பொள்ளாச்சி என்றவுடன் மக்களுக்கு பாலியல் வக்கிரங்களே நினைவுக்கு வருமளவுக்கு மிகப் பெரிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கூட இப்படிப்பட்ட வக்கிரங்கள் நடக்குமா? என்று இன்னும் நம்ப முடியவில்லை. ஆனால்,தொடர்ந்து வரும் செய்திகளைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட மனித மிருகங்களும் இருக்கிறார்கள் என்பதை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. ஆனால், மிருகங்களுடன் கூட இவர்களை ஒப்பிடக்கூடாது. ஏனென்றால் மிருகங்கள்கூட பாலியல் தேவைக்காக ஆணும், பெண்ணும் கூடுகின்றனவே தவிர, பெண் மிருகத்தை வதைக்க வேண்டும் என்று எந்த ஆண் மிருகமும் நினைப்பதில்லை.

சமீப காலத்தில் தான் காதல் திருமணங்கள் பரவலாக நடைபெறுகின்றன. அதற்கே ஏகப்பட்ட எதிர்ப்புகளும், அச்சுறுத்தும் விதமாக ஆணவக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. வயது வந்த ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பி, காதல் திருமணம் செய்து கொள்வதையே கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த பெற்றோர்கள், இந்த வக்கிரங்களுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

இப்படிப்பட்ட கொடூரங்களை அரங்கேற்றியவர்களும் ஒரு குடும்பத்தில் தாய்க்கு மகனாகவும், சகோதரிக்கு அண்ணனாகவோ, தம்பியாகவோ இருப்பவர்கள் தானே? அப்படியானால் குடும்பத்திலிருந்து தான் இந்த வன்முறைகள் தொடங்குகின்றன

ஆண் குழந்தைகளை வளர்க்கும் முறைதான் இத்தனை அவலங்களுக்கும் காரணமாகிறது. அவன் ஆண்பிள்ளை, அப்படித்தான் இருப்பான் என்று அவன் முன்னேயே சொல்லிச் சொல்லி அவனை ஒரு ‘தாதா’வாக ஆக்கிவிடுகிறார்கள்

அதேபோல் பெண் குழந்தைகளை, குழந்தைப் பருவம் முதலே அவர்களை அழகுபடுத்திக் கொள்ளப் பழக்கிவிடுகிறோம், பெண் குழந்தைகளைக் குழந்தையாக வளர்க்காமல் அவர்களைப் “பொம்பளை”யாகவே வளர்க்கிறார்கள். இவ்வாறு வளரும் பெண்கள் வளர் இளம் பருவத்தில், ஆண்களைக் கவர்வதே தங்களுடைய தலையாயக் கடமையாகவும், அதற்காகத் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதுமாக இருக்கிறார்கள்

குழந்தைகளை இவ்வாறு வளர்த்துவிட்டு, அவர்களுக்கிடையில் மாயத்திரையைப் போட்டு விடுகிறார்கள். எப்படியென்றால், மூன்று வயதில் முதன் முதலில் பள்ளிக்குச் செல்லும்போதே, பள்ளியிலுள்ள மொத்தப் படித்த ஆசிரியர்கள் முதற்கொண்டு ஆண் குழந்தைகளைத் தனியாகவும், பெண் குழந்தைகளைத் தனியாகவும் அமர வைக்கிறார்கள். அப்போதே ஆரம்பித்து விடுகிறது பாலியல் பிரச்சனை.

எனவே, எல்.கே.ஜி.முதல் பிளஸ்-2 வரை மாணவ, மாணவியரை வகுப்பறையில் பெயரின் அகர வரிசைப்படியோ அல்லது உயர வரிசைப்படியோ கலந்து அமரச் செய்தால் அவர்களுக்குள், ஆணைப் பார்த்து பெண்ணுக்கோ, பெண்ணைப் பார்த்து ஆணுக்கோ ஒதுக்கம் ஏற்படாமல் அவர்களுக்குள் நல்ல நட்பு மலர வாய்ப்பு ஏற்படும்.

அதுமட்டுமல்ல, உடல்ரீதியாக அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களையும், மன அழுத்தங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய உற்ற தோழர்களாகவும் மாறலாம். அந்த நட்பு காதலாக மாறினால் கூட அவர்கள் தங்கள் வாழ்க்கையை முறையாகத் திட்டமிடக்கூடிய காதலர்களாகவும், சிறந்த பெற்றோராகவும் இருப்பார்கள் என்று உறுதியாகக் கூறலாம்.

ஒரு தலைமையாசிரியர் கூறுவார், “ஏன்தான் இப்படி ஆண்கள் பள்ளி என்றும் பெண்கள் பள்ளி என்றும் பிரித்து வைக்கிறார்களோ? பள்ளியில் மணியடித்தவுடன், பெண்கள் பள்ளியின் வாசலில்தான் போய் பையன்கள் நிற்கிறார்கள்” என்று. அது உண்மைதான்.

மேலே சொன்னபடி இருபாலர் பள்ளிகளாகவே எல்லாப் பள்ளிகளையும் ஏற்படுத்தி, அதில் மாணவ, மாணவியரைக் கலந்து அமர வைத்துக் கற்பித்தால், மாணவர்கள் மாணவியரை வேடிக்கை பார்ப்பதையும், அதற்காக மாணவிகள் எந்நேரமும் அலங்காரம் செய்வதிலேயே கவனம் செலுத்துபவர்களாகவும் இருப்பதை மாற்றி அவர்களைச் சிறந்த மாணாக்கர்களாக மாற்ற முடியும்.

அது மட்டுமல்ல. மேல்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ, மாணவியரிடம் குழு விவாதங்களை (Group Discussion) நடத்தலாம். நாட்டில் அன்றாடம் நடக்கும் ஏதேனும் நிகழ்வுகளைப் பற்றியோ, குடும்ப உறவுகள் பற்றியோ, வகுப்பில் ஒரு அரைமணிநேரம் விவாதம் நடத்தி அவரவர் கருத்துக்களைக் கூற வைக்கலாம். அவ்வாறு பேச வைத்தால், உலக நடப்புகளைப்பற்றித் தெரியாமல் இருக்கும் சில மாணவ, மாணவியருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.

எந்நேரமும் பாடங்களை மட்டுமே மூளையில் திணிக்க முயலாமல், வாழ்க்கைக் கல்விக்காக அரைமணி நேரம் ஒதுக்கினால் அவர்களுக்கு மனதளவில் ஒரு அமைதி ஏற்படும். அடுத்த வகுப்பில் அவர்கள் மலர்ச்சியுடன் பாடங்களைக் கவனிக்க ஏதுவாக இருக்கும். ஆம், நம் இளைய தலைமுறையினரை மனநோயாளிகளாகத்தான் ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

சாதாரணமாக ஆண், பெண் நட்பு பாராட்டுவதையும், பழகுவதையுமே உலக மகா குற்றம் என்று வீட்டில் பெற்றோர் கூறிக் கொண்டிருக்கும் அதே வேளையில் இணையத்தில் பாலியல் வக்கிரங்கள் கொட்டிக் கிடந்தால் அந்த இளைஞர்கள் மனநிலை எப்படி இருக்கும்? எல்லோரும் அப்படி வக்கிரம் பிடித்தவர்களாக இருக்கமாட்டார்கள்தான்.

ஆனால்,எக்கச்சக்கமான பண வசதியும், பெரிய அதிகாரப் பதவியும் உள்ளவர்கள் வீட்டில் வளரும் ஆண்பிள்ளைகள், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தன்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நினைப்பில், தான் செய்யும் காரியம் சக மனுஷியை எப்படி உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் காயப்படுத்தும் என்கிற வருத்தம் துளிகூட இல்லாமல், தான் மகிழ்ச்சியாக இருப்பதும், தன்னுடைய நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமே தன் வாழ்க்கை இலட்சியமாக நினைத்துக் கொள்கிறார்கள்.

பொள்ளாச்சி நிகழ்வுகளைப் பொறுத்தவரை எல்லோரும் அந்தப் பெண்கள் ஏன் அவர்களுடன் போகவேண்டும்? அவர்களுக்கு எவ்வளவு தைரியம்? அவர்களால் குடும்ப மானமே போய்விட்டது என்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் எல்லோரும் ‘கற்பு’ என்னும் சுமையை அவர்கள் தலையிலிருந்து இறக்கி வைத்துவிட்டு அந்தக் கயவர்களுடன் சென்றதுதான் தப்பு என்று பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்துகிறார்கள்.

உண்மையில் ஒரு பெண் தான் இதுநாள்வரை நட்புடன் பழகிக் கொண்டிருந்த, காதலனுடன் அவன் அழைக்கும் இடத்துக்குச் செல்கிறாள். அங்கு அவர்கள் தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்றாலும்கூட, அதுவரையில் எந்தத் தவறும் கிடையாது. வயது வந்த ஆணும், பெண்ணும் தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வது, இயற்கையான விஷயம். இதில் மூன்றாம் நபர்கள் என எவரும் தலையிட வேண்டியதில்லை. இதனால் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, பெற்றோர் உட்பட.

ஆனால், அதை வீடியோவாக ஒருவன் எடுக்கிறான் என்றால், அதிலேயே அவனுடைய கொடூரம் ஆரம்பித்து விடுகிறது. அதோடு விட்டாலும் பரவாயில்லை. இந்த வீடியோவைக் காட்டி அவளை மிரட்ட ஆரம்பிக்கும் போதுதான், அந்தப் பெண் தன் தவறை உணர்கிறாள். இருவரும் சேர்ந்து செய்த செயல்தான். இது தவறு என்று கருதினாலும், அது இரு நபர்களும் இணைந்து நடத்தியது தான்.

ஆனால், அந்த இருவரில் ஒருவன் எக்காளத்துடன் மிரட்டுவதும், மற்றொருத்தி தான் மிகப்பெரிய தப்பைச் செய்துவிட்டோம் என்று கதறுவதற்கும் காரணம் என்ன? தான் செய்வது தவறு என்ற குற்ற உணர்ச்சி சிறிதுகூட இல்லாமல் ஆண் இருப்பதற்கும், உலக மகாகுற்றம் செய்துவிட்டதாகப் பெண் நினைப்பதற்கும் இந்த சமுதாய அமைப்பே காரணம்.

தன் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல, தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் தன்னை மிகக் கேவலமாகப் பேசுவார்கள், தன்னால் வெளியில் தலைகாட்ட முடியாது என்ற நினைப்புத்தான் பெண்களை, தங்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் சொல்லவிடாமல் தடுக்கிறது.

ஆனால், வீடியோ எடுத்தவன் அந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தாமல், ஒரு பெண் பயந்து, தான் சொல்வதையெல்லாம் கேட்பதைப் பார்த்துவிட்டு, சும்மா இருப்பானா? அவனுக்கு இது கொண்டாட்டமாக இருக்கிறது. பணக்கார இளைஞர்களுக்கென்றே அவர்கள் சொல்வதைக் கேட்கின்ற, அவர்கள் செய்வதெல்லாம் சரிதான் என்று கொம்புசீவி விடுகின்ற நண்பர்கள் என்ற பெயரில் எடுபிடிகள் இருப்பார்கள். அவர்களிடம் தான் செய்த காரியத்தைப் பெருமையாகக் கூறுவதுடன் நிற்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வீடியோவைக் காட்டி மிரட்டி இதை வெளியிடாமல் இருக்கவேண்டும் என்றால் நான் சொல்பவர்களுடன் எல்லாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று மிரட்டியிருக்கிறான் என்றால் இவனை மனிதப் பிறவியாகக் கருதமுடியாது.

அது மட்டுமல்ல, முதலில் வீடியோ எடுத்ததே இவனுடைய நண்பர்கள்தான். நண்பர்களையும் அழைத்து கொண்டு வந்து திட்டமிட்டே இந்தக் காரியத்தை அவன் செய்கிறான். அதுமட்டுமல்ல, ஒருமுறை எளிதாக இந்தக் காரியம் முடிந்துவிட்டதால், அவர்களுடைய வேட்டை தொடர்கிறது. தொடர்ந்து பெண்களை ஏமாற்றி ஆசைகாட்டி அழைத்து வந்து தங்களுடைய இச்சைக்கு உட்படுத்தி அதை வீடியோவாக எடுத்துப் பெண்களை மிரட்டுகிறார்கள்.

அதிலும் பணக்காரப் பெண்களாக இருந்தால் பணம் கேட்டு மிரட்டுவதும், பணம் கொடுக்க முடியாத பெண்களாக இருந்தால், அவர்கள் கை காட்டும் நபர்களின் பாலியல் இச்சையைத் தீர்க்க அவர்களைக் கட்டாயப்படுத்துவதுமாக இவர்களுடைய கொடூரங்கள் தொடர்ந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் தங்களுடைய இச்சைகளைத் தீர்ப்பதற்கு ஒத்துக்கொள்ளாத பெண்களை பெல்ட்டால் அடித்தும் தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இவர்களுடன் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே அருவருப்பாக இருக்கிறது.

எனவே, இப்படிப்பட்ட வக்கிரம் பிடித்த ஆண்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதாலும், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதாலும் மட்டுமே இங்கு எதுவும் மாறிவிடப் போவதில்லை. இனி பெண்கள்தான் மாறவேண்டும். தாங்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தை வீட்டில் சொல்லத் தைரியம் வராமல் - தங்களைப் பாதிப்புக்குள்ளாக்கிய கயவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று, இறுதியில் தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எத்தனை பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்களோ?

தற்போது பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 28 பேர் கொண்ட நிபுணர்கள் குழு களமிறங்கியுள்ளது ஓர் ஆறுதலான விஷயம். பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், சி.பி.ஐ. விசாரணையின்போது இவை பாதிக்கப் பட்டவர்களின் தரப்பில் இக்குழுவினரால் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாது தமிழகத்தில் எந்தப் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் நடைபெற்றாலும் அவர்களும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே, இனி வருங்காலங்களிலாவது பெற்றோர் தங்களது வளரிளம் பருவத்துக் குழந்தைகளிடம் ஆண் குழந்தையானாலும், பெண் குழந்தையானாலும் அந்த வயதில் ஏற்படும் பாலியல் ஈர்ப்பு பற்றிப் பேசவேண்டும். அதுமட்டுமல்ல, ஆண் குழந்தையானாலும், பெண் குழந்தையானாலும், இருவரும் ஒருவரையொருவர் சக மனிதர்களாக நடத்தவேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்றும் தோழமை உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இளம் பெண்கள் இனியாவது, தாங்கள் தவறான நண்பனைத் தேர்ந்தெடுத்ததால், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டாலோ, அல்லது அதனை வீடியோவா எடுத்து அதை வெளியிட்டு விடுவேன் என்று அவன் மிரட்டினாலோ அதனைத் தைரியமாக எதிர்கொள்ளவேண்டும். தங்களது தலையில் சுமத்தப்பட்டிருக்கும் கற்பு, குடும்பமானம் போன்ற சுமைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தன்னைப் பாதிப்புக்குள்ளாகியவனிடம் உன்னை நண்பனாகத் தேர்ந்தெடுத்ததைத் தவிர நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. தண்டிக்கப்பட வேண்டியவர் நீதான் என் உடலை வைத்து வியாபாரம் செய்யலாம் என்று நினைக்காதே, எல்லாப் பெண்களுக்கும் உள்ள மாதிரிதான் என் உடலும் உள்ளது, உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள் என்று தைரியமாகப் பேசுங்கள் அல்லது தற்போது அமைக்கப்பட்டுள்ள 28 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவிடம் நேரிலோ அல்லது அவர்கள் குறிப்பிடுள்ள அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு உங்களது பிரச்சனைகளைக் கூறுங்கள். அக்குழுவில் உளவியல் நிபுணர், வழக்கறிஞர் எல்லோரும் இருப்பதால் உங்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கும்.

இந்த 21-ஆம் நூற்றாண்டிலாவது பெண்கள் உங்களது வாழ்க்கையை உங்களுக்காக, உங்களது மகிழ்ச்சிக்காக வாழுங்கள்! வாழ்த்துகள்!