இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களையும், அவரது துணைவியாரையும், இராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதனால் கோவில் படிக்கட்டில் அமர்ந்து பக்தி பூஜை செய்தார். மறைந்த குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள் தனக்குத் தீண்டாமை இருந்தது என்று பகிரங்கமாக அறிவித்தார். மறைந்த முன்னாள் இராணுவ அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராவ் அவர்கள் உத்தரபிரதேசத்தில் சம்பூர்ணாந்தா என்பவரின் சிலையைத் திறந்தார். சிலை தீட்டுப்பட்டு விட்டதாகக் கங்கை நீரைக் கொண்டு சுத்தப்படுத்தினர் பார்ப்பனர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவிக்கு வந்தாலும் பெரிய செல்வந்தர் ஆனாலும் ஜாதி தீண்டாமையிலிருந்து தப்ப முடிவது இல்லை. இன்னும் அரசு அலுவலகங்களிலும், ஜாதி பாகுபாடு இருந்து கொண்டு தான் உள்ளது. ஊடக வெளிச்சத்துக்கு வரவு மிகக் குறைவு.

அவிநாசி அரசு ஊழியர் சத்துணவுச் சமையலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பாப்பாள் அவர்களை இடைநிலை ஜாதியினர் பள்ளியில் சமைக்க விடாமல் வன்கொடுமை நிகழ்த்தினார்கள். அந்த வன்கொடுமையைத் தைரியமாக ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தும், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எதிர்த்து நின்றார் பாப்பாள். அவருக்கு நடந்த வன்கொடுமையை அவரே விவரிக்கிறார்.

                dalit pappammalநான் பாப்பாள். எனது கணவர் பெயர் பழனிச்சாமி. எங்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் 11 ஆம் வகுப்பும், மகள் 10 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் அருகில் திருமலைக்கவுண்டன்பாளையம், அருந்ததியர் காலனியில் வசித்து வருகின்றேன். 12 ஆண்டு களுக்கு முன்பு 03.02.2006 அன்று வருடம் கந்தாயி பாளையம் ஆரம்பத் துவக்கப்பள்ளியில் சமையலர் பணிக்குச் சேர்ந்தேன். அப்பள்ளிக்கு நான் சமையலர் பணிக்குச் சென்ற போது சுப்பிரமணியக்கவுண்டர் என்பவர் என்னை,

“சக்கிலிப் புள்ள சோறாக்கிப் போட்டு, குடியானக் கவுண்டப்பசங்க பிள்ளைங்க சாப்பாடு சாப்பிடறதா? சக்கிலிப்பிள்ளையைச் சோறாக்க விட மாட்டேன்”

                என்று தகராறு செய்தார். அன்றைய BDO அவிநாசி வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி சண்முகசுந்தரம் எனது ஊரான திருமலைக் கவுண்டன்பாளையத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்குப் பணி மாற்றினார். எனது ஊரில் உள்ள அப்போதைய குட்டகம் ஊராட்சி மன்றத்தலைவர் பொங்கியம்மாள் கணவர் மேட்டுக்காட்டு பழனிச்சாமியும், இன்னும் நிறையப் பேர், என்னை ஜாதியைச் சொல்லி என்னை சமையல் பணி செய்ய விடாமல் தடுத்தாங்க.

                மீண்டும் சேவூர் அருகேயுள்ள வையாபுரிக் கவுண்டன் புதூரில் உள்ள ஆரம்பத் துவக்கப் பள்ளிக்கு அன்னைக்கு இருந்த BDO ர. பரீத் அகமத்கான் பணி மாத்தி உத்தரவு போட்டாங்க. அங்குள்ள ஆதிக்க ஜாதியினர் அனைவரும் ஜாதியைச் சொல்லித் தரக்குறைவாகத் திட்டி அங்கும் சமையல் பணி செய்ய விடாமல் தடுத்தனர். மீண்டும் சேவூர் அருந்ததியர் காலனியில் இருக்கும் ஒச்சாம்பாளையம் ஆரம்பப்பள்ளிக்குப் பணி மாத்திப் போட்டாங்க. இந்தப் பள்ளியில் தான் தொடர்ந்து 12 ஆண்டு களாக சமையலர் பணி செய்து வருகிறேன்.

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் 29.06.2018 அன்று எங்கள் ஊரான திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்குச் சமையலர் பணிக்கு வழங்கப்பட்ட உத்தரவு (தபால்) போட்டார். கடிதத்தை என்னிடம் தராமலே திருமலைக்கவுண்டன்பாளையத்தில் உள்ள ஆரம்பத் துவக்கப்பள்ளிக்குச் சமையலர் பணியாற்றும்படி Bனுடீ மீனாட்சி என்பவர் தன் வாய்மொழி உத்தரவின் பேரில் திருமலைக் கவுண்டன்பாளையத்தில் உள்ள ஆரம்பத் துவக்கப்பள்ளியில் பணி செய்யப் போன போது, என்னைச் சமையலர் பணி செய்யக்கூடாது என்று ஆதிக்க சாதியினர் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து விட்டனர். இது குறித்து சம்மந்தப்பட்ட Bனுடீ மீனாட்சி என்பவரிடம், “என்னை என் சாதியைச் சொல்லி பணி செய்யவிடாமல் தடுக்கிறார்கள்” என்று கூறினேன்.

அதற்கு BDO மீனாட்சி அவர்கள், “BDO அலுவலகப்பணியாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்துள்ளதனால், இப்போது எதுவும் செய்ய முடியாது, கொஞ்ச நாள் பொறு” என்றார். 30.06.2018-ல் எனக்கு கூடுதல் பணிமாற்று உத்தர வினை 16.07.2018-ம் தேதி BDO மீனாட்சி அவர்கள் என்னிடம் வழங்கியதை வைத்து 17.07.2018ம் தேதியன்று திருமலைக்கவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள அமைப்பாளர் தங்கமணியிடம் கொடுத்து நான் சமையலர் பணியைத் தொடங்கினேன்.

17.07.2018-ம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு மேட்டுக்காட்டு பழனிச்சாமிக்கவுண்டர், ராஜா மணி கவுண்டச்சி, அப்பார் மனைவி மணியாள், ஏழுர் சக்திவேல், கடைக்காரர் சின்னத்தம்பிக் கவுண்டர், சண்முகம், டிராக்டர்காரர் ஆகியோர் வந்து,

“ஏண்டீ சக்கிலிச்சி வந்து எங்க பசங்களுக்கு சாப்பாடு ஆக்கி போடறதா, நீ சாப்பாடு ஆக்கி போடாதே” என்று பாத்திரங்களையெல்லாம் எடுத்து வீசி எறிந்து என்னை வேலை செய்ய விடாமல் தடுத்தார்கள். என் உடனிருந்து வேலை செய்பவர்கள் எதுவும் பேசவோ, தடுக்கவோ செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்கள். நானும் மாலை 3 மணி வரை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

நான் 17.07.2018, 18.07.2018-ம் தேதிகளில் Bனுடீ மீனாட்சியிடம் நடந்ததைச் சொன்னேன். 18.07.2018 காலை சுமார் 9.15 மணிக்கு உயர்நிலைப் பள்ளிக்குப் போன போது என் ஊரில் உள்ள அதே நபர்கள் மேட்டுக்காட்டு பழனிச்சாமிக் கவுண்டர், ராஜாமணிக்கவுண்டச்சி, அப்பார் மனைவி மணியாள், ஏழுர் சக்திவேல், கடைக்காரர் சின்னத்தம்பிக்கவுண்டர், சண்முகம், ராமமூர்த்தி ஆசாரி, மாராங்காட்டு ராசு, வண்டிக்காரர் பொன்னுச்சாமி கவுண்டர் மகன், நடராஜன் மனைவி சுமதி, செட்டி வலைத்தான் மகள்கள் இரண்டு பேர்கள், இன்னும் சில அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர்கள் சுமார் 75 நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று திரண்டு வந்து என்னை,

“இந்த சக்கிலி முண்டை காட்டு வேலைக்குப் போய் தொலைய வேண்டியது தானே? இவள் வந்து சாப்பாடு ஆக்கிப் போட்டு நம்ம புள்ளைங்க திங்கறதா? இவளை எங்கேயும் வேலை செய்ய விடக்கூடாது. ஏன் தோட்டத்து காட்டு வேலைக்கு போய் தொலைய வேண்டியது தானே?”

என்று சொல்லுக்குச் சொல் எல்லோரும் என்னைச் சாதியைச் சொல்லி மிகவும் கேவலமாகத் திட்டி,

“இத்தனை பேர் இப்படி திட்டுகிறோமே, கொஞ்சம் கூட வெட்கம், மானமில்லையா டீ, த்தூ..” என்று என் மீது காரித்துப்பி,

“ரோசமிருந்தா நீ இந்த உயிரை வெச்சுட்டு இந்தப் பொழப்புப் பொழைக்கறதுக்குப் பதிலா தூக்குப் போட்டு சாகலாமில்லையா டீ”

என்று என்னை வேலை செய்வதைத் தடுத்து, சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, கேவலப் படுத்தி என்னை “உயிரோடு இருக்காதே, தற்கொலை செய்து சாகு டீ” என மிகவும் ஆக்ரோஷமாக திட்டி பள்ளிக்கூடத்தை, காலை 9.00 மணிக்குப் பூட்டு போட்டு விட்டார்கள். பள்ளிக் குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டு இருந்தனர். காலை 11.30 மணிக்கு அவிநாசியிலிருந்து வந்த கல்வி அதிகாரிகள் பள்ளிக்கதவைப் பூட்டியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளிக்கதவைத் திறந்து விட்டனர்.

ஆனாலும், அங்கிருந்த கவுண்டர்கள், “எங்கள் பிள்ளை ளுஊ பாப்பாள் சமைத்த உணவை சாப்பிடுவதா என சொல்லி, சாப்பிட மாட்டார்கள்” என தலைமையாசிரிடம் எழுதிக் கொடுத்து விட்டு 29 குழந்தைகளைக் கூட்டி சென்று விட்டனர். டி.வி. நிரூபர்கள் வீடியோ எடுத்து டி.வி-யில் போட்டார்கள். அன்று இரவு சேவூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

                இவ்வளவு நடந்த பிறகும் தலைமை ஆசிரியர் சசிகலா, அமைதியாக ஒன்றும் தெரியாதவர் போல் இருந்து விட்டு, பாப்பாள் அவர்களிடம், “உனக்கு பழைய இடத்துக்கு மாறுதல் வந்து விட்டது, BDO -விடம் பேசி மாறுதல் வாங்கி விட்டேன்” என்று தன்னுடைய செல்போனுக்கு றுாயவளயயீயீ-ல் தகவல் வந்து விட்டதாக இடைநிலை ஜாதியினருக்குக் காட்டிவிட்டு, பாப்பாளைப் பார்த்து நீ பழைய இடத்துக்கு போய் விடு என்றும், உனக்கு ஆர்டர் வாங்கிவிட்டேன் என்றும் கூறி உள்ளார்.

இடைநிலை ஜாதியினர் அரசு அலுவலர் களுக்கு நெருக்கடி கொடுத்து ஒரு நாளில் உத்தரவு போட முடிகிறது. ஜாதி ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது. 19.07.2018 காட்சி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்தி பார்த்த பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு திரள ஆரம்பித்து விட்டனர். பெரியார், அம்பேத்கார், மார்க்சிய இயக்கங்கள், கட்சிகள், தீண்டாமை ஒழிப்புக்கான கூட்டமைப்பு உருவாக்கி அரசுக்கு நான்கு கோரிக்கைகளை வைத்தனர்.

அரசுப்பள்ளி தீண்டாமை ஒழிப்புக்கான கூட்டமைப்பு கோரிக்கைகள்:

1. திருமலைக்கவுண்டன்பாளையம், அரசுப்பள்ளி சத்துணவுச் சமையலர் பாப்பாள் அவர்களை தீண்டாமையின் காரணமாகப் பணியிடம் மாற்றம் செய்ததை உடனடியாக ரத்து செய்து திருமலைக் கவுண்டன்பாளையம் அரசுப்பள்ளியில் பணி நியமனம் உடனடியாகச் செய்ய வேண்டும்.

2. சேவூர் காவல்நிலையத்தில் திருமலைக்கவுண்டன் புதூர் அரசுப்பள்ளி சமையலர் பாப்பாள் அவர்களால் அளிக்கப்பட்ட தீண்டாமை வன்கொடுமை புகார் மீது SC/ST வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2015-ன் படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. சத்துணவுச் சமையலர் பாப்பாள் மீது தீண்டாமையின் காரணமாகத் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யும் அதிகாரி, அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச்சட்டம் 2015 ன் படி கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு பார்த்தல் பிரிவு 3(1) ((Qí) (D) பிரிவின்படியும், பொதுமக்கள் சட்டப்படி செய்யும் தொழிலைத் தடுத்தல் பிரிவு 3(1) (Qí) (E) சட்டத்தின் படியும், சமூகப் பொருளாதாரப் புறக்கணிப்புக்கு ஆளாகுதல் பிரிவு 3(1) (QC)) அரசுப்பணியாளர் பாதிப்புக்கு உள்ளாகும் பொது பிரிவு 3(2) (viii) பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திட வேண்டும்.

4. அரசுப் பணியாளராக இருந்து தனது கடமையைப் புறக்கணித்து தீண்டாமையை ஆதரித்து பணியிட மாறுதல் வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது வன்கொடுமைத் திருத்தப்பட்ட சட்டம் 2015 பிரிவு 4-ன்படி நடவடிக்கை வேண்டும்.

19.07.2018 மதியம் 2.00 மணிக்கு சேவூர் கைகாட்டியில் சாலை மறியல் நடத்தப்பட்டது. 30 நிமிட சாலை மறியலுக்கு பின்பு மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்டத் துணைக் காவல் கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று, சமையலர் பாப்பாள் அவர்களுக்கு திருமலைக் கவுண்டன்பாளையத்தில் பணி உத்தரவு வழங்கப் படும் என்று கூறி, 18.07.2018 அன்று ஒச்சாம் பாளையத்திற்கு பணி மாறுதல் வழங்கப்பட்டதை ரத்து செய்தார் மாவட்டத் துணை ஆட்சியர்.

சேவூர் காவல்நிலையத்தில் வன்கொடுமை நிகழ்த்தியவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய உத்தரவு வழங்கினர். சேவூர் காவல்நிலையம் முன்பு அனைத்து இயக்கக் கட்சிப்பொறுப் பாளர்கள், பொதுமக்கள் காத்திருந்தனர். இரவு 9.00 வரை முதல்தகவல் அறிக்கை வழங்காமல் கால தாமதம் செய்தது காவல்துறை. சேவூர் காவல் நிலையம் முன்பு மீண்டும் சாலை மறியல் செய்து, பின்னர் சேவூர் கைகாட்டியில் சாலை மறியல் செய்த பிறகு தான் முதல் தகவல் அறிக்கை பெற முடிந்தது.

20.07.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அவர் களிடம் தீண்டாமை ஒழிப்புக்கான கூட்டமைப்பு சார்பாகக் கோரிக்கை விண்ணப்பம் கொடுக்கச் சென்றோம். ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2015 ன் படி குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமலைக்கவுண்டன்பாளையத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பில் 23.07.2018 திங்கள் மாலை 5.00 மணியளவில் சேவூர் கைகாட்டியில் வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2015 ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர்களைத் தாமதிக்காமல் உடனே கைது செய்யவும்.

திருமலைக்கவுண்டன்பாளையம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்புத் தோழர்கள் கண்டன உரை யாற்றினர். இயக்கம், கட்சித் தோழர்களும், பொது மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

சமூகநீதிக்கட்சியின் பணி

24.07.2018 அன்று 8 பேரைக் காவல்துறை கைது செய்தது. சமூகநீதிக்கட்சித் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் புதுடெல்லியில் உள்ள தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்குப் புகார் அளித்தார். வன்கொடுமை தொடர்பாக 3 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்குத் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோர் 30.07.2018 அன்று தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையர் புதுடில்லி அலுவலகத்தில் 30.07.2018 அன்று ஆணையத் துணைத்தலைவர் எல். முருகன் விசாரணை நடத்தினார். விசாரணையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன்மைக் கல்வி அதிகாரி சாந்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமி ஆகியோர் விளக்கம் அளித்தனர். தோழர் பாப்பாள் தரப்பு வாதங்களை, சமூகநீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் முன் வைத்தார். 30 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும், 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், பாப்பாளைத் திருமலைக்கவுண்டன் பாளையம் பள்ளியில் பணி நிரந்தரம் செய்யவும், BDO மீனாட்சி மீது துறை ரீதியான நடவடிக்கையும், வன் கொடுமைத் திருத்தச் சட்டம் 2015 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், குற்றவாளிகளை உடனே கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாப்பாள் அவர்களுக்கு நடந்த வன் கொடுமைக்கு எதிராக தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கீ. வீரமணி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

அவிநாசி திருமலைக்கவுண்டன்பாளையத்தில் பாப்பாள் அவர்கள் இல்லத்தில் தலித் விடுதலைக் கட்சிப் பொதுச்செயலாளர் செங்கோட்டையன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், சமூக நீதிக்கட்சித்தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் அவிநாசி உடுப்பி ஹோட்டலில் பாப்பாள் அவர்களைச் சந்தித்தனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருஷ்ணன், மருத்துவர் எழிலன் ஆகியோர் ஜாதிவெறியர்களுக்கு எதிராக, தோழர் பாப்பாள் இல்லம் சென்று விருந்துண்ணும் நிகழ்வை நடத்தினர். கோவை, திருப்பூர் மாவட்டங்களின் த.பெ.தி.க தோழர்கள் மற்றும் காட்டாறு குழு தோழர்களுக்கு பாப்பாள் இல்லத்தில் பாப்பாள் உணவு சமைத்து வழங்கினார்.

பாப்பாளுக்கு ஆதரவாக சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தியோர்:

ஆதித்தமிழர் பேரவை விடுதலைச் செல்வம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நந்தகோபால், தேசியச் சிறுத்தைகள் கட்சி மாநிலச்செயலாளர் மருத்துவர் இராதா கிருஷ்ணன், காட்டாறு குழு செந்தில்குமார், இரமேஷ், முதலிபாளையம் செல்வராஜ், அவிநாசி நீலமலை முத்துச்சாமி, தலித் விடுதலைக் கட்சி ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பழ. சண்முகம், ஹஞசு மூர்த்தி, இரா. கருப்புசாமி, சிவக்குமார், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவைத் தலைவர் அ.சு. பாவித்தன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் திருப்பூர் முத்துக்குமார், சமூக நீதிக்கட்சி மாநிலப் பொறுப்பாளர் சத்தி இராஜேந்திரன் போன்ற ஏராளமான தோழர்களின் கூட்டு முயற்சியால் பாப்பாள் அதே பள்ளியில் சமையலர் பணியில் இணையவும், வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து இப்போது 8 குற்றவாளிகள் கைதுசெய்யப்படவும் காரணம் அனைவரது கூட்டு முயற்சியே.

அரசுக்குப் பரிந்துரைகள்

1. வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் 2015 ன் படி 60 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, 60 நாளில் நீதிமன்ற விசாரணை நடத்தி, 120 நாளில் வழக்கை முடிக்க வேண்டும்.

2. திருமலைக்கவுண்டம்பாளையம் பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா இடைநிலை ஜாதி யினருக்கு ஆதரவாக இருந்துள்ளார். அவர் மீது வன்கொடுமைத்திருத்தச் சட்டம் 2015 பிரிவு 4-ன்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

3. அங்கன் வாடி, சத்துணவுச் சமையலர் பணிக்கு இரண்டு பேரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராக இருக்குமாறு பணி நியமனம் செய்ய வேண்டும்.

4. சத்துணவு ஊழியருக்கு 3 கிலோ மீட்டர் தொலைவிற்குள் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அரசு விதி உள்ளது. 12 ஆண்டுகளாக சேவூர் ஒச்சாம்பாளையத்தில் பணி நியமனம் வழங்கிய அனைத்து Bனுடீ-க்கள் மீதும் வன்கொடுமைத் திருத்தச் சட்டம் 2015 பிரிவு 4-ன்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

5. தமிழகப் பள்ளி கல்லூரிகளில் தோழர் பெரியார், தோழர் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்புக் கருத்துக்கள் அடங்கிய நூல்களைத் துணைப்பாடங்களாக வைக்க வேண்டும்.

6. தீண்டாமை வன்கொடுமைகளுக்குப் பயிற்சிக் களங்களாக இருக்கும் கிராமத் திருவிழாக்களைத் தடைசெய்ய வேண்டும்.

7. அருந்ததியர் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் அண்ணன்மார் திருவிழாக்களுக்கு எதிரான பரப்புரையை, அரசாங்கமே திராவிடர் இயக்கங்களை வைத்து நடத்த வேண்டும்.

Pin It