இப்பொழுது பருவக் காலங்களே மாறிக்கொண்டிருக்கிறது. குளிர்காலத்தில் அவ்வளவு குளிர் இல்லை. வெயில் காலத்தில் கடுமையான வெயில் அடிக்கிறது. வெயில் காலத்தில் வெயில் இல்லையென்றால் பரவாயில்லை. அது மிகக் கடுமையாக அடிக்கிறது. இருக்க வேண்டிய குளிரும் மழையும் குறைந்துகொண்டே போகிறது. இதற்கான காரணத்தை நாம் எங்கேயோ போட்டுவிட்டு, கிரகம் சரியில்லை, காலம் கெட்டுப்போய்விட்டது, கலி முத்திரிச்சு, நல்லவர்கள் குறைந்துபோய்விட்டார்கள். அதனால் மழை பெய்வதில்லை என்று நாமும் ஏதேதோ சமாதானம் சொல்லிக்கொண்டே அமைதியாகிவிடுகிறோம். நல்லவர்கள், குறைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அந்த குறைகிற எண்ணிக்கையில் நாம் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

book readingஎல்லோரும் இதுபற்றிக் குறை சொல்வதில் நம்முடைய உலகமும், இந்தச் சமூகமும், சுற்றுப்புறமும், சூழலும், ஒழுக்கமும், பண்பாடும் குறைந்து கொண்டே வருகிறது என்பதில் முரண்பாடு கிடையாது. ஆனால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கும், அதைச் சீர் படுத்துவதற்கும் மீண்டும் ஓர் உயர்ந்த நிலையை அடைவதற்கும் நாம் என்ன செய்கிறோம்,அல்லது அப்படி செய்யப் போராடுகிறவர்களுக்கு நாம் எந்த வகையில் ஒத்துழைப்பாக இருக்கிறோம், அப்படி செய்ய முயற்சிக்கிறவர்களுக்கு நாம் என்ன உதவி செய்கிறோம், குறைந்தது இடையூறு செய்யாமலாவது இருக்கிறோமா? இதற்கெல்லாம் நமக்கு எண்ணமும், ஆர்வமும், அக்கறையும் இருக்கிறதா? என்கிற கேள்வியை நமக்குள் கேட்டுப்பார்க்கிறபோது, எனக்குத் தோன்றியது இது. யாருக்கு இல்லை ? உலகை அறியாதவர், நம்மைப்போல பள்ளி, கல்லூரிப் படிப்புகளுக்கு வராதவர், அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்று சொன்னால், அது அறியாமை என்று நாம் மிகச் சுலபமாக சொல்வோம். அவருக்குப் படிப்பு குறைவு, ஸ்கூல்ல படிச்சதில்லை. அப்படித்தான் நாம் நிறைய பேரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். படித்தவர்கள் என்று நாம் பார்க்கிறவர்களுக்கெல்லாம் தேவையான பண்பாடு இருக்கிறதா, அக்கறை இருக்கிறதா, படித்தவர்களின் நடத்தை படித்தவர்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா? என்று பார்த்தால், மிக அதிர்ச்சி அளிக்கக்கூடிய புள்ளி விவரங்களை நம்முடைய நாடு வைத்திருக்கிறது.

இங்கு பரதம் ஆடிய சிறுமி ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று அந்தப் பாடலுக்கு மிக அழகாக ஆடினார். ஆனால் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டோமா, சுதந்திரமாக வாழ்கிறோமா? என்கிற கேள்வி, இன்றைக்கு வரை எழுந்துகொண்டே இருக்கிறது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கட்சி சுதந்திரம், கூட்டம் நடத்துகிற சுதந்திரம் இவையெல்லாம் ஒரு பக்கம். சகோதரிகளைப் பார்த்துக் கேட்கிறேன், என்றைக்காவது கடைத்தெருவில் நீங்கள் கை வீசி, ஒரு ஆண் நடப்பதைப்போல, சுதந்திரமாக நடந்திருக்கிறீர்களா? (பெண்பார்வையாளர்கள் இல்லை என்று கை அசைக்கிறார்கள்) ஏன் நடக்க முடியவில்லை? ஏதோ சீனாக்காரனும், பாகிஸ்தான்காரனும் சண்டைக்கு வர மாதிரியே உடம்பைக் குறுக்கி, காப்பாற்றிக்கொண்டு, கையில் புத்தகமோ, பையோ வைத்திருந்தால் அதை வைத்து நெஞ்சை இறுக்கி மூடிக்கொண்டு, யாரிடமிருந்து தப்பித்து அப்படி நாம் நடந்து போறோம்?

ஒரு நாடு பண்பில் உயர்ந்த நாடு, அறிவில் உயர்ந்த நாடு என்று சொல்ல வேண்டுமென்றால், அந்த நாட்டில் வாழ்கின்ற பெண்கள் தைரியமாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்தால்தான் அந்த நாட்டுக்கு இந்த மாதிரியெல்லாம் பேர் வைக்க முடியும். பழம்பெருமை உள்ள நாடு... அவையெல்லாம் வேலைக்கு ஆகாது. இந்தப் பெண்கள் யாரைப்பார்த்து அச்சப்பட்டு, தான் சுதந்திரமாக வாழ முடியாமல், நடக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் என்றால் நம் சமூகத்தினுடைய அறிவு நிலை, அற நிலை, ஒழுக்க நிலை என்ன? இதைப் பற்றி யாராவது வீட்டில் பேசுகிறோமா? கோவிலுக்குப் போவது, மசூதிக்குப் போவது, சர்ச்சுக்குப் போவது, பூஜைகள், தொழுகைகள், பிரார்த்தனைகள் போன்றவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்கும் பெற்றோர்கள் யாராவது, அவர்களின் மகன்களிடம் ஒழுங்காகத் தெருவில் பெண்களை இடிக்காமல் போய்ட்டு வா என்று சொல்லிக்கொடுக்கிறோமா?ஆனால் பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறோம், பத்திரமாகப் போய்ட்டு வா என்று. பத்திரமாக என்றால் எங்கே போய் ஓடி ஒளிய முடியும்?

சின்னத்தம்பி யானை மாதிரியா? யானைக்கே இடமில்லை. பத்திரிகைகளில் பார்க்கிறோம் யானைகள் அட்டகாசம் என்று. யானை என்ன அட்டகாசம் பண்ணவா வருகிறது? அது இருக்கும் இடத்தில் சாப்பாடு இருந்திருந்தால், தண்ணீர் இருந்திருந்தால் அது இறங்கி வராது. நாம் அங்கு சென்றால் எங்க ஏரியா கிட்ட வராதே என்றுசொல்லும். சொல்லத் தெரியாமல் வந்த அந்த சின்னத்தம்பி யானையை எல்லோரும் சேர்ந்து அலை கழிப்பதுபோல, பெண்களை நாம் ஏன் இப்படி செய்துகொண்டிருக்கிறோம்? இவற்றையெல்லாம் தங்கள் மகன்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோமா? இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்காமல் நாம் டாக்டராக, எஞ்சினியராக, வழக்கறிஞராக, பேராசிரியராக இன்னும் என்னென்னவாகவோ இருக்கிறோம். ஆனால் அடிப்படையில் மனிதராக இல்லை.

அப்படியென்றால் இவற்றையெல்லாம் நாம் எதற்காகப் படித்தோம்? படிப்பைப் பற்றிச் சொல்லும்போது, ‘எல்லாந்தாம் படிச்சீங்க, என்ன பண்ணிக் கிழிச்சீங்க?’ என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை நாம் தவிர்க்கவே முடியாது. எல்லாப் புத்தகங்களும் இருக்கின்றன. தத்துவங்கள் இருக்கின்றன. சித்தாந்தங்களைப் படித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் படித்ததன் பலன் என்ன என்பதை வாழ்க்கையில் அவர்கள் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்களா?

முதலில் கற்பதின் நோக்கம் என்ன? பட்டம், வேலை, Competitive Examination, IIT... ஐந்தாவது படிக்கும் பையனை அப்பா, அம்மா பண்ணும் டார்ச்சர் இருக்கு பாருங்க, ஆறாம் வகுப்பிலிருந்தே அவன் IIT Coaching போகணும். ஐ.ஐ.டி.யில் இருப்பது ஆயிரம் இடங்கள் என்றால், இந்தியா முழுவதும் பத்து லட்சம் மாணவர்களின் பெற்றோர்கள் நீ ஐ.ஐ.டி.க்குப் போகவேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள். அந்த ஆயிரம் மாணவர்களைத் தவிர, மீதி உள்ள மாணவர்கள் என்ன ஆவார்கள்?

நீட் (NEET) தேர்வு வந்தபிறகு உங்க பாடத்திட்டத்திற்கு மரியாதையே கிடையாது. நீ தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் இந்தத் தேர்வுக்கு மட்டும் படி என்றால், மூவாயிரம் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு, தேர்வு எழுதுகிற மூன்று லட்சம் பேரையும், அதை மட்டும் படித்தால் போதும் என்று படிக்க வைக்கிறோம். இதுதானா படிப்பினுடைய நோக்கம், அப்பொழுது மருத்துவராக, பொறியாளராக வர முடியவில்லை என்றால், அந்த மாணவர்களுக்கு மற்ற கல்லூரிகளில் இடம் கிடைக்குமா? அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் ? மாணவர்கள் படிக்கும் பாடத்தை நன்றாகப் படிக்கச் சொல்ல வேண்டும். பரவாயில்லை, நீ அறிவியல் படி, வேதியியல் படி, ஆசிரியருக்குப் படித்து, நல்ல ஆசிரியராக பணியாற்று என்று சொல்ல வேண்டும்.

இப்பொழுது இருக்கும் நிலையில் நிறைய பெண்களை நீ ஆசிரியருக்குப் படிக்கிறாயா என்று கேட்டால், ‘அய்யய்யோ’ என்று மறுக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஆசிரியர்கள் மீது அவர்களுக்கு அவ்வளவு நல்ல எண்ணம். பெரியவர்களைக் கேட்டால், ஆசிரியராக வர வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன் என்று சொல்வார்கள் . ஏனென்றால் அவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் அப்படி இருந்தார்கள். எல்லா ஆசிரியர்களையும் அப்படி சொல்லக்கூடாது. இப்போதும் கொஞ்ச பேர் இருக்கிறார்கள்.தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்து மாணவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுகிற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் தன்னிடம் படிக்கின்ற மாணவன் அல்லது மாணவி சாப்பிட்டார்களா, அந்த மாணவி ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாள், இங்க வாம்மா, என்னம்மா உனக்குப் பிரச்சனை, என்று கூப்பிட்டு பேசக் கூடியவர்கள் குறைந்துவிட்டார்கள். ஆகையால் மாணவர்களை அழைத்து நல்ல ஆசிரியராக நீங்கள் வர விரும்புகிறீர்களா என்று கேட்டால், அவர்கள் பார்க்கின்ற நல்லாசிரியர்களின் எண்ணிக்கைகுறைவாக இருப்பதால், அவர்களுக்கு நல்லாசிரியராக வர வேண்டும் என்ற நம்பிக்கை வரவில்லை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சொல்லலாம், நீ எதுவும் பண்ணலைன்னா ஆசிரியராக பணியாற்றலாம், டியூஷன் எடுக்கலாம், இத்தனை வகையான படிப்பு இருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்து பிழைக்கலாம். ஆகையால் நீ மருத்துவராகத்தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று.

கட்டிடங்கள் கட்டுமானத்தில் கலவை மெஷின்என்ற ஒன்று இருக்கிறது. ஒரு புறம் சிமென்ட், ஜல்லி, தண்ணீரை ஊற்றினால் மூன்றும் கலந்து கலவையாக மறுபுறம் வந்து கொட்டும். அதுபோல தன் மகனையும், மகளையும் இந்தப் பக்கம் மிஷினில் போட்டால், மறுபக்கம் டாக்டராக, இன்ஜினியராக, ஐ.ஏ.எஸ். ஆக வந்து விழுந்துவிடுவார்கள் என்று பெற்றோர்களுக்கு ஆசை. சாப்பிட விடுவதில்லை, தூங்க விடுவதில்லை, விளையாட விடுவதில்லை. படி, படி, படின்னு அப்படி படிக்க வைக்கிறார்கள். அதுதானா படிப்பினுடைய நோக்கம், இதற்குப் பெயர்தானா கல்வி? மாணவர்கள் என்ன ஆவார்கள்? சம்பாதிக்கிற மெஷின் ஆவார்கள். எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்? நம்ம ஊர் சம்பளமெல்லாம் இப்போது பத்தாது. அமெரிக்க டாலர்!

முதலில் எழுபதாயிரம் கொடுத்தார்கள், பிறகு எண்பதாயிரம். அந்த வேலையை நோக்கி எல்லோரும் போய் விழுந்தார்கள். இப்போது புதிதாகப் படித்து முடித்து வருபவர்களுக்கு வெறும் பன்னிரண்டாயிரம் சம்பளம். எழுபதாயிரம் வாங்கியவர் என்ன ஆனார்? நீ assessment-ல சரியில்லை, உன்னுடைய Evaluvation சரியில்லை என்று வெளியே அனுப்பிவிட்டார்கள். எழுபதாயிரம் சம்பளம் வாங்கியவர்கள் வெளியே அனுப்பப்பட்டார்கள், லட்சக் கணக்காகச் செலவு செய்து படித்த புதியவர்களுக்கு வெறும் பன்னிரண்டாயிரம் சம்பளம். என்ன ஆவார்கள், அவர்களுடைய எதிர்காலம் என்ன?

அப்படிப் படித்த மாணவர்கள் கடைசியில் வீடு வீடாக புத்தகம் விற்கிறார்கள். ஆயிரம் ரூபாய் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்து, just two hundred madam என்கிறார்கள். என்னம்மா படித்திருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் எம்.பி.ஏ. படித்திருக்கிறேன் என்கிறார்கள். எம்.பி.ஏ. படித்துவிட்டு ஏம்மா இந்த வேலை செய்கிறாய்? இது எங்களுடைய assignment madam. எவ்வளவு சம்பளம்? எட்டாயிரம் ரூபாய். MBA படிப்பு என்பது Masters of Business Administration எவ்வளவு பெரிய படிப்பு. அந்தப் படிப்பை படிக்க வைக்கும் பெற்றோருடைய ஆசை என்ன? என் மகன், மகள் எம்.பி.ஏ. படித்திருக்கிறாள் என்று சொல்வதில் அவர்களுக்கு இருக்கிற பெருமை எவ்வளவு, ஆனால் அதற்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பு என்ன?

இந்த மாதிரி பட்டங்கள் எல்லாம் படித்தால், இவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்பது காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் மதிப்பு மாறாத படிப்பு என்று ஒன்று இருக்கிறது. அது தமிழ், ஆங்கிலம், கணக்கு, ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி- ன்னு தனித்தனியாக இருக்கிறது. அதில் எதைப் படித்தாலும் நம் பிள்ளைகள் நல்லா வருவாங்க, உருப்படுவாங்க. அந்தத் துறையில் அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டால், பெற்றோர்கள் நினைக்கிற எல்லாமுமாக வருவதற்கு பின்னால் வாய்ப்பு இருக்கிறது. அவற்றையெல்லாம் நம்பி தயவு செய்து, நம் பிள்ளைகளிடம் இதுதான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். எல்.கே.ஜி. படிக்கும் குழந்தையிடம் நீ படிச்சி என்னவாக ஆவாய், என்றால் அவன் மனதில் நாசமாவேன் என்று நினைத்துக்கொள்வான். நான் டாக்டராவேன்னுதான் சொல்லணும்,சொன்னால்தான் நீ Good boy. அந்தப் பையன் பேச்சு வந்ததும் சொல்வான், அப்பா you are a bad father.

குழந்தைகள் மகிழ்ச்சியாகப்படிக்க வேண்டும், விளையாட வேண்டும். அப்படி எதுவும் இல்லாத இந்தக் கல்வி முறையில் நம்முடைய குழந்தைகளைப் பொம்மையாக, இயந்திரமாக ஆக்குகிற மனநிலையிலிருந்து பெற்றோர்கள் கொஞ்சம் வெளியே வர வேண்டும்.

கற்பதன் நோக்கம் என்ன? தேடல், அறிவு. அது அவர்களை உருவாக்கும். தன்னுடைய வழியை அவர்கள் தேடுவார்கள். இதைத்தான் நான் படிப்பேன் என்று பிள்ளைகள் சொல்வார்கள். அதற்கான வாய்ப்பை, அறிவை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்.

படிப்பு தரும் அனுபவத்தைப் புரிந்து கொள்ள, நான் ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். இது வரை இதுமாதிரி செய்தியை படித்துக் கண்டு பிடித்ததாகத் தெரியவில்லை. எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது, இன்னும் அதை சரியாகப் படித்து, இதுதானா அது என்று முழுமையாக உறுதிபடுத்திக்கொள்ள வேண்டிய ஒரு செய்தியை நான் படித்தேன்.

இப்பொழுது திராவிடமெல்லாம் சும்மா, நாங்களெல்லாம் திராவிடம் கிடையாது, நான் தமிழன்டா! என்று நிறையபேர் பேசுகிறார்கள். சரி அதுவும் ஒரு கோட்பாடு என்கிறார்கள். ஆனால் திராவிடம் என்பது என்ன, அப்படி ஒரு கருத்தியல் இருந்ததா? இல்லையா? என்பதே நிறைய பேருக்கு சந்தேகம்.

நான் Hindu Law-வைப் பற்றி படிக்கும் போது, ஒரு வழக்கைப் பற்றிப் படிக்கிறேன். இங்கிலாந்து அரசியினுடைய Advisory Court அதுதான். அதன் பெயர் Privy Council. நம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் அது. இப்போது மதுரையில் நடக்கும் வழக்கின், மேல் முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும், அதற்கும் முன்னால் இங்கிலாந்து ராணியினுடைய Privy Council என்ற கோர்ட்டில் நடக்கும். அந்தத் தீர்ப்பை இன்று வரை நம் இந்திய நீதிமன்றங்கள் மிகவும் மரியாதை கொடுத்துப் பின்பற்றுவார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அலசப்பட்ட தீர்ப்பாக இருக்கும். அப்படி வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு பற்றி படித்தேன்.

இராமநாதபுரத்திலிருந்து 1860-ஆம் ஆண்டு ஒரு வழக்கு நடந்திருக்கிறது. இராமநாதபுரம் சமஸ்தானமும், அரண்மனையும், வீரமிக்க பாரம்பரியமும் மிகவும் புகழ்பெற்றது. 1860-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மன்னர் சேதுபதி இறந்துவிட்டார். அவருடைய அரசி பர்வதவர்த்தினி. மன்னர் சேதுபதிக்கும் – பர்வதவர்த்தினிக்கும் குழந்தை இல்லை. அப்போது இங்கிலாந்து அரசு ஒரு ஆணை போடுகிறது. இங்கிலாந்து அரசியினுடைய ஆணை. மன்னர் வாரிசு இல்லாமல் ஜமீன்கள், குறுநில மன்னர்கள் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால், Sonless ஜமீன்தார் என்கிறார்கள். ஏன் மகள் ஆண்டாள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? இந்திராகாந்தி இல்லையென்றால் நேரு என்ன ஆகியிருப்பார்? அது நம் பாரம்பரியம். அப்படி Sonless ஜமீன்தாராக இறந்துவிட்டால், அந்த அரசி உயிரோடு இருக்கும் வரை சொத்து, அந்த சமஸ்தானம் அவர்களுக்கு உரியது. அரசியும் இறந்துவிட்டால் அந்த சொத்துக்களையும், சமஸ்தானத்தையும் இங்கிலாந்து அரசோடு இணைத்துக்கொள்ளலாம். இதுபோன்ற பிரச்சனை ஜான்சிராணி உள்ளிட்டோருக்கும் வந்திருக்கிறது.

மன்னர் சேதுபதி இறந்ததும், அரசி முத்துராமலிங்கம் என்ற ஒரு இளைஞரை தத்து எடுத்து, அவரை மன்னரின் வாரிசாக்கி, முத்துராமலிங்க சேதுபதி என்று பெயர் வைக்கிறார்கள். இளவரசராக இருக்கும் முத்துராமலிங்க சேதுபதி மன்னராகப் போகிறார். அப்போது இராமநாதபுரம் எல்லாம் மதுரை ஜில்லாவில் அடங்கும். அப்போது இருந்த மதுரை கலெக்டர் இங்கிலாந்துக்கு இராமநாதபுரம் ஜமீன்தார் Died, Sonless என்று ஏற்கனவே எழுதிவிட்டார்.இங்கிலாந்து அரசு அரசி இறக்கட்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அரசி இறந்ததும் அந்த சமஸ்தானத்தை இங்கிலாந்து அரசோடு இணைக்க முயற்சிகள் நடக்கும்போது, மன்னராக வந்த முத்துராமலிங்க சேதுபதி அவர்கள், நான் இந்த சமஸ்தானத்தின் வாரிசு, என்னை எங்க அம்மா தத்தெடுத்திருக்கிறார்கள், என்னை எங்கள் பங்காளிகள் எல்லாம் மன்னராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் நான் மன்னராக வருகிறேன். நீங்கள் எங்கள் பகுதியை இங்கிலாந்து அரசுடன் இணைக்க முடியாது என்று 1860-களில் வழக்குத் தொடுக்கிறார். இந்தியாவில் அந்த வழக்கை ஆங்கிலேயர்களே நடத்துகிறார்கள். அந்த வழக்கில் முத்துராமலிங்க சேதுபதிதான் மன்னர் சேதுபதியின்வாரிசு, அவர் ஆட்சியில் இருப்பது தவறு கிடையாது என்று மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கிறார்கள்.

மதுரை கலெக்டர் இங்கிலாந்தில் உள்ள Privy Council - ல் மேல் முறையீடு செய்கிறார். மன்னர் தரப்பிலும் வாதம் வைக்கப்படுகிறது. இரண்டு தரப்பிலும் வைக்கப்பட்ட வாதம் என்னவென்றால், மதுரை கலெக்டர் தரப்பில் வைக்கப்பட்ட வாதம், ‘Hindu law. மன்னர் சேதுபதியும், அரசி பர்வதவர்த்தினியும் ஹிந்து ஸ்மிர்திகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஹிந்து ஸ்மிர்திகளில் மனு ஸ்மிர்திதான் சட்டம். அந்த மனு ஸ்மிர்தியின் படி, ஒரு இந்து விதவைப் பெண்ணுக்கு அவரது கணவன் வாழும்போதே, நான் இறந்த பிறகு நீ ஒரு பையனை தத்தெடுத்துக்கொள் என்று அனுமதி கொடுத்துவிட்டு இறந்திருந்தால்தான், அந்த விதவை தத்தெடுக்க முடியும். அவர் அனுமதியின்றி அரசி தத்தெடுக்க முடியாது, அப்படி இந்த அரசி தத்தெடுத்தது செல்லாது’ என்பது மதுரை கலெக்டருடைய வாதம்.

இதற்கு மன்னர் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் தரப்பில் பதிலாக ‘நாங்கள் இராமநாதபுரம் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். எங்களை மனு ஸ்மிர்தி கட்டுப்படுத்தாது.’ என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ‘

நீங்கள் இந்து என்று சொல்கிறீர்கள், உங்களை மனு ஸ்மிர்தி கட்டுப்படுத்தாது என்றால், எந்தச் சட்டம் உங்களைக் கட்டுப்படுத்தும்?’ என்று எதிர்வாதம் வருகிறது.

 மன்னர் தரப்பலிருந்து, ‘நாங்கள் Dravida School of law- (திராவிட சட்ட வழிமுறைக்கு) கட்டுப்பட்டவர்கள். அந்த Dravida School of law-படி ஒரு இந்து விதவைப் பெண், கணவனுடைய அனுமதி இல்லாமலே தத்தெடுக்கலாம், அவர் வாரிசாகக் கருதப்படுவார். அதற்கு ஒரே ஒரு நிபந்தனை பங்காளிகள் ஒத்துக்கொள்ள வேண்டும். சொத்துப்பிரிவு, பாகப் பிரிவினை போன்ற விஷயங்களில் பங்காளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பங்காளிகள் அனுமதியோடுதான் நான் மன்னராகியிருக்கிறேன். ஆகையால் எங்களை மனு ஸ்மிர்தி கட்டுப்படுத்தாது. We are bound by Dravida School of law’ என்று மன்னர் முத்துராமலிங்க சேதுபதி முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, 1868-ஆம் ஆண்டு Privy Council வழங்கிய தீர்ப்பின்படி, இராமநாதபுர சமஸ்தானத்தை இங்கிலாந்து அரசு இணைத்துக்கொள்ள முடியாது (can’t be annexed) என்று தீர்ப்பு சொல்லப்பட்டது. Dravida School of law-வினால்தான் இராமநாதபுர சமஸ்தானம் தப்பியது. இந்த வழக்கு எம்.ஐ.ஏ. என்று சட்ட தீர்ப்புகளைக் கொடுக்கிற ஒரு புத்தகம். Moor’s Indian Appeal என்று Moor என்ற வழக்கறிஞர் வெளியிட்டுக்கொண்டிருந்த சட்ட தீர்ப்புகளைப் பற்றிய நூலில் இது வெளியிடப்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகள் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், நான் படிக்க நினைத்து தேடிக்கொண்டிருந்த செய்தி வேறு, ஆனால் இது என்ன இராமநாதபுரம் அரண்மனையைப் பற்றி ஒரு வழக்கு நடந்திருக்கிறதே என்று அந்த வழக்கு குறுக்கே வந்ததால் படித்தேன் . இதை நீங்கள் கம்ப்யூட்டரில் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் புத்தகம் எடுத்துப் படித்தால்தான் அது கிடைக்கும். புத்தகத்தில்தான் Reference என்று காலத்தில் ஒரு செய்திக்கான மூலத்தைக் கொடுத்திருப்பார்கள். கம்ப்யூட்டரில் படித்தால் அது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும்தான் காண்பிக்கும். புத்தகத்தைப் புரட்டும்போதுதான் ஒவ்வொரு பக்கமும் ஒரு செய்தியைச் சொல்லும். அதைப் படித்ததும் எனக்கு எவ்வளவு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கும். அறிவின் சாளரத்தில் ஒரு கதவு திறப்பதைப் போல.

கற்பதின் நோக்கம் தேடல் என்றால், அதன் பயன் என்ன? இப்படி தேடிக் கிடைக்கின்ற அறிவு எதற்குப் பயன்படும்? வாழ்க்கையில் எல்லோருக்கும் அவர்கள் கற்ற கல்வியை சமூகத்திற்கு பயன்படுத்துகிற வாய்ப்பு இருக்கிறது. வீட்டில் உள்ள ஷோ கேஸில் பொம்மைகளுக்குப் பதிலாகப் புத்தகம் வைக்க வேண்டும் என்பதை ஒரு பண்பாடாக நாம் மாற்ற வேண்டும். அதன் பயன்பாடு என்ன என்றால், நீங்கள்படிப்பது சமூகத்திற்குப் பயன்படும். எந்த வகையில்? நம்மைவிட படிக்காதவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். உங்களுக்கு கணக்கு நன்றாக வரும் என்றால், கணக்கில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கணக்கைக் கற்றுக்கொடுங்கள். நீங்கள் படித்தது நான்கு பேருக்குப் பயன்படும். எவ்வளவு படித்தாலும் அது நமக்குப் பயன்படும் என்று சொன்னார் வள்ளுவர். அதற்காக மொத்த நூலகத்தையும் நம்மால் படித்து முடிக்க முடியாது.

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனைத் தூறும் அறிவு’

இரண்டு பக்கம் படித்தாலும் நமக்கு என்ன அறிவு வருகிறதோ அதுவே பெரிது. இந்த இரண்டு பக்கம் படிப்பதற்கு முன்னால் இருந்ததைவிட படித்தபிறகு நீங்கள் அறிவாளிதானே! அதை நீங்கள் இன்னொருவருக்கு சொல்லிக்கொடுக்க முடியும்தானே!

‘நான் மதம் இல்லை என்று சொல்ல விரும்புகிறேன். ஆனாலும் என்னை மதம் என்ன என்று கேட்கிறார்கள். நான் எந்த மதத்தைப் போட்டுக்கொள்வது?’ என்று தந்தைப் பெரியாரிடம் கேட்டார்கள். பெரியார் சொன்னார், ‘நான் வள்ளுவர் மதம்னு போட்டுக்கொள். என் சமயம் வள்ளுவர் சமயம் என்று சொல்லுங்கள்.’ என்றார் பெரியார். ஏனென்றால் அது அறிவு சார்ந்தது. மற்ற மதத்தையெல்லாம் சொல்வதைவிட ஏன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவரை தந்தை பெரியார் சொன்னார். அவரது தேடல் அங்கு கொண்டு போய் விடுகிறது. இன்னும் கொஞ்சம் தேடிப் படிக்கிறார், அது புத்தரிடம் கொண்டுபோய் விடுகிறது. நம்மை மாதிரி தேடிப்படித்தவர்கள் யாரென்று பார்த்தால் அது அண்ணல் அம்பேத்கரிடம் நம்மைக் கொண்டு விடுகிறது.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் என்ன பேசிக்கொள்வார்கள்? சார் நீங்க புத்தர் படித்திருக்கிறீர்களா? என்றுதானே பேசிக்கொள்வார்கள்.

புத்தர் என்ன சொல்கிறார், ‘இரண்டு பேரின் கல்வியும் சமூக நோக்கமும் இணைந்தால், அவர்களின் உலக அறிவில் யார் யாரெல்லாம் கிடைப்பார்கள் என்று பாருங்கள்’ என்று சொன்னார். அப்படி கிடைத்தவர்களைக் கொண்டுதான் இன்று உலகம் நடக்கிறது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னார்,

புதியதோர் உலகம் செய்வோம் என்று. எப்படி ??

சாதி மத பேதங்கள்

மூட வழக்கங்கள் தாங்கி நடந்து வரும்

சண்டை உலகிதனை

ஊதையில் துரும்புபோல் அலைக்கழிப்போம்

பின்பு ஒழித்திடுவோம்

புதியதோர் உலகம் செய்வோம்.

பேதமிலா அப்பெரு உலகிற்கு

பேசு சுயமரியாதை உலகென்று பெயரிடுவோம்.

அந்த சுயமரியாதை உலகத்தை நோக்கி நாம் நடப்பதற்கும், நம்மோடு வருபவர்களை வழி நடத்துவதற்கும் நமக்கு அந்த சமூகக் கல்வி தேவை.அந்தக் கல்வியை மக்களோடு பயன்படுத்த வேண்டும். அந்தக் கல்வியை குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர்ப்பதற்கும், வாழ வைப்பதற்கும் பயன் படுத்துங்கள்.

பெரியவர்களுக்கு எப்போதுமே குழந்தைகளைப் பற்றி மனக்குறை. நான் எப்பொழுதுமே குழந்தைகளின் பக்கம்தான். என்னதான் மனக்குறை என்று கேட்டால், ஒருவர் சொன்னார் ‘படிக்கிறதே இல்லங்க’, ‘என்ன படிக்கிறதில்லை’, ‘புத்தகத்தையெ படிக்கிறதில்லை. நாங்கள்லாம் மு.வ.வைப் படித்தோம், அகிலனைப் படித்தோம், பொன்னியின் செல்வன் படித்தோம்’ என்று பேசிக்கொண்டே போனார். ஒரு சின்னப்பெண் வந்து, ‘அங்கிள் நீங்க ஹாரி பாட்டர் படிச்சிருக்கீங்களா?’ என்று கேட்டது. ‘இல்லை’ என்றார். ‘அது எவ்வளவு பெரிசு தெரியுமா? இவ்வளவு பெருசு, நாங்க படிக்கிற இங்கிலீஷ் நாவல் இவ்வளவு பெருசு’ என்று அந்த சின்னப் பெண் சொல்கிறாள்.

இந்த குழந்தைகளுக்கு அறிவில்லையா, பொறுப்பில்லையா, அக்கறையில்லையா? என்று கேட்டால், அவர்களுக்கு எல்லாம் இருக்கிறது. ஆனால் பெற்றோர்கள் அவர்களை ஒழுங்காக வளர்க்கவில்லை. நாம் அவர்களுக்கு உழைப்பைச் சொல்லிக்கொடுக்கவில்லை. உழைக்கிறது கேவலம் என்று சொல்லிக்கொடுக்கிறோம். படிக்கிறப் பிள்ளைகளுக்கு வீட்டு வேலை செய்யக் கற்றுக்கொடுக்காமல், படி, படி, படி என்று சொல்வது.

வீட்டில் பிள்ளைகளுக்கு வேலை கொடுத்தால், அம்மா நான் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். சரி இந்த வீட்டையெல்லாம் கூட்டிவிட்டு படிடா என்றால் வேலையும் செய்வான், படிக்கவும் செய்வான். இன்னொன்று பிள்ளைகள் தூங்கவே மாட்டார்கள். ஏன்? நாம் அவர்களின் கைகளில் ஒரு பெரிய அறிவாயுதத்தைக் கொடுத்திருக்கிறோம். நாம் ஒரு வேலை செய்யும்போது வேறு ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் நாம் விழிப்போம். நம் பிள்ளைகள் அப்படியல்ல, நம்மிடம் பேசிக்கொண்டே, நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே, ஒருவரோடு மட்டுமல்லாமல், குரூப் டிஸ்கஷன் (Group discussion) செய்துகொண்டிருப்பார்கள். குரூப்பில் யாருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்கின்ற அறிவு, multy tasking. பல்துறை வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய அளவிற்கு மூளை இருக்கிறது.

இன்றைக்கு நாம் பார்க்கின்ற ஆபத்துகள் யாவும் நாம் சின்ன வயதில் பார்த்தது கிடையாது. சுனாமியைப் பார்த்திருக்கிறோமா? ஊர்ல வெள்ளம் வந்தால் எல்லோரும் வேடிக்கைப் பார்க்கப் போவோம். ஸ்கை லேப் என்று ஒன்று விழப்போகிறது என்று சொன்னார்கள், அது எங்க விழும்னு தெரியாது. ஒரு பாட்டி சொன்னார் வாசலில் சைக்கிள் நிற்கிறது எடுத்து உள்ளே வைடா என்று பேரனிடம் சொன்னார். ஏனென்றால் பாட்டியின் நம்பிக்கை ஸ்கை லேப் தெருவில்தான் விழும், வீட்டுக்குள் விழாது என்று. இன்றைய தலைமுறையினர் மங்கல்யான் சாட்டிலைட் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மொபைல் வாங்கி, அதை ஆபரேட் பண்ணத் தெரியலைன்னா, உங்கள் வீட்டில் யார் சின்ன ஆளோ, அந்த ஆளிடம் கொடுக்க வேண்டும். என்னம்மா இதுகூடத் தெரியலை என்று தலையில் அடித்துக்கொண்டு அவன் சிரிப்பான் பாருங்க ஒரு சிரிப்பு நம்மைப் பார்த்து!

ஒரு எட்டு வயதுக் குழந்தை. அது Special Child. Special child-ன்னா மன வளர்ச்சி கொஞ்சம் பாதித்த குழந்தை. ஒரு வீட்டில் உட்கார்ந்திருக்கும்போது என்னிடம் வந்து கேட்கிறான், ‘ஆன்ட்டி உங்க ஃபோன்ல கேம்ஸ் இருக்கா?’ என்றான். ‘இல்லப்பா’ என்றேன். ‘download பண்ணிக்கலாமே’ என்று உடனே கேட்கிறான். ‘downlod- ஆ, பண்ண முடியாதுப்பா’ என்றேன். உடனே ‘உங்க ஃபோன்ல bluetooth இல்லை?’ என்றான். அவன் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் அன்றுதான் கேள்விப்படுகிறேன். அவன் என்ன நினைத்திருப்பான், யாருக்கு மன வளர்ச்சி இல்லையென்று நினைத்திருப்பான். ஓ இந்த ஆன்ட்டி special child போலருக்கு. அவங்களுக்கு ஃபோன்ல கேம்ஸ் download பண்ணத் தெரியல. App-ன்னா என்னான்னு தெரியல. Bluetooth-ன்னா என்னான்னு தெரியல. ஒண்ணுமே தெரியல, பாவம்டா அந்த ஆன்ட்டி என்று அவன் போய் மற்றொரு குழந்தையைக் கூட்டி வந்து என்னைக் காட்டாமல் போனான். என் ஃபோனை வாங்கி அதை அவனே தள்ளி, Bluetooth-ஐக் காட்டி,பாருங்க இதுதான் Bluetooth. அவனிடம் நாம் படித்த பழைய காலத்து ஜோக்கெல்லாம் சொன்னால் அவனுக்கு சிரிப்பு வருமா? ஒரு பத்திரிகையில் படித்தேன் .

தன் மனைவிக்குக் காது கேட்கவில்லை என்று ஒரு கணவர் மருத்துவரிடம் சென்று சொல்கிறார், ‘நீங்க கூட்டிட்டு வாங்க, டெஸ்ட் பண்ணணும்’ என்று டாக்டர் சொல்ல, ‘இல்லங்க, டெஸ்ட் பண்ணினால் அவங்க வருத்தப்படுவாங்க. நீங்க மாத்திரை கொடுங்க.’ என்கிறார், ‘எங்கிருந்து கேட்கவில்லை என்று சொல்லுங்கள்?’ என்கிறார் டாக்டர்,‘பொதுவாகவே கேட்கவில்லை’ என்று சொன்னார் கணவர். டாக்டர் மூன்று மாத்திரைகளைக் கொடுத்து, ‘நீங்க கேட்லருந்து கூப்பிடுங்க, அதற்கு கேக்கலைன்னா இந்த மாத்திரையைக் கொடுங்க. ஹாலிலிருந்து கூப்பிடுங்க, அதற்கு கேட்கலைன்னா இந்த மாத்திரையைக் கொடுங்க. பக்கத்துலபோய் கூப்பிடுங்க, அதற்கு கேட்கலைன்னா இந்த மாத்திரையைக் கொடுங்க.’ என்று மாத்திரைகளைக் கொடுத்தார். மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்ற கணவர் கேட் பக்கமிருந்து ‘சமையல் ஆயிடுச்சா’ என்று கேட்டார், பதிலில்லை. பிறகு ஹாலிலிருந்து ‘சமையல் ஆயிடுச்சா’ என்று கேட்டார், பதிலில்லை. கடைசியாக பக்கத்தில் சென்று ‘சமையல் ஆயிடுச்சா’ என்று கத்துகிறார், அந்த அம்மா கையில் வைத்திருந்த குக்கரை கீழே வைத்துவிட்டு, ஓங்கி அவரை ஒரு அடி அடித்துவிட்டு, ‘ஏன்யா இதே கேள்வியைத்தான் வாசலிலிருந்து கேட்டே, ஆயிடுச்சுங்கன்னேன். திருப்பி ஹால்ல வந்து கேட்டே, அப்பவும் ஆயிடுச்சுங்கன்னேன். இப்ப பக்கத்துல வந்து கேக்குற, ஏன் இப்படி கத்துற’ என்று அந்த அம்மா கேட்க, பதறிப்போய் கணவனே மூன்று மாத்திரைகளையும் அவரே போட்டுக்கொண்டார். (பார்வையாளர்கள் சிரிப்பு)

இந்த ஜோக்கைச் சொன்னால் பெரியவர்கள் எல்லாம் சிரிக்கிறாங்க. சின்ன பசங்க எல்லாம் நம்மள அப்படியே ஒரு மாதிரி பாக்குறாங்க. ஜோக்கு? ஏன் இதுக்கெல்லாம் சிரிக்கிறீங்க. ஏன்?

அவர்கள் பார்க்கின்ற violence-க்கு நாம் பார்க்கும் அடிதடி எம்.ஜி.ஆர் – நம்பியார் குத்துனாங்க, ரஜினி சண்டை போட்டாரு, கமலஹாசன் சண்டை போட்டாரு, அஜித் சண்டை போடுறாரு, விஜய் சண்டை போடுறாரு இதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. அவன் பார்க்கும் சண்டையில் இரண்டு மெஷின்கள் சண்டை போடுகிறது. கையில் வீடியோ கேம் வைத்துக்கொண்டு உலகம் பூரா ஏலியன்ஸோட சண்டை போடுகிறான். அது எங்கே வந்து முடிகிறதென்றால், அது ப்ளூவேலில் வந்து முடிகிறது. அது வரை அவனுடைய தேடல், அதை எங்கே நிறுத்த வேண்டும் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் பெற்றோர்களாகிய நாம் தெரிந்துகொள்ள வேண்டும். என் பையன் எந்நேரமும் கம்ப்யூட்டர்தாங்க என்று மாடர்ன் மதர்ஸ் மாதிரி பெருமை பேசக்கூடாது. எந்நேரமும் பையன் கம்ப்யூட்டரோ, வீடியோ கேமோ வைத்திருந்தால் அது பிரச்சனையாகப் போகுது, அவன் அறிவுக்கு அது கோளாறு, அது ஆபத்து என்று நமக்குப் புரிய வேண்டும்.

கல்விக்கு வயதில்லை, கல்விக்கு எல்லையில்லை. ‘சாந்துனையும் கல்லாதவாறு’ என்று வள்ளுவர் சொன்னார். படித்தால்தான் எல்லா ஊர்களுக்கும் போக முடியும். இவற்றையெல்லாம் கற்று அதனுடய பயன் என்ன என்றால் அதற்கும் நாம் வள்ளுவரிடமே செல்வோம்.

‘அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தன் நோய் போல் போற்றாக் கடை’

சமுதாயத்தில் வேறொருவருக்கு நடக்கிற பிரச்சனை, தொல்லை, ஆபத்து தனக்கு வந்ததுபோல் நினைக்கவில்லையென்றால், உன்னுடைய அறிவால் என்ன பயன்? என்று வள்ளுவர் கேட்கிறார்.

அய்யோ அங்கெல்லாம் மக்கள் அடிச்சுக்கறாங்க என்று ஒருவர் சொல்ல, அது அவங்களும் இவங்களும் அடிச்சிக்கிறாங்க என்று விளக்கம் சொல்வது. இந்த மனநிலைக்கு ஆளானால் நம் அறிவால் பயனில்லை.

‘இனி வரும் உலகம்’ என்று தந்தை பெரியார் எழுதினார். எழுதியது 1936-ஆம் ஆண்டு. அவர் எழுதிய எல்லாமே நடந்திருக்கிறது. எல்லோருடைய சட்டைப் பையிலும் கம்பியில்லாத தந்தி சாதனம் இருக்கும்.அவர்கள் காதில் கேட்பதுபோல தொப்பியிலேயே இணைக்கப்படுகிற ரேடியோ இருக்கும். உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு உலகத்தின் வேறு ஒரு இடத்திற்கு கல்வி கற்றுக்கொடுக்கிற கருவிகள் ஏற்படும். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக்கொள்கிற வசதி ஏற்படும். தரை மார்க்கத்தைவிட ஆகாய மார்க்கமான பயணம்அதிகமாக இருக்கும். ஆணும் பெண்ணும் குழந்தை பெறுவதற்காகச் சேர வேண்டும் என்கிற அவசியம் இல்லாமல் பொலி காளைகளைப்போல ஆண்களுடைய உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டு, அவை ஊசி மூலமாகப் பெண்ணுக்குள் செலுத்தப்பட்டு குழந்தை பிறக்க வகை செய்யப்படும். இவையெல்லாம் 1940-களுக்கு முன்னால் பெரியார் சொன்னது. இதற்கு தந்தை பெரியாருக்கு ஞான திருஷ்டியெல்லாம் வேண்டாம். அறிவியல் போகின்ற போக்கை நல்ல நிதானமாகப் புரிந்துகொண்டால் இவையெல்லாம் கூட நடக்கும் என்கின்ற ஒரு பார்வை.

ஆனால் இவையெல்லாம் நடக்கும் என்று சொன்ன தந்தை பெரியார், கடைசியாக ஒன்று சொன்னார். சமூகம் மிக ஒற்றுமையாக இருக்கும். உடம்பில் நாசிக்கோ, நயனத்திற்கோ, கைக்கோ, வலித்தால் எனக்கு வலிக்கிறது என்று சொல்வதைப்போல, சமுதாயத்தில் யாரோ ஒருவருக்கு நடக்கிற தீங்கை தனக்கு நேர்ந்ததாக சமூகம் நினைக்கும் என்று சொன்னார். அது மட்டும்தான் இன்னும் நடக்கவில்லை. மற்ற அவர் சொன்ன மெஷின்களெல்லாம் வந்துவிட்டது. மனிதப் பண்பில் வரவேண்டிய அந்த வளர்ச்சி வரவில்லை. அது நேர் எதிரில் போகிறது. அதைத் தடுப்பதற்கு நம்முடைய கல்வியைப் பயன்படுத்துவோம்.

பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளை அதை நோக்கி ஆற்றுப்படுத்துங்கள். குழந்தைகளுக்கு படிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லிக் கொடுக்காமல், படிக்க வேண்டும், பண்போடு வளர வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்று சொல்லுங்கள்.

நான் முழு மன நிறைவோடு இன்றைக்கு பேச வந்ததற்கான முதன்மையான காரணம், ஏதோ ஒரு கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட சமூத்தில் பிறந்த அப்பா, அம்மாவினுடைய பிள்ளையாகப்பிறந்து சென்னைக்குப் போய் வழக்கறிஞராகி முப்பதாண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றுகிறேன். அந்தப் பணியினுடைய பயன் என நான் நினைப்பது என்னவென்றால், நம் பசங்களையெல்லாம் இன்று வாட்டிக்கொண்டிருக்கிற இந்த competitive exam-ல (போட்டித் தேர்வில்) negative marking- எனும் எதிர்மறை மதிப்பெண் முறையில் இருந்து நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற போராட்டத்தில், இரண்டு நாட்களுக்கு முன்னால் நான் பெற்ற வெற்றியைநீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள். அப்படி மேல் முறையீட்டிற்குச் சென்றால் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஏனென்றால் நம் நாட்டில் உள்ள அனைத்து ஏழைகளையும் பற்றிக் கவலைப்பட நீதிமன்றம் இருக்கிறது. அவர்கள் கவலைப்படுகிற ஏழைகள் எல்லாம் மாதம் அறுபதாயிரமாவது சம்பளம் வாங்கணும். அப்படி வாங்குகின்ற ஏழைகளைப்பற்றி கவலைப்படுவாங்க. ஒரு கிராமத்தில் பிறந்து, பன்னிரெண்டாம் வகுப்பில் 1167 மார்க் வாங்கிவிட்டு, நீட் (NEET) தேர்வாலும், நெகட்டிவ் மார்க்காலும்(Negative Mark) உயிரைவிட்ட அந்த அனிதாவைப் போன்ற ஏழைகளைப்பற்றி அவர்கள் நினைப்பதற்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.

அது ஒரு போராட்டம்தான் என்றாலும், என்னுடைய கல்வியின் பயன் என் சமூகக் குழந்தைகளுக்குப் பயன்பட்டது என்கிற அந்த நிறைவோடு, என்னைப் போல் உங்களில் பலர், உங்களுடைய கல்வியைப் பயன்படுத்த முன்வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

(திருப்பூர் பின்னல் புத்தக அறக்கட்டளையும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்தும் 16-வது ஆண்டு புத்தகத் திருவிழாவில் ஆற்றிய உரை)

Pin It