karlmarx 350பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் காலூன்றிய போது, அது தனது வர்த்தகத்தை அபிவிருத்தி செய்து கொள்ளவும், அது தங்கு தடையின்றி நடக்கவும், அதனுடைய சட்ட வடிவங்கள் இங்கு நிலை நாட்டப்படவும் அதற்கான நிர்வாக இயந்திரத்தை இந்தியாவில் கொண்டு வந்தது. அதற்கு சேவகம் செய்வதற்கான எல்லா துறைகளும், இங்குள்ள ஏழை மக்கள் மூலமாக பயன்படுத்தப்பட்டது.

அப்போது எதுவெல்லாம் அவன் நிர்வாகத் திற்குத் தடையாக இருந்ததோ அதையெல்லாம் தன்வயப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசு அதை தனக்கு தோதான முறையில் மெல்ல மெல்ல மாற்றி அமைத்தது. அது முதன் முதலில் கல்வியில் தொடங்கி கணக்கன் முதல் பணியாளன் வரை மாற்றி அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நமது கலாச்சாரம், பண்பாடு, மொழி, மதம், கிராமப்புற கலைகள் யாவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நோக்கி மாற்றப்பட்டது. அதில் நமது விளையாட்டு களான கபடி, கால்பந்து, மட்டைப் பந்து போன்ற வீர விளையாட்டுக்கள் கூட மெல்ல, மெல்ல சிதைக்கப்பட்டு கிரிக்கெட் போன்ற ஏகாதிபத்திய கலாச்சாரம் சார்ந்த விளையாட்டுகள் புகுத்தப்பட்டது. அது போலவே நமது கிராமப்புற கலாச்சாரத்தின் வேராக இருந்த ஜல்லிக்கட்டு கூட நாளடை வில் மறக்கப்பட்டு, விலங்கினங்கள் வரிசையில் நாட்டு மாடுகளும், பசுக்களும் கூட ஏகாதிபத்திய பாலினங்கள் மூலமாக நமது தேசிய காளை இனங்கள் அழிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு, எனது வாழ்வின், கலாச்சாரத் தின், பண்பாட்டின் அடையாளம் என்ற கோஷத்தோடு புறப்பட்ட, 20க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதையுடைய இளைஞர்கள், மாணவர்கள், யுவதிகள், பெண்கள் எல்லோரும் கூடி, அகன்று விரிந்த மெரினாவின் மென்மையான மணலில் அமர்ந்து ஆர்ப்பரிக் கும் கடல் அலையின் வேகத்துக்கு இணையான உணர்ச்சி பெருக்கினை வெளிப்படுத்திய மௌனப்புரட்சி இது. உலகின் வரலாற்றில் உன்னதமான மௌனப் புரட்சியை நடத்தி முடித்த இளைஞர்களும், மாணவர்களும் இந்த சமூகத்துக்கு விட்டுச் சென்ற கேள்வி எது?

ஏன் இந்த ஆர்ப்பாட்டம்-? எதனால் உந்தப் பட்டது இந்த எழுச்சி? வெறும் ஜல்லிக்கட்டு மட்டும் தானா? அவ்வாறாயின் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி அறிந்த உடனே பலதரப்பட்ட, அறிவு ஜீவிகளாலும், உழைக்கும் மக்களாலும், வணிக பெருமக்களாலும், கலைஞர்களாலும் அந்த ஆறு நாட்களாகவும் தொடர்ந்து அரவணைக்கப்பட்டு ஆதரித் தார்களே அது வெறும் ஜல்லிக்கட்டு என்ற ஒரு கோஷத்துக்குத்தானா? இல்லை என்பதே அந்த போராட்டத்தின் ஒருமித்த வெளிப்படாக இருந்தது. அதில் தமிழ்ச் சமூகம் தமிழர் பண்பாடு, தமிழர் உரிமை, தமிழர் விடுதலை போன்ற கோஷங்கள் ஒலித்தனவே. அது எந்த உணர்வின் வெளிப்பாடு? அது அடக்கப் பட்டவரின் குரலாக கேட்கவில்லையா?

இரு ஒரு சுதந்திர வேட்கையாக உணரப் படவில்லையா? ஒரு குழந்தை தன் தாயின் மடியில் உணரும், சுகம், பால் சுதந்திரம், அரவணைப்பு, பாதுகாப்பு, இத்தனையும் உள்ளடக்கிய ஒரு இன்பத்தை பெறுவது போல், மாணவர்கள் தங்கள் சமூகத்தில் தங்களுக்கு வேண்டிய, உரிமை, சுகம், பாதுகாப்பு, சுதந்திரம் இல்லையென உணர்ந்ததின் வெளிப்பாடே இந்த உணர்வு வழியான போராட்டம்.

வரலாற்றில் விடுதலையை பெற்றுத் தந்த வர்கள் எல்லோரும் இளைஞர்களே, அவர்கள் கவிதை வடிவிலும், நாடக வடிவிலும், எழுத்து வடிவிலும், போராட்ட வடிவிலும் கிளர்ச்சி, எழுச்சி என்ற எண்ணற்ற வடிவங்களில் இணைந்து வெற்றியை எட்டியவர்கள் தான். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணைந்த மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் போராட்டத்தில் அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் அனுமதிக்கவில்லையே ஏன்? பேயைக் கண்டார் போல அச்சம் தரும் அரசியல்வாதிகளை மாணவர்கள் கண்டனர்.

கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாய் இருந்து உழைப்பேன் என்ற வரையும், மக்களால் நான் - மக்களுக்காக நான், உங் களால் நான் உங்களுக்காகவே நான் என்று சொன்ன புரட்டுத் தலைவர்கள் மேல் நம்பிக்கை இழந்துதானே அரசியல்வாதிகளை போராட்டத்தில் அனுமதிக்கவில்லை.

தேசத்தின் விடுதலைக்கும், தேசியத்தின் உரிமைகளுக்குமான போராட்ட வடிவங்கள் வேறு வேறானவை,

இந்த நிலையில் நாம் சைமன் பொலிவார் அரசியலையும், லெனின், மாவோ, காஸ்ட்ரோ போன்ற இளவயது போராளிகள் அரசியலையும், அவர்தம் நடைமுறைகளையும் பார்க்க வேண்டி உள்ளது.

30, 35 வயதுக்குட்பட்ட காலங்களில் காஸ்ட்ரோ, சேகுவேரா, பிரபாகரன் போன்றவர்கள் வீரச்செறிந்த போராட்டங்களை முன் எடுத்தனர். 30, 35 வயதுக்குட்பட்ட பகத்சிங் போராடினார். 35 வயதில் மகாகவி வீரச் செறிந்த பாடல் மூலம் போராடினார். வீரச் செறிந்த வர்க்கப் போராட்டத்துக்கு வடிவம் கொடுத்த பாட்டாளி வர்க்க அறிக்கை கூட 30 -35 வயதை ஒத்த மார்க்சும், ஏங்கல்சும் எழுதியது. இன்றளவும் அது உயிர்ப்புடன் உள்ளது. இந்த வீரம் செறிந்த தத்துவம் திருக்குறளுக்கு பொழிப்புரை எழுதுவதைப் போல கம்யூனிஸ்டுகளும், மற்ற இடதுசாரி சிந்தனையாளர்களும் அதை கையிலெடுத்து மழுங்கடித்து வருகின்றனர்.

மாற்றம் நிலையானது. மாறாதது எதுவும் இல்லை என்ற கோட்பாட்டை மறந்து மக்களுக்கான சனநாயகத்துக்கு எதிராக, பாராளுமன்ற சனநாயகத்தை தூக்கி நிறுத்தும் கம்யூனிஸ்டுகள் மாறவேயில்லை. படை ஒன்று இல்லையெனில், தடை ஒன்று உடைக்கப்பட முடியாது. சுகப்பிரசவமேயோனாலும் இரத்தம் சிந்தாமல் நடப்பதில்லை.

மக்களிடம் செல்லாமல் மாற்றம் என்பது இல்லை. உழைப்பவனிடமிருந்து, உழைப்பை மாற்றத்துக்கான மூலதனமாக மாற்றாமல், மடைமாற்றம் செய்து ஓட்டுப் பெட்டிக்குள் தலைகுனிய வைத்த அரசியல் வாதிகளோடு, கம்யூனிஸ்டுகளும் கைகோர்த்தார்கள். அதனால் நல்லவர்களும், தூய்மையான போராளிகளும் கூட மக்களிடம் செல்ல முடியவில்லை.

 மக்களுக்கு எதிராக அரசியல் செய்யும் அறிவு ஜீவிகள் மக்களை சாதிய ஏகாதிபத்தியம் பேசி சாதித் தலைவர்களாக வலம் வருகிறார்கள். அவர்கள் புரட்சி பேசுகிறார்கள். சாதி என்பதை அடையாளம் காட்டியவனோடு சேர்ந்து கொண்டே சாதி தலைவர்கள் பள்ளன், பறையன், சக்கிலி என்ற பெயர்கள், அருந்ததியர், ஆதி திராவிடர், தேவேந்திர குல வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டு சாதிய தலைவர்கள் குறுநில மன்னர்களாக மாறிவிட்டனர். ஆதலால் அவர்களையும் இந்த தை புரட்சி தடை செய்தது.

ஒரு வீரம் செறிந்த தத்துவம் மக்கள் மத்தியில் புழங்கவில்லை. மாறாக வறண்ட பாலைவனத்தை நோக்கி பயணிப்பது போல உள்ளது. அவரவர்கள் புரிந்து கொண்டது போல வழித்தடங்களும் அமைகின்றன. மக்கள் உரிமைக்கான போராட்ட வடிவங்களை திசை திருப்பும் வேலை நடைபெறுவது போல தெரிகிறது.

இதயமற்ற உலகில் இதயமாக இருப்பது மதம். இதயத்தின் மென்மையான துடிப்புகளை அழித்துவிட்டு மார்க்சீய பக்தியினால் மக்களை பலவீனப்படுத்துகிறீர்களா? என்பது கேள்வியாகிறது. அப்படியானால் சற்று விலகி நில்லுங்கள். ஏழை மக்களுக்காக இதய பூர்வமாக உழைப்பவனே, மாற்றத்தை நோக்கி பயணிக்க முடியும். சமூகத்தில் பிறப்பு சமமானது. ஆனால் அது வளரும் சூழல் வேறாக உள்ளது. அப்படியாயின் அதிலேயிருந்து மால்வதை போன்ற ஒரு பயங்கரம் வேறு எதுவும் இல்லை. ஏழ்மையிலும், அறியாமையிலும் இருக்கும் மக்கள் நலனுக்கான போராட்டத்தை அனுதாப உணர்வோடு மறுபரிசீலனை செய்யுங்கள். வாங்குபவனும், கொடுப்பவனும் சமநிலையில் வாழ வழிகாணுங்கள். அனுதாப உணர்வுடன் கரம் நீட்டாதீர்கள். அது புரட்சியை, மாற்றத்ததை ஒத்திப் போடும்.

மிலேச்சன் என்ற வார்த்தையின் ஆழம் இன்னும் நாடெங்கும் வியாபித்துள்ளது. இதில் இருந்து, இந்தியாவின் வீழ்ச்சி, நிமிர்ந்து எழ முடியவில்லை. மிலேச்சனின் புழுங்கும் இடம் சுதந்திர இந்தியாவில் இன்னும் ஒரு வட்டத்துக்குள்ளேயே உள்ளது. (மிலேச்சன் என்ற வார்த்தை இந்து அல்லாதவன், ஏழை இந்து என்று பொருள் படுக)

பணக்காரனுக்கு சேவகம் செய்து அவனிடம் ஆதரவு கேட்டு, அவனையே தெங்கிக் கொண்டிருப்பது வேசியின் நடத்தைக்கு ஒப்பானது என்று விவேகானந்தர் சொல் கிறார். அது போலவே மக்களுக்கு எதிரான சனநாய கத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு, மக்களுக்கு சேவகம் செய்வதென்பது வேசித்தனமானது - விவேகானந்தர் சொல்லியது போல.

சரி இனி நாம் தொடங்கிய இந்த மௌனப் புரட்சி, தாயின் வயிற்றில் வளரும் கருவைப் போல. எரிதனலில் சூடாகும் நீரைப் போல கொதிக்கின்ற காலமாகவும், பிரசவிக்கத் தேவையான காலமாகவும் உள்ளது. ஆனால் கொதிக்கின்ற காலத்தில் பிரசவிக்கின்ற புரட்சி மக்களுக்கானது. அது இளைஞர்கள், மாணவர்கள் அனுபவம் முதிர்ந்த மக்கள் தலைவர்களால் வென்றேடுக்கப்படும்.-

நீருபூத்த நெருப்பாக அடிதனழலில் கனன்று கொண்டிருக்கும் கங்குகள் போல் இளைஞர்கள், மாணவர்களின் தமிழ் தேசிய விடுதலையும் தமிழ் மக்களுக்கான இறையாண்மையும் சேர்ந்தே இருக்கிறது.

Pin It