சாதிய சர்வாதி கார சமூக அமைப்பி லிருந்து விடுதலை வேண்டும் என்று முழங்கும் தலித் மக்களின் முழக்கங்கள் பொதுவான தேசிய முழக்கங்களின் மூலம் மறைக்கப்படுகின்றன. இத்தகைய போக்கு தலித் விடுதலைக்கு மட்டுமல்ல நாட்டின் உண்மையான விடுதலைக்கு எதிரான சதியேயாகும்.

120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த நாள் முதல் இன்று வரையிலும் இந்தியாவின் ஊடகங்கள் நரேந்திர மோடியின் ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலை உருவாக்கிட சுமார் 70 ஆண்டுகள் இந்துத்துவ சக்திகள் உழைத்திருப் பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமரே தவிர இந்துத்துவத்திற்கான பிரதமர் அல்ல. இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கும் எவரும் இப்படித்தான் நம்புவார்கள்.

modi 277பிரதமர் நரேந்திரமோடி ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார்.

“துரதிருஷ்டவசமாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் சில குடும்பங்கள், சில வருடங்கள், சில நிகழ்வுகள் என்ற அளவிற்கு சுருக்கப்பட்டுள்ளன. ஆனால், சுதந்திரப் போராட்டம் மக்கள் போராட்டமாகும். தியாகங்களின் காவியமாகும். சுமார் 700 முதல் 800 ஆண்டுகள் நடந்த போராட்டமாகும். இந்தியாவைப் போன்ற சுயமரியாதையுள்ள நாட்டில் வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்பது அவசியமாகும். வரலாற்றை எண்ணிப் பார்ப்பது கனவு காண்பதைப் போன்றது. வரலாறு வாழ்க்கையின் உயிர் மூச்சு முன்னேற்ற ஏணியில் ஏறிச் செல்ல வேண்டுமே தவிர தவறி விழக் கூடாது” என்று மோடி பேசியிருக்கிறார்.

இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான பேச்சைப் பேசிய மோடி, அந்த நிகழ்வில் 1817ஆம் ஆண்டு ஆங்கிலேயே காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய ஆதிவாசி விடுதலை வீரர்களின் வழித் தோன்றல்களை கவுரவித்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டம் மக்களின் போராட்டம். அதை ஒரு சில நிகழ்வுகளுக்குச் சுருக்கக் கூடாது. அதேபோல ஒரு சில குடும்பங்களுக்குக் கட்டுப்படுத்தக் கூடாது என்று பிரதமர் மோடி கூறுவதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேபோல சுயமரியாதையுள்ள நாடு நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறுவதையும் மறுப்பதற்கில்லை. மேலும் வரலாறு கனவு போன்றது என்பதையும் வாழ்க்கையின் உயிர் மூச்சு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் மேற்கண்ட கருத்துகளை ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் அனுபவித்தால் மட்டுமே அந்த நாட்டிற்கும் சுதந்திர நாடு என்ற பெருமை சேரும். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை 700 முதல் 800 ஆண்டுகால வரலாற்றிலும், 1947க்குப் பின்னர் இன்று வரையிலான 70 ஆண்டுகால வரலாற்றிலும் இந்த இரண்டு கால கட்டங்களையும் தாண்டி இந்தியாவின் 3000 ஆண்டுகால வரலாற்றிலும் இந்நாட்டின் தீண்டப்படாத மக்கள், தலித்துகள் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார்கள், வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள் என்பதை பிரதமர் போற்றும் ‘சுதந்திர’த்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இந்திய சுதந்திரத்தின் உள்ளார்ந்த தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

பிரதமர் மோடி குறிப்பிடும் கால கட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளைப் பார்ப்போம்:

மராட்டா பகுதியை ஆட்சி செய்த பேஷ்வா அரசனிடம் (பேஷ்வா என்போர் மராட்டிய பார்ப்பனர்) ‘தலித்’ சமூகமான மகர் வீரர்கள் சென்று, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தங்களையும் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடினார்கள். அந்த அரசன் என்ன செய்தான்? மகர் வீரர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பினான். மகர் வீரர்கள் நின்ற இடம் தீட்டாகிவிட்டதென்று - அந்த இடத்தைக் கழுவி சுத்தம் செய்தான். அந்த பேஷ்வா அரசனும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டான். ஆங்கிலேயர் இராணுவத்தில் சேர்ந்தனர். 500 மகர் வீரர்கள். பேஷ்வாவின் 25,000 வீரர்கள் அடங்கிய படையை 1818ஆம் ஆண்டு 1ஆம் தேதி கோரேகாவ் என்னுமிடத்தில் தோற்கடித்தனர். பேஷ்வா பார்ப்பனர்களின் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘மகர்’ சமூகத்தினருக்கு கோரேகாவ் பகுதியில் நிர்மாணித்த நினைவுத் தூண் இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிதான் அந்த நினைவுத் தூணை நிறுவியது.

பாபாசாகேப் அம்பேத்கர் கோரேகாவ் நினைவிடத்திற்கு ஆண்டுதோறும் சென்று வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. கோரேகாவ் யுத்த பூமிக்குச் சென்றிருக்க வேண்டும்.

தங்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய 500 மகர் வீரர்களின் வாரிசுகளை பெருமைப் படுத்தியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்லவா?

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மேதை ஒருவர். ஐந்தாண்டுகள் அமெரிக்கா விலும் இங்கிலாந்திலும் உயர்கல்வி கற்று திரும்பியவர். பரோடா மகாராஜாவின் அரண்மனையில் உயர்ந்த பதவியில் இருந்தவர், தங்கியிருந்த ஓட்டல் அறையிலிருந்து விரட்டப் பட்ட நிலையில் போகுமிடம் தெரியாமல் நகரத்தின் பூங்காவில் தனிமையில் உட்கார்ந்து, தனது தாய் தந்தையை நினைத்து சிறு குழந்தை போல கண்ணீர்விட்ட நிகழ்வையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏன் அவர் விரட்டப்பட்டார். அவ்வாறு விரட்டப்பட்டவர் யார்? தீண்டப் படாத சாதியென்று இந்துமதம் குறிப்பிடும் மகர் சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் அம்பேத்கர் அவர்களை சாதிவெறியர்கள் ஓட்டலிலிருந்து விரட்டினார்கள்.

சுதந்திரத்தைப் போற்றும் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், பாபாசாகேப் அவர்களின் சுதந்திரத்தைப் பறித்தது எது என்பதையும் பேசியிருக்க வேண்டும்.

பிரதமர் அவர்கள் குறிப்பிட்ட 1817ஆம் ஆண்டின் நிகழ்விற்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த ஒரு நிகழ்வை வரலாற்றின் பக்கங் களுக்குக் கொண்டு வருவோம்.

1911ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் திருநெல் வேலியின் ‘கலெக்டராக’ இருந்த ஆஷ்துரை என்பவர் ரெயிலில் வந்து கொண்டிருந்த பொழுது மணியாச்சி இரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்டுக் கொன்ற இளைஞனின் பெயர் வாஞ்சிநாதன். அரசாங்கத்தின் பாடப் புத்தகங்களில் விடுதலைப் போராட்ட வீரன் என்றும் போற்றப் பட்டான். வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டது சுதந்திரத்துக்கான போராட்டமா? இல்லை; சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்கே சுட்டான். பார்ப்பன சாதி ‘வர்ணாஸ்ரம’ பெருமையைக் குலைத்து விட்டான் என்பதற்காக ‘ஆஷ்’ துரையைச் சுட்டுக் கொன்றான்.

ஆஷ்துரை செய்த குற்றத்தைப் பாருங்கள்:

“ஆஷ்துரையும் அவனுடைய மனைவியும் குதிரை வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது பிரசவ வலியில் ஒரு பெண் கத்தும் சத்தம் கேட்கிறது. விசாரிக்கின்றனர். ஒரு பெண் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருப்பதாகவும், குழந்தை தாயின் வயிற்றில் தலைகீழாக இருப் பதாகவும் கூறுகின்றார்கள். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் இருப்பதேன் என்று கேட்கின்றார். அத்துடன் தான் வந்த குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவ மனைக்குச் செல்கின்றார். அந்தப் பாதை பார்ப்பனர்களின் அக்ரகாரம் வழியாகச் செல்கின்றது. உடனே பார்ப்பனர்கள் குதிரை வண்டியைத் தடுக்கின்றனர். ஆஷ்துரை ஏன் தடுக் கின்றீர்கள் என்று கேட்கின்றார். பிரசவ வேதனையில் இருப்பவள் தீண்டப்படாத சாதியைச் சேர்ந்தவள்.

எனவே கீழ்சாதி பெண்ணை தங்கள் வீதி வழியாக அழைத்துச் செல்வதைக் கூட அனுமதிக்க முடியாது என்று கூறி தடுக்கின்றனர். ஆஷ்துரை எவ்வளவு கேட்டும் வழிவிடவில்லை. அவர்களின் எதிர்ப்பை மீறி அக்ரகாரத்தின் வழியாக வண்டியை ஓட்டிச் சென்று அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கின்றார். மருத்துவர்களின் முயற்சியில் தாயும் குழந்தையும் காப்பாற்றப்படுகின்றனர்.

ஆஷ்துரையின் குதிரை வண்டியைத் தடுத்தவர்களில் ஒருவன்தான் வாஞ்சிநாதன். தனது பார்ப்பன சாதியின் தெருவழியாக ஒரு தலித் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத் துச் சென்று சாதியின் புனிதத்தைக் கெடுத்து விட்டான் என்று கருதிதான் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றான் வாஞ்சிநாதன்.

மணியாச்சி இரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதனின் பெயரை வைத்திருக் கின்றார்கள். வாஞ்சிநாதனும் பார்ப்பனர்களும் செய்தது தவறு என்று மோடி கூறுவாரா? மக்களுடன் நடத்தும் உரையாடலில் இந்த நிகழ்வை யாருடைய சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிப்பார். இப்பொழுதாவது அந்தத் தலித் பெண் பெற் றெடுத்த வாரிசுகளைத் தேடிச் செல்வாரா?

பிரதமர் மோடி குறிப்பிட்ட ஆண்டின் முன்னும் பின்னும் நடந்த சில நிகழ்வு களை சுட்டிக் காட்டு வோம்.

மேற்கு வங்கத் தில் வாழும் ‘நாம சூத்திரர்கள்’ இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் கலந்து கொள்ள விரும் பினார்கள். எனவே போராட்டக்காரர்களை அணுகி, தங்கள் மீதான சாதிய அடிமைத்தனத்தை ஒழித்துவிட்டு தங்களையும் சகோதரர்களாகப் பாவித்து சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை வைத்தனர். சகோதரத்துவத்தின் அடை யாளமாக தங்கள் தாய்மார்களிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் படி வேண்டினார்கள்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள், ‘நாம சூத்திரர்’களின் கோரிக்கையை நிராகரித்ததுடன், ‘நாம சூத்திரர்’களின் வீடுகளுக்கும், விளைச்சல் களுக்கும் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

பிரதமர் மோடி மேற்கு வங்கத்திற்குச் சென்று தங்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ‘நாம சூத்திரர்’களின் வாரிசு களிடம் பேச வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா? அப்படி எதிர்பார்ப்பது நியாயம் தானே?

ஏப்ரல் 18ஆம் பிரதமர் மோடி கருநாடகத்தின் ஜாதி ஒழிப்புப் போராளி பசவண்ணர் பிறந்த நாளின் வாழ்த்துச் செய்தியில் பசவண்ணரின் கோட்பாடுகளை சிறப்பித்து பேசியிருந்தார்.

1940களின் பசவண்ணர் பிறந்த ஊரான பசவணபாகி வாடிக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் தலித்துகள் கிராமத்தின் குளத்தில் குடிப்பதற்காக நீரைத் தொட்டார்கள் என்பதற்காக தலித் வீடு களையே ஜாதி இந்துக்கள் எரித்து விட்டார்கள். இன்றும் தலித்துகள் இல்லாத கிராமமாகவே இருக் கின்றது.

மோடி பிறந்து வளர்ந்து முதல்வராக ஆட்சி செய்த மாநில மான குஜராத்தில் 1920 களில் தலித் மக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்ததற்காக தாக்கப்பட்டனர்.

அவர்கள் சொந்த கிராமத்தை விட்டு உயிரைவிட்டு உடல் நடப்பதைப்போல அகதிகளாகச் சென்றார்கள்.

அகதிகளாக விரட்டப்பட்ட தலித்து களின் வாரிசுகளையும் விரட்டிய சாதி இந்துக்களின் வாரிசுகளையும் ஒன்றிணைத்து குஜராத்தின் தலைநகரில் சிறப்பு மாநாடு நடத்தி சுதந்திரத்தின் சிறப்புகளைப் பிரதமர் பேசுவாரா?

மோடியின் சுதந்திர கனவில் இந்தப் பக்கங்கள் காணாமல் போய்விட்டனவா?

(கட்டுரையாளர் - எழுத்தாளர் - ஜாதி ஒழிப்பு செயல்பாட்டாளர்)

Pin It