periyar kamaraj 350கடவுளையும் தர்மத்தையும் காப்பாற்றப் புறப்பட்டிருப்பதாக அடிக்கடி கூறிக்கெண்டிருக்கிற திரு. ஆச்சாரியார் அவர்கள் இன்னறய ஆட்சியை நாத்திக ஆட்சி என்றே கூறினார்.

‘தெய்வத்தை ஒதுக்கிவிட்ட ஆட்சி’ என்ற தலைப்பில்  8.12.61 ‘கல்கி’யில் தம் கையெழுத்துடன் எழுதியிருந்த தலையங்கத்தில்,

“நாட்டின் தலைவர்களும் மன்னர்களும் மக்கள் ஒப்புக்கொண்ட எல்லாச் சமயங்களையும் மதங்களையும் போற்றிவர வேண்டும்” என்றும், “மடையர்களின் பூசல்களைக் கண்டு பயந்து, எந்த சமயமும், எந்தமதமும் வேண்டாமென்று, தெய்வத்தையே ஒதுக்கிவிட்டு, உடுப்பு அணிந்த போலீஸ்காரர்களையே நம்புவது பெரிய அறியாமையாகும்” என்றும், “ தர்மத்துக்கு வரிபோடுவது அறிவற்ற அரசாட்சி முறையாகும்” என்றும் எழுதியிருந்தார்.

இவர் இவ்வாறு பேசுவதும் எழுதுவதும் திரு.பண்டிட்நேரு அவர்களையும், திரு. காமராசர் அவர்களையும் மனத்தில் கொண்டுதான் பேசுகிறார்,  எழுதுகிறார் என்பதை அறியாதவர்கள் இல்லை.

ஏனெனில், இந்த நாட்டிலுள்ள எல்லாமந்திரிகளிலும், இந்த இரண்டுபேர் மட்டும்தான் ‘கடவுள்’ என்றோ, ‘தலைவிதி’ என்றோ ‘மதக்கட்டளை’ என்றோ கூறாதபடி பேசிவருகிறவர்கள் ஆவர். இதுமட்டுமல்ல. இருவரும் திடீரென்று இவற்றையெல்லாம் கண்டித்தும்கூடப் பேசிவிடுகிறார்கள். தமக்கு அதிகாரம் இருக்குமானால்  சோதிடர்களையும் மந்திரவாதிகளையும் சிறையில் தள்ளிவிடுவேன் என்றுகூட திரு.நேரு அவர்கள் ஒருமுறை பேசியிருக்கிறார்.

இதோ,  மூன்று வாரங்களுக்கு முன்னர்,  சிண்டிஆடம்ஸ் என்பவருடன் பேசிக் கொண்டிருக் கையில் “நான் மதவாதியல்ல, என்னை மதநம்பிக்கையற்றவன் என்றே கூறுகிறார்கள். மதங்களின் சட்ட திட்டங்கள், சடங்குகள் முதலியவற்றை நான் நம்புவதில்லை” என்று இந்தியப் பிரதமர் நேரு அவர்கள் திட்டவட்டமாகக் கூறுயிருக்கிறார்.

இவரது நூல்களிலும் பலஇடங்களில், தாம் ஒரு பகுத்தறிவுவாதி என்பதை வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த மாதத்தில் எட்டுக்கிரகங்கள் ஒன்றுசேருவது பற்றிச் சென்றவாரம் பேசும்போதுகூட,  “இதனால் உலகத்துக்கு ஒரு கேடும் வராது” என்று கூறியுள்ளார்.

அதாவது, மதத்தின் பெயராலும்,  கடவுள் பெயராலும் தலைவிதி என்ற பெயராலும் மக்கள் ஏமாற்றப்படுவதை அறவே வெறுக்கும் ஒருசில உலகப் பெரும்தலைவர்களில் திரு.நேருவும் ஒருவர்.

ஆனால், ஆச்சாரியாரோ இதற்கு நேர்மாறானவர். இவற்றிலெல்லாம் சொந்த முறையில் தமக்கு நம்பிக்கையில்லாதிருந்தும் மக்களை அடிமைகளாகவும், மடையர்களாகவும் ஆக்கி வைத்திருப்பதற்காக மட்டும் இவற்றை நம்புகிறவர்கள் போல எழுதிவருகிறார்.  ஆனால்,  காமராசர் அவர்களோ நாத்திகர் அல்லது பகுத்தறிவுவாதி என்று தம்மைச் சொல்லிக் கொள்ளாமலே நடைமுறையில் பச்சைப் பகுத்தறிவுவாதியாக இருந்து வருபவர்.

முன்பு, தலைவிதி நம்பிக்கையைப்பற்றி இவர் கண்டித்துப்பேசியது நினைவிருக்கலாம். இதோ, சென்ற டிசம்பர் 31 ம் தேதியன்று இராஜபாளையத்தில் பேசுகையில்,  இவர் கூறியிருப்பதைத்த ருகிறோம்.

“ஏழைகளை வாழவைப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை.  அவர்கள் ஒருவேளையாவது நல்லபடி சாப்பிட வகைசெய்ய வேண்டாமா? படிக்க வழிசெய்ய வேண்டாமா?  இதைச் செய்தால் காங்கிரஸ் ஒழியணும் என்கிறார்கள்.  மரம் வைத்தவன் தண்ணீர் விடுவானாம்! இதுதர்மமாம்! ஏழைகளை ஆண்டவன் காப்பாற்றுவான் என்கிறார்கள். மரம்வைத்தவனும் தண்ணீர் ஊற்றவில்லை, மற்றவர்களும் ஊற்றவில்லை. இதை நான் பார்த்தபிறகுதான் ஏழைகளுக்குச் சர்க்கார்தான் வசதிசெய்ய வேண்டும் என்கிறேன்.”

ஆச்சாரியாருக்கு இன்றைய ஆட்சிமீது ஏன் ஆத்திரம் வருகிறது என்பது விளங்குகிறதல்லவா? தமிழ்நாட்டிலோ, திரு.காமராசர் பாமர மக்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து ‘நாத்திக’ ஆட்சி நடத்துகிறார். டில்லியிலோ திரு. நேரு அய்ந்தாண்டுத் திட்டங்கள் மூலம் நாட்டின் ஏழ்மையை ஒழிப்பதற்கான திட்டம் வகுத்துக்கொண்டு ‘நாத்திக’ ஆட்சிநடத்திவருகிறார்.

ஏழ்மையை ஒழித்துவிட்டால் கடவுளுக்கும் மதத்திற்கும் மதிப்பிருக்காதே! எல்லோருக்கும் படிப்பைத் தந்துவிட்டால் உயர்சாதிகளுக்கு மதிப்பிருக்காதே! அதனால்தான் தர்மம் கெட்டுவிட்டது! நாத்திகஆட்சி நடக்கிறது என்று ஓலமிடுகிறார் ஆச்சாரியார் அவர்கள்.

பிறப்பினால் சாதி! படிப்பினால் சாதி! பணத்தினால் சாதி! இந்த மூன்றுதுறைகளையும் சமமாக்கி, மேடுகளை வெட்டிப் பள்ளத்தில் போட்டு நிரப்பிவிட்டால் இந்தநாடும் பிறநாடுகளைப் போல முன்னணியில் நிற்குமல்லவா?

“எல்லாச்சாதிகளும் படித்துவிட்டால் வேலை எங்கிருந்து கிடைக்கும்? வண்ணார் பிள்ளைகள் துணிவெளுக்கவும் மற்றவர்களும் அவரவர் குலத்தொழிலைச் செய்யவும் கற்றுக்கொண்டால் போதும்” என்று அன்றுமுதல், இன்றுவரை கூறிவருகின்ற ஆச்சாரியாருக்கும் (இராஜாஜி) இந்த இரு தலைவார்களின் (நேரு, காமராசர்) போக்கு  “தெய்வத்தை ஒதுக்கிவிட்ட ஆட்சி” யாகத் தானேே தான்றும்?

அதனால், “சுதந்திரம் என்பது சர்வ நாசமாகிவிடும் என்பதும் எனக்குப் புலனாகிறது” என்று “என் கோபத்திற்குக் காரணம்” என்ற தலைப்பில் 29.10.61 ‘கல்கி’ யில் கையெழுத்துடன் தலையங்கம் எழுதியிருப்பவரல்லவா ஆச்சாரியார்?

அதனால்தான் சோசலிசப்பாதையில் செல்கின்ற காங்கிரஸ் ஆட்சியின் காலை வாரிவிடுவதற்குக் கச்சை கட்டப் புறப்பட்டிருக்கிறார்.

நாம் அடிக்கடி கூறிவருவதுபோல் இந்த நாட்டில் இரண்டு நல்லதலைவர்கள் ஐனநாயகச் சேற்றில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். நேருவோ “காமராசரோ இந்த நாட்டில் சர்வாதிகாரி ஆக நேரிட்டால் ஒரே அய்ந்தாண்டுத் திட்டத்தில் இந்நாட்டின் வறுமையையும் படிப்பின்மையையும் மூடநம்பிக்கைகளையும் மதவெறியையும் சாதிக் கிறுக்கையும் ஒழித்துக் கட்டிவிடுவார்கள் என்பது நம்நம்பிக்கை!

இவ்வளவு ஊழல்களிலும் அழுந்திக்கிடக்கின்ற இந்நாட்டு மக்களின் வாக்குகளில் நம்பிக்கை கொண்டிருக்கிற வரையில் இவர்களால் எந்தக்காரியத்தையாவது துணிந்துசெய்ய முடியுமா? கம்பிமீது சைக்கிள் விடுவதுபோல பயந்துபயந்து ஆட்சிநடத்தும்போதே ஆச்சாரியார் திருக்கூட்டத்தார்  “அய்யோ! கடவுளை ஒதுக்கிய ஆட்சி நடக்கிறதெ” என்று ஓலமிடுவது அயோக்கியத்தனம்அல்லவா?

(தோழர் மே.கா கிட்டு தொகுத்து, தோழமை வெளியீடாக வந்துள்ள ‘காரியக் காமராசர் பற்றி காரணப் பெரியார்’ நூலில் இருந்து)

Pin It