பெரியார்மீது சமீபகாலமாக இரண்டு தரப்புகளிடமிருந்து தீவிரமான விமர்சனங்கள் முன் வைக்கப் படுகின்றன. ஒன்று பெரியார் மீது வைக்கப்படுகின்ற தலித்திய விமர்சனம். மற்றொன்று தமிழ்தேசியக் கண்ணோட்டத்தோடு வைக்கப்படுகின்ற விமர்சனம்.
முதலில் தலித் தரப்பிலிருந்து வைக்கப்படுகின்ற, பெரியார் எதிர்ப்பு தலித் எழுத்தாளர்கள், தலித் அறிவுஜீவிகள் வைக்கக்கூடிய விமர்சனங்களை, அந்த விமர்சனங்களுடைய தன்மைகள் குறித்துப் பேசலாம் என்று நினைக்கிறேன். பெரியார் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.
1.பெரியார் இடைநிலை ஜாதிகளின் பிரதிநிதிதான். அவர் இடைநிலை ஜாதிகளின் தலைவர்தான். அவர் தலித்துகளுக்கான தலைவர் இல்லை.
- பெரியார் ஜாதி சங்க மாநாடுகளில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டதன் மூலம் இடைநிலை ஜாதிகளின் உறுதியாக்கத்திற்குத் துணை புரிந்தார். இந்த ஜாதி அமைப்பிற்குப் பார்ப்பனர்கள்தான் காரணம் என்று மீண்டும் மீண்டும் பெரியார் சொன்னதனால் இடைநிலை ஜாதிகள் இந்த ஜாதி ஆதிக்கப் பழியிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.
3.பெரியார் வைக்கத்தில் போராட்டம் நடத்தியதுபோல் இங்கே தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் எதையுமே நடத்த வில்லை. அதேபோல பெரியார் முன்வைத்தது ஒரு பெரும்பான்மை வாதம். அதாவது சிறுபான்மையினராக இருக்கக்கூடிய பார்ப்பனர்கள் அதிகாரத்திலே தங்களுடைய மக்கள் தொகைக்கு மேல் அதிகாரத்தைக் கைப்பற்றியதால் பார்ப்பனரல்லாதோர் அந்த அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்று பெரியார் சொன்னது ஒரு பெரும்பான்மைவாதம். அந்தப் பெரும்பான்மைவாதம்தான் இடைநிலை ஜாதிகளுடைய ஆதிக்கத்திற்கு இன்று துணை போகிறது. அது சிறுபான்மையினராக இருக்கக்கூடிய தலித்துகள் மீது ஒடுக்குமுறை செலுத்துவதற்கும் காரணமாக இருக்கிறது. அந்த வகையிலே பெரியார் முன்வைத்த பார்ப்பன எதிர்ப்பு என்பது தலித்துகள் மீது ஒடுக்குமுறை நிகழ்வதற்குக் காரணமாக இருக்கிறது.
- பெரியார் அயோத்திதாசப் பண்டிதரை மறைத்தார். பெரியார் தமிழக தலித் தலைவர்களை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தார். பெரியாருடைய அரசியல் காரணமாகத்தான் தமிழகத்திலே தலித் அரசியல் வளராமல் போனது.
இவையெல்லாம் பெரியார் மீது தலித் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள். நான் தலித் தரப்பு என்று சொல்லுவது எல்லாத் தலித் அமைப்புகளையும் அல்ல. ஒரு சிறுபான்மை தலித் அறிவு ஜீவிகள் தொடர்ச்சியாக இத்தகைய குற்றச்சாட்டைக் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயமாகவே பார்க்கலாம்.
பெரியார் இடைநிலை ஜாதிகளுக்கும் தலைவர்தான்
முதலிலே பெரியார் இடைநிலை ஜாதிகளுடைய தலைவரா?, இடைநிலை ஜாதிகளுடைய பிரதிநிதியா? என்று கேட்டால் நிச்சயமாகப் பெரியார் இடைநிலை ஜாதிகளுடைய தலைவரும் கூடத்தான். இடைநிலை ஜாதிகளுடைய பிரதிநிதியும் கூடத்தான். ஏனென்றால் பெரியாருடைய அரசியல் மிகமிக வெளிப்படையானது. அவர் பார்ப்பனரல்லாதோர் அரசியல், அதாவது பார்ப்பனரல்லாதோர்தான் திராவிடர்கள் என்று சொல்லி அதன் அடிப்படையிலே ஒரு அரசியலைக் கட்டமைக்கிறார்.
அப்படிக் கட்டமைக்கிற பொழுது ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் மேலாக இங்கே ஜாதிய முறை இருக்கிறது. இந்த ஜாதிய முறையைக் காப்பாற்றுவதாக என்னவெல்லாம் இருக்கிறது என்று சொன்னால் வேதம் இருக்கிறது, இதிகாசம் இருக்கிறது, இந்து மதம் இருக்கிறது, புராணங்கள் இருக்கின்றன, அது தொடர்பான இலக்கியங்கள் இருக்கின்றன. இந்த ஜாதியப் படிநிலை அமைப்பைக் காப்பாற்றக்கூடியது பார்ப்பனியம். அதைத் தொடர்ச்சியாகக் காப்பாற்றிக் கொண்டு வருபவர்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். இந்தப் பார்ப்பனர்கள்தான் அதிகாரத்தின் படிநிலையிலே அதிகம் இருப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே பார்ப்பனரல்லாதோர் பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்தி தமக்கான இடத்தினைப் பெறுவது என்கின்றதான ஒரு அரசியலைப் பெரியார் முன்வைத்தார் என்கிற அடிப்படையிலே பெரியார் இடைநிலை ஜாதியினர், தலித்துகள் உள்ளிட்ட பார்ப்பனரல்லாதோருக் கான தலைவராக இருந்தார். அவர் வெறும் இடைநிலை ஜாதிகளுக்கான தலைவர் மட்டுமல்ல. அவர் இடைநிலை ஜாதிகளுக்கான தலைவரும் கூடத்தான்.
இன்னொன்று பெரியார் ஜாதிச் சங்க மாநாடுகளிலே கலந்துகொண்டார், அதன்மூலம் இடைநிலை ஜாதிகளின் ஆதிக்கத்துக்கு உதவினார் என்கிற விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.
‘சாதி இன்று’ என்றொரு புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. பெரியார் மீது தலித்திய நோக்கிலிருந்து விமர்சனம் வைக்கக்கூடிய தோழர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், அ.ஜெகநாதன், அன்புச்செல்வம், ஜெ.பாலசுப்பிர மணியம், இலட்சுமணன் போன்ற தோழர்கள் எல்லாம் இணைந்து ஒரு ஆய்வறிக்கையாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தார்கள். அந்தப் புத்தகத்தை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம். முதல்பகுதி, காலனியாதிக்கக் கால கட்டத்தில் ஜாதி எப்படி புதிய பரிமாணத்தைப் பெற்றது என்பதை விளக்குகிறது.
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாருக்கு, தாங்கள் ஆளும் இந்தியா என்ற நிலப்பரப்பையும் இந்தியர்களையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அதற்காகப் பல வழி முறைகளைக் கையாண்டார்கள். உதாரணத்துக்கு ‘சென்சஸ்’ எனப்படும் மக்கள்தொகைக் கணக் கெடுப்பு. மேற்கத்திய நாடுகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முறை அறிமுகமான போது, அது பிச்சைக்காரர்கள், அனாதைகள் போன்ற சமூகத்துக்கு வெளியில் வசிப்பவர்களைக் கணக் கெடுப்பதாகத்தான் இருந்தது. ஆனால் இந்தியாவில் ‘சென்சஸ்’ முறை நடைமுறைக்கு வந்தபோது ஜாதி, மதம் போன்ற காரணிகள் இணைந்துகொண்டன.
முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இந்துக்கள் எனப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது, ‘யாரையெல்லாம் இந்துக்கள் என்ற வரையறைக்குள் சேர்க்கலாம்’ என்ற விவாதம் நடைபெற்றது. தாழ்த்தப்பட்டோரை இந்துக்கள் என்று சொல்லலாம், யாருக்கெல்லாம் பூணூல் அணிவிக்கும் உரிமை உண்டு, சமபந்தி போஜனத்தை ஏற்றுக்கொள்ளலாமா என்றெல்லாம் விவாதங்கள் நடைபெற்றன. ஆரிய சமாஜம் ‘சுத்தி தான் இயக்கம்’ என்ற இயக்கத்தை முன்னெடுத்துப் பலரையும் இந்துமதத்துக்குள் கொண்டுவந்தது.
அதேபோல் வருணாசிரம அமைப்பு என்பதும் புத்துருவாக்கம் பெற்றது. ஒவ்வொரு ஜாதியினரும் வருணாசிரம அடுக்குகளில் தங்களுக்கான இடத்தைத் தேடத்தொடங்கினர். தாங்கள்தான் வைசியர், தாங்கள்தான் சத்திரியர் என்று உரிமை பாராட்டினார்கள். வன்னியகுல சத்திரியர், நாடார்குல சத்திரியர், வைசிய செட்டியார்கள் என்றெல்லாம் புது அடையாளங்களைச் சூட்டிக் கொண்டார்கள். இதுகுறித்த எந்த விமர்சனங்களும் இல்லாமல் பெரியார் ஜாதிச் சங்க மாநாடுகளில் கலந்துகொண்டார் என்பதுதான் ‘சாதி இன்று’ புத்தகம் முன்வைக்கும் விமர்சனம். நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அந்தப் புத்தகத்தில் இரண்டே இரண்டு பக்கங்கள்தான் பெரியாரைப் பற்றி எழுதுவதற்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது. அதிலும் முற்றிலும் எதிர்மறை விமர்சனம்தான்.
“வட்டார ஜாதிகள், (வட்டார ஜாதிகள் என்று இங்கே சொல்வது இடைநிலை ஜாதிகள்) மறுகட்டு மானத்திற்குச் செல்வதை விமர்சிக்காமலே அல்லது உறுதியாக மறுத்தொதுக்காமல் ஜாதிச்சங்கங்களின் மாநாடுகளில் பெரியார் கலந்து கொண்டார்”
என்று அந்தப் புத்தகம் ஒரு விமர்சனத்தை முன்வைத்தது. அதற்குப் பிறகு பார்த்தோமென்றால்,
திராவிடக் கட்சிகளுடைய ஆட்சி, காமராஜர் காலகட்டமே தலித்துகளுக்கு எதிரான ஒரு ஆட்சி தான். அங்கு மறுபடியும் ஜாதி உறுதியாக்கம் செய்யப்பட்டது. திராவிடக் கட்சிகளுடைய ஆட்சி வந்ததற்குப் பிறகு சாலை போடப்பட்டது, உள் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது, சுகாதார வசதி ஏற்படுத்தப்பட்டது. மின்சாரம் செய்யப்பட்டது. ஒப்பந்தப் பணிகள் நடந்தன. பல்வேறு வகைப்பட்ட வாரியங்கள் தொடங்கப்பட்டன. இவை அத்தனையுமே இடைநிலை ஜாதிகளுக்குப் பணம் போவதற்காகவும், அதிகாரத்தில் இடைநிலை ஜாதியினர் வருவதற்கும்தான் கொண்டு வரப்பட்டன. தலித்துகளுக்கு எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் அந்த புத்தகத்துடைய சாரம்சம்.
இடைநிலை ஜாதிகளின் இழிவை இடித்துரைத்தார்
ஜாதிச்சங்க மாநாடுகளில் பெரியார் கலந்து கொண்டார் என்பது உண்மைதான். அவர் இடைநிலை ஜாதி சங்கங்களுடைய மாநாடுகளிலும் கலந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட ஜாதிச்சங்க மாநாடுகளிலும் கலந்து கொண்டார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு இருக்கிறதில்லையா அந்த ஜாதிகள் வருணாசிரம கட்டமைப்பிலே தங்களுக்கான இடத்தை எது என்று தேடிக் கொண்டிருந்தபோது அது பற்றி எந்த விமர்சனமும் வைக்காமல் பெரியார் கலந்து கொண்டார் என்பது ரொம்ப அபத்தமான, எந்த அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டு.
சமீபத்தில் தோழர் சுப.குணராஜன் ஒரு புத்தகத்தைத் தொகுத்துக் கொண்டுவந்திருக்கிறார். 'நமக்கு ஏன் இந்த இழிநிலை' என்ற புத்தகம். பெரியார் ஜாதிச்சங்க மாநாடுகளில் பேசியதையும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளில் பேசிய உரைகளையும் தொகுத்து ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்துள்ளார். அந்தப் புத்தகத்தின் முதல் பகுதியும் 'சாதி இன்று' புத்தகத்தைப் போலவே, காலனி ஆதிக்கக் காலக்கட்டத்தில் எப்படி ஜாதி என்பது இங்கே மறுகட்டமைப்பு பெற்றது என்பதை விரிவாக விளக்கக்கூடிய ஒரு புத்தகம். அதன் பிற்பகுதி ஜாதி குறித்த பெரியாரின் அணுகுமுறைகளை, அவரது பேச்சுகள் மற்றும் எழுத்துகள் மூலம் அணுகுகிறது.
எல்லா ஜாதிச் சங்க மாநாடு களிலுமே பெரியார் என்ன பேசினார் என்று சொன்னால், ரொம்ப சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால்,
“உங்களுடைய ஜாதிக்கு சில உரிமைகள் வேண்டுமென்று சொன்னால் நீங்கள் ஒரு சங்கம் வைத்து ஒரு மாநாடு நடத்தி உங்களுடைய கோரிக்கைகளை வைக்கிறதில் எந்தத்தவறும் கிடையாது. அதே நேரத்தில் நீங்கள் க்ஷத்ரியர் அல்லது வைசியர் என்று நீங்கள் சொல்லிக் கொள்வது எனக்கு மேலே பார்ப்பான் ஒருவன் இருக்கான் என்பதை ஒத்துக் கொள்வதுதான். நீங்கள் ஒரு வைசியர் என்றும் க்ஷத்ரியர் என்றும் சொல்வது, அதேபோல உங்களுக்கு கீழே ஒரு ஜாதி இருக்கிறது, அடிமைப் படுத்துவதற்கு ஒரு ஜாதி இருக்கிறது என்று ஒத்துக் கொள்வதற்காகத்தான். திருப்பி, திருப்பி உங்களை க்ஷத்ரியர் என்றும் வைசியர் என்றும் சொல்லிக் கொள்கிறீர்கள். இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உங்களுக்கு மேலேயும் ஒரு ஜாதியும் கிடையாது, கீழேயும் ஒரு ஜாதியும் கிடையாது. வைசியர் என்றும் க்ஷத்ரியர் என்றும் உங்களை அழைத்துக் கொள்வது உங்கள் இழிநிலையை உறுதி செய்வதுதான்” - இதுதான் பெரியார் ஜாதிச்சங்க மாநாடுகளில் பேசும் உரைகளின் சாராம்சம்.
எந்த ஜாதிச்சங்க மாநாடாக இருந்தாலும் சரி , அது வன்னியர் சங்க மாநாடாக இருந்தாலும் சரி, நாடார் சங்க மாநாடாக இருந்தாலும் சரி, செங்குந்தர் சங்க மாநாடாக இருந்தாலும் சரி எல்லா மாநாடுகளிலும் தொடர்ச்சியாக இதைத்தான் பெரியார் பேசியிருக்கிறார்.
1931-இல் செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாடு என்று ஒன்று நடக்கிறது. அது பெரியாராலோ பெரியார் இயக்கத்தாலோ நடத்தப்பட்ட மாநாடு அல்ல. அந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார். அந்த மாநாட்டிலே போடக்கூடிய தீர்மானம் பற்றி பெரியார் குடிஅரசில் எழுதுகிறார். “தீர்மானங்கள் சாதாரணத் தீர்மானங்கள்தான். பெரிய புரட்சிகரமான தீர்மானங்கள் என்று சொல்லிவிட முடியாது. இருந்தாலும் ஒரு சுயமரியாதை மகாநாடு என்ற பெயர்ல ஒரு மாநாடு நடத்துவது என்பது ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்தான்” என்று பெரியார் எழுதுகிறார்.
அப்படி பெரியாரால் பாராட்டப்பட்ட தீர்மானங்களைப் பார்ப்போம். செட்டிநாட்டுப் பகுதிகளில் ஆதிதிராவிடருக்கு என்று பல கொடுமைகள் இழைக்கப் படுகின்றன. அந்தக் கொடுமைகளைக் கண்டறிவதற்காக ஒரு கமிட்டி அமைப்பது என்று ஒரு தீர்மானம் போடுகிறார்கள். அதே மாதிரி ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, முனிசிபால்டி இந்தமாதிரியான இடங்களில் இருக்கக்கூடிய காலி இடங்களை கள்ளர், வல்லம்பர், முகமதியர், ஆசாரியர், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்களைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும் என்று ஒரு தீர்மானம் போடுகிறார்கள்.
அதே மாதிரி ஆதிதிராவிடர்கள் விடுதி கட்டுவதற்காக ஒருவர் பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். பதினைந்து ஏக்கர் நிலமும் கொடுத்திருக்கிறார், அதை வாங்கிக் கொண்டு முனிசிபால்டி ரொம்ப காலமாக கட்டாமலே இருக்கிறது இது கண்டிக்கத்தக்கது என்று செட்டிமார் நாட்டு மாநாட்டிலே தீர்மானம் போடுகிறார்கள்.
செட்டிமார் நாட்டு மாநாட்டில் இப்படியான தீர்மானம் போடுகிறார்கள் என்றால், அது பெரியாருடைய இயக்கத்தால் விளைந்த விளைவு இல்லையா? பெரியார் இடைநிலை ஜாதிகளிடம் உரையாடல் நிகழ்த்தாமல் இந்த மாதிரியான தீர்மானங்கள் எல்லாம் போடப்படுவதற்கு என்ன மாதிரியான காரணங்கள் இருக்க முடியும்? பெரியாரைப் பொறுத்த வரைக்கும் தொடர்ச்சியாக ஜாதி இல்லை, ஜாதி ஒழிய வேண்டும் என்று தலித்துகள் கிட்ட மட்டுமே போய் பேசவில்லை. இடை நிலை ஜாதிகள்கிட்ட போய் பேசினார். யார் ஜாதி ஆதிக்கம் செய்து கொண்டிருந்தார் களோ அவர்களிடம் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார். 1973ல் இறப்பது வரை பெரியார் பேசிய சாராம்சம் என்னவென்று சொன்னால் “நீ சூத்திரன், சாஸ்த்திரப்படி நீ வேசிமகன், நீ பார்ப்பனனுக்கு அடிமை” என்பதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார். எந்த ஜாதியும் பெருமிதத்துக்குரிய ஜாதி, ஆண்ட ஜாதி என்று அவர் சொல்லவேயில்லை, அது ஜாதிச்சங்க மாநாடுகளாக இருந்தாலும்கூட.
பெரியார் இடைநிலை ஜாதிகளோட வளர்ச்சிக்காகத்தான் தொடர்ச்சியாகப் பாடு பட்டார் என்ற வாதத்தை ஒரு தர்க்கத்திற்காக நாம் ஒத்துக் கொண்டோமென்றால், இந்த ஜாதி வெறி வளர்வதற்குப் பெரியார்தான் காரணமென்று சொன்னோமென்றால் இன்று இருக்கக்கூடிய ஆதிக்க ஜாதிச் சங்கங்களை எடுத்துக் கொள்வோம். அந்த ஆதிக்க ஜாதிச் சங்கங்களின் இயல்பு என்னவாக இருக்கிறது? இதனுடைய அடிப்படை என்னவாக இருக்கிறது.?
ஒன்று, இந்த ஆதிக்க ஜாதிச் சங்கங்கள் இடஒதுக்கீடு அப்படிங்கிற விஷயத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் ஒரு பக்கம் தங்களை ஆண்ட ஜாதியாகச் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கம் தங்களை பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்று சொல்லி இடஒதுக்கீடு கேட்கிறார்கள். அதே நேரத்தில் தலித்து களுடைய இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்வதில்லை.
இரண்டாவது இந்து மதத்தையோ, பார்ப்பன ஆதிக்கத்தையோ எங்கேயுமே அவர்கள் விமர்சிப்பதேயில்லை. மூன்றாவது திராவிடக் கருத்தாக்கம், திராவிட இயக்கம் என்பதையே முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள். இந்த ஜாதி அமைப்புகள் திராவிட அரசியலைவிட தமிழ்த்தேசிய அரசியல், இந்துத்துவ அரசியலுடன்தான் நெருக்கமாக இருக்கிறார்கள்.
அடுத்து, எல்லா ஜாதி அமைப்புகளுமே தங்கள் வரலாறு என்று 'ஆண்ட பரம்பரை' வரலாற்றை முன்வைக்கின்றன. கட்டபொம்மன், மருது சகோதரர், ராஜ ராஜ சோழன், பெரும்பிடுகு முத்தரையர் என்று மன்னர்களைத் தங்கள் ஜாதிக்காரர் களாகவும் முன்வைக்கிறார்கள். இவை எல்லாமே பெரியாரியத்துக்கு எதிரானவை. பெரியார் வரலாற்றுப் பெருமிதங்களையோ ஆண்ட பரம்பரைக் கற்பனைகளையோ தமிழ் மன்னர்கள் புகழ் பாடுவதையோ ஏற்றுக்கொண்டதில்லை. இட ஒதுக்கீடு என்று பார்த்தால், பார்ப்பனர்களுக்கும் அவர்கள் எண்ணிக்கைக்கேற்ற பிரதிநிதித் துவத்தை வலியுறுத்தினாரே தவிர, இந்த ஆதிக்க ஜாதிச்சங்கங்களின் இரட்டை வேட இட ஒதுக்கீட்டு நிலையை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
நீங்கள் இப்போ இருக்கக்கூடிய ஆதிக்க ஜாதிச் சங்கத்துடைய போஸ்டர், பேனர் களைப் பார்த்தால் அங்கே பசும்பொன் முத்துராமலிங்கம் இருப்பாரு, காமராஜர் இருப்பாரு, வ..உ.சி இருப்பாரு, பெரும்பிடுகு முத்தரையர், பூலித்தேவன், மருது சகோதரர்கள் போன்ற பழைய மன்னர்கள் இருப்பாங்க. எங்கேயாவது ஆதிக்க ஜாதிச் சங்கத்தினுடைய அடையாளமாகப் பெரியார் முன்னிறுத்தப்பட்டிருக் கிறாரா? கிடையவே கிடையாது.
ஏன் என்று சொன்னால் இன்றைக்கு இருக்கக் கூடிய ஜாதிச்சங்கங்கள் என்பது தங்களுடைய ஜாதி ஆதிக்கத்தை உறுதி செய்யக்கூடிய ஜாதிச் சங்கங்களாக இருக்கின்றன. அவர்களைப் பொறுத்த வரைக்கும் நேரடியாகவே தலித்களுக்கு விரோதியாக இருக்கிறார்கள். தலித்களுடைய ஜாதிச் சங்கங்களிலே, அல்லது தலித் அமைப்புகளிலேதான் பெரியார் படம் தொடர்ச்சியாக இடம் பெறுகிறது என்பதை நாம் பார்க்க முடியும்.
இன்னொரு விஷயம் பெரியார் பார்ப்பனர்கள்தான் ஜாதியமைப்புக்குக் காரணம் என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அதனால் தான் இடைநிலை ஜாதிக் கொடுமைகள் பற்றி அவர் பேசவே இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு.
அயோத்திதாசப்பண்டிதரை எடுத்துக் கொள்வோம். அவர் ‘திராவிடர்’ என்கிற வரையரையைப் பறையர்களுக்கு மட்டும்தான் வைக்கிறார். பூர்வ பெளத்தர், திராவிடர் என்றெல்லாம் அவர் சொல்லக் கூடிய வரையறை என்பது பறையர்களுக்கு மட்டும்தான். ‘பூர்வ பெளத்தர்’ என்று அவர் சொல்லும்போது அதிலே நாவிதர்கள், வண்ணார்கள் இவர்களைச் சேர்த்துக் கொள்கிறார். அதே நேரத்தில் சக்கிலியர்கள், விறலிகள், தோட்டிகள் இவர்களையெல்லாம் விலக்கி வைக்கிறார். இவர்கள் எல்லாம் பூர்வீக பெளத்தர் கிடையாது என்கிறார்.
ஜாதியிலே இரண்டு வகை சொல்கிறார். தாழ்த்தப்பட்ட ஜாதி, இயல்பிலேயே தாழ்ந்த ஜாதி என்கிறார். விறலிகள், தோட்டிகள் சக்கிலியர்கள் இயல்பிலேயே தாழ்ந்த ஜாதிகள், பறையர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதி என்கிறார். பறையரை முதன்மைப்படுத்தப்பட்ட வாதமாக அயோத்தி தாசப்பண்டிதரோட வாதம் இருக்கிறது. எனவே அவர் முழுக்க முழுக்க பறையர் ஜாதியத்திற்கு அடித்தளமிட்டார் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டால் ‘அயோத்திதாசர் ஆய்வுகள்’ புத்தகத்தில் ராஜ்கவுதமன் இதைக்குறித்து விளக்கும்போது, ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கிறார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை பறையர்கள், பள்ளர்கள், அருந்ததியர்கள் எனப்படும் தாழ்த்தப் பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படிங்கிற ஒரு தனித் தொகுதிக்குள் எப்ப வந்தாங்க. இந்தியா முழுக்கவே தாழ்த்தப்பட்ட மக்கள் தனித்தனியாக ஜாதிகளாத்தான் இருந்தாங்க. அப்ப இவங்களை ஒரு தொகுதிக்குள், ஒரு செக்மன்ட்டுக்குள் கொண்டு வரணும்ங்கிற விவாதம் அரசியல் சட்ட நிர்ணய அவையில் நடக்குது.
அம்பேத்கர் இரண்டு விதமான பெயர்களை, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கப் பயன் படுத்தலாம்னு பரிந்துரைக்கிறார். ஒன்று ‘நான் கேஸ்ட் ஹிண்டுஸ்’ (ஜாதியற்ற இந்துக்கள்) என்று அவர்களை அழைக்கலாம் அல்லது ‘பிராட்டஸ்டன்ட் ஹிண்டுஸ்’ என்று அழைக்கலாம். ‘பிராட்டஸ்டன்ட் கிறிஸ்டின்’ இருக்கிற மாதிரி ‘பிராட்டஸ்டன்ட் ஹிண்டுஸ்’ என்று அழைக்கலாம் என்கிறார். இறுதியில் ‘செட்யூல்ட் கேஸ்ட்’, (பட்டியலின மக்கள் அல்லது அட்டவணை ஜாதிகள்) என்று தாழ்த்தப்பட்ட மக்களை அழைக்கலாம் என்று முடிவாகிறது. இதெல்லாம் நடந்தது 1900 லிருந்து. அயோத்திதாசர் காலத்தில் பட்டியலின ஜாதிகள் என்பது கிடையவே கிடையாது. பறையர், பள்ளர், அருந்ததியர்களை ஒன்றிணைத்து ஒரு பொதுவான அடையாளமோ, பொதுவான அரசியலோ உருவாகவேயில்லை. எனவே அயோத்திதாசர் தன் காலத்திலிருந்து, அந்தச் சூழலில் இருந்து தன்னுடைய பறையர் ஜாதியைச் சார்ந்து தன்னுடைய அரசியலை முன்வைக்கிறார். இது ராஜ்கவுதமன் வைக்கக்கூடிய ஒரு வாதம். உண்மையிலே இது ஒரு நியாயமான வாதம்தான்.
இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையை வைத்துக் கொண்டு நாம் கிட்டத்தட்ட ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்த ஒரு அரசியல் செயல்பாட்டை நாம் விமர்சனத்திற்கு உட்படுத்த முடியாது என்பது அயோத்திதாசருக்குச் சொல்லப்படும் நியாயம். அயோத்திதாசருக்கு இருக்கக்கூடிய அதே நியாயம் பெரியாருக்குப் பொருந்தாதா என்ன?
பெரியார் காலகட்டத்தில் இருந்த பார்ப்பன ஆதிக்கம் என்ன? இன்றைக்கு இருக்கக்கூடிய பார்ப்பன ஆதிக்கம் என்ன? அன்றைக்கு பார்ப்பன ஆதிக்கம் என்பது மிகமிக உச்சத்தில் இருந்தது. அன்றைக்கு அதிகாரத்திலும், வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் அதிகம் இருந்தவர்கள் பார்ப்பனர்கள்தான். பார்ப்பனரல்லாதாராக இருக்கக்கூடிய இடைநிலை ஜாதிகளாக இருந்தாலும் சரி, தலித்துகளாக இருந்தாலும் சரி மிக மிகச் சொற்பமான எண்ணிக்கையில்தான் இருந்தார்கள். அப்பொழுது பார்ப்பன எதிர்ப்பை அதிகம் பேச வேண்டிய தேவை பெரியாருக்கு இருந்தது.
ஆனால் இன்றைக்கு, பெரியாரின் செயல்பாடுகள், திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் காரணமாகப் பார்ப்பன ஆதிக்கம் என்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவிலே இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பார்ப்பன ஆதிக்கம் என்பது தமிழகத்தில் மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது என்று சொன்னால் இவ்வளவு பெரிய இயக்கம், இவ்வளவு பெரிய செயல்பாடு இங்கே நடந்திருக்கிறது. ஆனால் அப்படி இருக்கின்றபோது நாப்பதுகளிலே, அய்ம்பதுகளிலே இன்றைக்கு இருக்கிற நிலைமைகளை வைத்துக் கேள்வி கேட்பது என்பது அபத்தமான ஒரு விஷயம்.
பெரியாருக்கும் முந்தைய பார்ப்பன எதிர்ப்பு
இன்னொரு விஷயம் பெரியார் மட்டும்தான் இந்தப் பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்தாரா? தமிழ் இலக்கிய மரபை எடுத்துப் பார்த்தாலே, பார்ப்பன எதிர்ப்பு என்பது எல்லா இலக்கியங்களிலும் இருக்கும். சங்க இலக்கியங்களிலிருந்து ஆரம்பித்து அது ஒரு நீண்ட தொடர்ச்சி இங்கே இருந்திருக்கிறது. அயோத்திதாசப் பண்டிதரே என்ன சொல்கிறார் என்றால் எதார்த்த பிராமணர், வேஷ பிராமணர் என்று இரண்டு வரையறைகளை முன்வைக்கிறார். எதார்த்த பிராமணர்கள் நாங்கள்தான். பறையர்கள்தான். வேஷ பிராமணர்கள் என்பவர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் உண்மையான பிராமணர்கள் கிடையாது, வேஷ பிராமணர்கள் என்று அயோத்திதாசப் பண்டிதர் தொடர்ச்சியாகப் பேசுகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடந்தபோது இரட்டைமலை சீனிவாசன் போன்ற தலித் தலைவர்கள் ஒரு வினோதமான கோரிக்கையை முன்வைக்கின்றனர். அன்றைக்கு இருந்தவர்களால் அதை விளங்கிக்கொள்வது கடினமாக இருந்தது. அப்பொழுது ஐ.சி.எஸ். தேர்வுகள் லண்டனில் நடந்தது. இங்கே இருக்கிற தேசிய வாதிகள் எல்லாம் இந்தியாவில்தான் தேர்வு நடக்கனும். லண்டனில் நடக்கக்கூடாது என்கின்றனர். இரட்டைமலை சீனிவாசன் போன்ற தலைவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எல்லாம் லண்டனில் நடக்கட்டும் என்று சொல்கிறார்கள்.
ஏன் அப்படி சொல்கிறார் என்றால் பார்ப்பனர்கள் கடல்கடந்தால் தீட்டு. அப்படி யானால் கடல்கடந்து லண்டனுக்குப் போய் தேர்வு எழுதமுடியாத சூழல். அப்படிப்பட்ட சூழல் இருக்கிறபோது நாங்கள் அங்கே போய் தேர்வு எழுதுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. இங்கே நடக்குமானால் அவர்களோடு நாங்கள் போட்டி போடுவது சாத்தியமில்லை என்பது இரட்டைமலை சீனிவாசனின் வாதம். இதுகுறித்து இரட்டைமலை சீனிவாசன் எழுதும்போது, 'கருணைமிகுந்த ஆங்கிலேயர்களோடு ஒப்பிடும்போது பார்ப்பனர்கள் மிகமிகக் கேவலஸ்தர்கள்' என்கிறார்.
பெரியார் மட்டும்தான் பார்ப்பன எதிர்ப்பு மூர்க்கராக இருந்தாரா? கடுமையான பார்ப்பன துவேசியாக இருந்தாரா என்றால் கிடையாது. இரட்டைமலை சீனிவாசனாக இருந்தாலும் சரி, எம்.சி.ராஜாவாக இருந்தாலும் சரி, அயோத்தி தாசராக இருந்தாலும் சரி இவர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்று வரலாற்றில் பார்க்கிறோம்.
தீண்டாமை ஒழிப்பா? ஜாதி ஒழிப்பா?
இன்னொரு பக்கம் பெரியார் இங்கே இருக்கக்கூடிய தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சனைகளைப் பார்க்கவே இல்லையா?அடிக்கடி கேட்கப்படக்கூடிய கேள்வி இது. வைக்கத்தில் போராடினார். தமிழ்நாட்டில் ஏன் தீண்டாமை ஒழிப்புக்காக அவர் போராடவே இல்லை. இதுவே ரொம்ப அபத்தமான கேள்வி. பெரியார் இயக்கத்தினுடைய மிகப்பெரிய பலவீனமாக நான் கருதுவது பல விஷயங்களை அவர்கள் ஆவணப் படுத்தத் தவறியதுதான். எங்கங்கே என்ன மாதிரியான போராட்டங்கள் நடந்தன? வட்டார அளவில் என்ன போராட்டங்கள் நடந்தன?அதில் எந்த அளவிற்கு இயக்க முன்னோடிகள் பங்குபெற்றார்கள் என்பதற்கு விரிவான ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு என்பது பெரிதாக நம்மிடம் கிடையாது.
தோழர் திருமாவேலன் அவர்களின் புத்தகம் ஒன்று வந்துள்ளது. “ஆதிக்கசாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?” என்ற அந்த புத்தகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது ஒடுக்குமுறைகள் நடந்தபோது 'குடியரசு' இதழ் அதுகுறித்துத் தொடர்ச்சியாகப் பதிவு செய்தது ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரியார் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை மிகக் குறைவாகத்தான் நடத்தினார். தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்பது ஆலய நுழைவுப் போராட்டமாக இருக்கட்டும் அல்லது இப்போது இருக்கிற இரட்டை டம்ளர் எதிர்ப்புப் போராட்டங்கள் மாதிரி போராட்டங்களை பெரியார் மிகவும் குறைவாகத்தான் எடுத்தார் என்று பெரியார் எதிர்ப்பு தலித் அறிவு ஜீவிகள் குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
சரி, அம்பேத்கர் தன்னுடைய வாழ்க்கையிலே எத்தனை தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்? நல்லா யோசிச்சுப் பார்த்தோ மென்றால், மகத் போராட்டம், சவுதார் குளத்திலிருந்து நீர் எடுக்கும் போராட்டம், காலாராம் கோயில் நுழைவுப் போராட்டம், பார்வதி கோயில் நுழைவுப் போராட்டம் என ரொம்ப பார்த்திங்கன்னா ஒரு பத்து போராட்டத்திற்கு மேல் அம்பேத்கரும் நடத்தியதில்லை. அப்படியென்றால் அம்பேத்கரும் தலித் விரோதியா? அல்லது அம்பேத்கர் இடைநிலை ஜாதிகளின் பிரதிநிதியாக இருந்தாரா? இல்லை அவர்க்கு தலித்கள் மீது எந்த அக்கறையும் இல்லையா? தீண்டாமை ஒழிப்பின் மீது அக்கறையே கிடையாதா?
அன்றைக்கு இருந்த சூழ்நிலையை வைத்துத்தான் இந்தப் பிரச்சனையைப் புரிந்து கொள்ள முடியும். அம்பேத்கரும் பெரியாரும் ஜாதி ஒழிப்புன்னு ஒரு விஷயத்தை எடுக்கும் போது தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் தொகுதி, இரட்டை வாக்குரிமை என இந்த விஷயத்தை அம்பேத்கர் தொடர்ச்சியாக வைக்கின்றபோதுதான் காந்தி அதற்கு முரணாக இருக்கிறார். காந்திக்கும் அம்பேத்கருக்கும் பூனா ஒப்பந்தம் ஏற்படுவதில் உள்ள முரண் நமக்குத் தெரியும். அந்தப் பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு காந்தியோட மனநிலையில் மாற்றம் நிகழ்கிறது. டி.ஆர்.நாகராஜ் இதுபற்றி விரிவாகவே விளக்கியிருக்கிறார்.
காந்தி என்ன செய்கிறார் என்றால் “ஹரிஜன சேவா சங்கம்” மாதிரி அமைப்புகளை உருவாக்கித் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தீண்டாமை என்பதுதான் மிகக் கொடுமையான விஷயம். இந்துமதம் என்பது மிகக் கொடுமையான விஷயம் கிடையாது, ஜாதி அமைப்பு என்பது கூட ஒரு மோசமான விஷயம் கிடையாது. தீண்டாமை என்பது ஒரு மோசமான விஷயம். அதை எடுத்துட்டா எல்லாம் சரியாகிப் போய்விடும் என்கின்ற பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாகவே காங்கிரசும், காந்தியும் செய்து கொண்டு இருந்தார்கள்.
அதை அம்பேத்கரும், பெரியாரும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை தீண்டாமைக்கு அடிப்படையாக இருப்பது ஜாதி, ஜாதிக்கு அடிப்படையாக இருப்பது இந்து மதம். இந்த இரண்டும் ஒழிந்தால்தான் தலித்துகளுக்கு மட்டுமல்ல பார்ப்பனர் உட்பட அனைவருக்குமே விடுதலை கிடைக்கும். அதை விடுத்து வெறுமனே தீண்டாமை ஒழிப்புப் பேசுவதென்பது எந்தப் பயனும் தராது என்பதுதான் இரண்டுபேருடைய நிலைப்பாடாக இருந்தது. ஆலயநுழைவுப் போராட்டத்திலே பார்த்தீர்களென்றால் அம்பேத்கர் என்ன சொல்கிறார் என்றால், “ஆலயங்களைத் திறந்து விடுவதா, இல்லையா என்பதை ஜாதி இந்துக்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இதைப் பற்றி அதிகம் ஆர்வம் காட்டாதீர்கள்” என்று தலித்துகளுக்கு அவர் சொல்கிறார். இந்த அடிப்படையில் வெறுமனே தீண்டாமை ஒழிப்பு அப்படிங்கிற விஷயத்தில் பெரியார் கவனம் செலுத்தாமல் இருந்ததற்கான இந்தக் காரணத்தை நாம் பார்க்க வேண்டும்.
ஆனால் இன்னொரு விஷயத்தைப் பார்த்தோமென்றால் கிராமப்புறங்கள்தான் தீண்டாமைக்கான உறைவிடங்களாக இருந்தது என்பதில் அம்பேத்கர், பெரியார் இரண்டு பேருமே தெளிவாக இருந்தார்கள். அம்பேத்கர் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள் என்கிறார். பெரியாரும் அதையேதான் சொல்கிறார். அப்படி இருக்கின்ற போது பெரியார் நடத்திய பல மாநாடுகளில் போடக்கூடிய மிக முக்கியமான தீர்மானம் என்னவென்றால், “கிராம முன்சீப், கிராம கர்ணம், ஹெட்கான்ஸ்டபிள், சப்.இன்ஸ்பெக்டர் இந்த மாதிரியான பதவிகளைத் தாழ்த்தப்பட்டோருக்குக் கொடுங்கள்” என்று சுயமரியாதை இயக்கமாக இருந்த போதிலும், திராவிடர் கழகமாக மாறியபோதிலும் தொடர்ச்சியாகப் பெரியார் தீர்மானத்தைப் போட்டுக்கொண்டே இருக்கிறார். என்ன காரணம் என்றால் தலித்துகள் மீது இடைநிலை ஜாதியினரோ, பார்ப்பனர்களோ ஒடுக்குமுறை நிகழ்த்தும்போது இந்தப் பதவிகளில் தலித்துகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கான நீதி கிடைக்கும் என்பதில் பெரியார் எப்போதுமே தெளிவாக இருந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரும்பான்மைவாதமா?
இன்னொரு பக்கம் இந்த பெரும்பான்மை வாதம் என்னும் அபத்தமான ஒரு விஷயம். பார்ப்பனர்கள் சிறுபான்மையினராக இருந்தார்கள். சிறுபான்மையாக இருந்த பார்ப்பனர்களுக்கு எதிராகப் பெரும்பான்மையான இடைநிலைச் சாதி யினரைப் பெரியார் நிறுத்தினார். அந்த பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையில் தான் இன்றைக்கு தலித்துகளுக்கு எதிராக வன்முறை நிகழ்கிறது. ஒடுக்குமுறை நிகழ்கிறது என்பது ரொம்ப அபத்தமான விஷயம். அப்படிப்பார்த்தால் காரல் மார்ஸ் கூட ஒரு பெரும்பான்மைவாதி என்று கூறிவிடமுடியும். ஏனென்றால் சிறுபான்மையாக இருக்கும் முதலாளிகள்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையாக இருக்கின்ற தொழிலாளிகள் ஒன்றிணைந்து ஒரு புரட்சி நடத்தி அரசை அமைத்து அந்த முதலாளி வர்க்கத்தை வீழ்த்த வேண்டும் என்றுதான் காரல்மார்க்சும் சொல்கிறார். அவரைக்கூட நீங்கள் ஒரு பெரும்பான்மைவாதி என்று சொல்லிவிடலாம்.
இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரு நாடாளு மன்றத் தேர்தல்முறை என்ற அடிப்படையில் நீங்கள் எடுத்துப் பார்த்தீர்களென்றால் இங்கேகூட ஒரு பெரும் பான்மைவாதத்தின் அடிப்படையில் யார் அதிக ஓட்டு வாங்கி ஜெயிக்கிறாங்களோ அவங்கதான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது ஒரு வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். ஆனால்கூட நீங்கள் திராவிடக் கட்சிகளை எடுத்துப் பாருங்கள். அண்ணாவிற்குப்பிறகு (அண்ணா ஓராண்டுதான் முதலமைச்சராக இருக்கிறார்) எம்.ஜி.ஆராக இருக்கட்டும், கலைஞராக இருக்கட்டும், ஜெயலலிதாவாக இருக்கட்டும் யாருமே பெரும்பான்மை ஜாதியே கிடையாது. அப்ப இங்க ஏது பெரும்பான்மைவாதம்? எங்கே இருக்கு பெரும்பான்மை வாதம்?
அப்ப பெரும்பான்மைவாதம் என்பது பெரியாரைப் பொறுத்தவரைக்கும் ஆரம்ப காலத்திலிருந்து பார்த்தீர்களென்றால் பார்ப்பனரல்லாதாரிடம் போய் நீங்க பார்ப்பனரை விட உயர்ந்தவர்கள் என்று எந்த இடத்திலும் பேசியது கிடையாது. யாரும் யாரைவிடவும் உயர்ந்தவர்கள் கிடையாது. யாரும் யாரைவிடவும் தாழ்ந்தவர்கள் கிடையாது என்பதுதான் பெரியாருடைய தொடர்ச்சியான நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. அப்படியென்கிறபோது சம்பந்தமே இல்லாத விஷயங்களை முடிச்சுப் போடுவதென்பதுதான் இன்றைக்கு பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையாகும்.
அயோத்திதாசரைப் பெரியார் மறைத்தாரா?
அதேபோல் அயோத்திதாசரைப் பெரியார் மறைத்தார் என்று ஒரு விஷயம். இதிலிருந்துதான் எல்லா விஷயங்களுமே தொடங்கியது என்று கூறலாம். இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.
ஒன்று, அயோத்திதாசரைப் பெரியார் பல இடங்களில் குறிப்பிடுகிறார். திருமா வேலனுடைய புத்தகத்திலேயே இருக்கிறது. கோலார் தங்கவயலில் நடைபெறும் கூட்டங்களில் அயோத்திதாசர் குறித்துப் பெரியார் பேசுகிறார். பின்னாலே அயோத்திதாசரின் ‘தமிழன்’ பத்திரிகை நின்று போய் மீண்டும் வரும்போது பெரியார் அதை வரவேற்று குடிஅரசிலே எழுதுகிறார்.
இரண்டு, பெரியார் அயோத்திதாசரை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதை விடுங்கள். அயோத்திதாசரை, தலித் தலைவர்கள் எல்லாருமே ஏற்றுக் கொண்டார்களா அல்லது அயோத்தி தாசரை அடையாளப்படுத்தினார்களா?
1891-இல் தான் திராவிட மகாஜனசபையின் முதல் மாநில மாநாடு நீலகிரியில் நடைபெறுகிறது. அயோத்திதாசருடைய மாநாடு. நீலகிரியில் நடை பெறக்கூடிய திராவிட மகாஜனசபையின் முதல் மாநாட்டிலே போடக்கூடிய முதல் தீர்மானமே ‘பறையன்’ என்று யாரையும் அழைக்கக்கூடாது. அப்படி அழைப்பது இழிவு படுத்தக்கூடிய ஒன்று. அப்படி பறையன் என்று யாரையாவது அழைப்பதைச் சட்டப்படிக் குற்றமாக்க வேண்டும் என்று அயோத்திதாசர் தீர்மானம் போடுகிறார். நமக்கு நன்றாகத் தெரியும் இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பத்திரிகையின் பெயரே ‘பறையன்’தான். இத்தனைக்கும் அயோத்திதாசரும் இரட்டைமலை சீனிவாசனும் உறவினர்கள். ரெட்டைமலை சீனிவாசனுடைய தங்கையைத்தான் அயோத்திதாசர் திருமணம் செய்தார்.
“மதமாற்றம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தீர்வாகாது” என்று ரெட்டைமலை சீனிவாசன் எழுதுகிறார். கர்னல் ஆல்காட்துரைதான் பெளத்தத்தைத் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர். கர்னல் ஆல்காட்துரை அவர்களைச் சந்தித்ததைப்பற்றி ரெட்டைமலை சீனிவாசன் எழுதுகிறார்.
அப்போது “தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் பெளத்தத்திற்கு மாறிவிட்டார்கள். அவர்கள் மாறுவது பிரச்சனை கிடையாது. ஆனால் இந்து மதத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகையைக் கேட்கிறார்கள். அப்படிக் கேட்பதில் எந்த நியாயமும் கிடையாது. வேண்டுமென்றால் அரசாங்கத்திடம் எங்களுக்கு வேற மாதிரி சலுகை கொடுங்கள் என்று கேட்கலாமே ஒழிய இங்கே இந்துக்களாக இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களின் சலுகைகளை அவர்கள் பறிக்கக் கூடாது” என்று எழுதுகிறார்.
இது எல்லாமே அயோத்திதாசப் பண்டிதருக்கு நேர் எதிராக இரட்டைமலை சீனிவாசன் எடுத்த நிலைப்பாடாகும். இரட்டைமலை சீனிவாசனாக இருந்தாலும் சரி, எம்.சி.ராஜாவாக இருந்தாலும் சரி, சிவராஜ் ஆக இருந்தாலும் சரி இங்கே இருந்த எந்த தலித் தலைவரும் அயோத்திதாசரைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை.
பெரியாருக்கு முன்னோடியா?
இன்னொரு விஷயம் பார்த்திங்கன்னா, அயோத்திதாசப் பண்டிதரைப் பெரியாருக்கான முன்னோடி என்று சொல்லவேண்டுமென்றால் மூன்று விஷயங்களில் சொல்லலாம். ஒன்று, பார்ப்பன எதிர்ப்பை அயோத்திதாசர் முன்வைத்தார். அந்த விதத்தில் பெரியாருக்கு அவர் முன்னோடி. இன்னொன்று திராவிடம் என்கின்ற அடையாள அரசியலை முன் வைத்தார். அந்த விதத்தில் பெரியாருக்கு அவர் முன்னோடி. மூன்றாவது பெளத்தத்தை சமத்துவத்திற்கான மதமாக சாதகமாக அணுகுவது என்பதில் பெரியாருக்கு முன்னோடி அப்படின்னு பார்க்கலாம். ஆனால் இதில் கூட நுட்பமான வேறு பாடுகள் இருக்கின்றன.
அயோத்திதாசப் பண்டிதர் பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்தால்கூட அதை எந்த அடிப்படையில் முன்வைக்கிறார் என்று சொன்னால், எதார்த்த பிராமணன், வேஷபிராமணன் என்ற அடிப்படையில் முன்வைக்கின்றார். பார்ப்பனர்களை முன்னிலைப்படுத்தி அவர்கள் உண்மையான பிராமணர்கள் கிடையாது. நாங்கள் தான் உண்மையான பிராமணர்கள் என்ற அடிப்படையில் முன்வைக்கின்றார். ஆனால் பெரியாருடைய பார்ப்பன எதிர்ப்பு என்பது முற்றிலும் வேறுபட்டது.
நீதிக்கட்சி பெரியார் தலைமையில் வந்தபிறகு, இயக்கத்துக்கு என்ன பெயர் வைப்பது என்கின்ற விவாதம் வருகின்ற போது, ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ என்று வைக்கலாம், ‘பார்ப்பனரல்லாதார் கழகம்’ என்று வைக்கலாமா? என்று விவாதம் வருகின்ற போது பார்ப்பனர்களை முன்னிலைப் படுத்தி நம்மை ஏன் ‘அல்லாதோர்’ என்று சொல்ல வேண்டும். நம்ம திராவிடர்கள். ‘திராவிடர் கழகம்’ என்று வைப்போம் என்று சொல்கிறார் பெரியார்.
பார்ப்பனர்களை முன்னிலைப்படுத்தி ஒரு இயக்கத்திற்குப் பெயரே வைக்கக் கூடாது என்பது பெரியாரின் நிலைப்பாடு. ஆனால் அயோத்திதாசப் பண்டிதரின் நிலைப் பாடு என்பது பார்ப்பனர்களுடைய அடையாளத்தை அடிப்படையாக வைத்துத்தான், வேஷ பிராமணனா, எதார்த்த பிராமணனா, என்கிறார்.
இரண்டாவது ‘திராவிடம்’ என்கின்ற அடையாளத்தை அயோத்தி தாசர் பறையர் களுக்கு மட்டும் முன்வைக்கின்றார். ஆனால் பெரியாரோ அதை ஒட்டுமொத்தப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் என்று ஒரு விரிந்த தளத்தில் வைக்கின்றார். மூன்றாவது பெளத்தம் என்ற விஷயத்தை எடுத்தோமென்றால் அயோத்தி தாசருடைய பெளத்தத்தை பெரியார் ஏற்றுக் கொள்கிறாரா, இல்லையா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அயோத்தி தாசருடைய பெளத்தம் என்பதை அம்பேத்கர் போன்றோர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ரொம்ப முக்கியமான விஷயம்.
தோழர் ஸ்டாலின் ராஜாங்கம் சிங்கார வேலருக்கும் அயோத்திதாசருக்கும் நடந்த ஒரு விவாதத்தை சிறு வெளியிடாக கொண்டு வந்துள்ளார். சிங்காரவேலர், லட்சுமிநரசு போன்றோர்கள் எல்லாம் இருந்தது “மகாபோதி சங்கம்”. அயோத்திதாசர் நடத்தியது “சாக்கிய பெளத்த சங்கம்”. இரண்டு சங்கங்களுக்குமிடையே ஒரு பெரிய விவாதம் போகிறது. அந்த விவாதத்தில் ஒரு அடிப்படையான விஷயத்தில் ரெண்டு பேருமே கருத்து முரண்படுகிறார்கள். என்னவென்றால், “பெளத்தத்தில் மறுபிறவி என்பது இருக்கா இல்லையா?” அப்படின்னு ஒரு விஷயம்.
அயோத்திதாசர் சொல்கிறார், “மறுபிறவி இருக்கிறது” என்கிறார். சிங்காரவேலர் , “மறுபிறவி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் ஆன்மா என்பதையே பெளத்தம் மறுக்கிறது. பெளத்தத்தில் கடவுளும் கிடையாது. ஆன்மாவும் கிடையாது. ஆன்மாவே கிடையாது என்கின்ற போது மறுபிறவி என்பது எப்படி இருக்கும்” என்பது சிங்காரவேலருடைய கேள்வி.
அப்போது அயோத்திதாசர் என்ன சொல்கிறார் என்றால், “ஆன்மா என்பது உடம்பு தான். தனியாக ஒன்றும் கிடையாது. ஆனால் மறுபிறவி இருக்கு. மறுபிறவி இல்லை என்று நாம் சொல்லி விட்டால் குடிப்பதை தப்பு என்று சொல்ல முடியாது. அடுத்தவன் மனைவியை ஆசைப்படுவது தப்பு என்று சொல்ல முடியாது. எல்லா அயோக்கியத்தனங்களையும் தப்பு என்று சொல்லமுடியாது. அதனால் மறுபிறவி என்பது பெளத்தத்தில் இருக்கு” என்பது அயோத்திதாசப் பண்டிதருடைய கருத்து.
மறுபிறவி என்கின்ற கருத்தாக்கத்தைப் பற்றி அம்பேத்கர் என்ன சொல்கிறார். அம்பேத்கர் பெளத்தத்தை ஏற்றுக் கொண்ட அடிப்படையில் பார்த்தோ மானால் அம்பேத்கர் தனது கட்டுரையில் எழுதும்போது புத்தருக்கும் அவருடைய கடைசிச் சீடரான ஆனந்திற்கும் நடக்கும் ஒரு உரையாடல் நடக்கிறதாக அம்பேத்கர் எழுதுகிறபோது சொல்கிறார். “ஆன்மாவே இல்லை என்கின்ற போது எப்படி மறுபிறவி வருகின்றது?” என்கின்றபோது அவர் என்ன சொல்கிறார் என்றால்,
“மனிதன் இறந்தபிறகு அவனுடைய சிந்தனைகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் படுகிறது. அவனுக்குள் இருந்த காற்று மாதிரியான விஷயங்கள் பஞ்சபூதங்களில் கலந்துவிடுகிறது. இது ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்படுவதுதான் மறுபிறவி என்று சொல்வோம்” என்கிறார்.
இங்கே தமிழ்நாட்டில் மிக முக்கியமான பெளத்த சிந்தனையாளராக இருந்தவர் அயோத்தி தாசர். சிங்காரவேலர் காலத்தில் செயல்பட்டவர்.
அம்பேத்கருடைய “புத்தமும் அவர் தம்மமும்” நூலின் முன்னுரையில் அம்பேத்கரால் குறிப்பிடப் பட்டவரான லட்சுமி நரசு என்ன சொல்கிறார் என்றால், “எவனொருவன் சிந்தனையும் பேச்சும் எல்லோருடைய மனதிலும் பதிந்து தொடர்ச்சி யாகப் பேசப்படுகிறதோ அதுதான் மறுபிறவி” என்கிறார்.
பெரியார் அவர்களுடைய சிந்தனையை, பேச்சைப் பேசிக் கொண்டிருக்கின்றோம், அம்பேத்கர் அவர்களுடைய சிந்தனையை, பேச்சைப் பேசிக் கொண்டிருக்கின்றோம், அயோத்திதாசருடைய சிந்தனைகளை நாம் பேசிக் கொண்டிருக்கோமானால் அதுதான் மறுபிறவி. என்பது இவர்களுடைய வாதம். அம்பேத்கர், லட்சுமி நரசு, சிங்காரவேலர் இவர்களுடைய வாதம்.
ஆனால் அயோத்திதாசர் நேரடியாகவே மறுபிறவி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுகிறார். அம்பேத்கரின் பெளத்தத்திற்கும் அயோத்திதாசரின் பெளத்தத்திற்குமே நிறைய வித்யாசம் இருக்கிறது. அயோத்திதாசர் சமணமதமே கிடையாது. சமணம் என்பது பெளத்தத்தோட ஒரு பகுதிதான் என்று எழுதுகிறார். இதையெல்லாம் அம்பேத்கர் எந்தக் காலகட்டத்திலும் ஏற்றுக் கொண்டதே இல்லை. அவர் அயோத்திதாசரை எங்கேயுமே குறிப்பிடவில்லை. அம்பேத்கரோட பெளத்தத்திற்கும் அயோத்திதாசருடைய பெளத்தத்திற்குமே எந்தத் தொடர்பும் இல்லாத போது பெரியார் பெளத்தத்தைப் பேசியதற்கு அயோத்திதாசர்தான் முன்னோடி என்பதற்கும் அடிப்படை கிடையாது.
தலித் தலைவர்களைப் புறக்கணித்தாரா?
அதே மாதிரி பெரியார் தலித் தலைவர்களைப் புறக்கணித்தார், நிராகரித்தார், பெரியாரால்தான் தலித் அரசியல் வளராமலே போய்விட்டது என்பது மிக முக்கியமான குற்றச் சாட்டு.
மேலோட்டமாகப் பார்த்தால் கூடப் பெரியாருடைய இதழ்களில் குறிக்கப்பட்ட தலித் தலைவர்கள் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ், சகஜானந்தா, எல்.சி.குருசாமி, வீரைய்யன், முனுசாமிப்பிள்ளை, ஆர்.ஒய். அய்யாக்கண்ணு, பி.வி.ராஜ கோபால்பிள்ளை, எச்.எம்.ஜெகநாதம், முருகேச பாகவதர், கங்காதர பாலதேசிகர், ஜெ.சிவசண்முகம், எம் தர்மலிங்கம், டாக்டர் ஆர்.வி.சொக்கலிங்கம்... இப்படி ஒரு பெரிய பட்டியலே பார்க்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் இந்தியா முழுக்க எங்கெங்கெல்லாம் தலித் அமைப்புகள் செயல் பட்டனவோ அவர்களின் நிகழ்வுகள் குறித்த பதிவு 'குடியரசு', 'விடுதலை' இதழ்களில் உண்டு.
இந்தியா மட்டுமல்ல, இலங்கையிலும் பூனா ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு தாழ்த்தப்பட்டோர் அமைப்பு தீர்மானம் போடுவதைக்கூட குடிஅரசில் பதிவு செய்திருக்கிறார்கள். இப்படி ஒரு விரிவான தளத்தில் பெரியாரைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆனால் பெரியாருக்கு எதிராக தலித்தியப் பார்வையில் வைக்கப்படக்கூடிய விமர்சனங்களில் நடந்த நல்லவிஷயம் என்று நினைப்பது தலித் இயக்க முன்னோடிகளின் வரலாறுகளைத் தெரிந்து கொள்வது என்பதுதான். உண்மையிலே இதைச் சொல்வதற்கு நான் வருந்துகிறேன். தமிழகத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தலித் வரலாறு, தலித் இயக்க முன்னோடி என்று வைக்கப் பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர்களாகத்தான் மீண்டும் மீண்டும் வைக்கப்படுகிறார்கள். அருந்ததியர் சமூகம் விலக்கம் செய்யப்பட்டுத் தான் பதினைந்து வருடமாகப் பேசப்பட்டிருக்கிறது.
குறிப்பாக எல்.சி.குருசாமி, எச்.எம்.ஜெகநாதன் போன்றோரைப் பற்றியெல்லாம் பேசப்படவேயில்லை. பெரியாரைப் பற்றி பெரியார் மீது வைக்கப்படக்கூடிய விமர்சனங்களைப்பற்றி ஒரு மிக விரிவான நேர்மையான விரிவான தளத்தில் விமர்சனங்கள் நடப்பது என்பதுதான் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
(16.09.2018 அன்று சென்னையில் 'வாசகசாலை' அமைப்பால் நடத்தப்பட்ட பெரியார் முழுநாள் நிகழ்வில் ‘பெரியார் : புரட்டுகளும் உண்மைகளும்' அமர்வில் ஆற்றிய உரை)