தோழர்களே 27.05.1953 ஞாபகமிருக்கட்டும்!

பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை. தயங்கவேண்டியதில்லை! பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின் போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான லட்சக்கணக் கான மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில் ஆற்றில் ஓடையில் ஏரியில் குளத்தில் கிணற்றில் புனலில் வயலில் எறிந்துவிடுகிறார்கள். அது உடன் கரைந்து நீரோடு நீராக மண்ணோடு மண்ணாக ஆகி விடுவதில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கை தான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிறவஸ்து விடமும் நாம் செல்லவில்லை. தொடவில்லை. நாமாக வாங்கி உடைப்பதும் நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல! வேதசாஸ்திர ஆதாரம் என்பதின் படியும் அது கணபதி கடவுளல்ல! கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை! கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான். அதற்கு கோவில் பூசை நைவேத்தியம் உற்சவம் முதலியவை களால் நம் அறிவும் செல்வமும் நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.

கணபதிக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்புக்கும் குணங்களுக்கும் மிகுதியும் கீழ்த்தர மானவை அறிவுள்ள –மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல. பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல! காட்டுமிராண்டிக் காலத்தில் 1000-2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியே தான் இந்த 1953- ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங்கரையில் மூக்கைப்பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய்ப் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக அதாவது 565- தேசங் களுக்கு தேசாதிபதியாக பிரதமாக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது கல்லை- செம்பை- மண்ணை- அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன்.

இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது? யார் தான் ஆகட்டும்! ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது? மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக ஜட்ஜீ பார்ப்பனர் முதல் அட்டண்டர் பார்ப்பனர் ஈறாக லஞ்சம் ஃபோர்ஜரி  பாங்கி மோசடிப் பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி சூதாட்டப் பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி, இயல், மத இயல் களில் செய்துவரும் நிரந்தரப் பந்தோபஸ்தான, சுயநல ஏற்பாட்டிற்குத் தமிழர்களே சூத்திரர்கள், பஞ்சமர் என்பவர்களே என்ன செய்யப் போகிறீர்கள்? இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே!

சூத்திர பார்லிமெண்ட் சட்டசபை மெம்பர்களே! வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்வி மான்களே! உலகப்பிரசித்திக் கோடீஸ்வரர்களே! புலவர்களே! பிரபுக்களே! மாஜி ஜமீன்தார்களே! மாஜி மகாராஜாக்களே ஸ்ரீ-ல-ஸ்ரீ!  ஸ்ரீ-ல-ஸ்ரீ!! பண்டார சந்நிதிகளே சொல்லுங்கள். கேட்க, தலை வணங்கச் சித்தமாக இருக்கிறேன்!

 தோழர் பெரியார் 07.05.1953 விடுதலை ஏடு

Pin It