ஜாதி இறுக்கம் நிறைந்த தமிழக கிராமங்களில் ஜாதிக் கட்டுகளை மீறுபவர்களை வெட்டிக் கொல்வதும், ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதும், ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்வோரைக் கட்டப்பஞ்சாயத்து செய்து பிரித்து வைப்பதும், மீறுபவர்களை உயிரோடு எரிப்பதும், ஜாதி கடந்த காதலர்கள் சிக்கவில்லை என்றால் ஒட்டு மொத்த சேரியைக் கொளுத்துவதும், காதலித்த இளைஞனின் பெற்றோர்கள், உறவினர்களை அடித்துத் துன்புறுத்துவதும், சொத்துக்களை கொள்ளையடிப்பதும் அதிகமாகிவரும் சமூகச்சூழல் வாழ்ந்து வருகிறோம்.

நீருபூத்த நெருப்பாக இருந்த ஜாதி உணர்வை இடைநிலை ஜாதி மக்களின் கல்வி, வேலை வாய்பிற்காக உள் ஒதுக்கீடு கேட்டு, இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக இயக்கம் தொடங்குவதாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட பா.ம.க போன்ற அமைப்புகள் மெல்ல, மெல்ல அரசியல் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிய போது, பெரியாரின் பேருழைப்புக்கு எதிராக சமுதாயத்தை பின்னோக்கிக் கொண்டுசென்றார்கள்.

உடுமலை சங்கர், திருச்செங்கோடு கோகுல்ராஜ், தர்மபுரி இளவரசன் என வாழத் துடித்த சேரி இளைஞர்களின் உயிர்களைப் பறித்த ஜாதிவெறிச்சூழலில்,  தமிழகத்தில் பெரியாரைச் சரியாகப் படித்து முழுமையாக உள்வாங்கி - தமிழகத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் ஒரு கிராமம் உங்கள் கண்முன் காட்ட விரும்புகிறோன்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் அருகில் முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களைக் கொண்ட முருகன்குடி என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் ஏற்பட்ட மாற்றத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறார்கள் அறிவியல் ஆசிரியர் பழனிவேல், இ யற்கை விவசாயி முருகன் இளைஞர் பிரசாத் ஆகியோர்.

பழனிவேல் ஆசிரியர்:

திராவிடர் இயக்கச் சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது?

பெரியார் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த இராஜவேல் என்பவர் எங்கள் ஊரில் ‘சிந்தனையாளர் கழகம்’ என்ற பெயரில் அவ்வப்போது பொதுக் கூட்டங்கள் நடத்துவார். அதில் பக்தர்களின் சிந்தனைக்கு 100 கேள்விகள் என்று துண்டறிக்கை அச்சிட்டு வழங்குவார். அந்தத் துண்டறிக்கையில் இருந்த கேள்விகள் என்னைச் சிந்திக்க வைத்தன. அதன் மூலமாக நாத்திகனாகி பெரியாரின் சிந்தனைக்குத் தூண்டப்பட்டேன்.

பெரியாரின் நாத்திகக் கருத்துக்கள் மட்டும்தான் உங்களை ஈர்த்ததா?

முதலில் பெரியாரை எனக்கு அறிமுகப்படுத்தியது நாத்திகம்தான் என்றாலும் பெரியார் எழுதிய புத்தகங்களை அதிகமாகப் படித்ததினால் ஆசிரியர் வீரமணி அய்யா, ஆனைமுத்து ஆகியோருடன் நேரடியாக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவர்களை வைத்து எங்கள் ஊரில் நான் நடத்திய நிகழ்ச்சிகள் என்னை மேலும் பெரியாரைப் படிக்கத் தூண்டியது. அதன் விளைவு “ஜாதி ஒழிப்பே முதல் பணி” எனத் தெரிந்துகொண்டேன். பொன்பரப்பி எங்கள் ஊருக்கு அருகில் இருப்பதால் தமிழ்த்தேசியச் சிந்தனைக்குத் தூண்டப்பட்டேன்.

இன்றைய தமிழ் தேசியவாதிகள் பெரியாரைக் கடுமையாக விமர்சிக்கிறார்களே? பெரியாரை ‘இராமசாமி நாயக்கர்’ என்றும் அவர் தெலுங்கர் தமிழரில்லை என்று விமர்சிக்கிறார்களே?

தொடக்கக் காலங்களில் தோழர் மணியரசன் திராவிடர் கழக மேடைகளில் தமிழ்த்தேசியம் பேசியதால் அவருடன் நெருக்கம் ஏற்பட்டு இணைந்து செயல்பட்டோம். பிறகு மணியரசன் பெரியாரை விமர்சிக்கத் தொடங்கியவுடன் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அத்தோடு தமிழ் பேசும் பார்ப்பனர் களையும் தமிழர்கள் என்றும் ஜாதி ஒழிப்பைச் சிறிதும் கண்டு கொள்ளாததால் மாநில செயற்குழுவில் மணியரசனை நேரடியாகக் கடுமையாக விமர்சித்துவிட்டு, வெளியேறி எந்த அமைப்பிலும் சேராமல் பெரியாரியலை எங்கள் ஊரில் பரப்பி வருகிறேன். ஜாதி ஒழிப்பு பரப்புரையும் செய்து வருகிறேன்.

ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறுகிறீர்கள் அதனால் உங்கள் ஊரில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?

அதை நான் கூறுவதைவிட எங்கள் ஊரிலுள்ள இயற்கை விவசாயி முருகன், இளைஞர் பிரசாத் ஆகியோரைக் கேளுங்கள்.

பிரசாந்த்:

இளைஞர்கள் மத்தியில் இவ்வளவு தாக்கம் வரக் காரணம் என்ன?

நாங்கள் நாற்பது ஐம்பது இளைஞர்கள் நாத்திகர்களாக இருக்கிறோம். அது மட்டுமில்ல. இங்குள்ள நாத்திகர்கள் குடும்பம் குடும்பமாக நாத்திகர்களாக உள்ளோம். நாத்திகக் கருத்துக்களே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. இந்துமத மோகத்திலிருந்து இளைஞர்கள் வெளியேறியதால் கிராமத் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுவதில்லை. அப்படி நடைபெற்றாலும் இளைஞர்கள் ஜாதிவாரியாக பேனர்கள் வைப்பதில்லை, பிளக்ஸ் கட்டுவதில்லை. பெரும்பாலான ஜாதிக் கலவரங்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைக்கும் பிளக்ஸ், பேனர்கள் காரணம் என்பதால் எங்கள் ஊரில் ரசிகர் மன்றங்களும் இல்லாததால் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். ஆகவே எங்கள் கிராமத்தின் வெற்றிக்குக் காரணம்.

முருகன்:

பெரியாரின் கொள்கைத் தாக்கத்தினால் உங்கள் ஊரில் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறுங்கள்?

பழனிவேல் ஆசிரியரின் செயல்பாடுகளால் பெரியாரியல் சிந்தனைக்கும், தமிழ்த் தேசியச் சிந்தனைக்கும் தூண்டப்பட்டோம். எல்லா கிராமங்களைப்போல் எங்கள் கிராமமும் இந்து மத ஜாதி கட்டமைப்புக் கொண்ட ஊரே ஆகும். இங்கு விவசாயிகளை படையாச்சி என்ற இடைநிலை ஜாதியினரும், விவசாயக் கூலிகளாக, அருந்ததியர்களும், பறையர்களும் வாழ்கிறார்கள். பிள்ளைமார், ஆசாரி, செட்டியார் போன்ற மற்ற ஜாதியினரும் வாழ்கிறார்கள். ஆனால் இந்த மக்களுக்கும் அகமண முறை ஒழிய வில்லையே ஒழிய மற்றபடி இங்குள்ள மக்கள் ஜாதியை மறந்து ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள்.

தேநீர் கடைகளில் ரெட்டைக்குவளைமுறை, முடிதிருத்தங்களில் வேறுபாடு போன்ற தீண்டாமைக் கொடுமைகள் உண்டா?

பெரியாரின் சிந்தனைத் தாக்கத்திற்கு முன்பு நீங்கள் கூறிய தீண்டாமைக் கொடுமைகள் நடந்தது உண்மைதான். எங்கள் தலையீட்டிற்குப் பின்பு அந்தக் கொடுமைகள் முற்றிலுமாக எங்கள் ஊரில் ஒழிக்கப்பட்டுவிட்டது. இங்கு தேநீர்க்கடைகள் பொது இடங்கள் அனைத்திலும் மக்கள் அனைவரும் சமமாகத்தான் நடத்தப்படுகிறார்கள். பெரியாரின் சிந்தனைக்குத் தூண்டப்பட்ட நாங்கள் மக்களிடம் இது குறித்து பிரச்சாரம் செய்தோம். மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் ஊரில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறோம்.

ஜாதி, மத திரைப்பட மோகங்களால் சீரழியும் மக்களிடம் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்தினீர்கள்?

எங்கள் ஊரில் எந்த நடிகருக்கும் ரசிகர் மன்றங்கள் கிடையாது. இந்துமதப் பண்டிகைகளுக்கு மக்கள் ஆர்வம் காட்டுவது கிடையாது. தீபாவளியை பெரிய பண்டிகையாகக் கொண்டாடமாட்டார்கள். விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதே இல்லை. 10 அடி, 20 அடி பிள்ளையாரை வைத்து வழிபடும் வழக்கமே இல்லை. இங்குள்ள மக்களே பிள்ளையாரை ஒரு பெரிய கடவுளாகக் கருதுவதே இல்லை. பிள்ளையார் ஊர்வலமும் இல்லை.

விவசாயத்தை முழுக்க நம்பி நாங்கள் வாழ்வதால் விவசாயம் சார்ந்த விழாவான பொங்கலை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவோம். அனைத்து ஜாதி மக்களையும் ஒன்றிணைத்து மிகப் பெரிய விழாவாக ஊரே பொங்கலை மட்டும்தான் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமர்க்களப்படுத்துவோம்.

பொங்கல் விழாவில் படையாச்சி இளைஞர்கள், மாணவர்கள் ‘அம்பேத்கர்’ படம் போட்ட டி.சர்ட் அணிந்துகொண்டு பறை அடிப்பார்கள். எனது தம்பி மகன் மிகவும் சிறப்பாக பறையடிப்பான். படையாச்சி வீட்டுப் பையன் பறையனாட்டம் பறையடிக்கிறானே என்று பேசுவார்கள். அது எங்களுக்கு உற்சாகம் கொடுக்கும். பெரியாரை பொதுவானத் தலைவராகப் பார்ப்பதுபோல் அம்பேத்காரையும் நாங்கள் அனைவருக்குமான பொதுவானத் தலைவராகத்தான் பார்க்கிறோம்.

விநாயகர் சதுர்த்தி இல்லை பிள்ளையார் ஊர்வலம் இல்லை என்கிறீர்களே? இரசிகர் மன்றங்கள் இல்லை என்கிறீர்களே? ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற இந்துத்துவா அமைப்புகள் இங்கு இல்லையா?

இல்லவே இல்லை, பிள்ளையாரை வைத்துத்தானே பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் உள்ளே நுழைய முடியும். விநாயகர் சதுர்த்தியால் ஏற்படும் பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினோம். மக்களே விநாயகர் சதுர்த்தி வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்கள்.

ஜாதி அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற இந்துத்துவா அமைப்புகளிடமிருந்து எப்படி இளைஞர்களை வென்றெடுத்தீர்கள்?

சேரி இளைஞர்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தொழில்நுட்பம் சார்ந்த கல்வியைக் கொடுத்தோம். ஐ.டி.ஐ பால்டெக்னிக் போன்ற கல்வி நிறுவனங்களில் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் எலக்ட்ரீசின், மெக்கானிக், பிட்டர் போன்ற பணிகளுக்குச் சேரி இளைஞர்களைத் தயார் செய்தோம். அந்த இளைஞர்களின் சேவை கட்டாயம் தேவை என்ற தவிக்க முடியாத சக்தியாக மாற்றிக் காட்டினோம்.

கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், எலக்ட்ரீசியன் போன்ற பணிகள் நடுவீடு வரை சென்று பார்க்கும் பணி என்பதால் அந்த இளைஞர்களின் சேவை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டது. மெல்ல, மெல்ல மாற்றம் ஏற்பட்டு ஜாதிக்கட்டுத் தளர்ந்தது.

எங்கள் பகுதி கரும்பு விவசாயம் என்பதால் கரும்பு வெட்டுவதற்கு ஒரே வண்டியில் சேரியில் உள்ள இருபால் இளைஞர்களும் ஊரிலுள்ள இருபால் இளைஞர்களும் ஒன்றாகச் செல்வார்கள். அவர்கள் வீட்டு உணவை இவர்களும் - இவர்கள் வீட்டு உணவை அவர்களும் பரிமாறிக் கொள்வார்கள். அது நாளடைவில் அந்த இளைஞர்களுக்குள் மாமன், மச்சான் என்று உறவு வைத்து அழைத்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றுவிட்டது. எங்கள் ஊரில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். பெண் கொடுப்பது பெண் எடுப்பது என்கின்ற நிலை மட்டும் வரவில்லை மற்றபடி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். காலப்போக்கில் பெண் எடுத்துக் கொடுக்கும் நிலை வரும் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது.

உங்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றிக் கூறுங்கள்?

மண்புழு உரங்களை நாங்களே வயல்வெளிகளில் தயாரிக்கின்றோம். மீன் கழிவுகளிலிருந்து உரம் எடுத்து மாட்டுச்சாணி, மாட்டுமூத்திரம் கலந்து வயல்வெளிகளில் தெளிக்கின்றோம். செலவு மிகவும் குறைவு மகசூல் அதிகம். முதலில் சோதனை ஓட்டமாக நான் தான் துணிச்சலாக எனது வயலில் செயல் படுத்தினேன். இரசாயன உரமிட்டுச் செய்யும் விவசாயிகளைவிட கூடுதலான பலன் கிடைத்தது. பிறகு அதை எனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இயற்கை விவசாயம் மெல்ல, மெல்ல வளர்ச்சி பெறுகிறது.

விவசாயத்தையே நம்பியிருக்கும் உங்களைப்பற்றி கூறுங்கள்?

நான் ஒரு பட்டதாரி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு விவசாயம் செய்துவருகிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை. ஒரு பெண் நெல்லையில் விவசாயக் கல்லூரியில் (Bளஉ  ஹபசை) பயில்கிறார். இன்னொரு பெண் குழந்தை திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்கிறார். பையன் என்னுடன் விவசாயத்திற்குத் துணையாக இருந்து கொண்டு படித்தும் வருகிறார். நான், எனது துணைவி குழந்தைகள் அனைவரும் நாத்திகர்கள். அடுத்தமுறை நீங்கள் வரும்போது அவர்களிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் பெண் பிள்ளைகள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

கட்டாயம் ஏற்றுக்கொள்வேன். ஒரே ஒரு நிபந்தனை எனது கொள்கை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதே.

Pin It