புராண இதிகாசங்கள் தொடங்கி, மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கெட்டிப்பட்டு, பார்ப்பன சனாதன மதமான இந்து மதம் பிறப்பின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட நெடிய காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டபோது, இந்தச் சமூக சூழலை நுட்பமாக ஆய்வு நடத்தி இறுதியில் கவர்னர் ஜெனரல் அமைச்சரவை சட்டக்குழு உறுப்பினரான, இன்னும் நினைவு கூற தக்கவராக அழியா புகழ்பெற்ற தாமஸ் பேபிஸ்டன் மெக்காலே பிரபுவை (1800 - 1859) கல்விக் கொள்கை குறித்து முடிவு எடுக்க நியமனம் செய்கிறது. அவருடைய சீரிய முயற்சியால் ஆங்கிலம் பயிற்சி மொழியாக்கப்பட்டு ஆண், பெண் இருபாலருக்கும் கல்வி சமமாக வழங்கப்பட்டது.

prayer song 600அதன் பயனை இந்துக்கள் என்ற பெயரில் பார்ப்பனர்கள் முழு கல்வி வேலை வாய்ப்பை தங்களுக்கு ஆனதாக மாற்றிட பெரும் முயற்சி செய்த வேலையில், தென்னகத்தில் நீதிக்கட்சி தோன்றி இந்து மதத்தால், தீண்டாமையால், ஜாதியால் அரசு கல்வி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட திராவிடர் இன மக்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கொண்டு வந்து பார்ப்பனர் அல்லாத மக்களை முன்னேற்றம் அடைய செய்தனர். இதனையும் பார்ப்பனர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஒழிக்க உழைத்தனர்.

இந்நிலையில் திராவிடர் நாடான தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து திராவிடர் இன மக்களின் கல்வி வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப்போட்ட பார்ப்பன இன தலைவனும் குல்லுகப்பட்டர் என்று அழைக்கப்பட்ட அரசியல் குள்ளநரி அன்றைய தமிழக முதல்வர் இராஜ கோபால ஆச்சாரியை எதிர்த்து கலகக்காரர் தோழர் பெரியாரின் பெரும் முயற்சியால் முதல்வர் பதவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு - அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பின்னாளில் கல்வி வள்ளல் என்று அழைக்கப்பட்ட காமராசரை முதல் அமைச்சர் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார்.

அவரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கல்வி, சமூகநீதி, தொழில் வளம் பெறுக இன உணர்வோடு கடுமையாக உழைத்து தமிழகத்தை முன்னேற்றிய அந்த வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் தோழர் கலகக்காரர் தோழர் பெரியாரின் மேற்கோள்கள் குறித்து கல்வி வள்ளல் காமராசரின் 115ஆவது பிறந்தநாளில் (15.07.1903 –-  15.07.2018) உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது காட்டாறு – குழு.

காமராசர் குறித்து பெரியாரின் மேற்கோள்கள்

மானமும், நாதியும், இன உணர்ச்சியும் அற்ற நம் சமுதாயத்துக்குக் காமராசர் ஆட்சி ஏற்பட்டது ஏதோ அகசுமாத்தான சம்பவமேயாகும். இந்த அகசுமாத்தான சம்பவம் மறுபடியும் அமைவதென்பது எதிர்பார்க்க முடியாததேயாகும். காமராசரையே மனத்தில் கொண்டு நான் சொல்லவில்லை. இன்றைய சூழ்நிலை, சுற்றுச் சார்பு, மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்ச்சி, காற்று வாக்கு முதலியன மறுபடியும் யார் என்ன பாடுபட்டாலும் ஏற்பட முடியாதென்றே கருதுகிறேன். - விடுதலை 07.01.1961 –

சாதாரணமாக நான் ஏற்றுக்கொள்ளும் எந்தக் காரியத்திலும் கொள்கைகளை விட்டு விலகாமல் குறிவைத்துப் பேசுவேன். பல சந்தர்ப்பங்களில் காங்கிரசையே தாக்கிப் பேசுவேன். காமராசரை ஏதோ நான் ஆதரிக்கிறேன் என்றால் - காமராசரின் எல்லாக் கொள்கைகளையும் ஆதரிக்கிறேன் என்பதல்ல. அப்படியானால் நான் அவருடன் கலந்தே விடுவேன். - விடுதலை 08.01.61 –

என்னுடைய வீடு பற்றி எரிகிறது. அணைக்கத் தண்ணீர் இல்லை. அணைக்கக்கூடிய ஊர் மக்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் என் எதிரிக்கு உரிமையான கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அணைக்க வந்தால் - எதிரி வீட்டுத் தண்ணீரால் எரியும் என் வீட்டை அணைக்காதே என்று நான் சொன்னேனானால் அது அறிவுள்ளவன் செய்கிற வேலையா? காமராசர் நமக்கும் நம் மக்களுக்கும் நன்மை செய்யும்போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது நியாயமா? - விடுதலை 19.02.61

மக்கள் எல்லாரும் படிக்கும்படியான இந்தப் பெருமை காமராவரால் வந்தது என்று கூறுவனே ஒழிய, காங்கிரசினால் வந்தது என்று நான் ஒத்துக்கொள்ள முயடியாது. காமராசருக்கு முன்பு இருந்த காங்கிரசு ஆட்சியில் இவைகள் எல்லாம் ஏன் நடக்கவில்லை? கேடுகள் தானே நடந்து வந்து இருக்கின்றன? நாளைக்குக் காமராசர் தோற்று அவருடைய இடத்துக்குப் பார்ப்பானோ, பார்ப்பானு டைய அடிமைகளோ வந்து உட்கார்ந்தால் இவைகளை எல்லாம் செய்வார்களா? தோசையைத் திருப்பிப் போடுவது போல் காமராசர் செய்த நன்மைகளை எல்லாம் மாற்றி விடுவார்கள். - விடுதலை 06.04.61

இன்று மந்திரி சபை ஒரு தமிழன் கையில் இருக்கின்றது. அதுவும் தமிழன் நலனில் அக்கறை கொண்ட கீழ்ச்சாதி ஆள் கையில் இருக்கின்றது. அதன் காரணமாக ஆதரிக்கின்றேன். இது போய்விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறேன். - விடுதலை 07.04.61

எங்கள் கொள்கையை நிறைவேற்றிக் கொள்ள காமராசரை ஆதரிப்பதும் பல திட்டங்களில் ஒன்றேயாகும். - விடுதலை 23.04.61

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கல்வித்துறையில் செய்ய முடியாத புரட்சியை எளிதில் காமராசர் செய்து முடித்து விட்டார். எல்லாரும் பத்தாவது வரை படித்து விட்டால் இன்னும் 10, 15 வருடத்தில் சாதி ஒழிந்துவிடும் என்பது அவர் கருத்து. பத்தாவது படித்த பையன் மலக்கூடை எடுப்பானா? பத்தாவது வரை படித்த பெண் கையில் களைக் கொத்தை எடுப்பாளா? உழைக்காத சாதியே இருக்காது. உழைக்கிற ஒரு சாதி, உழைக்காமல் சொகுசாக சாப்பிட இன்னொரு சாதி இருக்கவே இருக்காது. ஒழிந்தே போகும் என்பது நம்பி வேலை செய்கிறார். - விடுதலை 27.04.61

காமராசர் பதவியையே நம்பி வாழ்பவரல்ல. தம்மாலானதை மக்களுக்குச் செய்வோமென்று நினைத்துக் கொண்டு செய்பவர். காலுக்கு ஆகாத செருப்பைக் கழற்றியெறிவது போல நம் மக்களுக்கு தொண்டு செய்ய இடந்தராத பதவியை அவர் விரும்பவில்லை. காரணம் அவர் பெண்டு, பிள்ளை குட்டி அற்றவர். யாருக்கும் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லாதவர். எனவே தான் அவரால் மக்களுக்கு நன்மை செய்ய முடிகின்றது. மற்ற எந்த அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டாலும் அவரைப் போன்ற ஆளைக் காட்ட முடியாது. இவரது ஆட்சி நீடித்தால் தான் நம் மக்கள் வாழ்வு பெற முடியும். - விடுதலை 19.07.61 

இந்த நாட்டில் இன்று உண்மையில் பார்க்கப்போனால் இரண்டே கட்சிகள் தான் உள்ளன. ஒன்று பார்ப்பனக்கட்சி. மற்றொன்று தமிழர் கட்சி. இதற்கு இடையிலே தான் இன்று போராட்டம் நடைபெறு கின்றது. சுருங்கச் சொன்னால், இன்று மனுதர்மத்துக்கும், மனித தர்மத்துக்கும் போராட்டம் நடைபெறு கின்றது. மனுதர்மத்தை நிலைநாட்ட ஆச்சாரியார் பாடுபடுகிறார். மனிதத் தர்மம் நிலைப்பெற காமராசர் பாடுபடுகின்றார். மனிதத் தர்மம் நிலைத்தால் தானே நம் இழிவு நிலை நீங்கும்? - விடுதலை 26.11.61

100க்கு 15 பேராகப் படித்தவர்கள் உள்ள நிலையில் ஆச்சாரியார் பதவிக்கு வந்து அதை 10ஆகக் குறைக்கப் பாடுபட்டார். பல பள்ளிகளை மூடினார். காமராசர் பதவிக்கு வந்த இந்த 7 ஆண்டுக் காலத்தில் ஆச்சாரியார் மூடிய பள்ளிகளை எல்லாம் திறந்ததோடு, அதற்கு மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை ஏற்படுத்தினார். 10 போராக படித்தவர் நிலையை மாற்றி இப்பொழுது 100க்கு 35 பேர் படிக்கும் நிலையை உண்டாக்கினார். - விடுதலை 07.12.61

காமராசரின் சமதர்மத் திட்டத்தால் இன்று, கோயில் இல்லாத ஊரில் குடியிராதே என்னும் முட்டாள் தனமான பழமொழி மறைந்து, “பள்ளியில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற புதிய நீதிமொழி ஏற்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சி தானே சமதர்மப் பாதைக்கு அடிப்படை.? - விடுதலை 28.07.65 

கல்வி சம்பந்தப்பட்ட வரையில் எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் கடவுள் வாழ்த்துச் சொல்வதை நிறுத்திவிட்டு காமராசருக்கு வாழ்த்து கூற வேண்டும். அவரது முயற்சியால் தான் இத்தனைப் பேரும் படிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவரது காலத்தில் பள்ளிகள் நாடெங்கும் திறக்கப்பட்டன.-விடுதலை 11.01.68

சான்றுகள்:

‘விடுதலை’ நாளிதழ்கள், தோழர் மே.கா.கிட்டு அவர்கள் தொகுத்து ‘தோழமை’ வெளியீடாக வந்த ‘காரியக் காமராசர் குறித்து  - காரணப் பெரியார்’ நூல்.

Pin It