ரியோடி ஜெனரோவில் 1992 இல் நடந்த முதல் புவி பாதுகாப்பு மாநாட்டில், கனடாவை சேர்ந்த 12 வயது சிறுமியான செரன் சுசுகி பேச அனுமதி வாங்கி ஆற்றிய உரை இது....

ஹலோ....நான் செரன் சுசுகி....இ.சி.ஓ. அதாவது சிறுவர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான என்வைரான்மெண்டல் சில்ரன்ஸ் ஆர்கனைசேஷனின் சார்பாக உங்களிடம் பேச வந்திருக்கிறேன். நாங்கள் 12க்கும் 14க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறுவர் சிறுமியர் கனடாவில் இந்த அமைப்பை நடத்தி வருகிறோம். வெனஸாசுடியி, மார்கன்கெய்ஸ்லர், மைக்கெல் க்விக் மற்றும் பலரோடு நான்.

நாங்கள், நாங்களாகவே பலரிடம் நிதி திரட்டி.....சுமார் ஆறாயிரம் மைல்கள் கடந்து பெரியவர்களான உங்களது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று உங்களை மன்றாடி கேட்டுக்கொள்ள இங்கே ரியோடி ஜெனரோவுக்கு வந்தோம். இங்கே இந்த மேடையில் பேசும் என்னிடம் செயல்திட்டம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. நான் ஒரு சிறுமி. உங்கள் பார்வையில் சிறு குழந்தை. ஆனால் நான் எங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறேன். ஏனெனில் என் எதிர்காலத்தை தோற்பது என்பது ஒரு தேர்தலில் தோற்பது மாதிரியோ அல்லது நிதிச் சந்தையில் சில புள்ளிகளை தவறவிடுவது மாதிரியோ அல்ல. நான் இங்கே பிற்காலத்தின் அனைத்து சந்ததியினருக்காகவும் பேச வந்திருக்கிறேன்.

ஒருபோதும் செவிமடுக்கப்படாத பசியில் துடிக்கும் அலறல்களை கொண்ட குழந்தைகளுக்காக இங்கே பேச நான் வந்திருக்கிறேன். போய் ஒளிவதற்கு ஓர் இடம் இல்லாததால் தினந்தோறும் கொன்று குவிக்கப்படும் முழு அழிவின் விளிம்பில் உள்ள இப்புவியின் எண்ணிலடங்கா விலங்குகளுக்காக நான் இங்கே பேச வந்திருக்கிறேன். என் பேச்சை கேட்காமல் நீங்கள் இருந்து விடுவதை நான் தாங்கிக் கொள்ள மாட்டேன். செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போதெல்லாம் சூரிய ஒளியில் சாலையில் இறங்கி நடப்பதற்கே நான் அஞ்சுகிறேன்......ஓசோன் படலத்தின் ஓட்டைகளே காரணம்....காற்றை முழுமையாய் இழுத்து சுவாசிக்க நான் அஞ்சுகிறேன் -அதில் என்னென்ன வேதிப் பொருட்கள் உள்ளனவோ...

வேன்கோவர் நதியில் என் தந்தையோடு இனிய விடுமுறை நாட்களில் நான் மீன்பிடிக்க போனது உண்டு. ஒருமுறை புற்றுநோய் தாக்கிய அனைத்து மீன்களையும் பிறகு தூக்கி எறிய நேர்ந்ததால் இப்போதெல்லாம் எங்குமே போவது இல்லை.....இப்போது ஒவ்வொரு நாளும் ஒன்று பாக்கி இல்லாமல் ஒரேயடியாய் முற்றிலும் ஒரு தாவரமோ.....விலங்கோ அழிந்து வருவதை பற்றிக் கேள்விப்படுகிறோம்.

என் வாழ்வில், சுதந்திரமாய்.....கூட்டம் கூட்டமாய் சுற்றித்திரியும் வனவிலங்குகளை பற்றியும், முற்றிலும் பறவைகளால் மொய்க்கப்பட்ட மழைகாடுகளை பற்றியும் கனவுகாண முடிகிறது. எனக்கு பிறகு வரும் சந்ததிகளுக்கு அது கிட்டுமா என்பது சந்தேகமாக உள்ளது.

என் வயதில் நீங்கள் இருந்த போது இந்த மாதிரி சின்ன விஷயங்களுக்காக கவலைப்படவேண்டிய ஒரு சூழல் இருந்ததா? இதெல்லாம் நமது கண்முன் வேகமாக நடக்கும்போது...நாமோ நமக்குஏதோ அத்தனைக்கும் தீர்வு காண ஏராளமான நேரம் இருப்பதுபோல மிக நிதானமாக இயல்பாக நடந்து கொள்கிறோம்.

நான் ஒரு சிறுமிதான். உங்கள் அர்த்தத்தில் ஒரு சிறு குழந்தை.....என்னிடம் எல்லா பிரச்சனைக்குமான தீர்வுகள் இல்லை...... உங்களிடமும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்....அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

ஓசோன் படலத்தில் விழுந்திருக்கும் ஓட்டைகளை எப்படி அடைப்பது என்று உங்களுக்கு தெரியவில்லை. ஓடுவதை நிறுத்தி முற்றிலும் விஷமாகிப்போன ஒரு ஆற்றை திரும்ப ஓடவைப்பது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லை. முழுதும் ஒன்று பாக்கி இல்லாமல் அழிந்துவிட்ட ஒரு விலங்கை திரும்ப உயிர்ப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஒரு காலத்தில் அடர்ந்த மரங்களால் ஆன காடாகவும் இப்போது பாலைவனமாகவும் ஆகிவிட்டதை திரும்ப காடாக மாற்றுவது எப்படி என்றும் உங்களுக்குத் தெரியவில்லை. திரும்ப பழையபடி ஒன்றுசேர்த்து ஒட்டத் தெரியாத போது உடைப்பதை நிறுத்துங்களேன்!

இங்கே நீங்கள் உங்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகவோ, தொழில் அதிபர்களாகவோ, அமைப்பாளர்களாகவோ, பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல அந்தஸ்த்தில் கூடி இருக்கிறீர்கள்...ஆனால் உண்மையில் நீங்கள்......யாருக்கோ அப்பாவாகவும் அம்மாவாகவும், அண்ணன் தங்கையாகவும் இன்னும் யாரோ குழந்தைகளின் மாமாவாக அத்தையாக......இருப்பவர்கள்தான் என்பதையும் .......அல்லது நீங்கள் அனைவருமே யாரோ பெரியவர்களின் குழந்தைகள் என்பதையும் நான் நினைவுபடுத்த வேண்டியதில்லை.

உங்கள் பார்வையில் நான் சிறு குழந்தைதான்......ஆனால் எனக்குத் தெரியும்....நாம் அனைவரும் முப்பது மில்லியன் வகை உயிரினமுமாக_ஒரே குடும்பம் என்பதும், நாம் ஒரே காற்றை, குடிநீரை, மண்ணை....பகிர்ந்து வாழ்பவர்கள் என்பதும்..... எத்தனை எல்லைகளிலிருந்து எத்தனை அரசுகள் அதிகாரம் செலுத்தினாலும் இந்த ஒரு அடிப்படை விஷயம் மாற்ற முடியாதது என்பதும் குழந்தைகளான எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் குழந்தைகள்தான். ஆனால் நாம் அனைவருமே ஒன்று சேர்ந்து ஒரே குழுவாக ஒரே ஒரு இலக்கை முன்வைத்து இயங்க வேண்டி இருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம். நான் என்ன கருதுகிறேன் என்பதை வெளியே உங்களிடம் சொல்ல முடியாத அளவிற்கு, ஆத்திரத்தில் கண்ணிழந்தோ, அச்சத்தில் வார்த்தை குழைந்தோ நான் நிற்கப் போவதில்லை.

எங்கள் நாட்டில் - வசதியாய் வாழும் நாங்கள் - பலவற்றை வாங்கி பயன்படுத்தி பாதியில் தூக்கி எரிகிறோம்...... பலவற்றை அதற்கு முடிவே இல்லாதபடி....... தூக்கி எரிந்து கொண்டே இருக்கிறோம்....... ஆனால் வடக்கத்தி நாடுகளான நாம் நமது வசதிகளை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ள தயங்குகிறோம்...... நம்மிடம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது........ ஆனால் நாம் கொஞ்சத்தை விட்டுத்தரவும்...... இருப்பதில் மிகக் குறைவான ஒன்றையும் பகிர்ந்து கொள்ள அருவருக்கிறோம்.

கனடாவில், நாங்கள் மிக வசதியான, மேலான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எக்கச்சக்கமான உணவு, தண்ணீர், வானளாவிய வசதி படைத்த குடியிருப்புகள்.....எங்களிடம் கைகடிகாரம், சைக்கிள், கம்ப்யூட்டர் மற்றும் டி.வி எல்லாம் கொட்டிக் கிடக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன் இங்கே பிரேசிலில் வீதிகளில் வசிக்கும் எங்கள் வயதை ஒத்த சில குழந்தைகள்- அவர்களோடு சில மணிநேரங்கள் செலவிட்டபோது எங்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.....அவர்களில் ஒரு சிறுவன்.......என் வயதே ஒத்தவன் கூறிய வாசகத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க முடியாது; ‘இந்த வீதிகளில் வசிக்கும் சிறுவர் சிறுமியர் அனைவருக்கும் உண்ண உணவும், உடுத்த உடை, இருக்க இடம், மருந்து..மற்றும் அன்பு...அரவணைப்பு இவை தர முடிந்த அளவுக்கு நான் செல்வந்தனாக இருக்கக்கூடாதா என்பதே எனது அவா.’

தன்னிடம் எதுவுமே இல்லாத வீதியில் வசிக்கும் ஒரு சிறுவன் எல்லாவற்றையும் பகிர்ந்து வாழ விரும்புகிறபோது, எல்லாமே அளவுக்கு அதிகமாக வைத்திருக்கும் நாம்...இவ்வளவு பேராசை பிடித்து, துளியும் பகிர்ந்து தர மறுப்பது ஏன்?

இந்தச் சிறுவர்கள் எல்லாருமே என் வயதை ஒத்தவர்கள் என்பதால் என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.......இங்கே நீங்கள் எங்கே பிறக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது..நான் கூட அவர்களில் ஒருத்தியாக இருக்க முடியும்.... ரீயோவின் வீதிச் சிறுமியாய் அல்லது பட்டினியால் பரிதவிக்கும் சோமாலியாவின் குழந்தையாய், மத்திய கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியாய் ஏன் இந்தியாவில் பிச்சை எடுக்கும்.....ஒரு சிறுமியாககூட நான் இருக்கலாம்.

நான் ஒரு சிறு குழந்தைதான் ஆனால் எனக்குத் தெரியும். யுத்தங்கள் செய்ய ஆயுதங்களுக்காக.....ராணுவத்திற்காக சகல வழிக்கும் பணத்தை வறுமையை முற்றிலும் ஒழிக்கவும், சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவும் நாம் திசை திருப்பினால் இந்தப் புவி எப்பேர்பட்ட அற்புத வாழிடமாக மாறிவிடும் என்பது.

பள்ளிக்கூடத்தில் நாங்கள் எல்கேஜி, யுகேஜி படிக்கும் போதே மழலையர் வகுப்புகளில்கூட இந்த உலகத்தில் நாங்கள் எப்படி ஒழுக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென போதிக்கிறீர்கள்.

யாரோடும் சண்டைபோடக் கூடாது அனைவருக்கும் மரியாதை தரவேண்டும் நமது குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்யவே கூடாது பகிர்ந்து வாழ வேண்டும் - அடுத்தவர் பொருளை அபகரிக்க கூடாது...

எங்களைப் பார்த்து எதை எல்லாம் செய்யக்கூடாது என்கிறீர்களோ அதையெல்லாம் நீங்கள் செய்வது ஏன்?

நீங்கள் எதற்காக இந்த மாநாடுகளில் கலந்து கொள்கிறீர்கள் என்பதையோ.... யாருக்காக அவற்றை செய்கிறீர்கள் என்பதையோ தயவு செய்து மறந்து விடாதீர்கள் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.... நாங்கள் உங்கள் குழந்தைகள்.

நாங்கள் எந்தமாதிரி ஒரு உலகில் வளர்ந்து ஆளாகப் போகிறோம் என்று தீர்மானிக்கும் வேலையில் நீங்கள் இறங்கி இருக்கிறீர்கள். பெற்றோர்கள் எப்போதுமே குழந்தைகளான எங்களிடம், ‘கவலை வேண்டாம்..... அனைத்தும் நன்றாக..... இருக்கும்.... எங்களால் ஆனதை செய்வோம்..... உலகம் முடிவுக்கு வந்து விடாது.....’ என்று நம்பிக்கை ஊட்டுபவர்களாக இருக்க வேண்டும் அல்லவா. ஆனால் அதை முன்வைத்து நீங்கள் செயல்படவில்லை என்றே தோன்றுகிறது. உங்களது பலவகையான செயல்பாடுகளில் எங்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கப்போகிறது. என் தந்தை எப்போதும் சொல்கிறார்: ‘என்ன சொல்கிறாய் என்பதைவிட என்ன செய்கிறாய் என்பதே நீ’

நீங்கள் பெரியவர்கள் _ செய்யும் பல வேலைகள் என்னை இரவில் கண்விழித்து பயத்தில் அழ வைப்பவையாக உள்ளன. எங்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள்.... தயவு செய்து உங்கள் செயல்பாடுகள் அந்தச் சொற்களை பிரதிபலிக்குமாறு செய்யுங்கள்...... நன்றி.

- தமிழில்: இரா. நடராசன் 

Pin It