(அறிவியல் மதம் என்ற உரிமைக்கு எந்த மதமும் சொந்தம் கொண்டாட முடியாது. இஸ்லாம் மதத்தில் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை அலசுகிறது கட்டுரை. - கடந்த இதழின் தொடர்ச்சி)

சூரியனை சுருட்டமுடியுமா?

குர்ஆனில் சூரியனைப்பற்றி வருகிறது. இதைப் பற்றி ஆடியோ புகழ் பி.ஜே அவர்கள் குர்ஆன் வசனங்களை எடுத்து, “இஸ்லாத்தில் அறிவியல்” என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். குர்ஆன் வசனங்களைப் போட்டு நியாயப்படுத்தியிருந்தார். அதில் சூரியனைச் சுருட்டுவது என்ற வசனம் குர்ஆனில் வருகிறது. சூரியனை எப்படி சுருட்டுவது? அது உவமானமாகக்கூட இருக்கலாம். ஆனால் இவர்கள் அதை நியாயப்படுத்த சுருட்டலாம் என்று சொல்கிறார்கள். கோள வடிவில் உள்ளதை எப்படி சுருட்ட முடியும்? உவமானமாக சொன்னதை திசை திருப்புவதுதான் இது போன்ற செயல்கள் அனைத்தும்.

muslims 640jpgகாலநிலை மாற்றங்கள் நரகத்தின் பெருமூச்சா?

உலகத்தில் காலநிலைகள் எப்படி மாறுபடு கிறது என்று ஹதீசில் விடை கிடைக்கும். ஹதீஸ்: 1088 அபுஹுரையார் கூறியதாவது: அல்லாவின் தூதர் அவர்கள் கூறியது வெப்பம் ஏற்படும் போது வெப்பம் குறையும்வரை தொழுகையைத் தாமதப் படுத்துங்கள். ஏனெனில் கடுமை யான வெப்பம் நரக பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது என்று கூறிவிட்டு நரகம் தனது இறைவனிடம் மேற்கண்ட ஹதீஸில் உள்ள வாறு முறையிட்டது. அதற்கு இறைவன் ஒரு மூச்சு குளிர்காலத்திலும், மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ளுமாறு கூறினார். நரகம் விடும் பெருமூச்சுக் காற்றின் காரணமாகவே புவியில் பருவகால மாற்றம் ஏற்படுகிறது என்ற மிகப்பெரிய அறிவியல் உண்மையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது அல்லா தனது தூதருக்கு அறிவித்தது. இதை எந்த அறிவியல் புத்தகத்தில் தேடினாலும் கிடைக்காத அற்புதமான விளக்கம் என்று பி.ஜே. தனது புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியுள்ளார். சாதாரணமாக பள்ளியில் அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு, பூமியில் மழை எப்படி வருகிறது, குளிர் எப்படி ஏற்படுகிறது, வெப்பம் எப்படி ஏற்படுகிறது என்பது பற்றியெல்லாம். சாதாரணமாக படித்தால் கூட இவையெல்லாம் எப்படி ஏற்படுகின்றது என்பது தெரிகிறது. இது வெறும் நம்பிக்கை சார்ந்த ஒன்றுதானே தவிர இதில் வேறெதுவும் இல்லை.

அன்றைய காலத்தில் அறிவியல் கிடையாது. வெறும் நம்பிக்கைதான். ஆனால் அன்றைய காலத்து விசயங்களை தற்போது அறிவியலுடன் நியாயப்படுத்தும் போது தான் மதம் என்பது கேள்விக்குள்ளாவது மட்டுமல்ல கிண்டலுக்குரியதாகவும் ஆகிறது. கிருஸ்துவம் ஆரம்பகாலத்தில் இதைச் செய்தது. இப்போதும் அதையேத் தான் செய்கிறது. அய்ரோப்பாவில் பெரிய கூட்டமே இருக்கு. இதை பரப்பி விடுவதற்கு. அறிவியலுடன் இஸ்லாத்தை ஒப்பிட்டு நியாயப்படுத்துவதற்கு. தொழுகைக்கு முன்னால் உடலை சுத்தப்படுத்துவார்கள். அதில் தலையை மூன்று முறை தண்ணீரை வைத்துத் தொடுவார்கள். அதைப் பற்றி சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன் அய்ரோப்பாவில் ஒரு முஸ்லிம் அல்லாத விஞ்ஞானி, இதைப் பார்த்து இது உங்கள் மதவழக்கமா என்று கேட்டதாகவும், அதை ஆராய்ந்து நரம்பு மண்டலங்கள் உறுதி யாகவும், தலைக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியதாகவும் உள்ளது என்று அவர் ஆய்வு செய்து கூறியதாகவும் ஒரு செய்தியைப் பார்த்தேன். இவையனைத்தும் 99ரூ வதந்தி. நான் ஏன் 99ரூ என்று சொல்கிறேனென்றால் மீதி ஒரு சதவீதம் திசை திருப்பல்கள். வேறு ஒரு கண்டு பிடிப்பை திசை திருப்ப இப்படி புனையப்பட்டு பரப்பி விடுகிறார்கள்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் இஸ்லாமியரா?

மிக முக்கியமாக நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவுக்கு போனதைப்பற்றி தெரியும். இஸ்லாத்தில் ஒரு 30 வருட காலங்களாக, தகவல் தொழில் நுட்பங்கள் வளராத காலகட்டத்தில் பரப்பப் பட்டு வந்தது என்னவென்றால், நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாத்தைத் தழுவிவிட்டார். என்ன காரணம்? நிலவுக்கு சென்றவுடன் “வாங்கு” சத்தத்தைக் கேட்டார் என்றார்கள். சாதாரணமாகவே தெரியும். ஒலி எங்கே பரவும்? காற்றிருந்தால்தான் ஒலி பரவும். நிலவில் காற்று கிடையாது. அதை இவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். காற்றில்லாத இடத்தில் எப்படி ஒலியைக் கேட்க முடியும்? இது நீண்ட நாட்களுக்குப் பின்தான் வதந்தி என்று தெரிய வந்தது. தகவல் தொழில் நுட்பங்கள் வளராத கால கட்டத்தில் இஸ்லாமிய உலகில் இந்த வதந்தி மிக நீண்ட காலமாக இருந்தது. இளம் வயதில் நானும் இதை நம்பிக்கொண்டிருந்தேன். அதனால் தான் தைரியமாக சொல்கிறேன்.

அடுத்து, இஸ்லாமிய பெண்களின் கணவர் இறந்தால், நான்கு மாதம் பத்து நாட்களுக்கு ‘இத்தா' என்று ஒன்று உள்ளது. இரத்த உறவுகளைத் தவிர அவர்களை வேறு யாரும் பார்க்கக் கூடாது. அவர்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து விடுவார்கள். அதற்கு என்ன நியாயத்தை இவர்கள் சொல்கிறார்களென்றால், அவர்கள் கருவுற்றிருக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறியத்தான் இந்த நான்கு மாதம் பத்து நாட்கள் என்ற காலகட்டம் என்கிறார்கள். இது எதற்கு என்பது நீண்ட நாள் சந்தேகமாக இருந்தது. இதை ஆராய்ந்து பார்த்தோம். அன்றைய காலகட்டத்தில் அதாவது ஏழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் சித்த மருத்துவம் மட்டும் இருந்த காலகட்டத்தில், இங்கே மருத்துவச்சிகள் பெண்களின் நாடியைப் பிடித்து கருவுற்றிருக்கிறார்களா இல்லையா என்பதை கூறிய காலகட்டம் அது. ஆனால் ஏழாம் நூற்றாண்டில் அரேபிய நாடுகளில் இது போன்ற வசதிகள் கூட இல்லை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே மருத்துவம் குர்ஆன் வசனங்கள் மட்டும்தான்.

காய்ச்சலா, தலைவலியா குர்ஆன் வசனங்களை ஓதினால் போதும். இன்றைக்கும் அதுபோன்ற நம்பிக்கை இருந்து வருகிறது. கிருஸ்துவத்திலும் கூட பெந்தகொஸ்தே பிரிவினர் நோய் வந்தால் மருத்துவமனைக்குச் செல்லாமல் இருக்கிறார்கள். இரத்த தானமும் செய்ய மாட்டார்கள், இரத்தம் ஏற்றவும் விட மாட்டார்கள் இப்படி ஒரு சில பிரிவினர் கிருஸ்துவத்திலும் இருக்கிறார்கள். அதேபோல் இந்த நாலு மாதம் பத்து நாட்களை நியாயப்படுத்துவதற்குத் தற்போது, இலண்டன் மருத்துவர் கண்டுபிடித்ததாக ஒரு செய்தி இணையத்தில் வலம் வருகிறது. இஸ்லாமியப் பத்திரிக்கைகளும் இதை எழுதின. ‘சமரசம்' என்ற புகழ்பெற்ற இஸ்லாமியத் தமிழ்ப் பத்திரிக்கை இதை எழுதியது. மனிதனின் விந்தணுக்கள் பெண்களின் கருப்பையில் இருக்கும் காலம் நான்கு மாதம் பத்து நாட்கள் ஆகும் என்ற ஆய்வை இலண்டன் மருத்துவர் கண்டுபிடித்ததாகப் பரப்பினார்கள். அதனால்தான் ‘இத்தா' இருக்க வைப்பதாக நியாயப்படுத்தினார்கள். இதை வைத்து இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே இதை சொல்லிவிட்டது என்று தங்களின் மதத்தை நிலை நிறுத்த அறிவியலை இழுத்துக் கொண்டனர். இதை இலங்கையில் உள்ள ஒரு தோழர் ஆராய்ந்து அதில் உள்ள மோசடியை வெளியில் கொண்டு வந்தார். அதாவது இலண்டன் மருத்துவர் என்று இவர்கள் குறிப்பிட்டது போல் அப்படி ஒரு நபரே இல்லை. இலண்டன் மருத்துவர் என்று இவர்கள் காட்டிய புகைப்படம் எகிப்தில் உள்ள இஸ்லாமிய அறிஞரின் புகைப்படம். அவரை டாக்டராக மாற்றி ஆங்கிலத்தில் பரப்பியதை தற்போது தான் தமிழில் மொழி பெயர்த்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதை நம்பி இஸ்லாமிய பத்திரிக்கைகள் வரை எழுதிவிட்டன. இந்த மோசடியை அவர் வெளியிட்ட பின்பும் அதை யாரும் இதுவரை மறுக்கவில்லை. நான் எனக்கு தெரிந்த சில மத அறிஞர்களிடமும் இதை கேட்டேன் அவர்கள் தெரியாது என்று கூறி விட்டனர்.

உலக விஞ்ஞானிகள் மதத்துக்கு வெளியே உள்ளனர்!

எனவே அறிவியல் என்பது நம்பிக்கை களுக்கு எதிரானது. நம்பிக்கைகளைத் தாண்டித் தான் அறிவியல் வளர்ந்திருக்கிறது. உலக வரலாற்றிலேயே விஞ்ஞானிகள் என்பவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட 90ரூ பேர் பகுத்தறிவாளர்கள். சமீபத்தில் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடைபெற்றது. வரலாற்றுரீதியிலான ஆய்வு. உலக வரலாற்றில், வரலாறு அறியப்பட்ட காலகட்டத்திலிருந்து, இன்றுவரை தோன்றிய ஆளுமைகள், வரலாற்று அறிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கவிஞர்கள் இவர்கள் ஏன் மதத்தை விட்டு வெளியில் இருக்கிறார்கள், மத நம்பிக்கையற்றவர் களாக இருக்கிறார்கள் அல்லது பகுத்தறிவாளர் களாக இருக்கிறார்கள் என்ற ஒரு ஆய்வு. அதில் ஒரு முக்கியமான விசயத்தை கண்டுபிடித்தார்கள், விஞ்ஞானிகள் அல்லது அறிவு ஜீவிகள் என்பவர்கள் மதத்தை விட்டு வெளியே இருப்பதற்கும், மதத்தைத் தாண்டுவதற்கும், நம்பிக்கையற்று இருப்பதற்கும் காரணம், அப்போதுதான் அவர்களால் அடுத்த கட்டத்திற்கு சிந்திக்க முடிகிறது; ஒரு கடப்பு நிலையை அவர்களால்தான் உருவாக்க முடியும். அதனால் தான் அற்புதமான கண்டுபிடிப்புகளை அவர்களால் நிகழ்த்த முடிகிறது. எப்போதும் மதம் சார்ந்த முன்முடிவுகள், நம்பிக்கைகள் ஒரு மனிதனுக்குள் புகுந்துகொண்டால் அன்றிலிருந்து அவன் சிறந்த விஞ்ஞானியாக உருவாக முடியாது. இந்தியாவில் நடந்த அறிவியல் மாநாட்டில் கட்டுரை வாசித்த விஞ்ஞானிகள் யாரும் விஞ்ஞானிகளே கிடையாது.

தொழில்நுட்பவாதி விஞ்ஞானி கிடையாது!

இந்தியாவை எடுத்துக்கொண்டோமானால் அறிவியலில் இரண்டு, மூன்று தரம் இருக்கிறது. அறிவியலின் Application தான் Engineering (பொறியியல்). Engineering-இன் Application தான் Technology. இவையனைத்தையும் போட்டுக் குழப்பி அனைவரையும் விஞ்ஞானிகள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அப்துல் கலாமை எடுத்துக்கொண்டால் கூட அவர் Scientist கிடையாது அவர் Technocrate (தொழில் நுட்பவாதி) தமிழில் மொழி பெயர்க்கும் போது விஞ்ஞானி என்று சொல்கிறார்கள். விஞ்ஞானத் திற்கும் தொழில்நுட்பத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.

விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட கோட்பாட்டை எடுத்துக் கொண்டுதான் ஒரு தொழில்நுட்பவியாளன் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறான். அதை வைத்துதான் ஏதாவது ஒரு கருவியை உருவாக்குகிறான். ஆனால், ஒரு விஞ்ஞானி என்பவன் மிக ஆழமாக சிந்திக்கிறான், இயற்கையை அவதானிக்கிறான். அதைத் தாண்டிப் போக முற்படுகிறான். ஆக தொழில் நுட்பவியாளன் என்பவன் மதவாதியாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் உலகத்தில் தோன்றிய தற்போதைய விஞ்ஞானிகள் வரை, ஸ்டீபன் ஹாக்கிங், ரிச்சர்ட் டாக்கின்ஸ், கார்ல் சாகன் மற்றும் அய்ன்ஸ்டீனாகட்டும் மதத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இயங்கு கிறார்கள். காரணம் என்னவென்றால் அவர்களால் தான் தங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். சிந்தனைக் கடப்பு நிலையை அவர்களால் தான் உருவாக்க முடியும்.

இஸ்லாமிய வரலாற்றில் கூட ஆரம்ப காலத்தில் கலியுகத்தில் நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்தவர்கள்கூட மதத்திற்கு அப்பாற்பட்டவர் களாகத்தான் இருந்திருக்கிறார்கள். பெயர் மட்டும் தான் முஸ்லீம் பெயராக இருந்திருக்கிறது. சில அரசுகள் அவர்களை ஆதரித்திருக்கின்றன, சில அரசுகள் அவர்களின் பெயரை வெளியே தெரியாமல் கொல்லவும் செய்திருக்கின்றன. இப்படி வரலாற்றில் இரண்டு சம்பவங்களும் நடந்திருக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் இது போல் குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகள் உருவாகாமல் போனதற்கு காரணமே இது போன்ற மத நம்பிக்கைகள்தான். காரணம் அவன் முன் முடிவுகளை வைத்துக்கொண்டுதான் அவன் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். இஸ்லாம் சார்ந்த எந்த முன்முடிவும் இல்லாமல் அவன் எந்த கண்டுபிடிப்பையும் நிகழ்த்த முடியாது. இப்போது, பிறப்பால் முஸ்லீமான ஒருவன் ‘ஹலால்' “முறைப்படி அறுத்தலைப் பற்றி” சுதந்திரமாக ஆய்வு செய்ய முடியாது. ஒரு வேளை ஆய்வு செய்து முடிவுகளை வெளி யிட்டால் அவன் இஸ்லாமிய அரசால் கொல்லப்படுவான். இதுதான் நடக்கும். இதை வைத்துதான் இஸ்லாம் ஒரு அறிவியல் மார்க்கமா என்பதை நாம் பார்க்க வேண்டும். மலேசியாவில் உள்ள ஜாகிர்நாயக் மிக பிரபலமானவர், குர்ஆனில் அறிவியல் உள்ளது, ஹதீஸில் அறிவியல் உள்ளது என்று காணொளி வெளியிட்டுக் கொண்டே இருப்பார். அதை இங்கு WhatsApp-களில் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

தேனீ பழங்களிலிருந்து தேன் எடுக்குமா?

குர்ஆனில் மிக முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பு உள்ளது என்கிறார்கள். பழங்காசு சீனிவாசன் என்ற மார்க்சிய வரலாற்று ஆய்வாளர். இஸ்லாம் பற்றி ஆழமான படிப்பு கொண்டவர். அவர் இஸ்லாமிய கூட்டங்களில் கலந்து கொண்டு இந்த கேள்வியைக் கேட்கும்போது பதில் சொல்லாமல் நழுவியுள்ளார்கள். அது என்னவென்றால், குர்ஆனில் பழங்களில் இருந்து தேனீக்கள் தேன் எடுப்பதாக ஒரு வசனம் வருகிறது. ஆனால் தேனீக்கள் பூக்களில் இருந்துதான் தேனை எடுக்கிறது. குறிப்பாக பெரிய பழங்களில் இருந்து தேன் எடுப்பதாக வசனம் வருகிறது. அன்றைக்கு இருந்தது பெரிய பழம் அது மஞ்சளாக இருந்தது. தேனின் நிறமும் மஞ்சள்; அதனால் இதிலிருந்துதான் வந்திருக்கும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். அப்போதும் சிலர் இதைக் கேள்வி கேட்டுள்ளனர். அவை மறைக்கப் பட்டுவிட்டது. இப்போதைய இருபதாம் நூற்றாண்டு காலகட்டத்தில் கேள்வி கேட்பவர் களுக்கு, அதை மறைக்க அதில் (குர்ஆன் வசனத்தில்) ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகின்றனர் அது என்னவென்றால், அடைப்புக்குறிக்குள் ‘மலர்களின் கனிகளுக்குள்' என்று மொழி பெயர்ப்பாளர்கள் மாற்றுகின்றனர். கனிகள் என்று தொடங்கிய வசனத்தை மலர்களின் என்று மாற்றிவிட்டார்கள். அடுத்த கேள்வி என்னவென்றால் கனிகள் இல்லாத மலர்களிலிருந்து கூட தேனீக்கள் தேன் எடுக்கும். கனகாம்பரம், பிச்சிப்பூ போன்றவை உள்ளனவே என்று கேட்டால் எந்த பதிலும் இல்லை. இப்படியாக அறிவியல் பூர்வமாக நியாயப் படுத்தும் மோசடியான வேலையைச் செய்கிறார்கள். எனவே இஸ்லாம் மட்டுமல்ல உலகில் உள்ள எந்த மதமானாலும் அறிவியலை வைத்து மதங்களை நியாயப்படுத்த முடியாது.

மதம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்தது. உளவியலாளர்கள் ஒரு உண்மையைக் கண்டு பிடித்துள்ளனர். குழந்தைகள் நான்கு முதல் அய்ந்து வயதில் வளரும் போது மதம், ஜாதி ஊட்டப்படுகிறது. தன்னுடைய பெற்றோர்கள் கடவுளைக் கற்பிக்கும் போதுதான் சிறு மூளையில் ஆழமாக பதிகிறது. அதனால்தான் அந்த நம்பிக்கையிலிருந்து வெளியே வருவது என்பது மிக சவாலான விசயமாக உள்ளது. மூன்று பெரிய மதங்களில் (கிருத்துவம், இஸ்லாம், இந்து) இருந்து வெளியே வருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆழமான வாசிப்பும், அவதானமும் மட்டும் தான் அதிலிருந்து வெளியே கொண்டு வரும். எனவே நம்பிக்கை வேறு அறிவியல் வேறு நம்பிக்கையையும் அறிவியலையும் ஒருபோதும் கலக்க முடியாது.

(மார்ச் 24, 2019 அன்று கோவையில் ஃபாரூக் நினைவு நாள் கருத்தரங்கில் நிகழ்த்திய உரை)

Pin It