தன்பால் இணையர் தீபா - வெண்ணிலா

காட்டாறு ஏடு, ஜாதி, மதம், சடங்குகள் கடந்த காதலர்கள் - கணவன் சம்மதத்தோடு அல்லது மனைவி சம்மதத்தோடு நடந்த மறுமணங்கள் - தனித்து வாழும் வீரமுள்ள பெண்கள் - குழந்தை பிறப்பை மறுத்த பெண்கள் - தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் தாங்களே முடிவெடுத்து வாழும் பெண்கள் என ஏராளமான முன்னோடிகளை அறிமுகம் செய்திருக்கிறது. முதன் முறையாக, இரண்டு பெண்களுக்கிடையே உள்ள காதலை அறிமுகம் செய்கிறோம்.

ஜாதியையோ, மதத்தையோ, சடங்குகளையோ கடந்து இணைந்து வாழ்பவர்களுக்குக்கூட சமுதாயத்தில் ஏதோ ஒரு பிரிவினர் மரியாதையையும், பாதுகாப்பையும் வழங்குகின்றனர். அவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கிறது. ஆனால் தன்பால் இணையர்களுக்கு சமுதாயம் மிகப்பெரிய அவமானத்தையும், அச்சத்தையும் கொடுக்கிறது. அதற்கு இணையாக, முற்போக்காளர்களின் புறக்கணிப்பும் அத்தகைய இணையர்களுக்கு எதிராக இருக்கிறது. முற்போக்கு அமைப்புகளில் உள்ளவர்கள் முதலில், தன்பால் இணையர்களைப் பாராட்டி விழா எடுப்பதையும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதையும் கூடுதல் கடமையாகக் கொள்ளவேண்டும். ஊடகங்களில் பணியாற்றும் நமது தோழர்கள், காதலர்நாட்களில், தன்பால் இணையர்களின் காதலுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்க முயற்சி எடுக்கவேண்டும்.

தன்பால் தேர்வு, தன்பால் இணையரைக் குறிப்பதற்காகக் கூறப்படும் ‘ஓரினச்சேர்க்கை’ என்ற சொல்கூட இவர்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. ‘உடல் சேர்க்கை’க்கு மட்டுமேதான் இவர்கள் இணைந்துள்ளார்கள் என்று புரிந்துகொள்ள வைப்பதே இந்தச் சொல்லின் பயன்பாடு. மாற்றுப் பாலினத்தைத் தேர்வு செய்பவர்களுக்கு எந்த ஊடகமும், சமுதாயமும் ‘மாற்றினச் சேர்க்கையாளர்’ என்ற அடையாளத்தைக் கூறாத நிலையில் எதற்காக இவர்களுக்கு மட்டும் ‘ஓரினச்சேர்க்கையாளர்’ என்ற பட்டம்? இனியாவது, ஓரினச்சேர்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், அந்த நிலையைக் கொச்சைப்படுத்தாத ஏதோ ஒரு சொல்லைப் பயன்படுத்துங்கள். மிகவும் துணிச்சலுடன் தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ள தோழர்களுக்கு எதிர்காலத் தலைமுறையின் சார்பில் மனங்கனிந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவிக்கிறோம்.

ladies 480

தோழர் வெண்ணிலா

நான் திருச்சி மாவட்டம். பி.சி.ஏ. படித்துள்ளேன். அம்மா, அப்பா, அண்ணன், இரண்டு தம்பிகள் என நான்குபேர் என்னுடன் பிறந்தவர்கள். அப்பா சரியாக வேலைக்குப் போக மாட்டார், குடிகாரர். அம்மாதான் வேலைக்குப் போய் கஷ்டப்பட்டு அனைவரையும் படிக்க வைத்தார். நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போதே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது.

தன்பால் இணைவில் ஆண், பெண் மனநிலை இருக்கும்? அதில் நீங்கள் யார்?

எனக்கு ஆண்மனநிலை.

தோழர் தீபா:     நானும் திருச்சி மாவட்டம். அம்மா, அப்பா மற்றும் அண்ணன், அக்காள் நான் என மூன்றுபேர். பி.எஸ்.சி. படித்துக்கொண்டிருந்தேன். அண்ணன் ஐ.டி.ஐ. பாதியிலே நின்றுவிட்டான். அக்கா நர்ஸிங் முடித்து இருக்கிறாள். அக்காவிற்குத் திருமணம் ஆகிவிட்டது.

உங்கள் இருவரிடையே நட்பு எப்போது எப்படி ஏற்பட்டது?

தீபா: ஒரே காலேஜ்ல நான் முதலாம் ஆண்டும், வெண்ணிலா மூன்றாம் ஆண்டும் படித்துக் கொண்டிருந்தோம். வெண்ணிலாவை நான்தான் முதலில் பார்த்தேன். வெண்ணிலா அவுங்க தோழிகளிடமும் சரி, தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லோரிடமும் ஜாலியாகப் பேசுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே வெண்ணிலா விடம் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதிலிருந்து எங்கள் நட்பு ஆரம்பித்தது.

வெண்ணிலா, உங்களின் முதல் திருமண வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்?

வெண்ணிலா: அம்மாவோட சித்தப்பா பையனுடன் என் திருமணம் நடந்தது. ஏழு வருடமாக அம்மாவுடன் தாத்தாவும், அவுங்க தம்பியும் பேசாமல் இருந்தாங்க, இந்தத் திருமணத்தின் மூலமாகத்தான் பேச ஆரம்பித்தனர். திருமணம் ஒரே மாதத்தில் ஏற்பாடாகி விட்டது. நானும் தீபாவும் பழக ஆரம்பித்ததை எப்படி வீட்டில் சொல்வ தென்று தெரியவில்லை. வீட்டில் திருமண ஏற்பாட்டிற்கு எதிராக எதுவும் சொல்ல முடிய வில்லை. இப்போது இருக்கும் தெளிவு அப்போது என்னிடம் இல்லை. நானும் விளையாட்டுத் தனமாகத் திருமணத்திற்குச் ‘சரி’ என்று சொல்லி விட்டேன்.

ஆனால், அந்தத் திருமண வாழ்க்கையில் என்னால் நீடிக்க முடியவில்லை. காரணம் என்னதான் அவர் சொந்த மாமாவாக இருந்தாலும் இன்னொருவருடன் பழகிய பிறகு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைத்து விஷயங்களிலும் பிடிக்க வில்லை. நான் எனது கணவரிடம் தேர்வு முடியும் வரை நமக்குள் ஒரு இடைவெளி இருக்கட்டும் என்று கூறினேன். அவரும் சரி என்றார். ஆனால் அவர் அதைப்பற்றி வெளிப்படையாக அனைவரிடமும் பேச ஆரம்பித்தார். முதலில் பொறுமையாகப் பேசிய அவர், போகப்போக கடுமையாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். ஒவ்வொரு இரவும் ஒரே அறையில் இருந்துகொண்டு மேலே கை வைக்காத அளவிற்கு பார்த்துக்கொள்வது ரொம்ப கஷ்டம். மூன்று மாதம் தொட விடவில்லை.

ஒருநாள், எனது அண்ணனுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி என் ஊருக்கு தாத்தாவும், அவரும் சென்றனர். இந்தச் சமயத்தில் நானும் இங்கே இருப்பவர்களிடம் ஊருக்குப் போவதாகச் சொல்லி விட்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன்.

தீபாவுடன் கொண்ட காதல் வீட்டிற்குத் தெரிந்தபின் என்ன நடந்தது?

வெண்ணிலா: வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன் தீபாவிடம் மட்டும் சொல்லிவிட்டு, திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாப்பிற்குச் சென்று விட்டேன். நேரமாகியதால் வீட்டிலிருந்து போன் வந்து கொண்டே இருந்தது. வீட்டில் பயப்படுவார்கள் என்று நினைத்து, வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். ஆனால், மணி 6 ஆகிவிட்டது. அதன் பிறகு எங்கே போவதென்று தெரியவில்லை. பயமாக இருந்தது. தீபாவிடம் போன் பண்ணிக்கேட்டேன். அவள் என் பெரியம்மா வீட்டிற்குப் போ என்று சொன்னாள். அங்கே போகவும் பயமாக இருந்தது.

உடனே ஹோட்டல்ல ரூம் எடுக்கலாம் என்று அருகில் உள்ள ஹோட்டலில் கேட்டபோது நான் தனியாக இருந்ததால் முதலில் ரூம் தரமுடியாது என்று கூறிவிட்டார்கள். பின்பு என் கழுத்தில் தாலி இருந்ததால் அவர்களே கூப்பிட்டு என் ஐ.டி கார்டை கேட்டு அதைப் பார்த்தபின் தனி அறை கொடுத்தனர். இரவு முழுக்க என் வீட்டிலிருந்து போன் வந்து கொண்டே இருந்தது. அதனால் சிம்கார்டை மாற்றி தீபா என்னிடம் கொடுத்த சிம்கார்டை போட்டு அவளிடம் இரவு முழுவதும் பேசினேன். இரவு எங்கள் வீட்டில் போலிஸ் ஸ்டேஷன்ல என்னைக் காணவில்லை என்று புகார் கொடுத்தனர்.

தீபாவும் கிளம்பி வந்துவிட்டாள். இரண்டு பேரும் சேர்ந்தே மதுரைக்குச் சென்றோம். அங்கே ஒரு ஆட்டோக்கார அண்ணன் மூலமாக அவர்களின் பெரியம்மா வீட்டில் வாடகைக்கு வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒரு வாரம் கழித்து வேலைக்குச் செல்வதற்கு ரெஸ்யும் ரெடி பண்ணீட்டோம். அந்த நேரத்தில்தான் எங்களைத் தேடி காவல்துறையினர் வந்துவிட்டார்கள். சிம்கார்டை வைத்து கண்டுபிடித்திருக்க வேண்டும்.

ஸ்டேஷனில் இருவரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பினார்கள். ஸ்டேஷன்ல எஸ்.ஐ.மேடம், நான் எழுதிய டைரியை படித்துப் பார்த்தார். பின் “உன் கணவர் ஏற்றுக்கொள்ளத் தயார் அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு சேர்ந்து வாழு” என்று சொல்லி என் கன்னத்தில் அறைந்தார்கள். அவர்கள் சொன்ன பிறகுதான் ‘லெஸ்பியன்’ என்ற வார்த்தையே எனக்குத் தெரியும். ஸ்டேஷன்ல சொன்ன பிறகுதான் நெட்ல தேடினேன். எங்களைப் போல் நிறையப் பேர் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். எங்கள் வீட்டில் யாருக்கும் இதைப் பற்றித் தெரியாது.

அதன் பிறகு வீட்டில் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டனர். என் செல்போனையும் பிடுங்கிக் கொண்டனர். எனக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தது. வீட்டிற்குத் திரும்பி வரக்கூடாது என்று நினைத்தேன். ஆனால், கூட்டி வந்துவிட்டார்கள். சொந்த ஊரிலும், திருமணமான ஊரிலும் தெரிந்து அசிங்கமாகிவிட்டது. பிறகு தீபாவுடன் பேசமுடியவில்லை. அவளது வீட்டிலும் போனை வாங்கி வைத்துக்கொண்டனர்.

சில நாட்களுக்குப் பிறகு, தீபாவுடைய தோழி ஒருவர் என்னுடைய கணவர் போனுக்கு போன் பண்ணினார். அவள் மூலமாகத் தீபாவிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. தீபா வீட்டில் தன் பெண்ணிற்குக் கெட்ட பெயர் வராத அளவிற்கு கடத்திச் செல்லப்பட்டதாக ஊரில் சொல்லி வைத்துவிட்டனர். திரும்பவும் அவளைக் கல்லூரிக்கு அனுப்பினார்கள். தோழிகள் மூலமாக நான் திரும்பவும் தீபாவிடம் பேச ஆரம்பித்தேன்.

அந்த நேரத்தில், எங்கள் ஊரில் என் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று வரச் சொன்னார்கள். நான் பாட்டியைப் பார்க்க ஊருக்குக் கிளம்பினேன். ஊருக்குச் சென்ற பின் சித்தி வீட்டுக்கு என்னை கூப்பிட்டாங்க, நான் வரமுடியாது என்று கூறினேன். ஏனென்றால் நான் வீட்டை விட்டுப்போனது எல்லோருக்கும் தெரியும். எனவே, உறவினர் வீட்டிற்கு வரமாட்டேன் என்றேன். அவர் மட்டும் சென்றுவிட்டு அப்படியே அவரது ஊருக்குச் சென்றுவிட்டார். அது நல்லது என்று நினைத்துக் கொண்டு நான் அம்மா வீட்டிலேயே இருந்துகொண்டேன். திரும்பவும் அவரது வீட்டிலிருந்து என்னைக் கூப்பிட்டாங்க, நான் போகவில்லை.

எங்கள் வீட்டிலும் தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். என்மேல் பாசமா இருந்த அண்ணன் கூட வீட்டை விட்டுப் போகச் சொல்லி அடித்தான். என் அண்ணன் என் அம்மாவிடம் இவள் திருந்த மாட்டாள், சாப்பாட்டில் விஷம் வைத்துக்கூட சாகடித்துவிடு என்று சொல்லிவிட்டு சென்னை சென்றுவிட்டான். கணவர் ஊரிலிருந்து ஒரு பத்துப்பேர் வந்தாங்க. எங்களின் சொந்தம்தான். என்னைப் பேசி அழைத்துச் செல்ல வந்திருந்தார்கள். என் அம்மா எதுவும் பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்து என் காலிலெல்லாம் விழுந்து அழுதாங்க. அவங்க கூட போய்விடு என்று கெஞ்சினார்கள். போனால்... ஒவ்வொரு நாள் நைட்டும் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே பயமாக இருந்தது. அதனால் நான் வரமுடியாது எனச் சொல்லி விட்டேன்.

வீட்டிலேயே இருக்கவும் பிடிக்கவில்லை. பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தது. அதன் பிறகு தீபாவின் பெரியப்பா உதவியோடு வீட்டை விட்டு வெளியில் வந்து, பெரியார் தொண்டர் பிச்சை அய்யா வீட்டில் தங்கினேன். அப்பொழுது அய்யா அங்கு இல்லை. வெளியூர் சென்றிருந்தார். அந்தச் சமயத்தில்தான் தீபாவோட பெரியப்பா என்னை மிஸ்யூஸ் செய்ய நினைத்திருக்கிறார் எனத் தெரிந்தது. பிறகு அவரிடம் மிகவும் கவனமாக இருந்தேன்.

பெரியாரியல்வாதியான பிச்சை அய்யா உங்கள் நிலையை எவ்வாறு கையாண்டார்?

வெளியூரிலிருந்து திரும்பி வந்த பெரியார் தொண்டர் தமிழ்ச்சுடர் (எ) பிச்சை அய்யா அவர்கள், “உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார், பொறுமையாக. நான் ஒரு பெண் பொதுவாக ஆணைக் காதலிப்பாள், ஆனால் நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் என்று மட்டும்தான் கூறினேன். அதைப் புரிந்துகொண்ட அய்யா, “அவ்வளவு தானே, நீங்கள் உங்கள் விருப்பப்படி வாழ்வதால் யாருக்கு என்ன நஷ்டம். காதல் என்பது பொதுவானது, அது ஆண்மேல் வந்தால் என்ன, பெண்மேல் வந்தால் என்ன! வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும் திருப்தியும் தான். அது யாருடன் வாழ்ந்தால் கிடைக்கும் என்று மனம் சொல்கிறதோ, அவருடன் வாழ்வதில் எந்த தவறுமில்லை என்றும், உனது வாழ்க்கை முறையிலும் எந்த தவறில்லை” என்றும் கூறினார்.

அவர் பேசிய அனைத்து வார்த்தைகளும் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. பிறகு அய்யா வீட்டின் மாடியிலே என்னைத் தங்க வைத்து, அவரது மகளைவிட மேலாக என்னைப் பார்த்துக் கொண்டார். நிறைய புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வார். அதில் பலமுறை படிக்கச் சொல்வது “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகம். அய்யா வீட்டிலிருந்தே வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னைப் பல பொது கூட்டங் களுக்கு அழைத்துச் செல்வார். கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பார். நான் உயிருடன் இருப்பதற்குக் காரணமே அய்யா தான். அவர் இல்லையென்றால் நான் உயிருடன் இருந்திருப்பேனா என்பதே கேள்விக்குறிதான்.

மீண்டும் தீபாவைத் தொடர்பு கொண்டீர்களா?

என் நினைவிலேயே தீபா இருந்ததால் அவளது படிப்பு பாதியிலேயே நின்றது. என்னுடன் வந்ததால் நிறுத்திவிட்டார்கள். நான் அய்யாவிடம் சொல்லி அவர்கள் வீட்டில் பேசி படிக்க ஏற்பாடு செய்யச் சொன்னேன். தீபா நீயும் வா என்றாள். உன்னைப் பார்த்து நாளாகிவிட்டது என்றாள். எனக்குப் போகப் பயமாக இருந்தது. ஏற்கனவே நிறையப் பிரச்சனை. இருந்தாலும் நானும் சென்றுவிட்டேன். அங்கே தீபாவின் அத்தை சத்தம் போட்டு எல்லோரையும் வரச் சொல்லிவிட்டார்கள். அய்யாவால் சமாளிக்க முடியவில்லை. அங்கிருந்த வர்கள் நாங்கள் என்ன நோக்கத்திற்காக வந்துள்ளோம் எனத் தெரிந்து கொள்ளாமல் எங்கள் இருவரையும் திட்டினார்கள்.

தீபா:

எங்கள் ஊர்த் தலைவர் வந்து எங்கள் இருவரையும் அடித்துத் திட்டினார்கள். நான் ரூமில் போய் கதவைப் பூட்டிக்கொண்டு அவர்களை அடித்தால் எதாவது செய்து கொள்வேன் என்று மிரட்டினேன். ஊர்த் தலைவரம்மா மட்டும் என்னிடம் பேசினார்கள். நான் சொன்னவுடன் என்னை அடித்து இது அசிங்கமா இல்லையா எனத் திட்டினார்கள். என்னை எதாவது சொல்லு என்றார்கள். நான் அமைதியாக இருந்தேன். நான் எதுவும் பேசாததால் எங்களை ஸ்டேஷன் வரச்சொல்லி பேசி எழுதிக் கேட்டாங்க. நான் பார்க்க மாட்டேன், பேச மாட்டேன் என்று எழுதித் தரச் சொன்னார்கள்.

வெண்ணிலா:

நாங்க ஸ்டேஷன்ல இருக்கும்போது எங்க அம்மா, அப்பாவுக்குப் போன் பண்ணிச் சொல்லி அவுங்களும் வந்துட்டாங்க. என்னை வீட்டுக்குக் கூப்பிட்டாங்க. நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அய்யா நீ வேலைக்குப் போ, மைண்ட ரிலாக்ஸ் பண்ணு. இனி தீபாவை வீட்டில் பார்க்க முயற்சி செய்யாதே என்றார். புத்தகங்கள் படிக்கச் சொன்னார். கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள் என்று சொன்னார். நாங்கள் இருவரும் போனில் வீட்டிற்குத் தெரியாமல் பேசிக் கொண்டோம். அவர்கள் வீட்டில் தெரியும்போது தீபாவை அடித்தார்கள். போனைப் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். நான் மீண்டும் போன் வாங்கிக் கொடுத்தேன். தீபாவின் தோழி மூலமாக அடிக்கடி பேச முடியாவிட்டாலும், எப்போதாவது பேசிக் கொள்வோம்.

உங்கள் கணவர் வீட்டில் ஏதாவது பிரச்சனை செய்தார்களா?

சிறிது நாள் சென்றது. ஒரு நாள் திடீரென என் கணவர் வீட்டில் மீண்டும் பேசுவதற்காக என்னை வரச் சொன்னார்கள். எங்க அம்மாவும் வரச் சொன்னாங்க. என் கணவர் நீ வந்து பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போ. எனக்கும் உன்னுடன் வாழ விருப்பமில்லை. நீயே என்னை ஏற்றுக் கொண்டாலும், நான் உன்னை ஏற்கமுடியாது என்று சொன்னார். அவர் பேச்சை நம்பி அங்கு சென்றேன். அந்த சமயத்தில் அய்யா ஊரில் இல்லை. போனில் நான் அவரிடம் பேசினேன். போக வேண்டாம் என்றார். நான் தான் பிரச்சனையை முடிக்கலாம் என்று நினைத்து ஊருக்குப் போனேன்.

ஊர்த்தலைவர் இன்னும் நிறையப் பேர் இருந்தாங்க. என் கணவர் என்னிடம் பேசியதை அனைவரிடமும் அப்படியே மாற்றிப் பேசினார். அவர்கள் என்னை மிரட்டினார்கள். ஊர்க்காரர்கள் இரண்டரை லட்சம் கொடுத்துவிட்டுப் பிரிந்து போ என்றார்கள். நான் எனது பிரச்சனையை எப்படி எல்லோரிடமும் சொல்வது எனத் தெரியாமல், எனது உடம்பில் பிரச்சனை உள்ளது என்னைப் பிரித்து விடுங்கள். நானே கையெழுத்துப் போட்டுத் தருகிறேன் என்றேன். அதற்கு, ஊர்த்தலைவர் எத்தனை லட்சம் செலவானாலும் உன் உடல் நிலையை சரி செய்கிறேன். ஆனால், உன் கணவ னோடு சேர்ந்து வாழ வேண்டுமென கட்டாயப் படுத்தினார். பிரச்சனை என்னவென்று என் கணவருக்குத் தெரியும், ஆகையால் யாரும் கட்டாயப்படுத்தாதீர்கள் எனக் கூறினேன்.

பிரிந்து போவதென்றால் இரண்டரை லட்சம் தரவேண்டும் இல்லையேல் இந்த இடத்தைவிட்டு நகர முடியாது என்று மிரட்டினார்கள். நான் முடியாது என்று கூறினேன். என் அம்மா அப்பாவிடம் பேசி அம்மாவை அனைவர் முன்பும் மண்டியிட்டு விழ வைத்து (அழுகிறார்) ஒன்னரை லட்சம் தர சம்மதிக்க வைத்தார்கள். நீண்ட நேரம் கழித்து என்னைப் போகச் சொல்லிவிட்டார்கள்.

பின்பு அடுத்த நாள் என் கணவர் எனக்குப் போன் செய்து நேற்று உனக்கு நடந்ததற்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்று கூறினார். நான் மிகுந்த கோபத்துடன் பேசி, உனக்குப் பணம் தானே வேண்டும், அதற்கு தானே இவ்வளவு நாடகம். அதற்கு என்னால் முடிந்த வரை ஏற்பாடு செய்கிறேன் என்னிடம் பேச வேண்டாம் என போனை வைத்துவிட்டேன்.

பிறகு ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையில் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். என் கணவர் வீட்டிலிருந்தும், ஊர்த் தலைவரும் எனக்கு போன் பண்ணிக்கொண்டே இருந்தார்கள். அப்போது பொதுவாக இப்போதெல்லாம் பஞ்சாயத்தே வைக்கக்கூடாது. நீங்கள் பேசிய அனைத்து வார்த்தைகளையும் நான் கோர்ட்டுக்குப் போனால் சொல்ல நேரிடும். ஆகையால் என்னை விடுதலைப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க சொல்லாதீர், நீங்கள் தான் உள்ளே போகணும் என்று தைரியமாகப் பேசினேன். இதனால் ஏதும் பிரச்சனைகள் வருமோ என்று ஊர்த்தலைவரும், என் கணவரும் பின் வாங்கினார்கள். அதன்பிறகு என்னை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. அப்படியே மீண்டும் பிரச்சனைகள் வந்தாலும் என்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உங்களில் யார் முதலில் காதலை வெளிப்படுத்தியது?

தீபாவிடம் நான் தான் முதலில் காதலை வெளிப்படுத்தினேன். எனக்குத் தெரியாமல் என்னை வாட்ச் பண்ணியிருக்கா. ஒருநாள் என்னைத் தனியாகக் கூப்பிட்டு நம்பர் கேட்டாள். போன் நம்பர் கொடுத்ததற்குப் பிறகு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பித்தேன். நான் பொதுவாக எல்லா பிரண்ட்ஸ்க்கும் எஸ்.எம்.எஸ். பண்ணுவேன், பேசுவேன். தீபாவிடம் பேச ஆரம்பித்த பிறகு நூறு எஸ்.எம்.எஸ். பத்தவில்லை. நிறைய பிரண்ட்ஸ் களிடம் பேசுவதையே அவாய்ட் பண்ணீட்டேன். பொதுவாக தீபா யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பாள். அதனால் எனக்குப் பிடித்தது. எல்லா விஷயத்திலும் வித்தியாசமாக முடிவெடுப்பேன். இதிலும் அப்படி ஆகிவிட்டது. நிறைய ஆண்கள் என்னிடம் பேசியிருக்கிறார்கள். அவர்களும் என்னிடம் பிரப்போஸ் பண்ணியிருக்காங்க. எனக்கு எந்த உணர்வும் வந்ததில்லை.

சிலர் கணவரோடு வாழும் காலத்தில், தன்பாலினத்தோடும் வாழ்கிறார்களே? நீங்கள் அப்படி முடிவெடுத்திருந்தால் சிக்கல்கள் குறைந்திருக்குமா?

ஒரே நேரத்தில் இருவருடனும் தொடர்பில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். என்னிடம் ஒரு வழக்கறிஞர் சொன்னார். கணவனுடனும் சேர்ந்து வாழ்ந்து கொள்ளுங்கள். அதே சமயம் அந்தப் பெண்ணுடனும் வாழ்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

நிறையப்பேர் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். அவருடன் இருப்பது என்றால் நான் அவருடனே வாழ்ந்திருப்பேன். ஆனால், ஆண் ஆணோடும், பெண் பெண்ணோடும் மட்டு மல்லாமல் திருமணமான ஆணோ, பெண்ணோ கணவனாகவும், மனைவியாகவும் வாழ்ந்து கொண்டு தன்பால் இணையராகவும் வாழ்கிறார்கள். இதில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே நான் இப்படியே இறுதிவரை தீபாவுடனே இருக்கலாம் என முடிவு செய்துவிட்டேன். எனக்கு கவுன்சிலிங் கொடுக்கும் போதுகூட மருத்துவரைப் பேச விடாமல் நானே பேசினேன். என்னைப் பொறுத்தவரை நான் சரியான முடிவுதான் எடுத்துள்ளேன் என முடிவு செய்து விட்டேன். ஆகையால், வேற யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திருநங்கைகளுக்குப் பிறப்பிலே சில வேறுபாடுகள் இருக்கிறது. அதுபோல் தன்பால் தேர்வாளர்களுக்கும் வேறுபாடு இருக்கிறதா?

தீபா:     எனக்குத் தெரியாது. யு.டியூப்ல பார்த்தேன். அரவானிகளுக்கு எப்படி ஹார்மோன் மாற்றம் இருக்கும் என்று சொன்னார்கள். தன்பால் தேர்வு பற்றி நிறையபேர் தவறாகப் புரிந்துள்ளனர். அந்தக் கருத்தை மாற்ற வேண்டும். நிறைய விவாதிக்க வேண்டும். ஒரு ஆண் ஆணோடும், ஒரு பெண் பெண்ணோடும் சேர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்தியச் சட்டப்படி தவறு என்று சொல்கிறார்கள். கைது செய்யலாம் என்றும்கூட சொல்கிறார்கள். ஆனால் இதுவரை யார் மீதும் எப்.ஐ.ஆர் போட்டதில்லை. நிறையப் பேர் இப்படி இருக்கிறார்கள். ஒரு விஷயம் அனை வராலும் பேசப்படும்போது அது சாதாரணமாகி விடுகிறது. இது அனைவராலும் பேசப்படாததால் மிகைப்படுத்தித் தெரிகிறது.

ஆணும் ஆணும் - ஒரு பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது இயற்கைக்கு முரணாகத் தெரிகிறது. ஆணும் ஆணும் - பெண்ணும்பெண்ணும் சேர்ந்து வாழ்வது தவறு என்று எல்லோர் மூளையிலும் பதிந்துவிட்டது. இதில் புரிந்து கொள்பவர்கள் ஒரு சிலர் மட்டும்தான். எங்களைப்போல் இருப்பவர்கள் எல்லாம் வேணும்னே இப்படிப் பண்றதில்லை. இது பிறப்பிலேயே ஏற்படுவதுதான். பெண் ஹார்மோன் தன்மையை மிஞ்சி ஆண் ஹார்மோன் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இவை மனசுக்கும் உடலுக்கும் இடையே நடக்கும் போராட்டம். இதைச் சமூகமும், குடும்பத்தினரும் புரிந்து கொள்வதேயில்லை.

உங்களைப்போல் உள்ள தன்பால் இணையர்களைச் சந்திக்க - தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக. நாங்கள் பேட்டிக்கு ஒத்துக் கொள்ளும்போதே எங்களைப்போல் உள்ளவர்கள் எங்களை மாதிரிதான் உள்ளனரா? அல்லது அவர்கள் பழக்கம் வேறாக உள்ளதா? எனத் தெரிந்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்டோம். யாருக்கும் தெரியாமல் ஏன் வாழவேண்டும். எங்களைப்போல் உள்ளவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். இந்தப் பேட்டி மூலமாக நிறையப்பேர் வெளியே வரவேண்டும். வீட்டில் சொல்வதற்காவது தைரியம் வரவேண்டும். காட்டாறு வாசகர்கள் மூலம் எங்கள் செய்தி நிறையப் பேருக்குப் போகும் என்பதால் எங்களைப் பற்றிக் கூறியிருக்கிறோம். இதன்மூலம் எங்களைப் போல் இருப்பவர்களைத் தொடர்பு கொள்ள நினைக்கிறோம்.

உங்களுக்குக் குழந்தை வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா?

இரண்டு பேருக்குமே ஆசை இருக்கிறது. குழந்தை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் ஒரு ஆணுடன் வாழ்ந்தால்தான் முடியும் என்பது இல்லை. எங்களுக்குக் குழந்தை வேண்டு மென்றால் தத்து எடுத்துக்கொள்வோம். இப்பொழுது வேண்டாம். நாங்கள் நல்ல நிலைக்கு வந்தபிறகு தத்தெடுத்தால், படிக்க வைக்க, நன்றாக வளர்க்க வாய்ப்பாக இருக்கும்.

இவ்வுலகில் நிறைய கணவன் மனைவிக்குள் இல்லாத ஒன்று, புரிதல்தான். அது எனக்கு ஒரு பெண்ணிடம் கிடைத்துள்ளது. எங்களுக்குள் இருக்கும் புரிதல் தான் இன்று எங்களை ஒன்று சேர்ந்தது. இந்தப் புரிதல் கடைசி வரையிலும் இருக்கும். பலர் எங்களைப் புரிந்து கொள்ளாவிட்டாலும்கூட.... வாழ்க்கை வாழ்வதற்கே!

நேர்காணல்: வேணி

Pin It