தளபதி ஒண்டிவீரன்... இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையம். அக்காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

ஒண்டிவீரன் வரலாறு

வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியர்களும் கி.பி.1755 இல் முதல் போரைத் தொடுத்தனர். இப் போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டி யடித்தார் மன்னன் மாவீரன் பூலித்தேவனும், அவரது தளபதியான ஒண்டிவீரனும். அன்றைய காலகட்டத்தில், மன்னர் மாவீரன் பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

மன்னன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும் போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தனர் வெள்ளையர்கள். வெள்ளையர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்த்து அன்றைக்கு யுத்தம்செய்வது நினைத்துப் பார்க்கக்கூட முடியாத விஷயம் என்றே கூறலாம். இதனால், வெள்ளையர் களை அவர்களது பீரங்கியையே வைத்தே கதையை முடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினான் மன்னன் பூலித்தேவன்.

அந்த ஆற்றல்மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன். இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்குத் தன்னந்தனியாகச் சென்றான் ஒண்டிவீரன். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன்.

தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையும் நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப்  போட்டுக் கொண்டு பதுங்கிக் கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன். அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டி ஒன்றைத் தரையில் குத்தினான். ஈட்டியைத் தரையில் ஓங்கி குத்தும் போது ஒண்டிவீரனின் கையை பிளந்து கொண்டு அது மண்ணில் குத்தி நின்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அந்த இடத்திலேயே வலியோடு துடிதுடித்து கிடந்தார் ஒண்டிவீரன்.

ஆனால், ஒண்டிவீரனின் சபதம் வெற்றிப் படிகளை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை. எதிரியின் வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன், தனது கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயன்றார். ஆனால் முடியவில்லை. ஒரு வேளை குதிரை கனைத்து விட்டால் தனக்கும் ஆபத்து, தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து இடுப்பில் செருகியிருந்த வாளைத் தனது மற்றொரு கையில் எடுத்து தானே வெட்டிக் கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன். புயலுக்குச் சவாலாக குதிரையைக் கிளப்பிக் கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை. இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக் கான வீரர்களும் செத்து மடிந்தனர். ஒண்டி வீரனின் கை துண்டிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு துணுக் குறுகிறார் பூலித்தேவன்.

எப்படி உன் கை துண்டிக்கப்பட்டது? என்று கேட்க, இந்தக் கை துண்டானால் என்ன, நம் தாய் மண்ணை விட்டு எதிரிகளை விரட்டிவிட்டோமே, அதுவே போதும். இந்தக் கைக்கு பதிலாக தங்கக் கை செய்து தரமாட்டீரா என்ன? என்றாராம் ஒண்டிவீரன். போர்க்களத்தில் ஒண்டிவீரனுக்கு நிகர் அவனே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டதாக பூலித்தேவன்  பாராட்டினார். இந்த மண் தமிழனுக்குத்தான் சொந்தம் என எதிரிகளை விரட்டி விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767 இல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். கொரில்லாப் போர் முறையிலும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன்.

போர்த்தந்திரங்கள் முற்றிலும் தெரிந்தவர். போர்க்களம் புகுந்துவிட்டால் வெற்றி வாகை சூடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர். நெற்கட்டான்செவல், திருநெல்வேலி, களக்காடு, கங்கைகொண்டான், வாசுதேவநல்லூர், $வில்லிப் புத்தூர் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் எல்லாம் வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியவன் ஒண்டிவீரன். பூலித்தேவனுக்குப் பிறகும் கூட, அவரது மகன்களுக்கு உதவியாக இருந்து புதுக்கோட்டைப்போர் முதலியவற்றில் வெள்ளை யர்களை எதிர்த்து வெற்றிவாகை சூடியவன். இவனைப் பற்றி வீரகாவியமே பாடலாம். நொண்டிச் சிந்து, ஒண்டிவீரன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவையே அவனது வீரத்திற்குச் சாட்சி. ஒண்டி வீரனின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஈடு இணை எதுவுமே இல்லை. தளபதி ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது.

சுவாமி ஒண்டிவீரன் மகாராஜ் ஜீ

தமிழ்நாட்டில் உள்ள அருந்ததிய அமைப் புகள் சமீபகாலமாக ஒண்டிவீரன் என்னும் தளபதியை தங்கள் இனத்திற்கான தலைவனாகவும் இளைஞர்களை எழுச்சிப்படுத்தும் நாயகனாகவும் முன்னிறுத்தி வருகின்றார்கள். அருந்ததியர்களின் சாதி இழிவு ஒழிப்பு, விடுதலை என்பது அம்பேத்கர், பெரியார் கொள்கைகளின்மூலம் மட்டுமே சாத்தியம். சாதியப் படிநிலையில் கடைசி நிலையில் இருப்பவர்கள் அருந்ததியர்கள் தான். இந்த மக்கள் கடவுள் மற்றும் மதம் சார்ந்த பல மூடநம்பிக்கையில் அதிக நம்பிக்கை உள்ளவர்களாகவும் விழிப்புணர்வு இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். கிராமங் களில் நிலம் இல்லாத ஏழை விவசாயக் கூலிகளாகவும், நகரங்களில் துப்புரவுத் தொழிலாளர் களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்குக் காரணம் இந்துமதமும், மனுதர்ம சனா தானச் சட்டங்களும்தான். அருந்ததியர்களை முன்னேற்றவும், அவர்களின் மேல்உள்ள சாதிய இழிவை ஒழிக்க பல அமைப்புகள் அருந்ததியர்கள் மத்தியில் பணி செய்கின்றன. இந்த அமைப்புகள் அனைத்தும் அம்பேத்கரின் கொள்கைகளின்படி நடப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் தற்போது அம்பேத்கரைக் காட்டிலும் தங்கள் சாதியைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களால் மட்டுமே அருந்ததியர்களின் விடுதலை சாத்தியம் என்ற எண்ணத்தில், மாமன்னர்களையும், தளபதிகளையும் முன்னிறுத்தியுள்ளார்கள்.

“சாதிய உருவாக்கச் செயல் முறை என்பது மேலிடத்தோரைப் பார்த்துக் கீழிடத்தோர் ஓழுகுதலே என்னும் செயல் முறைதான்.”- தோழர் அம்பேத்கர்

இதுபோன்ற பார்ப்பனியத்தின் பார்த்தொழுகுதல் முறையைத்தான் அருந்ததிய அமைப்புகள் பின்பற்றுகிறார்கள். ஆதிக்க ஜாதிகட்சிகள், ஜாதி அமைப்புகள் அவரவர் ஜாதியை சேர்ந்த மன்னர்களை வீரர்களை முன்னிலைப்படுத்து வதைப் போன்று - அருந்ததியர்களும் ஒண்டி வீரனையும் அருந்ததியர்களின் ஜாதிய அடையாள மாக முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதைத் தவிர வேறு காரணம் ஏதும் இல்லை.

“நான் என்னால் முடிந்தவரை இந்தச் சமூகச் சக்கரத்தை முன்னோக்கி இழுத்து வந்துள்ளேன். உங்களால் முன்னோக்கி இழுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஒருக்காலும் சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும் வேலையைச் செய்யாதீர்கள்.”- தோழர் அம்பேத்கர்

ஆனால் அம்பேத்கரைப் பின்பற்றும் அமைப் புகள் பார்ப்பனியத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த தளபதிகள், மன்னர்களை முன்னிலைப்படுத்தி அருந்ததியச் சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்ற வேலையைத்தான் செய்கிறார்கள்.

சமூகநீதி, உள்இடஒதுக்கீடு, சமூகமுன்னேற்றத் திற்காகப் போராடியவர்கள் இன்று ஒண்டிவீரன், மதுரைவீரன், குயிலி போன்றவர்கள் நம் இனத்தின் விடுதலை விடிவெள்ளிகள் எனக்கூறி அருந்ததிய சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச்செல்கிறார்கள்.

ஒண்டிவீரன் இந்த அருந்ததியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கோ, சாதி இழிவு ஒழிப்பிற்கோ ஏதாவது செய்துள்ளாரா? என்றால் ஊசிமுனை அளவுகூட எதுவும் செய்யவில்லை. ஒண்டிவீரன் பூலித்தேவனின் முக்கியத் தளபதியாக இருந்ததாகக் கூறுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் ஜாதிய இழிவும் தீண்டாமை ஒடுக்குமுறைகளும் அதிக மாகவே இருந்துள்ளது. அவைகளைப் பார்ப்பனர் களின் ஆணைப்படி வலிமையாகக் கடைபிடித்த வர்கள்தான் தமிழ் மன்னர்கள். அதற்குத் துணையாகத் தளபதிகள் இருந்தார்கள்.   

தீண்டாமையை ஒழிக்க நினைத்தவர்கள் ஆங்கிலேயர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு பஞ்சமி நிலம், கல்வி, மருத்துவம் என பலநன்மைகளைச் செய்தவர்கள் வெள்ளையர்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் பார்ப்பனிய சனாதான தர்மத்தைச் சீர்குலைக்கிறார்கள் என்பதாலேயே பார்ப்பனர்களும், மன்னர்களும் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள்.

குற்றால அருவியில் கடைபிடித்துவந்த தீண்டாமை ஒழிப்பு, தாழ்த்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை அக்கரகாரத்தின் வழியாக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று அந்தத் தாழ்த்தப்பட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றியவர்கள் ஆங்கிலேயர்கள். பார்ப்பனத் தெரு வழியாக அருந்ததியப் பெண்ணைக் கொண்டு சென்றதற்காக, பார்ப்பன வாஞ்சிநாதன் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றார்.

ஒண்டிவீரன் போன்ற தளபதிகளை, மன்னர்களை ஆதரிப்பதென்பது பார்ப்பன வாஞ்சிநாதனை ஆதரிப்பது போன்றதாகும். ஒண்டிவீரனை முன்னெடுப்பது பார்ப்பனிய இந்து சனாதான தர்மத்தை முன்னெடுப்பதாகும்.

வரலாறு தெரியாதவன் வரலாறு படைக்கமுடியாது

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த ஒண்டிவீரன் சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மறைக்கப்பட்டுள்ளார். அந்த வரலாறுகளை மீட்கிறோம் என்கிறவர்கள் அம்பேத்கர் பார்ப்பனியச் சனாதானத்தை எதிர்க் காத எவரையும் ஏற்பதில்லை என்பதை மறந்து விடுகிறார்கள். பார்ப்பனியச் சனாதானத்தை எதிர்ப்பதே அம்பேத்கர், பெரியாரின் அளவுகோல்.

இந்து சனாதானத்தை எதிர்த்துப் போராடி யிருந்தால் ஒண்டிவீரன் போற்றுதலுக்கு உரியவர் தான். ஆனால் ஒண்டிவீரன் சமூகப்போக்கில் மனு தர்ம சாஸ்திரச் சட்டங்களைக் கடைபிடித்து வாழ்ந்தவரை என் இனத்தின் அடையாளம் என்பது அந்த இனத்தை அழிவுக்கு இழுத்துச்செல்லும்.…

“சுவாமி மகாராஜா ஒண்டிவீரன்ஜீ” என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். தனது பரிவாரங்களுடன் சேரிகளுக்குள் நுழையத் திட்டம் தீட்டியுள்ளது. அவரைக் கடவுளாக்கி நம்மை அழிக்கத் தயாராகி விட்டது. இதுவரை அருந்ததியர்களின் பொருளா தாரத்தை அழித்து அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவிடாமல் தடுப்பது மதுரை வீரன், அண்ணமார் கோவில்கள்தான். அம்பேத்கரை சேரிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் எல்லைச்சாமி மதுரைவீரன்தான். ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பல் அருந்ததிய மக்களின் பகுதிகளில் நுழைவதற்கு மாமன்னர் ஒண்டிவீரன் அவர்களுக்குக் குலசாமியாக இருப்பார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த முயற்சி எடுத்த தற்கு அருந்ததிய அமைப்புகளே காரணம். அருந்ததிய அமைப்புகள் மட்டுமல்ல; கவுண்டர், செட்டியார், வன்னியர், தேவர் என அனைத்துப் பிற்படுத்தப்பட்ட  ஜாதி அமைப்புகளுமே இந்தத் தவறைச் செய்கின்றன. ஜாதிக்கொரு மன்னரைத் தேர்ந்தெடுத்து, அவரின் புகழ் பாடிக்கொண்டி ருக்கிறோம். இந்து வெறி அமைப்புகள் சுலபமாக, அந்த மன்னர்களையே கடவுளாக்கி நம்மை அழிக்கத் திட்டமிடுகிறார்கள். வடமாநிலங்களில் இந்தத் தந்திரத்தால்தான் வெற்றி பெற்றார்கள். அந்தத் தந்திரத்தை இன்று அருந்ததியர்கள் வரை நீட்டித்திருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டத்தை முறியடிப் போம். நிரந்தரமாக நாம் வெல்ல, ஒண்டிவீரர்களைக் கைவிட்டுவிட்டு, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கருத்துக்களைப் படிப்போம், பரப்புவோம்.

Pin It