“அரசியல் கட்சிகளை நம்ப வேண்டாம்.தேர்தல் அரசியல் நமக்குத் தீர்வு அல்ல. தேர்தலில் நிற்காத இயக்க அரசியலே அவசியம்”,

“சமுதாய விடுதலைக்கு சமுதாய இயக்கங்கள் தான் தேவை, அரசியல் கட்சிகள் தேவையில்லை”

“ஓட்டுப்போடாதே புரட்சி செய்”

என்பது போன்ற வாதங்கள் சில சிறுசிறு அமைப்புகளால் பரப்பப்படுகின்றன. அந்த வாதங்கள் அனைத்தும் பரப்பப்பட வேண்டியவை தான். ஆனால், இதுபோன்ற வாதங்களுக்கு நெருக்கமாகத் தோழர் பெரியார் பேசியவைகளைக் காண்போம்.

“பல  மதமாய், பல ஜாதியாய், பல வகுப்பாய், பல லட்சியமாய்ப் பிரிந்து சராசரி 100 க்கு 10 பேருக்குக் கூடக் கல்வியறிவில்லாமல் இருக்கும் இந்தியாவுக்கு, இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது”

“ஒரு வருஷத்திற்கு முன் இந்திய சட்டசபையில் நிறைவேறின பாலிய விவாகத்தடுப்புச் சட்டமானது ஜனநாயகத்தால்  நிறைவேற்றப்பட முடியாமல், தனி நாயகத்துவத்தின் உதவியாலேயே நிறைவேற்றப் பட்டது.”

“லெனின் ஆட்சியோ, கமால்பாஷா ஆட்சியோதான் மனிதத் தர்ம - மனித நாயக ஆட்சியாக இருக்க முடியுமே அல்லாமல் மற்றபடி எந்தச் சீர்திருத்தம் கொடுத்து, எந்த ஜனநாயக ஆட்சி  கொடுத்து, அதை எந்த மகாத்மா ஒப்புக்கொண்டு அதை எந்த வெள்ளைப் பார்ப்பானோ, கருப்புப் பார்ப்பானோ மொட்டைப் பார்ப்பானோ மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு நடத்திக் கொடுப்பதாயிருந்தாலும் அது ஒரு நாளும் மனித தர்ம ஆட்சி யாயிருக்க முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். -குடி அரசு - 08.02.1931

இவைபோல, ஜனநாயகத்தைப் பற்றியும், தேர்தல் அரசியலைப் பற்றியும் மிகக்கடுமையான வாதங்களை எழுதியுள்ள பெரியார், இவற்றுக்கு மாற்றாக, லெனின், கமால்பாட்சா போன்ற தலைவர்களின் சர்வாதிகாரப் புரட்சியை முன்வைக்கிறார். பல நேரங்களில் தனித் தமிழ்நாடு, தனித் திராவிடநாடு, திராவிடஸ்தான், ப்ரிட்டிஷ் அரசுக்கு நேரடியாகக் கட்டுப்பட்டு, இந்தியா விலிருந்து மட்டும் விடுதலைபெற்ற தனிநாடு, அகில இந்திய அளவிலான திராவிடநாடு எனப் பல நிலைப்பாடுகளை எடுத்துள்ளார்.

இவை மட்டுமல்லாமல், இன்னும் பல கொள்கைகளைத் தனது சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியங்களாக வரையறுத்து அறிவித்திருக்கிறார். இக்கருத்துக்களை முன்வைத்து, பெரியார் தேர்தல் அரசியலே கூடாது என்றார் என்றும், யாரும் அதிகாரங்கள் அற்ற அரசியல் கட்சிகளைநம்ப வேண்டாம் என்றும் ஒரு பரப்புரை நடந்து வருகிறது. 

சமுதாயம் பெற்ற பிள்ளைகள் தான் அரசியலும், பொருளாதாரமும் என்றும், “ஜன நாயகம் ஒரு முட்டாள்தனம்” என்றும் கூறினார் பெரியார். இந்தக் கருத்துக்களை முன் வைத்துத்தான் இப்போது பரப்புரை நடக்கிறது. பெரியாரின் எழுத்துக்களை வெட்டி, ஒட்டிப் பேசும் பலரைப் பார்த்திருப்போம். இப்போது, வெட்டி, ஒட்டுவ தோடு நிற்காமல் பெரியாரைப் புகழ்ந்து கொண்டும், நாங்களும் பெரியாரிஸ்ட்டுகள் தான் என்று வாயளவில் கூறிக்கொண்டும் பெரியாரியலை அழிக்க ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. அக் கூட்டத்தின் தவறான வாதங்களுக்கு பதில் தான் இக்கட்டுரை.

ஜனநாயகம், தேர்தல் அரசியல் இவற்றைப் பற்றிக் கடும் எதிர்க்கருத்துக்களைக் கொண்டிருந்த பெரியார், அதே ஜனநாயகத்தையும், தேர்தல் அரசியலையும் எவ்வாறு கையாண்டார், எப்படி அணுகினார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

நமக்கென்று தனி அரசியல் கட்சி வேண்டும்: பெரியார்

பெரியார், தனது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஜஸ்டிஸ் கட்சியை நம்பி இருந்தார். அவர்களை வேலை வாங்கினார். 1928 இல் அக்கட்சியை முழுமையாக நம்ப முடியாது என்று கருதி, தனியாக அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றும் எண்ணினார். அதை அவரது வரிகளிலேயே படிப்போம்.

“அநேக விஷயங்களில் சுயமரியாதைக்கு விரோதமாக எவ்வளவோ கொடுமைகள் சட்டத்தில் இருக்கின்றன. இவைகளை எல்லாம் சட்டசபைகள் மூலம் மாற்றி னாலன்றி நமது லட்சியம் நிறைவேற்றுவதற்கு மார்க்க மில்லை என்றே சொல்லுவோம். சட்டத்தினால் தடைகளை வைத்துக் கொண்டு விபரமில்லாமல் வெள்ளைக்காரர் மீதும் பொது ஜனங்கள் மீதும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு பலனும் இல்லை. ஆகையால் நாம் நமது இலட்சியத்தை அடைய வேண்டுமானால், வைதீகர்கள் வசமும், வைதீகத்தின் அடிமைகள் வசமும் அதிகாரங்களை ஒருநாளும் விட்டுவைத்தல் கூடவே கூடாது என்பதே நமது அபிப்பிராயம்.

ஜஸ்டிஸ் கட்சி என்பதான தென்இந்திய நல உரிமைச் சங்கம் பெரும்பாலும் சுயமரியாதை இலட்சியத்தை ஒப்புக் கொள்ளுகின்றதானாலும் அதிலுள்ள சிலர் அதிகாரத்தையும் உத்யோகத்தையும் பொருத்த வரையில் மாத்திரம் பார்ப்பனீயத்தை ஒழிக்க சம்மதிக்கிறார்களேயொழிய நித்திய வாழ்க்கையில் பார்ப்பனர் காலில் விழுவதையோ பார்ப்பனர் கால் கழுவின தண்ணீரை சாப்பிட்டு தலையில் தெளித்துக் கொள்வதையோ நீக்கிவிட அநேகர் சம்மதிப்பதில்லை.

...ஆதலால் நமது லட்சியத்திற்கு அக்கட்சியையே முழுவதும் நம்பி விட்டுவிடுவதற்கில்லாத நிலையில் இருக்கின்றோம். ஆதலால் நமக்கென்று தனிக்கட்சி ஒன்று சட்டசபையில் அதாவது நமது சுயமரியாதைக்கு இடையூறாக இருக்கும் சட்டத்தடையை ஒழிப்பதற் காவது அவசியம் வேண்டியிருக்கின்றது.

இவ்விஷயத்தில் அலட்சியமாய் இருந்துவிட்டு எவ்வளவுதான் பிரசாரம் செய்தாலும், எவ்வளவு தான் தியாகமும் கஷ்டமும் நஷ்டமும் அடையத் தயாராயிருந்தாலும் ஒரு பலனையும் அடைந்து விட முடியாது. ஆதலால் இப்போதே ஆங்காங்குள்ள சுயமரியாதை வீரர்கள் ஆங்காங்கு சங்கங்கள் கண்டு அங்கத்தினர்கள் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம்.” - குடி அரசு - தலையங்கம் - 27.05.1928

தனிக்கட்சி வேண்டும் என்று கருதி, அதற்குரிய முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் அப்படி எதுவும் தொடங்கப்படவில்லை. தொடர்ச்சியாக நீதிக்கட்சியை இயக்குவதிலேயே கவனமாக இருந்தார். ஜனநாயகம், தேர்தல் அரசியல் இவற்றிலேயே நம்பிக்கையற்ற பெரியார், அந்தத் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்ற கட்சியில், அதன் உட்கட்சி விவகாரங்களில்கூடச் செல்வாக்கைச் செலுத்தி மாற்றங்களை உண்டாக்குகிறார்.

பொப்பிலி அரசரை முதலமைச்சராக்கினார்

1930 - 1932 வரை முதலமைச்சராக இருந்த முனுசாமி நாயுடுவுக்கு நீதிக்கட்சிக்குள் எதிர்ப்பு உருவானது. முனுசாமி நாயுடுவை முதல்வர் பதவி யிலிருந்து நீக்கிவிட்டுத் தன்னை முதலமைச்சராக்கு மாறு பொப்பிலி அரசர் பெரியாரிடம் கோரிக்கை வைத்தார். பெரியாரும், அவரது அரசியல் தொடர்புகளின் வழியாக முனுசாமி நாயுடுவை நீக்கிவிட்டு, பொப்பிலி அரசர் முதலமைச்சராக உதவினார். 1932 இல் பொப்பிலி அரசர் முதலமைச்சரானார். 1936 வரை அப்பதவியில் நீடித்தார். அவரது ஆட்சிக்காலத்தில் தான் பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தின் பலதீர் மானங்கள் நீதிக்கட்சி ஆட்சியால் செயல்படுத்தப் பட்டன.               ( கருணாநந்தம்.ப.120) 

1932 இல் மீண்டும் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். அதற்கான ஒரு கலந்துரையாடலுக்காகக் குடி அரசில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

சமுதாயம் – அரசியல் இரு தளங்களிலும் தனித்தனி அமைப்புகள்

“இப்பொழுது இரண்டுவகை திட்டங்கள் யோசனைக்கு கொண்டு வருவதற்காகச் சில தோழர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஒன்று ‘சுயமரியாதை சமதர்மக் கட்சித் திட்டம்’ என்னும் பேராலும், மற்றொன்று ‘சுயமரியாதைக்கட்சி’ இதுவரையில் செய்து வந்தது போலவே பிரசாரத்தின் மூலமாக பல துறையிலும் சீர்திருத்தங்கள் செய்து மக்களுக்கு உலக ஒற்றுமையையும் பகுத்தறிவையும், அன்பையும் உண்டாக்குவது என்பது.

இரண்டைப் பற்றியும் சுருக்கமாக விளக்க வேண்டுமானால் முன்னையது சில கொள்கைகளை வகுத்து அதை நிறைவேற்ற சட்டசபை முதலிய அரசியல் பொது ஸ்தாபனங்களைக் கைப்பற்றி அதன் மூலம் நடத்துவிப்பது என்பது,

பின்னையது அரசியல் ஸ்தாபனங்களை லட்சியம் செய்யாமல் மக்களிடை பல கொள்கைகளைப் பிரசாரம் செய்து கொண்டே உலகப் புரட்சியை எதிர் நோக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது மற்றொன்று. இந்த இரண்டு வித வேலையும் தனித்தனியே நடத்தப்படலாம் என்பது.

ஆகவே இந்த விஷயங்கள் எல்லாம் நன்றாய் பொறுப்புடன் ஆலோசிக்கப்படப்பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியமாகும்.

ஆதலால் உண்மை விடுதலையிலும், உண்மை சமத்துவத்திலும் பற்று கொண்ட சுயமரியாதைத் தோழர்கள் அவசியம் விஜயம் செய்து கூட்டத்தின் உத்தேசத்தை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். - குடி அரசு - தலையங்கம் - 25.12.1932

திட்டமிட்டபடி சுயமரியாதை இயக்கத்தின் கூட்டம் ஈரோட்டில் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டன. இலட்சியங்கள் மட்டுமல்ல; அவற்றை அடைய ஒரு வேலைத் திட்டமும் உருவாக்கப்படுகிறது.

அடிப்படை இலட்சியங்களை நோக்கிச் சுயமரியாதை இயக்கம் செயல்படும். அந்தத் தொலைநோக்கு இலட்சியங்களை அடைவதற்கு முன் இடைக்கால ஏற்பாடாகச் செய்யவேண்டிய வேலைத்திட்டங்களைச் ‘சுயமரியாதை - சமதர்மக் கட்சி’ என்ற அரசியல் கட்சி செயல்படுத்தும் என்று முடிவெடுக்கின்றனர். பெரியார் காண விரும்பிய அரசியல் கட்சியான, சமதர்மக் கட்சியின் வேலைத்திட்டங்கள் தான் ‘ஈரோடு வேலைத் திட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

சுயமரியாதை இயக்க இலட்சியம்

1. பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மைகொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது.

2. தேசத்தின் பேரால் கொடுக்கப்படவேண்டிய எல்லா கடன்களை ரத்து செய்வது.

3. எல்லா தொழிற்சாலைகளையும், ரயில்வேக்களையும், பாங்கிகளையும், கப்பல் படகு நீர் வழி போக்குவரத்து சாதனங்களையும் பொது மக்களுக்கு உரிமை யாக்குவது.

4. எந்தவிதமான பிரதிப் பிரயோஜனமும் கொடுபடாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும், காடுகளையும் மற்ற ஸ்தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமையாக்குவது.

5. குடியானவர்களும், தொழிலாளிகளும், லேவாதேவிக் காரர் களிடம் பட்டிருக்கும் கடன்களையெல்லாம் (கேன்சில்) செல்லுபடி யற்றதாக ஆக்கி விடுவது, அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுவது.

6. சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளை யெல்லாம் மாற்றி இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியானவர்கள், சரீர வேலைக்காரர்கள் என்பவர் களுடைய நேரடியான ஆட்சிக்கு கொண்டு வருவது.

7. தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்பதுடன், அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்த்தப்படுவது. தொழிலாளி களுக்கு கூலியை உயர்த்தி, அவர்களது சுகவாழ்க் கைக்கு வேண்டிய சவுகரியங்களையும் இலவச நூல் நிலையங்கள் முதலிய வசதிகளையும் ஏற்படுத்துவது. தொழில் இல்லா மல் இருக்கின்றவர்களை சர்க்கார் போஷிக்கும் படியும் செய்வது.

என்பவைகள் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான  இலட்சியங்களாகும். இந்த இலட்சியங்களுக்கான வேலைத்திட்டம் அரசியல் கட்சிக்குரியது. வேலைத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு, தேர்தல் அரசியல் பற்றிக் கடுமையான எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பெரியார், கள நிலவரத்தின் அடிப்படையில் ஒரு முடிவு எடுத்து எழுதியுள்ளதைக் கவனமாகப் படியுங்கள்.

அரசியல் அமைப்புகளின் முக்கியத்துவம்

சுயமரியாதை இயக்கமானது தென் இந்தியாவில் சென்ற 7, 8 வருஷ காலமாக பாமர மக்களிடையே ஏராளமாய் புதைந்து கிடந்த ஜாதி, மதம் முதலியவைகளைப் பற்றிய குருட்டு நம்பிக்கைகள் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளைப் பற்றியும், பொருளாதாரத் தன்மையின் கீழ்நிலையைப் பற்றியும் செய்து வந்த புரட்சி பிரசாரத்தின் பலனாய் ஒரு பெருத்த உணர்ச்சியைக் கிளப்பி விட்டிருப்பதாலும், பகுத்தறிவுக்கு ஏற்காத முறையில் நடை பெற்று வரும் மேல்கண்ட பழக்க வழக்க முறைகளை சட்ட மூலமாகவன்றி வேறு வழியில் ஒழிப்பது என்பது முடியாது என்கின்ற அபிப்பிராயம் நாளுக்கு நாள் பலப்பட்டு வருவதாலும்,

பாமர மக்களைப் பல அரசியல் ஸ்தாபனங்களும், சமூகக் கட்டுப்பாடு களும் அந்தந்த விஷயங்களில் அடக்கியும், பொருளாதாரத் துறையில் ஒடுக்கியும் வைப்பதற்கு சாதனமாக “அரசியல் ஸ்தாபனங்களே” உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆட்சேபிக்க முடியாத உண்மையாய் இருப்பதாலும்,

சுயமரியாதை இயக்கத்தாருக்குள் சமதர்ம (Socialist party) கட்சி என்பதாக ஒரு அரசியல் பிரிவை ஏற்படுத்தி, அதற்கு அடியிற்கண்ட திட்டத்தை வகுத்து, அதன் மூலம் பரிகாரம் தேடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

வேலைத்திட்டத் தீர்மானம்

  1. பொது ஜன செளகரியங்களுக்கு ஏற்பட்ட சாதனங்களை தனிப்பட்ட மனிதர்கள் அனுபவிப்ப தென்பதற்கும் ஜாதிமத சம்பந்தமான கொடுமை களுக்கும் பாதுகாப்புகளாய் இருக்கும் அறிவுக்கு ஒவ்வா முறைகளை ரத்து செய்ய வேண்டும். பாமர ஜனங்களை அவர்களது பொருளாதாரக் கொடுமையில் இருந்தும், ஜாதி மதக் கொடுமையில் இருந்தும் விடுவித்தும் சுதந்திர மனிதர்கள் ஆக்குவதற்கும், பொது ஜன அவசியத்திற்கு என்று ஏற்படுத்தப்படுகிற தொழில் முறைகள் போக்கு வரத்து சாதனங்கள் ஆகியவைகளின் நிர்வாகத் தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கும் வேண்டிய காரியங்களை அரசியல் ஸ்தாபனங்களின் மூலமாகச் செய்ய வேண்டும்.

....மேல்கண்ட சட்டங்கள், சீர்திருத்தங்கள் முதலிய வைகளை எல்லாம் சட்டசபைப் பிரவேசம் மூலம், பிரசங்க மூலம், சொல்லுவதன் மூலம், பத்திரிகைத் துண்டுப் பிரசுரம் முதலியவைகள் மூலம் சட்டத்தை அனுசரித்துச் செய்ய வேண்டியது. -குடி அரசு - 01.01.1933

இவ்வாறு இரு தளங்களிலும் ஆற்ற வேண்டிய பணிகளைத் தெளிவாகத் திட்டமிடுகிறார். சமுதாயத்துறைக்கு சுயமரியாதை இயக்கம். அரசியல் துறைக்கு சமதர்மக்கட்சி. இரண்டையும் ஒன்றுக் கொன்று எதிராகக் கொண்டு நிறுத்தவில்லை. அரசியலை நம்பாதே, ஓட்டுப்போாடாதே, சமுதாய இயக்கத்தை மட்டும் நம்பு என்று வறட்டுவாதம் பேசிக்கொண்டிருக்கவில்லை. அரசியல் கட்சிக்கான ஈரோடு வேலைத்திட்டம் முழுக்க முழுக்கச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, சட்டத்தினால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் தெளிவாக விளக்கி விட்டார்.

இதில் மிக முக்கியமான செய்தி என்ன வென்றால், அவர் அரசியல் கட்சி வேண்டும் என எண்ணிய காலத்தில் மாகாணங்களுக்கு இருந்த அதிகாரங்கள் இப்போது இந்த 2018 ஆம் ஆண்டில் இருப்பதைவிட மிக மிகக் குறைவான அதிகாரங்கள் தான். அந்த நிலையிலேயே அரசியல் துறையை அவர் ஒதுக்கிவிடவில்லை.

திட்டங்கள் சரியாக இருந்தாலும், அவற்றைச் செயல்படுத்துவதற்குப் பெரியார் நம்பியிருந்த தோழர்கள் சரியாக இல்லை. அரசியல் கட்சியை யார், யாரையெல்லாம் நம்பித் தொடங்கலாம் என எண்ணியிருந்தாரோ, அவர்களெல்லாம் பெரியாரை விட்டு விலகினார்கள். எனவே ‘சமதர்மக் கட்சி’ என்ற அரசியல் திட்டம் தள்ளிப் போடப்பட்டது.

சிங்காரவேலரின் கடும் எதிர்ப்பு

தனது திட்டம் தோற்றுவிட்டது. தான் நம்பிய தோழர்கள் துரோகம் இழைத்துவிட்டனர் என்ற நிலையில் தனது கருத்தை மாற்றிக்கொண்டு, சமுதாய இயக்கம் தான் முக்கியம், அரசியல் கட்சி தேவையில்லை என்று பேசவில்லை. உடனடியாக அடுத்த வாய்ப்பு என்ன? என்று யோசித்து மீண்டும் நீதிக்கட்சியை வேலை வாங்கத் தயாரானார்.

ஏற்கனவே, அதாவது 1928 லேயே “பார்ப்பனர் காலில் விழுவதையோ பார்ப்பனர் கால் கழுவின தண்ணீரை சாப்பிட்டு தலையில் தெளித்துக் கொள்வதையோ நீக்கிவிட அநேக (நீதிக்கட்சியினர்) சம்மதிப்பதில்லை” என்று தானே குற்றம் சாட்டி யிருந்த நீதிக்கட்சியையே மீண்டும் நாடுகிறார். தான் தொடங்க நினைத்த அரசியல் கட்சிக்காகத் திட்டமிட்டிருந்த ஈரோடு வேலைத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து நீதிக்கட்சிக்கு அனுப்புகிறார்.

அப்படி நீதிக்கட்சிக்கு வேலைத்திட்டத்தை அனுப்பியதற்கு தோழர் சிங்காரவேலர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். சிங்காரவேலரின் கடுமையான எதிர்வினையை முழுமையாகத் தனது குடி அரசு ஏட்டில் பதிவு செய்து - அவரது கருத்துக்குத் தனது மறுப்பையும் வெளியிட்டார் பெரியார். அதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

சிங்காரவேலரின் எதிர்ப்பு: “நாம்  செய்ய  வேண்டிய  வேலை  என்ன வென்று  கேட்கலாம்?  பல  கட்டுரைகளில்  நமது  கடமையைப்  பற்றியும்,  நாம்  செய்து  வரவேண்டிய  வேலையைப்  பற்றியும்  எழுதியுள்ளோம்.  ஈரோட்டில்  2  வருஷங்களுக்கு  முன்  வகுக்கப்பட்ட  திட்டங்களும்  இருக்கின்றன.  அந்த திட்டங்களை  அமுலுக்குக்  கொண்டு  வராமல்  அந்த  திட்டங்களைக்கனவிலும்  நினையாத  கட்சிக்காரரோடு  சரச  சல்லாப  வார்த்தைகளைப்  பேசுவதால்  யாது  பயனென்று  கேட்கின்றோம்?  நாம்  நல்ல  பிள்ளையென்று  பெயரெடுக்க  வேண்டுமானால்  அது  வெகு  சுளுவில்  அடையலாம்!

பெரியாரின் விளக்கம்: “எனது  பிரேரேபணைகள்  ஜஸ்டிஸ்  கட்சி  வேலைத்திட்டத்திற்கே  ஒழிய  சுயமரியாதைக்கட்சி  வேலைத்  திட்டத்திற் கல்ல.  இக்கொள்கைகளை  ஜஸ்டிஸ்  கட்சி  ஒப்புக்கொள்ளா  விட்டால்  நமக்கு  நஷ்டம்  ஒன்றும்  இல்லை. இதை  அவர்கள்  ஒப்புக்  கொண்டால்  மேலால்  நடக்க வேண்டிய  விஷயங்களைப்  பற்றி  நாம்  எல்லோரும்  யோசிப்போம்.  இதனால்  சுயமரியாதை இயக்கத்திற்கு  வகுத்த  திட்டங்கள்  பாதிக்கப்பட்டுவிடாது.

சுயமரியாதை  இயக்கத்  திட்டத்தில்  கண்டபடியே  தான்  இத்திட்டத்திலும்  சட்டத்திற்குக்  கட்டுப்பட்டு  என்று  எழுதி  இருப்பதுடன்  நமக்கு  அதிகாரம்  இல்லாத  விஷயங்களில்  கிளர்ச்சி  செய்து  அதிகாரம்  பெறுவது  என்றும்  குறிப்பிட்டிருக்கிறதே  ஒழிய  வேறில்லை.  எந்த  இயக்கத்தின்  மூலம்  எந்தத்  திட்டம்  வகுக்கப்பட்டாலும்  இன்று  இந்த  முறையில்  தான்  வகுக்கக் கூடும்.- பகுத்தறிவு  ஆசிரியர் குறிப்பு  30.09.1934

ஈரோடு வேலைத்திட்டம் ஏற்பு - பெரியார் தேர்தல் பிரச்சாரம்

சென்னையில் நீதிக்கட்சியின் மாநில மாநாடு 1934 ஆம் ஆண்டு செப்டம்பர் 29, 30 தேதிகளில் நடைபெற்றது. அதில் ‘ஈரோடு வேலைத்திட்டம்’ விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொப்பிலி அரசர் பெரியாரின் வேலைத்திட்டத்தை ஒரு தனிக்குழு அமைத்து ஆராய்ந்து, பிறகு ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு நடைபெற்ற அகில இந்திய சட்டசபைத் தேர்தலில் பெரியார் நீதிக்கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார். அதுதான் பெரியார் நேரடியாக நடத்திய முதல் தேர்தல் பிரச்சாரம் என கவிஞர் கருணானந்தம் அவர்கள் எழுதிய ‘தந்தைபெரியார் வாழ்க்கை வரலாறு’ நூல் பதிவு செய்துள்ளது.

தமிழ்நாடு தமிழருக்கே

இப்படி மக்கள் விடுதலைக்காகத் தேர்தல் அரசியலிலும், தான் நினைத்ததைச் சாதிக்கும் வழிவகை களைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், 1937 இல் நீதிக்கட்சி தோல்வி அடைந்து காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுகிறது. அப்போது இராஜாஜி முதல்வரானார். அரசு, நீதிமன்ற, காவல்துறை நிர்வாகங்கள் அனைத்திலும் பார்ப்பனர்கள் திட்ட மிட்டு நியமிக்கப்படுகின்றனர். கல்வி நிலையங்கள் மூடப்படுகின்றன. பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்தித் திணிப்பும் நடக்கிறது. அனைத்துப் பார்ப்பன ஆதிக்க வெறிகளுக்கும் எதிராகத்தான் இந்தி எதிர்ப்பை  ஒரு கருவியாகக்கொண்டு, 1938 ஆம் ஆண்டு “தமிழ்நாடு தமிழருக்கே” எனத் தனித் தமிழ்நாடு முழக்கத்தை வரலாற்றில் முதன்முதலாகத் தொடங்கினார் பெரியார்.

அதன்பிறகு,“திராவிட நாடு திராவிடருக்கே” எனும் தலைப்பில் 1939 டிசம்பர் 17 குடி அரசு இதழில் தலையங்கம் தீட்டி, திராவிட நாடு கோரிக்கைக்குச் செயல்திட்டமும் தீட்டினார். 1940 ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 10 வரை திராவிட நாடு பிரிவினைக் காக டாக்டர் அம்பேத்கர், முகமது அலி ஜின்னா ஆகியோரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அறிஞர் அண்ணா, டி.ஏ.வி. நாதன், பாலசுப்பிர மணியன் ஆகியோர் உடன் சென்றனர். இங்கிலாந்தில் இருந்து வந்த க்ரிப்ஸ் குழுவைச் சந்தித்து, தனித்திராவிட நாட்டுக்குக் கோரிக்கை வைக்கிறார்.

1944 ஆகஸ்ட் 28 இல் திராவிடர் கழகம் உருவாகிறது. அதிலும் தனி திராவிட நாடே இலக்கு எனத் தீர்மானம் நிறைவேற்றுகிறார். தீர்மானத்தோடு நிற்கவில்லை. இந்தியா முழுவதும் அனைத்துக் கட்சி, அனைத்து சமுதாயத் தலைவர்களையும் சந்தித்துத் தனிதிராவிட நாட்டுக்கு ஆதரவு திரட்டுகிறார். எம்.என்.ராய், இந்து மகாசபாவின் மூஞ்சே போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு நேரடியாக வந்து பெரியாரைச் சந்தித்து திராவிட நாட்டுக்கு ஆதரவைத் தெரிவிக்கின்றனர். இப்படி நாட்டு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலங்களில், முதலமைச்சர் பதவி பெரியாரைத் தேடிவருகிறது.

முன்று முறை முதலமைச்சர் பதவி மறுப்பு

இரண்டாம் உலகப்போரில், இந்தியப் படைகளை ஆங்கிலேய அரசு ஈடுபடுத்தியது. இந்தியத் தலைவர்களைக் கலந்துபேசாமல் ஆங்கிலேய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக் கையைக் கண்டித்து காங்கிரசு அரசாங்கங்கள் பதவி விலகின. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் இராஜகோபாலாச்சாரி 1939 அக்டோபர் 27 இல் பதவி விலகினார். அப்போதைய கவர்னர் ஆர்தர் ஹோப் அவர்கள் பெரியாரை அணுகி ஆட்சி அமைக்க அழைத்தார். இந்நிலை உருவாகும் எனக் கணித்திருந்த பெரியார் அக்டோபர் 25 ஆம் நாளிலேயே நீதிக்கட்சியின் நிர்வாகக்குழுவைக் கூட்டி அதில் முதலமைச்சர் பதவியை ஏற்பதில்லை என முடிவு செய்தார். அம்முடிவை அக்டோபர் 29 இல் கவர்னரிடம் நேரில் தெரிவித்தார்.

1940 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் மீண்டும் இராஜாஜி, முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு பெரியாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.  அப்போதும் பெரியார் அதை மறுத்தார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு கலவரங்களைக் கட்டுப்படுத்தக் கோரி அக்டோபர் 18 இல் கவர்னரையும், வைசிராயையும் பெரியார் சந்தித்தார். அப்போது இருவரும் பெரியாரிடம் ஆட்சியை ஏற்றுக்கொள்ளக்கூறினர். அதையும் பெரியார் மறுத்தார். இவ்வாறு மூன்று முறை முதலமைச்சர் பதவி அவருக்குத் தேடி வந்தபோதும், மூன்று முறையும் அதை மறுத்தார்.

மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அரசியல்

முதலமைச்சர் பதவி என்பதில் அதிக அதிகாரம் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்த பெரியார் அதை மறுக்கிறார். அந்த நேரத்தில் தனிநாட்டுக்காகக் களமாடிக்கொண்டிருந்தார். 1947 இல் இந்தியா விடுதலை பெற்றபோதும்கூட அந்த விடுதலையைத் ‘துக்கநாள்’ என்று அறிவித்து, தனித் தமிழ்நாட்டுக்கான முயற்சிகளிலேயே தொடர்ந்து இயங்கினார்.

அதேகாலத்தில், 1946 இல் ஆந்திரப் பார்ப்ப னரான பிரகாசம்காரு சென்னை ராஜதானியின் முதலமைச்சராக வந்தபோது, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தமது செல்வாக்கையும், காமராசரின் நட்பையும் பயன்படுத்தி, பிரகாசம்காருவைப் பதவியில் இருந்து அகற்றி, ஓமந்தூர் இராமசாமியை முதலமைச்சராக்கினார்.

தனிநாட்டுக்காகப் போராடிக் கொண்டி ருக்கும் காலத்தில், அதிகாரங்கள் எதுவும் அற்ற முதலமைச்சர் பதவியில் யார் இருக்க வேண்டும்? யார் இருக்கக்கூடாது என்ற நிர்ணயிக்கும் இடத்திலும் வெற்றிபெற்று தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். தானே மூன்றுமுறை தூக்கி எறிந்த முதலமைச்சர் பதவி தான், என்றாலும், ஆந்திரப் பார்ப்பனப் பிரகாசம் வந்துவிடக் கூடாது என்று அரசியல் சதுரங்கத்திலும் தடம் பதிக்கிறார். ஓட்டுப் போடாதே, அரசியல் கட்சிகளை நம்பாதே, புரட்சிசெய் என்று பேசிக்கொண்டு மட்டும் நிற்கவில்லை. கள யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டு அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறார்.

1952 தேர்தலில்  ஐக்கிய முன்னணி’  உருவாக்கம்

1952 இல் குடி அரசு அடைந்த இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்பு கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ.டாங்கே 30.05.1951 இல் பெரியாரை நேரில் வந்து சந்தித்து காங்கிரசை வீழ்த்த ஆதரவு கோரினார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக -  காங்கிரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளையும் ‘ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் ஓரணியில் திரட்டினார் பெரியார்.

திராவிடர் கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்றக்கழகம் (1949 இல் பிரிந்தது) இரு அமைப்புகளுக்கும் இடையே கடும் எதிர்வினைகள் இருந்த காலம் அது. அந்நிலையிலும் பெரியார் தி.மு.க வின் ஆதரவைத் தேடிப் பெற்றார். அப்போது தி.மு.க தனது ஆதரவைத் தருவதற்கு ஒரு முன் நிபந்தனை விதிக்கிறது. பெரியார் உருவாக்கிய கூட்டணியில் இணைந்த காமன்வீல் கட்சி, உழைப்பாளர் கட்சி போன்றவை போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க வினரின் ஆதரவைப்பெற ஒரு நிபந்தனை விதித்தது.

அதாவது, “தேர்தலில் வெற்றி பெற்றால், திராவிட நாட்டுப் பிரிவினைக்குப் பாடுபடுவேன்” என்று எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுக்கும் கட்சிகளுக்கு மட்டுமே தி.மு.க ஆதரவளிக்கும் என நிபந்தனை விதித்தது. அதை ஏற்றுக்கொண்டு, கையொப்பமிட்டுக் கொடுத்துத்தான் காமன்வீல் கட்சியும், உழைப்பாளர் கட்சியும் தேர்தலைச் சந்தித்தன. பெரியார் தி.மு.க வின் அந்த நிபந்தனையைக் கடுமையாக எதிர்க்கிறார்.

“காங்கிரஸ் எதிர்ப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். எதிர்க் கட்சிகளுக்குள் கட்டுப்பாடு தேவை.சட்டசபைக்குச் செல்கின்றவர்கள் திராவிட நாட்டுப் பிரிவினையில் நம்பிக்கை வைத்து, அதற்காகப் பாடுபடுவேன் என்று கையெழுத்துப் போடவேண்டும் என்பதில் அர்த்தமே இல்லை. அவர்கள் வாக்குத் தவறமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? தவறினால் எப்படி? என்ன? நடவடிக்கை எடுக்க முடியும்?” - விடுதலை 05.11.1951

என்கிறார். தேர்தல் அரசியலில், இதுபோன்ற நிபந்தனைகள் கம்யூனிஸ்ட்டுகளின் வெற்றியைப் பாதிக்கும். காங்கிரஸ் வெற்றிக்கு வழிவகுத்துவிடும் என அஞ்சினார். எந்த விலை கொடுத்தாவது காங்கிரஸ் தோற்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார்.

தேர்தல் பிரச்சாரப் பயிற்சி வகுப்பு

இந்தத் தேர்தலில் தான் பெரியாரின் அரசியல் அணுகுமுறையை நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும். 1951 ஆம் ஆண்டு நவம்பர் 25, 26, 27 தேதிகளில் திருச்சியில், திராவிடர் கழகத் தோழர்களுக்கு, தேர்தல் பிரச்சாரப் பயிற்சி வகுப்பை நடத்தினார் பெரியார். எனக்குத் தெரிந்து, அதற்கு முன்போ, பிறகோ, இன்று வரையில் திராவிடர் கழகம்கூட ‘தேர்தல் பிரச்சாரப் பயிற்சி வகுப்பு’ என்று ஒரு நிகழ்வை நடத்தியதாகத் தெரியவில்லை.

தேர்தல் அரசியலை முற்று முழுதாக எதிர்ப்பவர். தனிநாட்டுக்காக இந்தியா முழுவதும் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறார். முதலமைச்சர் பதவியே மூன்று முறை தேடிவந்த போதும்  அதை துரத்தி அடிக்கிறார் அந்த நிலையிலும், சமுதாய இயக்கத்தின் எல்லை என்ன? தேர்தல் அரசியலின் எல்லை என்ன? இரண்டு தளங்களின் அவசியம் என்ன? என்பவற்றைப் புரிந்து இரண்டு தளங்களிலும் ஒரே அளவு ஆற்றலைக் கொடுத்து உழைத்தார். ஜனநாயகமா? பணநாயகமா? எனப் பரப்புரை செய்துகொண்டிருந்தவர், 1952 தேர்தலில் தனது தோழர்களுக்குத் தேர்தல் பிரச்சாரத்திற் கென்று தனியாகப் பயிற்சி வகுப்பையே நடத்தினார் என்பது மிக முக்கியமான செய்தி.

கம்யூனிஸ்ட்டுகளின் துரோகம் - அடுத்த கட்ட அரசியல்

குறிப்பாக, இந்தத் தேர்தலில் பல பார்ப்பன வேட்பாளர்களைக்கூட ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். பல தொகுதிகளில் தி.க வும், தி.மு.க வும் இணைந்து பொது வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தன. மொத்தமிருந்த 375 இடங்களில் காங்கிரசு 152 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் எதிர்ப்புக்கூட்டணி 223 இடங்களைப் பெற்றது. நேருவின் நண்பரான ஸ்ரீபிரகாசா என்ற கவர்னர் காங்கிரசை ஆட்சி அமைக்க அழைத்தார்.

2018 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற காங்கிரசுக் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பதற்குப் பதிலாக - குறைந்த இடங்களில் வென்ற பி.ஜே.பி யை கர்நாடகக் கவர்னர் அழைத்ததற்கு முன்னுதாரணம் இந்த 1952 தேர்தல் தான். கவர்னரின் சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து திராவிடர் கழகம் 12.03.1952 இல் கவர்னருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்தியது.

தேர்தல் அரசியல் தான் முக்கியம் என்று கூறி அரசியலுக்குச் சென்ற தி.மு.க அந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. பங்கேற்கவே இல்லை. ஆதரவு மட்டும் தெரிவித்தது. தேடி வந்த முதலமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த - தனி நாட்டுக்காகப் போராடிக்கொண்டிருந்த பெரியார், தேர்தல் அரசியலில் தனது திட்டம் வெற்றி பெறுவதற்காக கவர்னரை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்.

வெற்றி பெற்றால் திராவிடநாட்டுப் பிரிவினைக்குப் பாடுபடுவதாக ஒப்பந்தம் போட்டு, தி.மு.க வின் ஆதரவு பெற்று வெற்றி பெற்றிருந்த உழைப்பாளர் கட்சியின் எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சி, காமல்வீல் கட்சியின் மாணிக்கவேல் நாயகர் ஆகியோர் காங்கிரசுடன் இணைந்து துரோகமிழைத்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க வழி அமைத்தனர். காங்கிரஸ் சார்பில் மீண்டும் ஆந்திரப் பார்ப்பனரான பிரகாசம் முதலமைச்சராகும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்குக் கம்யூனிஸ்ட்டுகளே ஆதரவாக நின்றனர்.

பிரகாசம் ஆட்சியில் தான் கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். பல தலைவர்கள் தலைமறைவாக்கப்பட்டனர். அதை எதிர்த்துத்தான் அய்க்கிய முன்னணியே உருவானது. ஆனால், அதே பிரகாசம் முதலமைச்சராக வருவதற்குக் கம்யூனிஸ்ட்டுகள் முயன்றனர். அப்போது, பிரகாசம் மிகவும் கொடிய ஜாதி, மத வெறி பிடித்தவர். அவரை விட இராஜாஜியே மேல் என்ற ஒரு நிலையை எடுத்தார் பெரியார். இராஜாஜி மேலவை உறுப்பினராகி, முதல்வரானார்.

இராஜாஜி முதல்வரான உடன் பெரியாரின் ஆதரவைக் கோரிப்பெற்றார். திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் முக்கியக் கோரிக்கையாகப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம், விவசாயத் தொழிலாளர் நீதிமன்றங்கள் போன்ற பல நன்மைகளை அந்த ஆட்சியின் மூலம் நடத்திக்காட்டினார் பெரியார்.

சமுதாயப் புரட்சியும் அரசியல் மாற்றமும்

1952 இல் ஆட்சி அமைத்து, பெரியாரின் ஆதரவைப் பெற்று ஒரு சில காரியங்களைச் செய்தார் இராஜாஜி. ஆனால் அவரது பிறவிப்புத்தி மீண்டும் தலையெடுத்தது. 6000 பள்ளிகளை இழுத்து மூடினார். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

பெரியார் அதற்கு எதிர்வினையாக சமுதாயப் புரட்சியைத்தான் நடத்தினார். அவர் நடத்திய சமுதாயப் புரட்சியில் அரசியல் கட்சியான தி.மு.க வும் பெரும்பங்கு வகித்தது. சுமார் இரண்டு ஆண்டுகாலம் தொடர்ச்சியான மக்கள்திரள் போராட்டங்கள் - அக்ரஹார எரிப்புப்போராட்ட அறிவிப்புகள் போன்றவற்றால் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு, 1954 ஆம் ஆண்டு இராஜாஜி பதவியை விட்டு விலகினார். 1954 ஏப்ரல் 14 ஆம் நாள் காமராசர் முதலமைச்சரானார்.

இப்போராட்டம் அரசியல் தளத்தில் நடக்கவில்லை. ஒட்டு மொத்த சமுதாயத்தைத் திரட்டினால், அதன் விளைவாக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்திய போராட்டம். இது மட்டுமல்ல 1951 இல் நடந்த முதல் அரசியல் சட்டத் திருத்தமும் பெரியாரின் நேரடியான  சமுதாயப்புரட்சிக்குச் சான்று. அரசியலை எதிர்பார்க்காமல் நடத்திய புரட்சி.

அதே நேரத்தில் அரசியல் தளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வரலாறும் நடந்தது. 1957 ஆம் ஆண்டு நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்தின் காரணமாக 4000 தோழர்கள் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை அடைந்தனர். 18 தோழர்கள் வீரமரணம் அடைந்தனர். பெரியாரும் போராட்டத்திற்கு முன்பே சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் கொடுமையான நிலையிலும், அப்போது இருந்த காமராசர் ஆட்சியை ஆதரித்துக் கொண்டு தான் இருந்தார்.

தானே நேரடியாக முன்னின்று 1951 லும், 1954 லும் சமுதாயப் புரட்சியை நடத்தி அதன் நோக்கத்தில் வெற்றியும் பெற்றிருந்த பெரியார் - தனது இயக்கமும், தோழர்களும் மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்த காலத்திலும் தேர்தல் அரசியலால் முதல்வரான காமராசர் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

இந்தி எதிர்ப்புக் காலத்தில் காமராசர் தலைமைக்கு ஆதரவு

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முழுக்க முழுக்க அப்போது வாழ்ந்த இளைஞர் சமுதாயமே திரண்டு எழுந்து போராடிக்கொண்டிருந்தது. இன்றைய ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்ற போராட்டம் அது. அப்போராட்டத்திற்குப் பெரியார் எதிராக நின்றார். 1965 இல் முதல்வர் பக்தவச்சலம். ஆனால் காங்கிரசின் தலைவராக, ஆட்சியை இயக்குபவராகக் காமராசர் தான் இருந்தார். ஒட்டுமொத்த சமுதாயமும் இந்திக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தபோது, தேர்தல் அரசியல் வழியாகக் காமராசர் உருவாக்கிய ஆட்சியைக் காப்பாற்றுவதில் பெரியார் கவனம் செலுத்தினார். இப்போராட்டம் காமராசரை வீழ்த்துவதற்காகத் திட்டமிடப்பட்ட போராட்டம் என்றார்.

“இந்தி எதிர்ப்பு அரசியல் பிரச்சனையே: “இந்திய யூனியனில் தமிழ்நாடு இருக்கும்வரை இங்கிலீஷ் ஒரு சமயம் ஒழிந்தாலும் ஒழியுமே அல்லாமல் இந்தி ஒரு நாளும் ஒழியாது. அது எங்காவது ஒளிந்து கொண்டே இருக்கும். இன்றைக்கும் சொல்லுகிறேன் காமராஜர் கையை விட்டு, அவர் செல்வாக்கை விட்டுத் தமிழ்நாட்டு அரசியல் ஆதிக்கம் பார்ப்பனர் கைக்குப் போய்விடுமேயானால் இன்று இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்திய கண்ணீர்த் துளிகள் (தி.மு.க), சுதந்திராக்கள் (இராஜாஜி), பத்திரிகைகள் தினத்தந்தி உள்பட பார்ப்பனர்கள் இன்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் யாவரும் கதரைப் போலவே இந்தியை ஆதிக்கத்திற்குக் கொண்டு வந்துவிடுவார்கள் இது சத்தியம். (உறுதி, உறுதி)

ஆகவே இந்தி எதிர்ப்பு என்பது “வரியை ஒழிக்கிறோம்“, “ரூபாய்க்கு 3 படி அரிசி அளக்கின்றோம்” என்பது போன்ற ஓர் அரசியல் பிரச்சனையே ஒழிய மொழிப் பிரச்சனை அல்ல.

...நான் சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னாலேயே பொதுமக்களுக்கு என் கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். அதாவது, “காமராஜர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் , காமராஜர் ஆட்சிதான் அவசியம்” என்று பலமாகச் சொல்லுவேன். காமராஜர் ஆட்சி நிலைத்தால் இந்தித் திணிப்பை மாத்திரமல்ல, மற்ற அநேகக் காரியங்களை ஒழித்துக்கட்டலாம். இனியும் ஒரு 5 அல்லது 10 அண்டுகளில் இதன் இரகசியத்தை பார்க்கலாம்.- விடுதலை 03.03.1965

சமுதாயப் புரட்சியை நம்பும் பெரியார், சமுதாயம் இந்திக்கு எதிராகத் திரண்ட போது அரசியல் தலைமையைக் காப்பாற்றவே முயன்றார். அதன் அடிப்படைக் காரணம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு - பார்ப்பனரல்லாத சமுதாயத்தின் விடுதலை. அந்த விடுதலை முயற்சிக்கு இந்திஎதிர்ப்பு என்ற சமுதாயப் புரட்சி எதிராக அமைந்து விடக்கூடாது. சமுதாய விடுதலைக்கான காமராசரின் அரசியல் முயற்சி தோற்றுவிடக் கூடாது என்ற அக்கறை ஆகும்.

காமராசருக்கு மாற்றாக தி.மு.க. ஆதரவு

இந்தியா குடிஅரசு நாடாகியபிறகு நடந்த 1952 தேர்தலில் தொடங்கி, பெரியாரின் இறுதிக்காலம் வரையிலும் தேர்தல் அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லா விட்டாலும் - அது நிரந்தரத் தீர்வு அல்ல என்று நன்கு அறிந்திருந்தாலும், அரசியல் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருந்தார். தேர்தல் பிரச்சாரங்களில் நேரடியாகவே ஈடுபட்டார்.

1970 ஆம் ஆண்டு தனது 92 வது பிறந்தநாள் அறிக்கையில்கூடப் பெரியார், தேர்தல் அரசியலுக்கு ஆதரவாக விரிவாகப் பேசியுள்ளார். குறிப்பாக, காமராசரை நம்பிப் பயனில்லை. அவரது பலம் குறைந்து விட்டது. தி.மு.க பத்தாண்டுகள் நிலையான ஆட்சி அமைக்க உதவுங்கள் என்கிறார்.

“இந்த நிலையில் எனது 92 வது ஆண்டு செய்தியாக மக்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்கு பாதுகாத்து வரவேண்டுமென்பதே ஆகும்.

தேசம் மிருகப்பிராயத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. யாரும், எப்படிப் பட்டவரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோரிடம் காண முடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடு தான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத் தக்கதாய் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சி தான் என்று உறுதியாய்க் கூறுகின்றேன். எனவே இதற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சிவந்து மக்களை இன்றைய நிலைக்கு கேடில்லாமல் ஆளமுடியும் ?

காமராஜர் மாறி வருகிறார்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்த ஆட்சிக்கு மாற்றம் ஏற்படுமானால் அடுத்துவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான். அதாவது வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் ஆட்சிதான். இது உறுதி; உறுதியேயாகும். ஏனிப்படிச் சொல்லுகிறேன் என்றால், இந்தியா முழுவதற்குமே இன்று வர்ணாசிரமப் பாதுகாப்பு ஆட்சி, கட்சி, மக்கள் என்பவர்கள் அல்லாமல், வேறு கட்சியும் இல்லை, மக்களும் இல்லை, கொள்கையும் இல்லை. காமராஜர் பலமற்றுப் போய்விட்டார். இவரது எண்ணங்களும் மாற்றமடைந்து வருகிறது;  பார்ப்பனனைத் தஞ்சமடைய வேண்டிய நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கிறார். அவரது கட்சியும் (காங்கிரசும்) உருக்குலைந்துவிட்டது. அவருக்கு உதவியாளரும் யாரும் தகுதியானவரில்லை.

இவை மாத்திரமா? நமது பொது எதிரியான பார்ப்பனத் தலைவர் நம் சமுதாயத்தை அழித்து, ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இராஜாஜி பலம் பெற்று வருகிறார். இதற்குக் காரணம் காங்கிரசு பிளவு பட்டதேயாகும்.

ஆட்சி மாறினால் பலாத்கார தாண்டவம்

இந்த நிலையில் இன்றைய நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுமானால் காமராஜர் ஆட்சி ஒரு நாளும் அந்த இடத்திற்கு வராது; மற்றெது வருமென்றால் பார்ப்பனராட்சி இராஜாஜி ஆதிக்க ஆட்சி தான் வரும். அதுவோ வேறு எதுவோ வந்தாலும் பழிவாங்கும் ஆட்சியாய்த் தானிருக்கும் அல்லது அசல் காலித்தன -பலாத்காரத்தாண்டவ ஆட்சியாகத் தானிருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

ஆகவே எனது 92 ஆம் ஆண்டு செய்தி என்பதாக எனது 91 ஆண்டு அனுபவ அறிவைக் கொண்டு சொல்லுகிறேன். மக்கள் எல்லோரும் பகுத்தறிவுவாதி களாக மாறுங்கள்.

எப்பாடுபட்டாவது இன்றைய தி.மு.க. ஆட்சியை இனியும் ஒரு பத்தாண்டுக்கு நல்ல பலம் பொருந்திய ஆட்சியாக இருக்கப் பாடுபடுங்கள் என்பது தான். -17.09.1970 பெரியார் பிறந்த நாள் அறிக்கை. 

பெரியார் விரும்பியபடி 1971 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மிக அதிகமான இடங்களை வென்று ஆட்சி அமைத்தது. தி.மு.க ஆட்சியால், பெரியார் இயக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் சில தொல்லைகள் வந்த போதிலும் தனது இறுதிக்காலம் வரை தி.மு.க ஆட்சியைத் தொடர்ந்து ஆதரித்தே வந்தார். தி.மு.க வை உடைக்க எம்.ஜி.ஆர் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக, எம்.ஜி.ஆரை நேரிலும், விடுதலை வாயிலாகவும் கடுமையாக எதிர்த்தார். 

சுதந்திரத் தமிழ்நாடே இலட்சியம்

தனது இறுதிப் பிறந்தநாள் அறிக்கையில் (17.09.1973) அதேசமயம், தனது இயக்க இலட்சியமான தனித்தமிழ்நாட்டுக்குத் தி.மு.க ஆதரவளிக் காது. அவர்களுக்கு மாகாண சுயாட்சிதான் முக்கியம். நாம் தனிநாட்டுக்காகப் போராடுவோம் என்று அறிக்கை வெளியிட்டார்.

“நாம் உடனடியாக விடுதலை அதாவது இந்தியக் கூட்டாச்சியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சிக்கு இன்றைய நம் தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருதமுடியாது. ஏனெனில், தி.மு.க. ஆட்சி விரும்புவதெல்லாம் இந்தியக் கூட்டாச்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சி தான் அது விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில் தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. சுதந்திரத் தமிழ்நாடே எனது இலட்சியம்”

என அறிவிக்கிறார். 1938 லிருந்து 1973 வரை இடை விடாமல் தொடர்ச்சியாகத் தனித்தமிழ்நாட்டுக்காகப் போராடி வந்தார். 1925 இல் இருந்தே சமுதாய விடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்தார். அதே காலக் கட்டங்களில் அரசியல் துறையிலும், தேர்தல் அரசியலிலும் களப்பணி ஆற்றிவந்தார்.

சமுதாய இயக்கத்தையும் - அரசியல் செயல் பாடுகளையும் ஒன்றுக்கொன்று எதிரானவைகளாக என்றுமே அவர் அணுகியதில்லை. அரசியல் இயக்கங்களையும் செயல்பாடுகளை நம்ப வேண்டாம். ஓட்டுப்போட வேண்டாம், புரட்சிசெய் என்று அவர் பேசியதில்லை. சில நேரங்களில் சமுதாயக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் அரசியலை விமர்சிக்க நேர்ந்தாலும், தேர்தல் அரசியல் செயல்பாடுகளை அவர் நிறுத்தியதே இல்லை. இரண்டு தளங்களின் எல்லைகளை நன்கு அறிந்து, அவற்றின் தன்மைக் கேற்ற வேலைத் திட்டங்களை வகுத்து, அவற்றைச் செயல்படுத்தி வெற்றியும் கண்டார். இரண்டு தளங்களிலும் விருப்பு, வெறுப்புகள் இன்றித் தனது சமுதாய இலட்சியங்களை அடிப்படையாக வைத்து மட்டுமே ஆதரவு, எதிர்ப்புகளை இயக்கிவந்தார்.

தனிநாடுகளும் சர்வதேசச் சூழலும்

தனிநாட்டுக்கான புரட்சி தான் முக்கியம் - அரசியல் கட்சிகளை நம்ப வேண்டாம் என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழவிடுதலை பேசுபவர்கள் ஆகும். அதைத் தவிர மற்ற சில புதியவர்களும், இளைஞர்களும் இவ்வாறு பேசி வருகிறார்கள். 2009 க்கு முன்பு ஈழவிடுதலைக்காக உண்மையாகவே களமாடியவர்களும், தமிழீழம் சென்றே களமாடிய தாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறைப்பட்டவர்களும் இப்படிப் பேசுவதில்லை. ஏதோ ஒரு அரசியல் அமைப்பை அல்லது ஏதோ ஒரு தேர்தல் அரசியல் முறையை ஆதரித்து, அதன் தன்மைக்கேற்ப வேலை வாங்கித்தான் வருகிறார்கள்.

இந்தப் புதிய போராளிகள் ஒரு உண்மையைப் புரிந்தும் மறைக்கிறார்கள். தமிழீழத்தில் 2009-க்கு முன் இருந்த சமுதாயப் புரட்சியைப் போன்ற ஒரு சரியான மக்கள் புரட்சியை நாம் கண்டிருக்க முடியாது. மண் விடுதலை, மக்கள் விடுதலை என்ற இரு தளத்திலும் மிகச்சரியான நகர்வுகளைக் கொண்டிருந்த அந்தப் புரட்சி தோல்வி அடைந்தது ஏன்?

ஒரு நாட்டின் விடுதலை என்பது அந்த நாட்டில் புரட்சி உண்டாவதால் மட்டும் கிடைத்து விடாது. அதற்குரிய சர்வதேச அரசியல் - பொருளாதார உறவுகளில் விடுதலைக்கு ஆதரவான போக்கு இருக்க வேண்டும். தமிழீழ விடுதலையில், சர்வதேச வளர்ந்த நாடுகள் எதிரான நிலையில் இருந்தன, இருக்கின்றன. அது தான் அடிப்படைக் காரணம்.

இந்த அடிப்படையில் தமிழ்நாட்டில், தனித் தமிழ்நாட்டுக்கோ, திராவிட நாட்டுக்கோ, குறைந்த பட்சம் இந்தியாவுக்குக் கட்டுப்பட்ட ‘தென்மாநிலங் களின் கூட்டமைப்பு’ என்ற நிலைக்காவது ஏதாவது முயற்சிகள் நடக்கிறதா? அப்படியே நடந்தாலும் இன்றுள்ள சர்வதேச அரசியல் - பொருளாதாரச் சூழல் அதை ஏற்கும் நிலையில் இருக்கிறதா? நிச்சயமாக இரண்டுமே இல்லை. இந்த நிலையில் எதை நம்பி, யாரை நம்பி அரசியல் தளச் செயல் பாடுகளைப் புறக்கணிக்க முடியும்?

இல்லை, இல்லை. சர்வ தேசச் சூழலும், தமிழ்நாட்டுச் சூழலும் அதற்கு ஏற்பச் சரியாகவே உள்ளது. தனித்தமிழ்நாடு என்பதை ஐ.நா அவை அங்கீகரிப்பது ஒன்று தான் பாக்கி. மற்ற புரட்சிகள் எல்லாம் முடிந்து விட்டது. எங்கள் அண்ணன் ஐ.நா வில் பேசி நாட்டை வாங்கிக் கொடுத்து விடுவார் என்றரீதியில் பேசுபவர்களையும், நம்புபவர்களையும் வாழ்த்துகிறோம். நீங்கள் அந்தப் பணியைத் தொடர்ச்சியாகப் பாருங்கள். முடிந்த அளவு உங்களுக்கு ஒத்துழைப்பையும் வழங்குகிறோம். ஆனால், அதுவரை அரசியல்தளச் செயல்பாடுகளை நிறுத்தச் சொல்லாதீர்கள். எங்கள் தலைவர் தோழர் பெரியார் அப்படிச்செயல்படவில்லை.

தேர்தல் அரசியலில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதிக்கம்

பா.ஜ.க எனும் அரசியல் கட்சி, அந்தக் குறைந்த அதிகாரங்கள் உள்ள அரசியலைக் கைப்பற்றி, அதன் வழியாக, சமுதாயத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை மீண்டும் நீண்ட நெடிய காலத்திற்கு நிலைநாட்டத் துடித்துக்கொண்டிருக்கிறது.

2018 கர்நாடகச் சட்டசபைத் தேர்தலில், வழக்க மான கோடைகாலப் பயிற்சி முகாம்களைக் கூட தள்ளிவைத்து விட்டு, மூன்று மாதங்கள் தேர்தல் பணிகளில் மட்டுமே ஆர்எஸ்எஸ் கவனம் செலுத் தியது. இதனால்தான் பலமாக இருந்த காங்கிரஸைப் பின்னுக்குத்தள்ளி, பாஜகவால் தனிப் பெரும் கட்சி யாக உருவெடுக்க முடிந்தது.  - http://tamil.thehindu.com/opinion/columns/article23922270.ece

குஜராத் தேர்தலில், காங்கிரஸ் வகுத்த வெற்றி வியூகத்தை குலைப்பதற்காக, அம்மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். கடுமையான பிரச்சார யுக்திகளை உருவாக்கி அதற்கேற்ப பணியாற்றியது. பாஜகவின் வெற்றியை தக்க வைக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 12 அணிகளும் தீவிரமாகச் செயல்பட்டன.

https://tamil.indianexpress.com/india/gujarat-elections-rss-on-active-mode-to-unite-hindus-against-caste-politics/

2019 பாராளுமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர் தேர்வு முதற்கொண்டு. தேர்தல் காலத்தில் நடக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் வரை அனைத்தையும் இப்போதே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்தக் காலத்தில், அரசியலால் ஒன்றுமே நடக்காது. அதில் அதிகாரமே இல்லை என்று எங்களைத் திசைதிருப்ப முயலா தீர்கள். இந்து மத, ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த, நீங்கள் புறக்கணிக்கக் கோரும் அதே தேர்தல் அரசியல் வழியாகத்தான் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு சமுதாய இயக்கமாக - தேர்தலை நம்பாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அதைச் செய்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலே!

இறுதியாக, எல்லோரும் அரசியலுக்குச் செல்லுங்கள் என்றோ, இப்போதுள்ள தேர்தல் முறை வழியாகப் பெறும் அதிகாரம் தான் பலம் வாய்ந்தது என்றோ உறுதிசெய்ய இதை எழுத வில்லை. சமுதாய மாற்றம்தான் நிரந்தரத் தீர்வுக்கு வழி. அதற்கு எந்தெந்த முறைகளை - எந்ததெந்த அமைப்புகளை - என்னென்ன வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்த முடியுமோ, அவை அனைத் தையும் பயன்படுத்தி, இலக்கை நோக்கி சமுதாயத்தை நகர்த்துவதே ஒரு சரியான ‘சமுதாய இயக்கத்’தின் அடையாளம்.

தோழர் பெரியார் நமது விடுதலைக்காக, தேர்தல் அரசியல், பொருளாதாரம், அரசு நிர்வாகம், நீதி, காவல், கல்வி, மருத்துவம், ஊடகம், கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் தனித்தனியாகக் கவனம் செலுத்தித் தீவிரமாகப் பணியாற்றியுள்ளார். இதை எதையும் செய்யாமல், “பொதுக்கூட்டம் நடத்தி, போராட்டம் நடத்தி மக்களைத் திரட்டிக்கொண்டிருந்தால் மட்டும் போதும் - பிரச்சாரம் செய்தால் மட்டும் போதும் - மக்களே எல்லாச் சிக்கல்களுக்கு தீர்வு கண்டுவிடுவார்கள்” என்று தவறாக வழிநடத்தக் கூடாது. பெரியார் அப்படி இயங்கவில்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மக்களும் இந்து மதப்பண்பாட்டை மீறாமல்தான் வாழ்கின்றனர். இஸ்லாமியர், கிறிஸ்தவர், பல பெளத்தர்களும், பகுத்தறிவாளர்களும்கூட, தங்களது வாழ்க்கைமுறையில், பண்பாடு, பழக்க வழக்கங்களில் இந்துமதத்தைப் பின்பற்றியே வாழ்கின்றனர். சமுதாயத்தில் மதத்திற்கு இவ்வளவு பலம் இருந்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தனக்கு அரசியல் பலத்தை உருவாக்குவதற்காகத் தேர்தல் அரசியலிலும் கடுமையாக உழைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல்வெறிச்செயல் பாடு களை நேரடியாகக் கண்டபிறகும் - ‘தேர்தல் அரசியலை’ நம்பவேண்டாம் எனப் பிரச்சாரம் செய்வது ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலாகவே இருக்கும்.

சான்றுகள்: கவிஞர் கருணாநந்தம் எழுதிய தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’, எஸ்.வி.இராஜதுரை - வ.கீதா எழுதிய பெரியார்: சுயமரியாதை சமதர்மம்நூல்கள், குடி அரசு, புரட்சி, விடுதலை ஏடுகள்.

Pin It