமாக மொழிபெயர்க்கபடாத காலகட்டத்தில் அறிவியல் என்றாலே என்னவென்று தெரியாத சூழல்தான் நிலவியது. அதற்கு முன் கிருஸ்துவம் அறிவியலை ஏற்றுக் கொள்ளும்முன் பைபிளோடு எல்லாவிதமான அறிவியலையும் ஏற்றுக்கொள்ளச் செய்தது. அதாவது, கோபர்நிகஸ், கலிலியோ போன்றவர்களின் அறிவியல் ஆய்வுகளை ஏற்றுக் கொள்ளாத கிருஸ்துவம், அதன்பின் அவர்களின் ஆய்வுகள் முன்னரே பைபிளில் கூறப்பட்டுள்ளது என்று அறிவியல் மூலமாக தங்களின் இருப்பை நிலைநிறுத்திக் கொண்டது. காலகட்டங்கள் வளர வளர அறிவியலோடு பைபிளை ஒப்பிட்டு ஞாயப்படுத்தி கதைகளைக் கிளப்புவது ஒரு போக்காக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகட்டம் அதாவது 1950-களுக்குப் பிறகு இஸ்லாமிய நாடுகளிலிருந்தும், மேற்கத்திய நாடுகளிலிருந்தும் இஸ்லாத்தை அறிவியலோடு ஞாயப்படுத்தக்கூடிய ஒரு போக்கு உருவானது.

‘ஹலால்' அறிவியலா?

தற்போதைய சூழலில் உங்களுக்கு தெரிந்த அறிவியல் “ஹலால்” அனைத்து கடைகளிலும் ஒரு BRAND போல உருவாக்கிட்டாங்க. ISO certificate போல இதையும் (ஹலால்) ஒரு சான்றிதழாக உருவாக்கிட்டாங்க. இணையத்தில் தற்போது HALALcertification.in என்ற பக்கம் இருக்கிறது. அதில் வரைமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். உணவுப் பொருட்களில் அதாவது மாட்டிறைச்சியில் ஹலால் என்பது எப்படி வரும் என்பது போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை ஞாயப்படுத்துவதற்காக ‘வாட்ஸ் அப்’ அறிமுகமான இந்த அய்ந்து வருடங்களில் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஹலால் என்பது என்ன? “முறைப்படி அறுத்தல்” போன்ற அறிவியல்பூர்வமான தகவல்களைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் என்ன இருக்கிறதென்று பார்த்தோமானால், இஸ்லாம் தோன்றிய அந்த காலகட்டத்தில் புலால் உணவு முறை உலகம் முழுக்க இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் நபிகளாரின் காலகட்டத்தில் அவர்களும் அறுத்திருக்கிறார்கள். கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அறுத்திருக்கிறார்கள். அவர்களுடைய தெய்வங்களின் மந்திரங்களை சொல்லி அறுத்திருக்கிறார்கள். இவர்கள் என்ன சொல்கிறார்களென்றால், அல்லாவின் பெயரைச் சொல்லி அறுக்க வேண்டும் என்று மாற்றுகிறார்கள். ஹலால் என்பது அவ்வளவுதான்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் அதை ஒரு BRAND ஆக மாற்றி, “முறைப்படி அறுத்தல்” என்று மாற்றுகிறார்கள். ஏனென்றால், மந்திரம் என்று சொன்னால் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உன் மந்திரம் உனக்கு என் மந்திரம் எனக்கு என்று புறக்கணித்து விடுவார்கள் என்ற காரணத்தினால், முறைப்படி அறுத்தல் என்ற அறிவியல்பூர்வமான முறையாக ஞாயப்படுத்தி விட்டார்கள். தற்போது ஒரு சில மருத்துவர்கள் ஆய்வுகள் செய்து ஒரு சில தகவல்களை வெளியிட்டதாக சொல்கிறார்கள். என்னவென்றால், ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்திலுள்ள மூச்சுக்குழாயும், இரத்தக் குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமலிருக்க வேண்டும். அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். “அல்லாஹ் அக்பர்” என்று சொல்லியும் இருக்க வேண்டும் என்பதும் பொருள். இரத்தம் முழுவதும் வழிவதன் நோக்கம், அறுக்கப்பட்ட கால்நடையின் இரத்தக்குழாயில் இரத்தம் தங்கி கிருமிகள் உருவாகாமல் தடுப்பதே ஆகும்.

கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடம் துண்டிக்கப்பட்டால் இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டு இதயம் நின்று போகக் கூடிய நிலை ஏற்படலாம். இதனால் இதயத்தில் உள்ள இரத்தநாளங்களில் இரத்தம் தங்கிவிடக்கூடும். இதன் காரணமாக நோய்க்கிருமிகள் உருவாக காரணமாக அமைவது இரத்தமே! ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும். ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலக்கப்படாமல் இருப்பதால், வேறு முறையில் அறுக்கப்படும் இறைச்சியை விட ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும். ‘ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணருவதில்லை’. இதன் மூலமாக கால்நடைகளை அறுக்கும்போது கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்கு கடத்திச் செல்லும் நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணருவதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் உடலிலுள்ள சதைப்பாகங்கள் இரத்தமின்றி சுருங்கிவிடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான், அறுக்கப்பட்ட மிருகங்கள் துள்ளுவது போலவும் துடிப்பது போலவும் தெரிகிறதே தவிர ஏற்படுகின்ற வலியால் அல்ல. இவைகளை ஞாயப்படுத்த, இது போன்ற செய்திகளை தற்போது நிறைய WhatsApp இல் பரப்பி வருகிறார்கள்.

தற்போதுள்ள, அஞ்சப்பர், தலப்பாக்கட்டி போன்ற உணவகங்களில் நுழைவாயிலிலேயே, நான் முன் சொன்னது போல HALAL certification.in என்ற அமைப்பின் சான்றிதழ்களை வைத்துள்ளனர். அதை எப்படி கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதில் முறைப்படி அறுத்தல் என்பது வெறும் கத்தியை வைத்து கழுத்தை அறுப்பதல்ல, அந்த மந்திரங்கள் தான். நான் எனக்கு தெரிந்த மத அறிஞர்களிடம் நிறைய கேள்வி கேட்டுக்கொண்டே உள்ளேன். ‘ஹலால்’ அறிவியல் என்று தானே சொல்கிறீர்கள் ஒரு முஸ்லிம் அல்லாதவர் இதே மந்திரத்தை (அல்லாஹ் அக்பர்) சொல்லி அறுத்தால் அதைச் சாப்பிடுவீர்களா? என்று கேட்டேன். இதுவரை எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அப்போ நீங்கள் ஹலால் என்று சொல்வதன் மோசடி என்ன? மற்றவர்களை ஏமாற்றுவதற்காக அறிவியல் ஞாயத்தைக் கொடுக்கிறீர்கள். இதை அய்ரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொண்டுள்ளதா? இன்றைய நவீன மருத்துவர்களாகட்டும், மானுடவியலாளர்களாகட்டும் இதை அங்கீகரித்திருக்கிறார்களா? இவர்கள், விஞ்ஞானிகள் என்று கூறுபவர்கள் அனைவருமே அரபு நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்நாட்டின் இஸ்லாமிய அரசுக்காக நியமிக்கப்பட்டவர்கள். எப்படி இந்தியாவில், ஆதி காலத்தில் ராக்கெட், விமானம், கம்பியூட்டர் இருந்தது என்று அறிவியல் மாநாட்டில் விஞ்ஞானிகளை வைத்து மோடி சொல்ல வைத்தாரோ அதே போலத்தான் அரேபிய அறிவியலாளர்கள் என்று சொல்லப்பட்டவர்களும்.

கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் ஹலாலா?

அடுத்தது மீன், குர்ஆனில் கடலில் வாழும் உயிரினங்கள் யாவும் ஹலால் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது கடலில் பல வகையான உயிரினங்கள் உள்ளது அனைத்தும் ஹலால் என்றால், கடலில் ஒரு சில வகை மீன்கள் விசமுடையதாக உள்ளது. அதை சாப்பிடலாமா.? பாம்பு இருக்கு, திமிங்கிலம் இருக்கு, கடல் நாய் உள்ளது அதை சாப்பிடலாமா.? இந்த நாயைப் பற்றி கூட இஸ்லாத்தில் ஒரு விவாதம் இருக்கு. இஸ்லாத்தில் ஒரு பிரிவில் நாய் இறைச்சியை சாப்பிடலாம். எகிப்து, தாய்லாந்து, வியட்னாமில் உள்ளவர்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவார்கள். இப்படியான ஒரு விவாதமும் உள்ளது. கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் விசமுடையதை சாப்பிடலாமா என்ற கேள்வி வருகிறது. மேலும் இறந்தவைகளை உண்ணக் கூடாது என்று உள்ளது. அப்படியென்றால் மீன்களை எப்படி உண்ணலாம்.? இவையெல்லாம் மாற்று சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகள்; இன்னமும் பதிலலிக்கப்படாத கேள்விகள். எனவே ஹலால் என்பது, இஸ்லாம் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட மதரீதியான BRAND தான் என்பதைத் தவிர அதில் வேறொன்றும் இல்லை.

இறைச்சியை எப்படி சாப்பிடலாமென்று அறிவியல் பூர்வமான ஆய்வுகள் ஏற்கெனவே வந்துள்ளன. இஸ்லாமிய நாடுகளுக்கு இந்தியா, அய்ரோப்பியா நாடுகளிலிருந்து இறைச்சி ஏற்றுமதியாகிறது. அரேபியாவில் ஆஸ்திரேலியா மட்டன்ஸ் ஏற்றுமதியாகும் அதில் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும். எப்படியென்றால் இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுக்கப்படும் இறைச்சிக்கு மந்திரங்கள் சொல்லப்பட்டு அறுக்கப்படுகிறது. இதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, பொய்யான அறிவியல் விளக்கத்தை சாதாரண மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கத்தான் இது போன்ற செய்திகள் இணையதளங்களிலும், WhatsApp -களிலும் பரப்பிக் கொண்டுள்ளனர்.

கிருஸ்துவ மதத்தில் உள்ள பைபிளில் கூட, இரத்தத்தை முழுமையாக வெளியேற்றுங்கள் என்ற ஒரு வசனம் வரும். அதை தற்போது, இஸ்லாமிய கடைகளில் சாப்பிடுவதை ஒரு பிரிவினர் அதிகம் விரும்புகின்றனர். இதில் மந்திரம் தானே தவிர அறிவியல் என்ற எதுவும் இல்லை. இதோடு தொடர்புடைய இன்னொரு கேள்வி, வேட்டையாடுதல் இஸ்லாத்தில் உண்டு. அதிலும் மந்திரத்தை சொல்லி பறைவையையோ, விலங்கையோ வேட்டையாடி உண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அம்பினால் பறைவையின் உடல் கிழிக்கப்படும்போது, முறைப்படி அறுத்தல் அடிபட்டுப் போகிறதே.? ஆக அடிப்படையில் ஹலால் என்பது மந்திரம்தான். வரலாற்றுப்பூர்வமாக அது மந்திரம்தான் வேறொன்றுமில்லை. இருபதாம் நூற்றாண்டில், சவூதி அரசுதான் தன்னை உலகளவில் இஸ்லாமிய ஏகாதிபத்திய நாடாக நிலைநிறுத்திக் கொள்ள இஸ்லாமியர்களை தன் பக்கம் திருப்ப இது போல் செய்துவருகிறது.

(அடுத்த இதழில் முடியும்)

Pin It