தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகளிலும் ஒன்பது முறை தேர்தல் நாடகம் நடந்தும், பல்வேறு போராட்டங்கள் நடந்த பிறகும் தலைவர் பதவியை ஏற்றவர் இன்றுவரை யாரும் இல்லை. கவுண்டம்பட்டி உட்பட, உசிலம்பட்டி வட்டாரம் முழுவதும் இதுபோன்ற வன்கொடுமை அடக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன. இக்கொடுஞ்செயல்களைக் கண்டித்து, இந்தியா சுதந்திரம் பெற்றநாள் என்று கூறப்படும் ஆகஸ்ட் 15 அன்று காலை "தீண்டாமைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்குழு' சார்பில், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் திடலிலிருந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் உசிலம்பட்டி நோக்கி "தலித் சனநாயக உரிமை மீட்பு நடைபயணம்' புறப்பட்டது.

உரிமை மீட்புப் பயணத்தில் கொளத்தூர் மணி, பூ. சந்திரபோசு, குருவிஜயன்

பயணத்தின் நோக்கமான கீழ்க்கண்ட கோரிக்கைகளை விளக்கி ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன:

1. தலித் மக்கள் பத்தாண்டுகள் பதவியிலிருந்த பிறகே, ஒதுக்கப்பட்ட ஊராட்சிகள் சுழற்சி முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2. தலித் இயக்கத் தலைவர்கள் உசிலம்பட்டியில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த சனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும்.

3. ஊர்க்கட்டுப்பாடு எனும் பெயரில் தலித் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிக்கும் ஆதிக்கச் சக்திகளை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

4. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் அரசு நிதி, நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

நடைபயணக் குழுவினரை, தல்லாகுளத்திலுள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே காவல் துறை தடுத்து நிறுத்தி அனுமதி இல்லாததால் உங்களைக் கைது செய்கிறோம் என்றனர். கைது செய்யப்பட்டதும் தோழர்கள் அனைவரும் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர, அவர்களிடம் கூட்டமைப்பு அமைப்பாளர் ஆ. குரு விஜயன், பூ. சந்திரபோஸ், தி. தொல்காப்பியன், கொளத்தூர் மணி ஆகியோர் பயணத்தின் நோக்கம், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய போராட்டம், செயல்திட்டம் போன்றவை குறித்து விளக்கி உரையாற்றினர்.

பயணத்தில் கலந்து கொண்ட சுமார் 400 பேரையும் காவல் துறை கைது செய்து, மதுரை சின்ன சொக்கிக்குளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் சமுதாய மன்றத்தில் வைத்தது. அங்கு அனைத்து அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி உரையாற்றினர். ஆண்களும் பெண்களுமாய் எழுச்சிப் பாடல்கள் பாடினர். அடுத்து நாம் எடுக்க வேண்டிய பிரச்சாரத் திட்டங்கள் போன்றவற்றை பொறுப்பாளர்கள் பேசினர். கீரிப்பட்டியைச் சார்ந்த சுப்பையா என்பவர், ஆதிக்கச் சாதியினரால் அவர் பட்ட அடக்குமுறைகளை விவரித்தார். இந்நடைபயணத்தில், பாப்பாபட்டி கீரிப்பட்டியிலிருந்து 45 பேர்களும், கவுண்டம்பட்டியிலிருந்து 5 பேர்களும் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் உசிலம்பட்டி பகுதியிலிருந்து தலித் அல்லாதவர்களும், தலித் உரிமைக்குப் போராடும் சமூக நீதியாளர்களும், சனநாயக சக்திகளும் பெருமளவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகளாக இருந்தும், இந்த நாடு எங்களுக்கானது என்பது போன்ற போராட்டம் எதையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இதற்கு இந்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடம் மிகுந்த நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும். மாறாக, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்துக்கள் கோபப்படுகிறார்கள். காரணம் இதுதான்: இந்துக்களின் கருத்தியல்படி, தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தகைய அரசியல் உரிமையையும் கேட்கக்கூட அருகதையற்றவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டும் இந்துக்கள் ஏன் இதுபோல நடந்து கொள்கின்றனர்? டாக்டர் அம்பேத்கருடைய விளக்கம்தான் இதற்கு பதிலாகவும், தீர்வாகவும் இருக்க முடியும்:

“அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது என்று புரிந்து கொள்வதற்குப் பதில், தாழ்த்தப்பட்ட மக்களிடம் அதிகாரங்களை ஒப்படைத்து, தாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அதிகார வெறிகொண்டு ஒடுக்குவது போல, தாங்களும் ஒடுக்கப்படுவோம் என்று அஞ்சுகின்றனர். இந்துக்களின் இத்தகைய போக்கிற்குக் காரணம், இந்து மதக் கருத்தியல்தான். இது உள்ளவரை, எல்லா கொடுமைகளும் நடந்தே தீரும். இந்து மதக் கருத்தியல் ஒழிக்கப்பட்டால்தான், தாழ்த்தப்பட்ட மக்கள் உண்மையான அதிகாரத்தைப் பெற முடியும்.''

Pin It