(முதல் இதழின் தொடர்ச்சி...)

ஒரு முறை நேரு பிரதமராக இருந்த போது சீனப்பிரதமர் சூ என் லாய் இந்தியாவுக்கு வருகை  தந்திருந்தார். அவருக்கு முறைப்படி அரசு மரியாதையுடன்  விருந்தளிக்கப்பட்ட பின்னர், எம்.ஜி.ஆர். இரு வேடங்களில்  நடித்த நாடோடி மன்னன் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது.  அதை  பார்த்துவிட்டு சூ என் லாய் உங்கள் நாட்டில் மன்னராட்சி முறை இன்னும் ஒழிக்கப்படவில்லையா? என்று வியப்போடு கேட்டாராம். இதை சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பொதுவுடமை இயக்கத் தோழர் நகைச்சுiயாக குறிப்பிட்ட போது இதைக் கற்பனைப்புனைவு என்று தான் நினைத்தேன்.

* சில மாதங்களுக்கு  முன்னர்,  நானும் ஒரு வெளிநாட்டு நண்பரும் செல்ல வேண்டிய  ரயில் மிகவும் கால தாமதம் ஆனதால் அருகிலுள்ள திரையரங்கில் நடிகர் தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தை காண நேர்ந்தது.

அந்த திரைப் படத்தில் வில்லன் மற்றும் வில்லன்களின் அடியாட்களுடன் தனுஷ் மோதும் பல காட்சிகளை பார்த்துவிட்டு என் வெளிநாட்டு நண்பர் ஒருவர் “உங்கள் திரைப்படங்களில் வில்லன்கள் ஒவ்வொருவராக கதா நாயகனிடம் மோதுகிறார்களே! உங்கள் நாட்டின் வில்லன்கள் அவ்வளவு நல்லவர்களா? அவர்கள் இதிலும் ஏதாவது ஒரு தர்மத்தை கடைப்பிடிக்கிறார்களா?” என்று அப்பாவித் தனமாகக் கேட்டார்.  எனக்கு அவரின் அப்பாவித்தனம் குறித்து சிரிப்பதா? அல்லது ஊடகம் உருவாக்கிய யதார்த்த சிதைவில் மயங்கி ஊறிப்போய் கிடக்கும் பார்வை யாளர்கள் குறித்து பரிதாபப்படுவதா? என்று தெரியவில்லை.  அப்போதுதான் முன்னதாக குறிப்பிட்ட விசயம் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது என்ற சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர், அந்த வெளிநாட்டு நண்பருக்கு உண்மையில் இல்லாத யதார்த்தம் ஊடகங் களில் யதார்த்த நிலையாக படிப்படியாக எப்படி கட்டமைக்கப்படுகிறது என்று விளக்கி னேன்.  இந்த யதார்த்த சிதைவுதான் ஹைப் எனப்படும் திட்டமிடப்பட்டு திணிக்கப்படும் யதார்த்தமாக உருவாக்கப்படுவதை விளக்கி னேன். சிகரெட்டை  தூக்கிப்போடும் உதிரித் தனங்களும் கடைந்தெடுத்த பிழைப்புவாத சுயநலவாத தத்துவங்களும் பொறுக்கி கலாச் சாரங்களும் சூப்பர் ஸ்டார் பிம்பமாக கட்டமைக்கப்பட்டு அந்த பிம்பத்தை ஒரு முன்மாதிரியான  நிலையாக உருவாக்கி யதையும் கூறினேன். 

இது தற்போதைய ஊடகங்களில்  ஒன்றான திரைப்படத்தில் மட்டுமல்ல சில நுhற்றாண்டுகளுக்கு முன்ன தாகவே அச்சு ஊடகமும் வானொலி ஊடக மும்  உருவான நாளிலிருந்தே சமூகத்தின் யதார்த்த நிலையையும் மக்களின் மன நிலையையும் மாற்றி அமைக்கப்படுவது  தொடங்கியது.

ஏனெனில் தொழிற்புரட்சிக்கு பின்னர் தொழிலாளர் வர்க்கம் 8 மணி நேரம் வேலை 8 மணி நேரம் ஓய்வு 8 மணிநேர உறக்கம் என்ற போராடி பெற்ற வெற்றி களுக்கு பின்னர் அவர்கள் படிக்கவும் சிந்திக் கவும் தொடங்கியதும் அதற்குப் பின்னர் வரலாற்றில் பல புரட்சிகளும் கிளர்ச்சிகளும் நடந்தன என்பது அனைவரும்அறிந்ததே. இதனால் அச்சமுற்ற ஆளும் வர்க்கங்கள்  அப்போதிருந்தே தொழிலாளர் வர்க்கமும்  அடிப்படை வர்க்கங்களும் சிந்திப்பதை கட்டுப் படுத்தவேண்டிய தேவையை  உணர்ந்தனர். 

ஊடகத்தின் இத்தகைய யதார்த்தத்தை மாற்றுவது, சிதைப்பது, சமூகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மக்களின் மனநிலை யை மாற்றுவது ஆகியவற்றுக்கான உதாரணங் களை பதிவு செய்யப்பட்ட வரலாற்று ஆவணங் களிலிருந்தே காண்போம்.

முதன் முதலில் அமெரிக்காவில்தான் ஊடகத்தின் வலிமையை அறிந்து அதை பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை கண்டறிந்தனர் (பதிவு செய்யப் பட்ட வரலாற்றுக்கு முன்னதாகக்கூட இது தொடங்கியிருக்கலாம்). 1916ல் முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயத் தில் உட்ரோ வில்சன் என்பவர் அமெரிக்க அதிபருக்கான வேட்பாளராக போட்டி யிட்டார்.  போர் மற்றும் வெற்றி இல்லாத அமைதி என்ற முழக்கத்தை முன்வைத்து அவர் வெற்றி பெற்றார்.  அப்போது மக்கள் போரை வெறுத்து அமைதியாக வாழ வேண்டும் என்ற மனநிலையில் இருந்தனர்.

உலகெங்கும் நடைபெற்ற போரின் அழிவு களை பார்த்தும் கேட்டும் போரில் தமது நாடு ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்ற முடிவில் இருந்தனர். ஆனால் வில்சன் அரசோ போரில் ஈடுபடுவதற்கு தீர்மானகரமாக இருந்தது.   எப்படியாவது மக்களின் மனதை மாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அது இருந்தது. அதற்காக வில்சன் அரசு கிரில் கமிஷன் என்ற பெயரில் பிரச்சாரம் செய்வதற் கான ஒரு கமிஷனை அமைத்தது.

கிரில் கமிஷன் ஆறே மாதத்தில் மக்களை போர் வெறி பிடித்தவர்களாக மாற்றியது.  அமைதியை விரும்பிய மக்கள் ஒவ்வொரு ஜெர்மானியரின் உறுப்புகளையும் தனித் தனியே வெட்டி சிதைக்க வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தி அவர்களை போர் வெறி பிடித்த கொலைகாரர்களாக மாற்றியது.   அந்த கமிஷனில் ஜான் திவேய் தலைமை யிலான அறிவாளிகள் கூட்டம் ஒன்று செயல் பட்டது.  இவர்கள் ஜெர்மானிய படைகள் பெல்ஜிய நாட்டின் குழந்தைகள்  மற்றும் பெண்களின் உறுப்புகளை வெட்டி சிதைத்த தாகவும் அவர்கள் வெட்டப்படும்போதும்  அலறித் துடித்தபோதும் ஜெர்மானியப் படைகள் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தொடர்ந்து நாளிதழ்கள் மற்றும் ரேடியோ வின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதன் விளைவுதான் அமெரிக்க மக்களின் மொத்த மனநிலையும் மாறியது, அந்த நாடும் போரில் ஈடுபடுவதற்கும் மக்களின் ஆதரவு பெரிதும் திரண்டது.

அன்றைக்கு தொடங்கிய ஊடகத்தின் இந்தப் போக்கு தற்போது மிகப் பிரம்மாண்ட மாக வளர்ந்துள்ள மூலதனத்தின் ஏகபோக நலன்களுக்கு  ஏற்றவாறு  மக்களின் மனதை மட்டுமல்லாமல் அவர்களின் ரசனைகளையும் உடை, உணவு, பழக்கங்கள், உறவுகளை வடிவமைப்பது சிந்தனை, அறிவுப்பூர்வ நாகரீகம் உள்ளிட்ட சமூகத்தின் கலாச்சாரம் முழுமையையும் உற்பத்தி செய்யும் மாபெரும் தொழிற்சாலைகளாக மாறிவிட்டது. கடந்த 2013ன் கணக்குப்படி  1500 நாளிதழ்கள், 1100 இதழ்கள், 9000 ரேடியோ நிலையங்கள், 1500 தொலைக்காட்சி சேனல்கள், 2400 பதிப்பகங் கள் ஆகியவற்றை 6 கார்ப்பரேட்டுகளினால் தான் நடத்தப்படுகின்றன.

பொதுவாக ஒரு செய்தியானது ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இப்பாதிப்பு செய்திகளின் தன்மையை பொறுத்து மாறு படுகின்றது.  அரசியலில் மாற்றம், ஆளும் கட்சி களில் மாற்றம், அரசியல் நீக்கம், புதிய அரசியலை உருவாக்குவது, குறிப்பிட்ட சம்பவங்களின்பால் குறிப்பிட்ட உணர்வை ஏற்படுத்துவது அல்லது எந்த உணர்வுமற்று மழுங்கடிக்கப்பட்ட நிலையை உருவாக்கு வது ஆகியவையாகும்.

மும்பையில் நடை பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்ட முஸ்லீம் தீவிரவாதிகளின் மேல் உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வு ஈழத் தமிழர்கள் லட்சக் கணக்கில் கொல்லப்பட்டபோது உருவாக்கப் படவில்லை. தில்லியில் ஒரு மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டபோது உருவாக்கப்பட்ட உணர்ச்சி கொந்தளிப்பான உணர்வுகள் நாடு முழுவதும் தலித் பெண்களும் பழங்குடியினப் பெண்களும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக் கப்படும்போது அவை ஒன்று அல்லது இரண்டு கால (ஊடிடரஅn) செய்திகளாக ஆக்கப் பட்டு மறைந்து போகின்றன.

உலகமயமாக்கல் மற்றும் தாராள மயமாக்கல் கொள்கைகள்அமல்படுத்திய காலகட்டத்திலிருந்து தொடர்ச்சியாக ஊடக நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் மூலமாக சமூகம் முழுமைக்கும் வர்க்க அரசியல் நீக்கம், சித்தாந்தங்கள் நீக்கம், கொள்கைகள் நீக்கம் இறுதியாக எல்லாவித அரசியலையும்  நீக்க  இடைவிடாது பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு செய்தியாக இருந்தாலும் ஊடக நிகழ்ச்சியாக இருந்தாலும் வர்க்க அரசியலும் சிந்தாந்தங்கள், கொள்கைகளும் கேலிக் குரியதாக சித்தரிக்கப்பட்டு அவற்றை பின் பற்றுவது நாகரீகமற்றதாக மாற்றப்பட்டது.  கடந்த 30 ஆண்டுகளாக  மேற்கொள்ளப் பட்ட ஊடகங்களின் தொடர்ந்த இம்மாதிரி யான நிகழ்ச்சிகளின் விளைவாக தாராளவாத கொள்கைகள் உரமாக அமைந்து எந்த அரசியலும் சித்தாந்தமும் கொள்கைப் பிடிப்பும் இல்லாத ஒரு புதிய வகை தலை முறை உருவாகியுள்ளது.  இப்புதிய வகை நடுத்தர வர்க்கத்திடம் எப்படி தத்தம் அரசியலை கொண்டு சேர்ப்பது அவர்களை எப்படி தங்களின் அரசியல் கட்சிக்குள் கொண்டு வருவது என முதலாளித்துவ கட்சிகள் திணறிப்போயுள்ளன.

காங்கிரஸ், பாஜக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எந்த கட்சிப் பணியும் செய்ய முடியாத பழைய பெருச்சாளிகளைக் கொண்டுள்ளன.  இவற்றால் தகவல் தொழில் நுட்பத்தினால் மிக விரை வாக அரசியல் செய்திகள், பொது அறிவு ஆகியவற்றை விரல் நுனியில் வைத்திருக்கும் புதிய தலைமுறையினரிடம் நெருங்கவே முடியவில்லை என்பது தனியே விவாதிக்க வேண்டிய  இன்னொரு பிரச்சினை.

இன்றைக்கு ஊடகத்தின் பிடியிலிருந்து நாட்டின் குடிமக்கள் யாருமே தப்பிக்க முடியாதபடி அது பிரம்மாண்டமான அளவில் வளர்ந்துள்ளது.  அது தனிநபரின் வாழ்வு, அவரின் அந்தரங்கம், குடும்ப வாழ்வு மற்றும் சமூக வாழ்வு அனைத்திலும் ஊடுருவி நிற்கிறது.  ஊடகத்தின் செய்திகள் தொடங்கி நிகழ்ச்சி கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பது வலுக்கட்டாயமாக அல்லா மல் நயமாகவும் இனிமையாகவும் ஏற்றுக் கொள்ள வைக்கப்படுகிறது. மக்கள் தங்களுக்கு எதிரானவற்றை தாங்களே ஏற்றுக்கொள்ள இசைவை உருவாக்கும் ஊடகத்தின் பணியைத் தான் இசைவு உற்பத்தி (manufacturing consent) எனப்படுகிறது.

இப்படி நீக்கமற ஊடுருவியுள்ள ஊடகத் தினை புரிந்து கொள்ள அடிப்படையான கேள்வியிலிருந்து தொடங்க வேண்டும்? எப்படிப்பட்ட சமுதாயத்தில் நாம் வாழ விரும்புகிறோம்? எந்த மாதிரியான ஜனநாயக சமூகத்தை அமைக்க விரும்புகிறோம்? இக் கேள்விகளுக்கான பதிலில்தான் ஊடகத்தின் பணியை நாம் ஆழமாக புரிந்து கொள்ள முடியும்.   நாம் வாழும்  ஜனநாயகம் என்ற அமைப்பில் மக்கள் வாக்களிப்பது தவிர மற்ற விசயங்களில் பங்கேற்பதோ தகவல்களை சுதந்திரமாக பெறுவதோ சாத்தியமாவதில்லை.  அதாவது மக்கள் தங்களது சொந்த விசயங்களை மேலாண்மை செய்து கொள்வதிலோ அதற்காக தகவல்களை பெறுவது தடுக்கப்படுகிறது.

ஜனநாயக செயல்பாட்டிற்கான அவர்களின் பொது வெளி குறுக்கப்படுகிறது. அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தகவல் கள் குறுக்கப்பட்டு சுருக்கப்பட்டும் குறிப் பாக பிரச்சினைகள் குறித்த தகவல்கள் மிகவும் எளிமைப்படுத்தப்படுகின்றன அல்லது பூதாகாரப்படுத்தப்படுகின்றன. ஆளும் வர்க்கங் கள் சிறிய குழுக்கள் மூலம் அரசியல் வாதிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மூலமாக ஆட்சியை நடத்துகின்றன. அவர்களின் நலன்களுக் கேற்பவே தகவல்கள் வெட்டிச்சுருக்கப் படுவதோ திரிக்கப்படுவதோ ஊடகங்களின் தலையாயப்பணியாக மேற்கொள்ளப்படு கின்றது.

ஊடக விமர்சனத்திலும் ஆய்விலும் சிறந்து விளங்கும் ஊடக நிபுணர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கும் நோம் சாம்ஸ்கி ஆய்வுகள் கூறுவதையும் இங்கு சுருக்கமாக காண்போம்.  நோம்  சாம்ஸ்கியும் எட்வர்டு ஹெர்மனும் எழுதிய இசைவு உற்பத்தி என்னும் நூலில் (மக்களுக்கு எதிரான கொள்கைகள், செய்திகள் மற்றும் நிகழ்ச்சி களை மக்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் படி செய்வது, அதாவது அவர்களுக்கு எதிரான வற்றுக்கு அவர்களின் இசைவை உற்பத்தி செய்வது) ஊடகத்தின் செய்திகள் ஐந்து வடிகட்டிகளால் (filters) வடிகட்டப்பட்டு எஞ்சியவையே செய்திகளாக கிடைக்கின்றன என்கின்றனர்.

முதலாவது வடிகட்டியாக செயல் படுவது ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தும் ஊடக நிறுவனங்களின் அளவு, அந்த நிறுவனங் களின் முதலாளிகளின் சொத்து மதிப்பு, அவர்களின் இலாபங்களின் அளவு போன்றவை.    இந்த வடிகட்டியை பொருத்தவரை பிரம்மாண் டமான சக்தியாக வளர்ந்துவிட்ட ஊடகங்கள் உலகமயமாக்கலை அமல்படுத்திய பின்னர் சந்தைப் பொருளாதாரத்துடன் குறிப்பாக உலக அளவில் சந்தைகளுடன் அய்க்கியமாகி விட்டன.  இந்த ஊடகங்களை சார்ந்தே அவற்றின் விளம்பரங்கள் மூலம்  கார்ப்ப ரேட்டுகள் மற்றும் தேசங்கடந்த தொழிற் கழகங்கள் தங்களது சரக்குகளுக்கு பெரும் அங்கீகாரம் பெறுகின்றன. இதன் மூலமாகவே சந்தை சரக்கு ஊடுருவிய பண்பாட்டு உலக மயமாக்கலும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி பெரும் ஊடக நிறுவனங்கள் பெரும் தொழில் நிறுவனங்களாகவும் கார்ப்பரேட்டுகளாகவும் இருக்கின்றன. அவை ஏகபோக முதலாளி களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.  இவை லாப நோக்கில் செயல்படும் சந்தைப் பொருளாதார சக்திகள் விதிக்கும் வரம்பு களுக்குள்தான் செயல்படுகின்றன. மேலும் அவை மற்ற தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளுடன் அனைத்து வகை உறவுகளுடன் இயங்குகின்றன.  எனவே இந்த முதன்மையான வரம்பை தாண்டி எந்த செய்தி யும் வாசகர்களையோ அல்லது பார்வை யாளர்களையோ சென்றடைவதில்லை.

இரண்டாவது வடிகட்டியாக செயல்படுவது விளம்பரங்கள் மற்றும் விளம்பரதாரர்களின் நலன்கள். ஊடகங்கள் விற்பனையை விட அவற்றின் முதன்மையான வருவாய்க்காக அரசு மற்றும் தனியார் விளம்பரங்களைச் சார்ந்தே இயங்குவதால் எக்காலத்திலும் விளம்பரதாரர்களின் நலன்களே அனைத்தையும் தீர்மானிப்பதாக அமைகின்றன.

பெரும்பாலான நிகழ்ச்சிகளை விளம்பர தாரர்களுக்காகவே வடிவமைக்கப்படுகின்றன. இங்கு விளம்பரங்களுக்காக நிகழ்ச்சிகள் அன்றி நிகழ்ச்சிகளுக்காக விளம்பரங்கள் அல்ல. செய்திகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பினும் விளம்பரங்கள் அதிகமாக இருந்தால் பக்கங்களும் நேரமும் சுருக்கப்படும்.

மேலும் அரசு அளிக்கும் விளம்பரங்கள், வரிச்சலுகைகள் போன்ற வற்றுக்காக அரசு குறித்த விமர்சனங்கள் தீவிரமாக இருப்பதில்லை. பெரும்பாலான விமர்சனங்கள் மயிலிறகைக் கொண்டு தடவு வதாகவே இருக்கும்.

மூன்றாவதாக செய்திக்கான மூலங்களாக  விளங்குபவை அரசு நிறுவனங்கள்,  துறைகளின் அதிகாரிகள், முக்கியமாக காவல் துறை உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் தலைமை அதிகாரிகள் ஆவர். எனவே இவர்களின் நலன் களுக்குட்பட்டே செய்திகள் வெளியிடப் படுகின்றன. இவர்களுக்கு எதிரான தரப்பு செய்தியை வெளியிடுவது என்பது செய்தி அளிக்கும் மூலத்தை பகைத்துக் கொள்வதில் பெரும்பாலும் முடியும்.

நான்காவதாக செய்திகளின் அல்லது நிகழ்ச்சிகளின் எதிர்நிலைக் கருத்துருவாக்கம்.  ஒரு செய்தியோ கட்டுரையோ அல்லது ஒரு நிகழ்ச்சியோ வெளியிடப்படும்போது பொது வாக அவற்றின் தாக்கத்தைப் பொருத்து ஆசிரியருக்கு கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் மூலமாக எதிர்வினைகள் வரும்.  செய்தி அல்லது நிகழ்ச்சி பெரும் சர்ச்சைக் குரிய விசயமாக இருந்தால் வழக்குகள், மேடைப்பேச்சுகள், நேரடி மிரட்டல்கள் வரும்.  சில சமயங்களில் இவை தொடர்ந்து வரும் பட்சத்தில் ஊடக நிறுவனத்தையே நிலைகுலையச் செய்யலாம்.

5வது வடிகட்டியாக இருப்பது ஆதி காலந்தொட்டு இருக்கும் வர்க்கப்பகைமை தான். ஆம். கம்யூனிச எதிர்ப்புதான். பெரும் பாலான ஊடகங்கள் கம்யூனிச எதிர்ப்பை இயல்பாகவே கொண்டுள்ளன. இவற்றிற்காக நிகழ்ச்சி அல்லது செய்திகளின் ஒரு பகுதியாக கம்யூனிச எதிர்ப்பை மைய நோக்கமாகக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்லது கம்யூனிஸ்டுகளைப் பற்றி பீதியூட்டும் வகையிலோ அல்லது பொய்யான அவதுhறுகளை யோ கொண்டு அவை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

 1988ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு நுhலுக்குப் பின்னர் பெரிய அளவில் உலக மயமாக்கல் ஏற்படுத்திய பாதிப்புகளைத் தொடர்ந்து  ஊடகத்துறையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இவற்றையெல்லாம் தாண்டிச் சென்று இன்று மாபெரும் அமைப்பு களாக வளர்ந்துள்ள ஊடகங்கள் பல உத்தி களைக் கொண்டு மக்களை கட்டுப்படுத்துகின்றன.

இந்தியச் சூழலில் இந்த வடிகட்டி களுடன் கூடுதலாக சில விசயங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  செய்திகளோ அல்லது நிகழ்ச்சிகளோ எந்த வர்க்கத்தையும் முக்கியமாக சாதியையும் மற்றும் குறிப்பிட்ட பகுதியிலுள்ளவர்களையும் எதிர்ப்பதாக அமையாது.

பொதுவாக இரண்டு சமூகங்களுக் கிடையிலான மோதல்கள் என்றே இன்று வரை குறிப்பிடப்படுகின்றன. இதில் எந்த சமூகப்பார்வையை விட தாக்குதல் நடத்திய சாதியின் வர்க்கத்தின் அல்லது குறிப்பிட்ட பகுதியின் ஊடகத்திற்கான சந்தையை இழந்து விடக் கூடாது என்பதுதான் முன் நிற்கிறது.

ஊடகங்கள் எப்போதும் கடைப்பிடிக் கின்ற உத்தி விளம்பர வருமானத்திற்கும் இருக்கின்ற அரசியல் பொருளாதார சுரண்டல் அமைப்பிற்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தாத பிரச்சினைகளை எடுத்துக் கொள்வதும் ஆகும். 

இன்றைக்கு வரை ஊடகங்களுக்கு உதவுவது எந்தப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தாத அதே சமயத்தில் வருமானத்திற்கு வழி வகுக்கின்ற பாலியல் பிரச்சினையையும், உளவியல் பிரச்சினைகள்தான் அனைத்து ஊடகங்களிலும் பெரும்பாலான இரவு மற்றும் பிற்பகல் நேரங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அதிகமான பக்கங்களை நிரப்புவதாகவும் இவை உள்ளன.

இன்னொரு உத்தி கடுமையான சமூக பிரச்சினைகளையும் அரசியல் பிரச்சினை களையும் துக்ளக்சோ செய்வது போன்று மலிவாக்கி எளிமைப்படுத்தி பொழுது போக்காக மாற்றுவதுதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கங்கள், ஆதிக்கச் சக்திகள் மற்றும் பன்னாட்டு மற்றும் உள் நாட்டு ஏகபோகங்கள் ஊடகங்களைச் சார்ந்தே இயங்குவது அவற்றின் மிகப் பெரிய பலமாக இருக்கும் திசை திருப்பும் உத்தியை வைத்துதான்.

வரலாறு முழுவதும் உலக நாடுகள் மற்றும் நமது நாட்டிலும் நடை பெற்ற எண்ணற்ற எத்தனையோ மக்களின் எழுச்சிகள் தீவிரமான பிரச்சினைகள் திசை திருப்பப் பட்டுள்ளன. இவற்றுக்கு எத்தனை யோ உதாரணங்கள் உள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினை ஒவ்வொரு முறையும் எழுச்சியுறும்போதும் திசை திருப்பப்படுவது வாடிக்கை.

சசி பெருமாள் தியாக மரணத்திற்குப் பின்னர் நடைபெற்ற மதுவிலக்கு போராட்டங்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சினையால் திசை திருப்பப்பட்டது அனைவரும் அறிந்ததே.

மோடி அரசு பதவி ஏற்றதிலிருந்தே பாஜக- ஆர்எஸ்எஸ் ஆட்சிக்கு முற்றிலும் ஆதரவாக இருந்து வருபவை ஊடகங்களே.  ஊடகங்களின் ஊதிப்பெருக்கும் உத்தியால் கட்டியமைக்கப்பட்ட மோடி பிம்பமானது இன்னும் உடைபடாமல் கட்டிக்காப்பது ஊடகங்களே.

ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மக்கள் விரோத திட்டங்கள், விவசாய விரோத திட்டங்கள், மானியங்கள் வெட்டப் படுவது, சிறுபான்மையினருக்கு எதிராக மிகவும் எல்லைமீறி அராஜகமான முறையில் பேசுவது, அதற்கு மோடி மௌனமாக ஆசி வழங்குவது, ஒரு மூன்றாம் தர சினிமாத் தனமான கழிசடை பஞ்ச் டயலாக்குகளாக கீளின் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என்று வரிசையாகக் கூறி வருவது ஆகிய எதனையும் அம்பலப்படுத்தாமல் முட்டுக் கட்டை போட்டு வருவதும் ஊடகங்களே. 

அவர் அடிக்கடி வெளி நாடுகளுக்குச் சென்று வருவதை மட்டும் மேலோட்டமாக கிண்ட லடிக்கும் ஊடகங்களே அந்த வெளி நாடுகளில் உலக நாடுகளைச் சுரண்டி வரும் விவசாயிகளையும் பழங்குடியினரையும் தங்களது சொந்த மண்ணில் இருந்து விரட்டி அடித்து அகதிகளாக மாற்றி வரும் பெப்சி, டௌவ் கெமிக்கல், போர்ட் பவுண்டேசன் போன்ற கொள்ளைக்கார கார்ப்பரேட்டுகளுடன் மோடி முதலீடுகளுக்காக கெஞ்சுவதை பற்றி எழுதுவதில்லை.

ஓட்டு மொத்தமாக, தொழிற்புரட்சி தொடங்கி இன்றுவரை ஊடகங்களின் திருப்பணிகளானவை அரசியல் அகற்றம், பொய்யான யதார்தத்தை உருவாக்குவது அதனடிப்படையில் மக்களை உணர்ச்சிகளின் அடிப்படையில் திசை திருப்புவது ஊதிப்பெருக்கி ஆளும் வர்க்கங்களின் தலைவர்களின் பிம்பங்களை கட்டமைப்பது கருத்தியல் ரீதியாக எந்த எழுச்சியோ மாற்றங்களோ வர விடாமல் மக்களின் மனதையும்  சிந்தனை களையும் கட்டுப்படுத்தி மலிவான ரசனைகளில் மூழ்கடிப்பது என தொடர்ந்து அரசியல் பொருளாதார சுரண்டல் அமைப்பை கட்டிக் காக்கும் ஏகபோக மூலதனத்தின் கலாச்சார உற்பத்தி அமைப்பாகவே செயல்படுகின்றன.

துணை  நின்றவை

Media Control -Noam Chomsky, The Spectacular Achievements of Propaganda, post -9/11 Edition, 2nd edition -2003, Nataraj publications, New Delhi.

2. The Cultural Apparatus of Monopoly Capital, Monthly Review, july 2013.

3. The Global Media – The New Missionaries of Corporate Capitalism, Edward S.Herman, Robert W.McChesney, Madhyam Books, New Delhi.

4. Manufacturing Consent – The Political Economy of Mass Media, Edward S.Herman and Noam Chomsky.

Pin It