santhaiyoor wall

இன்று சமூக வெளிகளில் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரச்னை சந்தையூர்தான். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அளவில் பேசப்பட்ட உத்தபுரம் மாதிரி இது நாடுமுழுக்கக் கொண்டு போகப் படவில்லை. பிரகாஷ் காரத்தும் இங்கு வரவில்லை. எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடுவதில் ஒரு தயக்கம். ஏனெனில் இங்கே தீண்டாமைச் சுவரை எழுப்பியவர்களாகக் குற்றம் சாட்டப் படுகிறவர்கள் ஆதிக்க சாதியினர் அல்ல. அவர்களும் தமிழகமெங்கும் தீண்டாமைக்கு உட்படுத்தபடும் ஒரு சாதியினரே. ஆம்,பிரச்னை இங்கே இரண்டு பட்டியல் சாதியினர்களுக்கு இடையில். தீண்டாமைச் சுவரை எழுப்பித் தாங்கள் தடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுபவர்கள் அருந்ததியர். இல்லை இல்லை அது தீண்டாமைச் சுவரே இல்லை என மறுப்பவர்கள் இன்னொரு தலித் சாதியினரான பறையர்கள்.

இதனால்தான் பிரகாஷ் காரத் உள்ளிட்ட எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடத் தயக்கம். வழக்கமாக இம்மாதிரிப் பிரச்னைகளில் தலையிடக் கூடியவர்கள் வாய் மூடி மௌனம் காக்க வேண்டிய சூழல்.

இரு சாராருமே ஒடுக்கப்பட்ட சாதியினர் என்பதற்காக ஆகக் கீழாக ஒடுக்கப்படும் ஒரு சாதியினர் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பேசாதிருப்பது என்ன நியாயம் என்கிற ஒரு தார்மீகக் கேள்வியும் இங்கே எழுகிறது.

இந்நிலையில்தான் சந்தையூரில் என்னதான் நடக்கிறது எனப் பார்த்து வரலாம் எனச் சென்ற வாரம் அங்கு சென்றிருந்தேன்.

சந்தையூர் என்பது மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்காவில் உள்ளது. இங்குள்ள இந்திரா காலனியில் ராஜகாளியம்மன் கோவில் என ஒன்று இருக்கிறது. பறையர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கோவிலைச் சுற்றி இன்று பறையர்கள் எழுப்பியுள்ள சுவரைத்தான் தங்களுக்கு எதிரான தீண்டாமைச் சுவர் என அருந்ததியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தீண்டாமைச் சுவரல்ல, கோவிலின் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்டது என்பது பறையர் தரப்பு வாதம்.

பிரச்னை முற்றி இப்போது அந்தச் சுவரை இடிக்கும் வரை இந்திரா காலனியில் இருக்கமாட்டோம் என அருந்ததியர்கள் சந்தையூரைத் துறந்து வெளியேறிவிட்டனர். அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேன்மலையாண்டி சாமி மலைப்பகுதிக்குச் சென்று, ஒரு கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர். யானைகள், புலிகள், விஷப் பூச்சிகள் முதலானவை சூழ்ந்துள்ள அந்த வனப்பகுதியில் இரண்டு மாதங்களாக அவர்கள் உள்ளனர்.

இருசாரருமே ஒடுக்கப்படும் தலித்களாக இருப்பதால் இதைக் கவனமாகக் கையாள வேண்டும் என்கிற எச்சரிக்கையோடுதான் அங்கு சென்றேன்.

சந்தையூரில் ஒரு டீக்கடைக்குள் நுழைந்தபொழுது அங்கு இன்னும் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளதைப் பார்த்து அசந்து போனேன். அங்கு பறையர் போனாலும், அருந்ததியர் போனாலும் Use and Throw Cupல்தான் அவர்களுக்கு டீ வழங்குகிறார்கள். எல்லோருடனும் உட்காரவும் இவர்களுக்கு அனுமதி கிடையாது. உயர் சாதியினர் என்றால்தான் சில்வர் குவளையில் டீயும், அமர்வதற்கு நாற்காலியும் கிடைக்கும். இந்த அப்பட்டமான தீண்டாமையை ஒன்றிணைந்து போராடிக் களைய வேண்டியவர்களைச் சாதி அடிப்படையில் இப்படி அவர்களுக்குள் ஒரு hierarchy-யை ஏற்படுத்திப் பிரித்து நிறுத்தி இருப்பதுதான் பார்ப்பனியத்தின் வெற்றி.

ஒவ்வொரு சாதிக்கும் மேலாக ஒரு சாதி இருப்பதுபோல கீழாக ஒரு சாதியையும் வைத்து இச்சமூகத்தை ஒரு படிநிலை அமைப்பாக உருவாக்கியுள்ளதுதான் இந்தியச் சாதி முறையின் தனித்துவம் என டாக்டர் அம்பேத்கார் சொல்லியுள்ளதுதான் நினைவுக்கு வந்தது. பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகிய பட்டியல் சாதியினருக்கிடையே கடைபிடிக்கப்படும் சாதிப் பாகுபாடுகள் சில நேரங்களில் கொலை அளவிற்குச் சென்று விடுவதையும் பார்க்கிறோம்.

சந்தையூரில் மறவர்கள், நாயக்கர்கள், முத்தரையர், செட்டியார், பிள்ளைமார் எனப் பல சாதியினர் உள்ளனர். இந்திரா காலனி குடியிருப்பில் மட்டும் சுமார் நூறு குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 30 குடும்பங்கள் பறையர்கள். 70 குடும்பங்கள் அருந்ததியர்கள். குடியிருப்பின் நடுப்பகுதியில் பறையர்களும், அவர்களுக்கு இரு பக்கங்களிலும் அருந்ததியரும் வசிக்கின்றனர்.

குடியிருப்பின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குப் போக வேண்டும் என்றால் பறையர்கள் இருக்கும் பகுதியை அருந்ததியர்கள் கடக்க வேண்டியிருக்கும். இந்திரா நகரின் நடுவில்தான் பறையர்களின் ராஜகாளியம்மன் கோவிலும் அமைந்திருக்கிறது. அதைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. அதுவும் முழுமை அடையவில்லை. அதைத்தான் இடிக்க வேண்டும் என சர்ச்சை நடந்துகொண்டுள்ளது. அந்தக் கோவில் நுழைவாயில் எதிரே விநாயகர் கோவிலும், அதிலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் அருந்ததியர்களின் சக்தி காளியம்மன் கோவிலும் அமைந்துள்ளன.

பறையர்களும் அருந்ததியர்களும் அவரவர் கோவில்களை ஒட்டி தனித்தனியே சிறிய அரங்குகளைக் கட்டிப் பொது நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அங்கன்வாடி ஒன்றும் இந்தப் பகுதியில் செயல்படுகிறது.

அருந்ததியர், பறையர் இருவருக்குமிடையே திருமண உறவுகள் இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. .

அருந்ததியர்களில் பட்டப்படிப்பு வரை சென்றவர்கள் நான்குபேர் தான். பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாகவும் தோட்ட வேலை செய்பவர்களாகவும்தான் உள்ளனர். பறையர் தரப்பில் படித்தவர்கள் ஓரளவு இருக்கிறார்கள். அரசு உத்தியோகம் அல்லது தனியார் பணியில் அவர்கள் உள்ளனர். வெகு சிலரே கடைநிலை வேலைகளைச் செய்கின்றனர். இந்த வகையில் பொருளாதார ரீதியிலும் இருசாராருக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.

அருந்ததியர்கள் தரப்புக் கருத்து

மலையடிவாரத்தில் தங்கி போராடிவரும் அருந்ததியர் மக்களையும், இந்திரா காலனியில் உள்ள பறையர் மக்களையும் கடந்த 27ஆம் தேதி அன்று நேரில் சந்தித்து, இந்தப் பிரச்னை குறித்துப் பேசினேன்.

santhaiyoor gurusamy

பத்தாண்டுகளாக அருந்ததியர் உறவின்முறை தலைவராக உள்ள குருசாமி தமக்கு எதிராகப் பறையர்கள் தீண்டாமைச் சுவர் எழுப்பியுள்ளதாகவும், தம்மை அவர்களின் ராஜகாளி அம்மன் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை எனவும் கூறினார். தொடர்ந்து அவர் சொன்னது:

“அவர்களின் கோவில் முன் நாங்கள் நடந்துபோகக்கூட முடியாது. நாங்கள் அந்தப் பாதையின் வழியே போனால் தீட்டு ஆகிவிடுமாம். ஒருமுறை முனியாண்டி என்பவர் போனபோது கோவிலைச் சுற்றி மஞ்சள் பால் ஊற்றினார்கள். அத்தோடு,எங்கள் பெண்கள் அந்தப் பக்கம் போய் வர முடியவில்லை. தொல்லை தருகிறார்கள். மீறிப் போனால் செத்த மாடு உண்ணுகிறீர்கள், குழி வெட்டுகிறீர்கள் என்றெல்லாம் சொல்லி எங்களை இழிவுபடுத்துகிறார்கள். சக்கிலியப்பய என்று திட்டுகிறார்கள். இதனால்தான் நாங்களெல்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறப் போவதாக அறிவித்தோம்.

ராஜகாளியம்மன் கோவில் சுவர் கட்டியிருப்பதே நத்தம் புறம்போக்கில்தான். எங்களுடைய சக்தி காளியம்மன் கோவிலைப் போல சொந்த நிலத்தில் அவர்களின் கோவில் கட்டப்படவில்லை. காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஒரு ஏக்கர் அறுபத்து ஐந்து சென்ட் ஒதுக்கி, அதில் பறையருக்கு 7 பட்டாவும் அருந்ததியருக்கு 14 பட்டாவும் கொடுத்தார்கள். 105 சென்டை ஐந்து ஐந்தாக அரசாங்கம் பிரித்துக் கொடுத்தது. கடைசியில் இதில் மீதமிருந்த 55 சென்ட் பொதுப் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்தப் பொது இடத்தையே பறையர் சமூகத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள். கோவில் சுற்றுச் சுவர் கட்டியிருப்பதில் மட்டும் 11 சென்ட் நில ஆக்கிரப்பு நடந்துள்ளது.

இப்போது சுற்றுச் சுவர் எழுப்பியுள்ள இடத்தில் ஆறு ஆண்டுகளுக்கு (2012) முன், முள்வேலி அமைத்திருந்தார்கள். ஒரு பொதுவான இடத்தில் எப்படி இதுபோல முள்வேலி போடுவீர்கள் என்று அப்போது நான் போய்க் கேட்டேன். அது எங்களின் பட்டா இடம் என்றார்கள். உடனே VAO-விடம் சென்று இது குறித்து விசாரித்தேன். அது புறம்போக்கு நிலம் என்பதை அவர் உறுதி செய்தார். பிறகு, தாசில்தாரிடம் போனோம். அவர் இந்தப் பிரச்னையைத் தட்டிக்கழித்தார். பிறகு, ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையனிடம் இது குறித்து சொன்னோம். அந்த சமயத்தில் மதுரை மாவட்ட கலெக்டராக சகாயம் இருந்தார். அவரிடம் சென்று முறையிட முடிவு செய்தோம். அந்த முள்வேலியை அகற்றக் கோரி மனு கொடுத்தோம். சகாயம் இது பற்றி விசாரித்துவிட்டு இருபத்து நான்கு மணி நேரத்தில் அதை அகற்றவேண்டும் என்று உத்தரவிட்டார். முள்வேலி அகற்றப்பட்டது.

இரண்டு ஆண்டுகள் கழிந்தது. முள்வேலி போட்டவர்கள் சுவர் அமைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதே நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால், அப்படி அமைப்பதற்கு எங்களில் சிலர் கையெழுத்திட்டு ஒப்புக்கொண்டதாக அவர்கள் இப்போது ஒரு பத்திரத்தைக் காட்டுகிறார்கள். அதில் என் கையெழுத்தும் இருக்கும். கீழ்ப்பட்டிக்கு டீ குடிக்க மூன்று பேர் போனபோது எங்களிடம் அந்த கையொப்பத்தைப் பெற்றார்கள். உடன்பாடு இல்லாமலேயே அதில் கையெழுத்திட வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. ஜமீன்தார் வெங்கடேஷ் பாண்டியன்தான் அதை வாங்கினார். பறையர்களுக்குச் சாதகமாக அவர் நடந்துகொண்டார். அவரிடமே நீங்கள் செய்வது சரியல்ல ஐயா என்று சொன்னேன்.

பிறகு, இந்த விவகாரத்தை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுபோனோம். எழுப்பப்பட்டிருந்த சுவரை இடிக்குமாறு வருவாய் ஆய்வாளர் பறையர்களுக்கு நோட்டீஸ் போட்டார். அது நடக்கவில்லை. கடைசியில், இந்தப் பிரச்னையை மதுரை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோனோம். நாங்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்தது. நான்கு மாதத்தில் அந்தச் சுவரை இடிக்கவேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள் (தீர்ப்பளிக்கப்பட்ட நாள் 21. 8. 2017). ஆனால், தீர்ப்பை மதித்து மாவட்ட நிர்வாகம் அதைச் செயல்படுத்தவில்லை. காலம் தாழ்த்தியது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்தை அணுகிய நாங்கள் பலமுறை அலைக்கழிக்கப்பட்டோம். கடைசியில், நீதிமன்றம் கொடுத்த நான்கு மாத கெடு முடிந்தே போய்விட்டது. இதற்கிடையில், பறையர்கள் வழக்குத் தொடுத்து அந்தத் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்குத் தற்காலிகத் தடை உத்தரவும் வாங்கிவிட்டனர் (30. 1. 2018).

ஐந்து வருஷமாக அருந்ததியர் அமைப்புகளிடம் எல்லாம் சொல்லி, தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் போராடிவிட்டோம். எங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இறுதியில் ஜனவரி 29ஆம் தேதி முதல் இந்த மலைப்பகுதியில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறோம். புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள அந்தத் தீண்டாமைச் சுவரை உடைக்கும் வரை நாங்கள் எங்கள் வீட்டிற்குப் போகமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். ”

சந்தையூர் இந்திரா காலனியின் சாமானிய மக்களிடம் பேசியபோது, சாதிப் பெயர் சொல்லிப் பறையர்கள் தம்மைத் திட்டுகிறார்கள் எனக் கூறினர். பறையர் அமைப்பு ஒன்று வெளியிட்ட சுவரொட்டியில்கூட“தெலுங்கு சக்கிலிய கும்பல்” “தன்மானச் சுவர்” என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

பறையர் தரப்புக் கருத்துக்கள்

பெரியவர் குருசாமி மற்றும் அருந்ததிய மக்கள் கூறிய கருத்துகள் தொடர்பாக பறையர் தரப்பிலிருந்து ஜெயகுமார், கருப்பண்ணசாமி ஆகியோரிடம் கேட்டோம். நாம் அவர்களைச் சந்தித்தபோது ஐந்தாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். பள்ளி ஆசிரியர் ஒருவரின் வீட்டு வாசல் முன்பு இது நடந்துகொண்டிருந்தது. 23ஆம் தேதி காலை2:45 அளவில் ராஜ காளியம்மன் கோவில் சுற்றுச் சுவரை யாரோ உடைக்க முயன்றுள்ளார்கள். அவர்களைக் கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருவதாக நம்மிடம் அவர்கள் தெரிவித்தனர்.

santhaiyoor jayakumarமேலும் அவர்கள் கூறியது:

“நாங்கள் அருந்ததியர்களுக்கு முன்பாகவே இந்தப் பகுதியில் வாழ்பவர்கள். முப்பது பறையர் குடும்பங்களே இங்கு உள்ளன. எங்களைக் காட்டிலும் அருந்ததிய மக்கள்தான் இந்தப் பகுதியில் அதிகம். அவர்களிடம் நாங்கள் தீண்டாமைக் கடைப்பிடிப்பதாக அவதூறு செய்கின்றனர். அது உண்மையல்ல. கோவில் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்டிருக்கும் சுவரை தீண்டாமைச் சுவரென்று பரப்புகிறார்கள். மீடியா கவனத்துக்காக இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுச் சுவர் கட்டி நான்கு, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது அவர்களின் ஒப்புதலுடன்தான் கட்டினோம். அவர்களே கையொப்பமிட்ட பத்திரம் எங்களிடம் உள்ளது. இப்போது வற்புறுத்தி கையொப்பம் வாங்கியதாக பொய் சொல்கிறார்கள். அருந்ததியர் தரப்பில் பி. எட். படித்துள்ள சேகர் தான் பத்திரம் எழுதியதே. அந்த அடிப்படையில்தான் கோவில் எதிரிலுள்ள ஐந்தடிப் பாதையை பதினோரு அடியாக மாற்றினோம். அந்த வழியில் அவர்கள் செல்வதை நாங்கள் தடுக்கவில்லை. அதன் அருகில் சாமி வைத்து கும்பிடுவதால் இருதரப்பினரும் பிணத்தை எடுத்துக்கொண்டு போகக் கூடாது என்று சொல்கிறோம். இதுதவிர மாட்டிறைச்சி உண்பதை நாங்கள் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறுகிறார்கள். அதுவும் உண்மையல்ல. ஏனெனில், நாங்களும் அதை உண்பவர்களே.

சந்தையூரில் மொத்தம் மூன்று அங்கன்வாடிகள் உள்ளன. அதிலொன்று அருந்ததியர் குடியிருப்பில்தான் உள்ளது. பிரியா எனும் அருந்ததிய சமூகத்து பெண் அதற்குப் பொறுப்பாளராக இருக்கிறார். அங்கே சென்று எங்கள் பிள்ளைகள் சத்துணவு உண்பார்கள், நாங்கள் மாவு வாங்கி வருவோம். நாங்கள் தீட்டு பார்த்தால் அப்படி செய்வோமா?

இரண்டு மாதங்களாக அருந்ததியர்கள் மலையடிவாரத்தில் போய் தங்கியிருக்கிறார்கள். ரொம்பவும் சிரமப்படுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஒரு சிறுவனை விஷ வண்டு கடித்துவிட்டதாகக்கூட பத்திரிக்கையில் செய்தி வந்தது. உண்மை என்னவென்றால், அவன் தேன் எடுக்க முயற்சிக்கும்போது தேனீ கடித்திருக்கிறது. அதை வேறு மாதிரி திரித்து சொல்லியிருக்கிறார்கள். இதுபோக சாப்பாடு போன்றவற்றுக்கும் அவர்கள் சிரமப்படுவதில்லை. அருந்ததிய கட்சிகள் அவர்களை சொகுசாக வைத்திருக்கின்றன.

என் (ஜெயகுமார்) அப்பாவும் எளவு சொல்லப் போவார். சோறு வாங்கிச் சாப்பிடுவார். ஆனால் இப்போது எங்கள் நிலை மாறிவிட்டது. ஆனால் அருந்ததியர்கள் இன்றும் அதைச் செய்கிறார்கள். செத்த மாடு உண்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் துப்புரவு பணி செய்கிறார்கள்.

கோவில் பாதுகாப்புச் சுவர் கட்டியிருப்பது எங்கள் நிலத்தில்தான். அரசு ஆவணப்படி அந்தப் பகுதி பறையர் குடியிருப்பு என்பதில் வருகின்றது. அதில்தான் நாங்கள் சுவர் எழுப்பியுள்ளோம். எனவே எங்களின் நிலவுரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். ”

நீதிமன்றம் என்ன சொல்கிறது?

தலித்களுக்கிடையிலான இந்த மோதல் கவலைக்குரிய ஒன்று. நல்லெண்ணத்தின் அடிப்படையில் மோதல் வேண்டாம் எனச் சொல்வது எளிது. ஆனால் அங்கே நிகழ்ந்து வரும் சிக்கலை முறையாகப் புரிந்து அவர்களுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்துவது அத்தனை எளிதாகத் தெரியவில்லை.

அருந்ததியர்கள் அதை “தீண்டாமைச் சுவர்” என்கிறார்கள். பறையர்கள் அதை “பாதுகாப்புச் சுவர்” என்று வாதிடுகிறார்கள். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், கே. கே. சசிதரன் ஆகியோர் கடந்த 21. 8. 2017 அன்று வழங்கிய தீர்ப்பில் அதை ஒரு ஆக்கிரமிப்புச் சுவர் என்ற அடிப்படையில் நான்கு மாதங்களுக்குள் தகர்ப்பதற்கு ஆணையிட்டிருக்கின்றனர்.

எனினும் கோவிலின் சுற்றுச் சுவரை தீண்டாமைச் சுவர் என்று நீதிமன்றம் கூறவில்லை என சுவருக்கு ஆதரவானவர்கள் குறிப்பிடுகின்றனர். பிரச்னைக்குரிய இருவருமே ஆதிதிராவிடர்கள் என்கிற வரையரைக்குள் வருவதால் ஒருதரப்பை மற்ற தரப்பினர் ஒதுக்குவதைச் சட்டப்படி தீண்டாமை எனச் சொல்ல முடியாது. எனவே, இந்த வழக்கை நில அபகரிப்பு சட்டத்தின்படியே (Tamilnadu Land Encroachment Act 1905) நீதிமன்றம் அணுகியுள்ளது. தீண்டாமை அடிப்படையில் அணுகவில்லை.

இரு சாராருமே தலித்கள் என்பதால் சட்ட ரீதியாக அதைத் தீண்டாமைச் சுவர் எனச் சொல்ல முடியாவிட்டாலும் அது அருந்ததியர்களுக்கு எதிரான சுவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடிகிறது. அதற்கான அத்துணை நியாயங்களும் இருக்கின்றன.

பெரியவர் குருசாமி கூறியது போல், அந்தச் சுவரை அகற்றுமாறு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதுரை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தவில்லை. காலம் தாழ்த்தியிருக்கிறது. அதற்கான கால அவகாசம் முடிந்தும் போயிருக்கிறது. அதற்குப் பின்னர்தான் பறையர் தரப்பினர் சுவரை இடிப்பதற்குத் தற்காலிகத் தடை உத்தரவு பெற்றுள்ளனர். அதற்கான காலமும் கடந்த ஃபிப்ரவரியுடன் முடிந்துவிட்டது.

பறையர்கள் அந்தக் கோவிலையும் அதன் சுற்றுச் சுவரையும் தங்களுடைய நிலப்பகுதி எனக் கூறுகிறார்கள். அரசாங்க ஆவணத்தில் பறையர் குடியிருப்பு என்று உள்ளதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஆதி திராவிடர் குடியிருப்பு என்பதாகவே அரசாங்க ஆவணங்களில் உள்ளது எனவும், அருந்ததியர் அல்லது பறையர் என்றெல்லாம் தனித்தனியே அரசு பிரித்துக் கொடுப்பதில்லை எனவும் வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். பட்டா வழங்கியது போக மீதமுள்ள இடங்கள் அனைத்தும் புறம்போக்கு இடம்தான். அது ஆதி திராவிடர்களான பறையர்கள், அருந்ததியர் ஆகிய இருவருக்குமே உரியதுதான். பொதுப் பயன்பாட்டுக்கானதுதான்.

தவிரவும் பறையருக்கும், அருந்ததியருக்கும் மத்தியில் போடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் “ஒப்பந்த பத்திரம்” செல்லுபடியாகாது. சட்டப்படி அதற்கு எந்தவொரு மதிப்பும் கிடையாது என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளவர்கள் ஒன்றும் அங்குள்ள அருந்ததியர்கள் அனைவரின் சட்டபூர்வமான பிரதிநிதிகளோ, அருந்ததியர் அமைப்புக் கூட்டம் எதிலும் ஒப்புதல் பெற்று வந்தவர்களோ இல்லை.

“உண்மை அறியும் குழு” அறிக்கை ஒன்று முன்வைக்கும் செய்திகள்

இந்தப் பிரச்னை பெரிய அளவுக்கு வளர்ந்த சமயத்தில் MIDS பேராசிரியர் லட்சுமணன் உள்ளிட்டோர் உண்மை அறியும் குழு அமைத்து சந்தையூர் வந்துள்ளனர். ஆறு பேர் கொண்ட குழு அது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையை வைத்தே சென்னையில் எவிடென்ஸ் கதிர், லட்சுமணன் முதலானோர் பறையர்களுக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்தியிருகின்றனர்.

santhaiyoor arunthathiyars

உண்மையில் அந்த அறிக்கை நடுநிலையாகவும் முழு உண்மையுடனும் இருந்திருந்தால் இப்பிரச்னையின் போக்கு முற்றிலும் மாறியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அவர்களின் அறிக்கை நியாயமாக எழுதப்படவில்லை. குழுவிலுள்ள ஆறு பேர்களில் டாக்டர் பொன்னுச்சாமி மற்றும் வழக்கறிஞர் பழனியம்மா ஆகிய இருவரும் அந்த அறிக்கையை ஏற்கவில்லை. அவர்கள் அந்தச் சுவரை தீண்டாமைச் சுவர் என்றே கருதுகிறார்கள் எனும் தகவலை எழுத்தாளர் மதிவண்ணன் சுட்டிக் காட்டினார். அறிக்கை பக்கச் சார்புடன் இருப்பதாகவும் குழுவிலிருந்து விலகிய அந்த இருவரும் அருந்ததியர்கள் எனவும் அவர் கூறினார்.

அந்த அறிக்கையிலுள்ள முக்கியத் தவறாக நாம் கருதுவது, சந்தையூர் இந்திரா காலனியில் நிலவும் சாதி ரீதியிலான பாரபட்ச நடவடிக்கைகளை அது இருட்டடிப்புச் செய்வதுதான். கல்வி நிலையில், வர்க்க, கலாச்சார அடிப்படையில் இருக்கின்ற வேறுபாடுகள் மூலம் பாகுபாடு காட்டப்படுவதாக ஓரிடத்தில் குறிப்பிடுகின்றனர். ஆதிக்க சாதிக்கட்சிகள் பண்ணும் சாதி அடையாள அரசியலை இவர்கள் பிரதிபலிப்பதாக மேலோட்டமாகச் சொல்லிச் செல்கின்றனர். “வர்க்க, கலாச்சார வேறுபாடு” என எல்லாவிதமான பாரபட்சங்களையும் தீண்டாமையையும்கூட நியாயப்படுத்திவிட இயலும். மற்றபடி உண்மை நிலவரம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. பறையர்களால் அருந்ததியர்கள் தரம் தாழ்த்திப் பார்க்கபடுவதை அறிக்கையில் எங்குமே குறிப்பிடவில்லை.

இதுதவிர, இந்தப் பிரச்னையை நிலம் சார்ந்த தகராறாக அந்த அறிக்கை குறுக்குகிறது. அதுவும் தவறான அணுகுமுறை. இந்த விவகாரத்தில் சாதியின் பங்கை நாம் மறுக்க முடியாது. மிகவும் சாமர்த்தியமாக அங்கு நிலவும் சாதிப்பாகுபாடுகளை நியாயப்படுத்தும் முயற்சியே இந்த அறிக்கை.

இப்படியான சூழ்நிலை நிலவுவது அருந்ததிய மக்கள் இன்று ஊரை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இரண்டு மாதங்களாக அங்கு வாழ்பவரான கனகவல்லி என்பவரின் இரண்டு வயது மகன் கருப்பசாமிக்கும் மகள்(8) ஆறுமுகக்கனிக்கும் வண்டு கடித்துக் கைகள் முழுவதும் புண்ணாகியிருந்ததைக் கண்டோம். முனியம்மா என்பவரை தேள் கடித்துள்ளது. சத்தியா என்பவரின் காதில் வண்டு புகுந்து அவர் ஒருவாரமாகச் சிரமப்படுவதாகச் சொன்னார்கள்.

இதுபோக 30. 3. 2018அன்று பழனிமுருகன் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அந்த மலைப்பகுதியிலேயே இறந்துள்ளார். அவரது உடலை ஏற்க மறுத்து உசிலம்பட்டி மருத்துவமனையில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மொத்தத்தில் அங்கு நிலைமை பதட்டத்துடன் உள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையை தொடக்கம் முதலே முறையாகக் கையாளவில்லை.

கேள்விக்குறியாகும் தலித் ஒற்றுமை

ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவதையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் நிலவும் மோதல்களையும் சமப்படுத்த முடியாது என்பது உண்மைதான். இதன் பொருள் அந்த மோதல்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என்பதல்ல. அப்படியான ஒடுக்குமுறைகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை.

அம்பேத்கார் நூற்றாண்டை ஒட்டி மேலெழுந்த தலித் அடையாள அரசியல் பல முற்போக்கான பார்வைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் வித்திட்டுள்ளது. எனினும் இங்குள்ள சில தலித் அறிவுஜீவிகள் அம்பேத்கார் முன்வைத்த பார்ப்பனிய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு ஆகியவற்றை எந்த அளவிற்கு முன்னெடுத்துள்ளனர் என்பது கேள்விக்குறியே. பிற்படுத்தப்பட்ட சாதி எதிர்ப்பை மட்டுமே முதன்மைப்படுத்தி பார்ப்பனிய எதிர்ப்பை அவர்கள் மழுங்கடித்ததன் விளைவுதான் இன்றைய பிரச்னை.

பார்ப்பனிய எதிர்ப்பை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் உறுதியானது என்கிற கூற்றில் உள்ள உண்மையை ஏற்கும் அதே நேரத்தில், பார்ப்பனிய எதிர்ப்பையே முற்றாகப் புறக்கணிப்பது என்பது தீண்டாமை உருவாவதற்கும்கூட வழிவகுக்கக்கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தலித் எனும் பொது அடையாளத்தில் ஒன்றுசேரும்போது தமது உரிமைகள் பறிபோவதாய் அருந்ததியர்கள் சொல்கிறார்கள். இதன் மூலம் பறையர் சமூகமே பலனடைவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஒப்பீட்டளவில் கல்வி, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் பறையர் சமூகமே முன்னணியில் உள்ளது. அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டை விசிக போன்ற கட்சிகள் எதிர்த்தது அனைவரும் அறிந்த உண்மை.

இதற்கு என்னதான் தீர்வு?

அருந்ததியர் என்பதை தனி அடையாளமாக வைத்து அரசிலில் ஈடுபட வேண்டுமா?அல்லது இந்த முரண்பாடுகளை உள்ளுக்குள் சீர்திருத்திக்கொண்டு, பார்ப்பனர் உள்ளிட்ட ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டுமா? எது நீண்டகால நோக்கில் பயன் அளிக்கும்?

தலித்தியம் பேசுவோர் இன்று கவனத்தில் இருத்த வேண்டிய முக்கியமான கேள்வி இது.

- நாகூர் ரிஸ்வான்