நெல்லையில் 30-12-2018 அன்று நடைபெற்ற தந்ைத பெரியார் 140வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் ஆற்றிய உரை 

திரு. சத்யராஜ் அவர்களின் பேச்சு

Satyaaraj 350இங்கு பெருந்திரளாக கூடியிருக்கும் பெரியாரின் பெருந்தொண்டர்களுக்கு முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்தின் மிகச் சிறந்த வசனகர்த்தா தந்தை பெரியார் தான். அவரை மீறிய ஒரு வசனம் கிடையாது.

ஒவ்வொரு டையலாக் பேசும்போதும் நான் டைரக்டரிடம் கேட்பதுண்டு, இது என்ன நம்ம செட்டப் செய்ததா என்று கேட்பேன், இல்லை இது அய்யா பேசியது என்பார், ஏனென்றால் சொல்ல வேண்டிய விசயங்களை ஆணித்தரமாகவும் குழப்பமில்லாமலும் கிண்டல் கேலியோடு சொல்வதற்கு அய்யாவை மிஞ்ச யாருமே இல்லை, சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் எனக்கு ஒரு பெரியார் தொண்டர் அனுப்பியிருந்தார், அய்யா சொல்கிறார் எனக்கும் கடவுளுக்கும் என்ன முன் விரோதமா? நான் எதற்கு கடவுளைத் திட்டுகிறேன், அவருக்கும் எனக்கும் என்ன விரோதம், அவரை நான் முன்பின் பார்த்தது கூட இல்லை, அப்படியிருக்கையில் அவருக்கும் எனக்கும் எப்படி பிரச்சனை வரும் என்கிறார்.

ஒரு காட்சியில் காமராஜர் முதலமைச்சராக வேண்டும் என்று வரதராஜுலு நாயுடு சொல்லுவார், காமராஜர் நீண்ட நேரம் யோசித்து எனக்கு எழுத படிக்க தெரியாது, நான் எப்படி முதலமைச்சராக முடியும் என்பார். தந்தை பெரியார் காமராஜரைச் சந்தித்து இது வரைக்கும் தமிழநாட்டில் ஒரு பச்சைத் தமிழன் முதலமைச்சராக வந்ததில்லை, எனவே நீங்கள் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்கிறார், அதற்கு காமராஜர் சொல்கிறார் நான் படிக்கவில்லையே என்கிறார். தந்தை பெரியார் சொல்கிறார் படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் என்ன வித்தியாசம்? படித்தவனுக்கு படித்த புத்தி மட்டும் தான் இருக்கும், படிக்காதவனுக்குததான் சொந்த புத்தி இருக்கும், எனவே நீங்கள் தான் முதலமைச்சராக வர வேண்டும் என்பார், தந்தை பெரியார் சொன்னது போல் இதைவிட எளிமையாக எப்படிச் சொல்ல முடியும்.

அதே போல ஒரு கலப்புத் திருமணம் நடக்கிறது, நூறு வருடங்களுக்கு முன்னால் யோசித்துப் பாருங்கள் நாகம்மையார் அவர்கள் கணவனைக் குறிக்கும்பொழுது தோழர் ராமசாமி என்று பேசுவார், அத் திருமணத்தில் மணமக்களின் பெற்றோர் வெளியே கூச்சலிடுகிறார்கள், யாரைக் கேட்டு கலப்புத் திருமணம் செய்து வைத்தீர்கள் என்று பெரியாரிடம் கேட்கின்றனர், பெரியார் சொல்லுவார் மனுச ஜாதியில் பிறந்த ஒரு பையனுக்கும் மனுச ஜாதியில் பிறந்த ஒரு பெண்ணிற்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன், இது எப்படி கலப்புத் திருமணமாகும், மாட்டுக்கும் மனுசனுக்கும் கல்யாணம் செய்து வைத்தால் தான் அது கலப்புத் திருமணமாகும் ஒரு மனுசனுக்கும் இன்னொரு மனுசனுக்கும் நடக்கும் திருமணம் எப்படி கலப்புத் திருமணமாகும் என்பார், இதைவிட எப்படி எளிமையாகச் சொல்ல முடியும்.

நாகம்மையாரும் பெரியாரும் கோவிலுக்குப் போகிறார்கள், நாகம்மையார் கோவிலைச் சுற்றி வருகிறார்கள், பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் அவர் கோவிலுக்கு வெளியே உட்கார்ந்து விட்டார். நான்கு ரவுடி பசங்க நாகம்மையாரிடம் வம்பு செய்கிறார்கள், நாகம்மையார் கோவிலைவிட்டு ஓடி வந்துவிடுகிறார். பெரியாரை பார்த்தவுடன் அந்த நான்கு பேரும் ஓடிவிடுகிறார்கள், பார்த்தாயா நாகு, கோயிலுக்குள் இத்தனை சாமி இருக்கிறது, அத்தனை சாமியும் கையில் கத்தி, கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருக்கிறது, எந்த சாமியும் உன்னைக் காப்பாற்றவில்லை பார்த்தாயா, இந்த ராமசாமி தான் காப்பாற்ற வேண்டும், பெரியாருடைய நிகழ்ச்சிகளைப் பற்றி இப்படி அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகலாம்.

கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் கனகராஜ் அவர்கள் சொன்னதில் ஒரு சிறப்பான விசயம் என்னவென்றால், பெரியாரா? மார்க்ஸா? அம்பேத்காரா? யார் சிறந்தவர் என்ற ஒரு பட்டிமன்றம் தேவையே இல்லை, அதை விட்டு விடுவோம், அண்ணல் அம்பேத்கர் ஈரோட்டில் பிறந்திருந்தால் பெரியாராக இருந்திருப்பார், பெரியார் மகாராஷ்டிராவில் பிறந்திருந்தால் அம்பேத்கராக இருந்திருப்பார், இரண்டு பேரும் ஜெர்மனியில் பிறந்திருந்தால் கார்ல் மார்க்ஸாக இருந்திருப்பார்கள், அவ்வளவு தான் வித்தியாசம். அந்தச் சூழல் தான் அவர்களை உருவாக்கும். ஜெர்மனியில் முதலாளி தொழிலாளி பிரச்சனை இருந்தது, அங்கு ஒரு கார்ல் மார்க்ஸ் தேவைப்படுகிறார். தென் ஆப்பிரிக்காவில் நிற வெறி இருந்தது, கருப்பர் வெள்ளையர் நிற வெறி, வெள்ளையாக பிறந்தவர் உயர்ந்தவர், கருப்பாக பிறந்தவர் தாழ்ந்தவர் எனும் இடத்தில் ஒரு நெல்சன் மண்டேலா தேவைப்படுகிறார், மார்டின் லூதர் கிங் தேவைப்படுகிறார், ஒரு ஆப்ரகாம் லிங்கன் தேவைப்படுகிறார். இந்தியாவில் தலைவிரித்தாடிய ஜாதி வெறியை ஒடுக்குவதற்காக இரண்டு கண்களாகப் பெரியாரும் அம்பேத்காரும் தேவைப்படுகிறார்கள்.

திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி நடந்தது. மிகப் பெரிய வெற்றி. தோழர் ராமகிருஷ்ணன் நடத்தினார், தோழர் அருள்மொழி அதில் கலந்து கொண்டார். கொளத்தூர் மணி அண்ணன், திருமுருகன் காந்தி, ஆசிரியர் பேன்ட் போட்டுக்கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது, கருஞ்சட்டைப் பேரணி திருச்சியையே கலக்கிவிட்டது. எனவே சொல்கிறேன் அடுத்த வருடம் ஒரு நீலச் சட்டைப் பேரணி நடக்க வேண்டும், நானும், தோழர் ராமகிருஷ்ணன் அவர்களும், அருள்மொழி அவர்களும், கனிமொழி அவர்களும் நீலச் சட்டை அணிந்து வருவோம். அதற்கடுத்து ஒரு சிவப்புச் சட்டை பேரணி நடக்கட்டும், கருப்புச் சட்டை அணிந்தவர்களும் நீலச் சட்டை அணிந்தவர்களும் சிவப்புச் சட்டை அணிந்து கலந்து கொள்வோம். கருப்பும் சிவப்பும் நீலமும் ஒன்றாக இணைந்து இந்த ஆதிக்கச் சக்திகளை எதிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை, அடியோடு துரத்த வேண்டும் என்பேன்.

பெரியாரும் அம்பேத்கரும் மார்க்சும் சொல்வது என்ன? மனிதனில் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது. நான் இங்கு வந்தபோது சேரில் இடம் இல்லை இல்லை என்றால் பின்னாடி போய் நின்று கொள்வேன். ஒன்றும் பிரச்சனை இல்லை, இல்லை நீ பிறப்பால் தாழ்ந்தவன் நீ நாற்காலியில் அமரக் கூடாது, கீழே தான் உட்கார வேண்டும் என்று சொன்னால் எனக்கு கோபம் வருமல்லவா?. ஒரு பெண்ணாக இருப்பதனால் நீ ஆண்கள் மத்தியில் சமமாக உட்கார முடியாது, ஒரு ஓரமாக கை கட்டி நிற்க வேண்டும் என்றால் பெண்ணிற்கு கோபம் வருமல்லவா?. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் பெரியாரும் அம்பேத்காரும். இந்த கோபத்தின் வெளிப்பாடாக அனைவரும் தட்டிக் கேட்க வேண்டுமானால் அவர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வேண்டும்.

அப்பொழுது தான் அவர்கள் முன்னுக்கு வர முடியும். இந்த இடஒதுக்கீட்டிற்குத் தடையாக ஒரு மூடநம்பிக்கை என்கிற கோட்டையை வைத்து அதற்கு ஜாதி மதத்தை அரணாக வைத்து அந்த மதத்திற்குக் கடவுள் என்னும் கற்பனைக் கருத்தியலை அரணாக வைக்கும்பொழுது பெரியார் அவர்கள் அந்த கற்பனை கருத்தியலை உருவி வீசுவது தான் சரி என்று முடிவு செய்கிறார். உலகம் தோன்றிய பொழுது மனிதனே கிடையாது, மனிதன் தோன்றிய பொழுது கடவுள் என்கிற கற்பனை கருத்தியல் கிடையாது. மனிதன் தோன்றிய பிறகு தான் கடவுள் வருகிறார். உலகம் தோன்றிய பொழுது உண்டான உயிரினம் ஒரு செல், அமீபா. அந்த ஒரு செல் அமீபா இரண்டாகப் பிரிகிறது, நான்காகப் பிரிகிறது, கடல் உயிரினம் முதல் குரங்கு வரை வருகிறது. குரங்கிலிருந்து மனிதன் வருகிறான், எனவே மனிதன் வரும் வரை கடவுள் இல்லை. மனிதன் வந்த பிறகு தான் கடவுள் வருகிறது என்றால் மனிதன் தான் கடவுளை படைக்கிறான். மனிதனுடைய சுயநலத்திற்காகவும், அவனுடைய ஆதிக்கத் தன்மையை நிலைநாட்டுவதற்காக அப்படி ஒரு கற்பனைக் கருத்தியலை உருவாக்குகிறான்.

தூத்துக்குடி பிளைட்டில் ஏற வரும் பொழுது வழியில் ஒருவர் கேட்டார் ‘ஏன் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” என்றார், ‘அட உங்களுக்கும் தான் கடவுள் நம்பிக்கை இல்லைங்க, எல்லாரும் பைலட்டை நம்பி தான் இருக்கிறோம்” ‘நானும் கண்ணாடி போட்டிருக்கிறேன், நீங்களும் கண்ணாடி போட்டிருக்கிறீர்கள், நானும் பார்வை கோளாறு ஏற்பட்டதும் முதலில் டாக்டரிடம் போனேன், நீங்கள் எப்படி பார்வை கோளாறு ஏற்பட்டதால் டாக்டரிடம் போனீர்களா? அல்லது கோயிலுக்குப் போனீர்களா?” என்று கேட்டேன், நானும் டாக்டரிடம் தான் சென்றேன் என்றார். அவ்வளவு தான் குழப்பம் தீர்ந்தது. இப்பொழுது இரண்டு பேருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை, என்றேன். பிளைட் பணயத்தில் மீண்டும் கேட்டார், ‘சரி, இந்த மறுபிறவி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்றார், ‘நாம் போகும் இந்த ஏரோப்ளேன் விபத்து ஏற்பட்டால் நாம் இறந்த பிறகு வேறு எங்காவது சந்தித்தால் இதை பற்றி யோசிப்போம், தெரியாத விசயத்தை பற்றி எப்படி பேசுவது, போன ஜென்மம் ஞாபகம் இது வரை எனக்கு வந்ததில்லை” என்றேன். இப்படியெல்லாம் ஒரு கற்பனைக் கருத்தியலை உருவாக்கி விட்டு அதனடிப்படையில் குலத் தொழில் தான் செய்ய வேண்டும் என்பதை எப்படி ஏற்பது.

அயோக்கியத்தனத்தின் உச்சமே இந்த குலத் தொழில் முறை தான். எனது தாத்தா விவசாயி, எனது தந்தை மருத்துவர், நான் நடிகன், குலத் தொழில் என்று ஒன்று ஏற்பட்ட பொழுது சினிமா எனும் ஒரு துறையே கிடையாது. விஞ்ஞானம் வளரும் பொழுது யாராலும் எதையும் தடுத்து நிறுத்த முடியாது. அனைத்து மூடநம்பிக்கையும், ஜாதிப் பாகுபாடும் அடித்து நொறுக்கப்படும். கிராமத்தில் தெருக்கூத்து நடக்கும் பொழுது மேல்சாதிக்காரன் முன் வரிசையில் இருக்க வேண்டும், கீழ்சாதிக்காரன் பின்னால் இருக்க வேண்டும் என்பதாக இருந்தது, விஞ்ஞானம் வளர்ந்து மல்டிப்பிளக்ஸ் வந்ததும் உன் பக்கத்தில் இருப்பவன் என்ன சாதிக்காரன் என்பது உனக்குத் தெரியுமா? ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் பொழுது பக்கத்து இருக்கையின் சாதியை அறிந்தா புக்கிங் செய்கிறீர்கள்? விஞ்ஞானம் வளரும் பொழுது நீங்கள் சொல்லும் வெங்காயங்கள் தூள் தூளாக போகும்.

உங்கள் மூடநம்பிக்கை ஒன்றும் செய்ய முடியாது. எங்களுக்குத் துணையாக தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டின் போன்றோர் எங்களுக்குத் துணையாக இருக்கிறார்கள். பெரியாரைப் படித்துப் பார், அம்பேத்கரைப் படித்துப்பார், மார்க்சைப் படித்துப் பார். சிந்தனைத் தெளிவு பெறுங்கள். நன்றி, வணக்கம்.

Pin It