திரு.முத்துலட்சுமி அம்மையாரின் தேவதாசி மசோதாவைப் பற்றி சென்னை சட்டசபையில் விவாதம் நடக்கும் போது, திரு.சத்தியமூர்த்தி அய்யர் பேசிய பேச்சுக்களை ‘திராவிடனி’ல் பார்த்திருக்கலாம்.
பிறகு அந்த மசோதாவிற்குப் பலமான ஆதரவுகள் இருப்பதைப் பார்த்து திரு.மூர்த்தியும் அவரது சகாக்களும் வாலை அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்து விட்டார்கள்.
அம்மசோதாவும் எதிர்ப்பில்லாமல் நிறைவேறி விட்டது. இதை ஒழிக்கவோ, இதற்கு பதில் சொல்லவோ வேறு மார்க்கம் இல்லாததால் சுதேசமித்திரன், தனது ஆத்திரத்தைக் காட்டிக் கொள்வதற்கு அந்த அம்மையாரைக் கேவலப்படுத்தக் கருதி, தனது அயோக்கியத்தனத்தைக் காட்டியிருக்கிறது.
அதாவது, 2-2-29 தேதி ‘மித்திரன்’ தலையங்கத்தில் ‘தேவதாசிச் சட்டம்’ என்று பெயர் கொடுத்து மனதில் கேலியாக நினைத்துக் கொண்டு எழுதுவதாவது:-
‘டாக்டர். முத்துலட்சுமி அம்மாள் தாம் பிறந்த குலத்திற்குப் பெரிய உபகாரத்தை செய்து விட்டார் என்றும், அது என்ன குலம் என்று தெரிவதற்காக அடுத்த வார்த்தையாகவே ‘தேவதாசி என்று சொல்லப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மசோதா நிறைவேற்றப்பட்டதற்குச் சாதகமோ பாதகமோ சொல்ல வேண்டியிருந்தால் திரு. முத்துலட்சுமி அம்மாள் தேவதாசிக் குலமென்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. இது, வேண்டுமென்றே அந்த அம்மையாரைப் பொது ஜனங்கள் முன்னால் தப்பாய்க் காட்ட வேண்டுமென்பதைத் தவிர வேறு என்ன எண்ணத்தோடு இருக்க முடியும்?
தேவதாசிகள் என்று ஒரு கூட்டம் பெண்கள் இருக்கின்றார்களே ஒழிய தேவதாசிக் குலம் என்று ஒரு குலம் இருக்கின்றதா என்று கேட்கின்றோம். ஒரு வீட்டில் பிறந்த சகோதரிகள் இருவரில் ஒருவர் கோவிலுக்கு விடப்பட்டு, மற்றவர் கல்யாணம் செய்து கொண்டிருந்தால், கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டவர் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவராவாரா? அதுபோலவே ஒரு தேவதாசி தன்மகளைக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தாலும் அந்த மகள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர்களாவார்களா? இந்த வித்தியாசம் மித்திரனுக்குத் தெரியாமலிருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்.
தவிர, அதே வியாசத்தில் “இனிமேல் தேவதாசித் தொழிலில் தம் மக்களைப் புகுத்துவதும், புகுத்தாதிருப்பதும், இப்பொழுது தேவதாசிகளாக இருப்பவர்களின் இஷ்டத்தைப் பொருத்தது” என்று எழுதியிருக்கின்றது. இதன் கருத்து என்ன? இந்த மசோதா காரணமாக சுவாமி பேரால் செய்த விபசாரத் தொழிலுக்கு ஒன்றும் ஆபத்து வந்து விடவில்லை. இஷ்டமிருக்கிறவர்கள் தாராளமாய்ச் செய்யலாம் என்று ‘தர்மோபதேசம்’ செய்கின்றது. பார்ப்பன மித்திரனுக்கு இவ்வளவு கவலையும் பிரசாரமும் எதற்கு என்று கேட்கின்றோம். யார் யாருக்கு விபசாரத்தனம் செய்யப் பாத்தியம் உண்டு, சட்டம் உண்டு என்பதை எடுத்துக் காட்டுவதுதான் ‘தேசீய பத்திரிகைகள், கடமை போலும்.
திரு.சத்தியமூர்த்தி, அவர்கள் விவசார மசோதாவைப் பற்றி பேசுகையில், ‘பெண்கள் எவ்வளவுதான் விபச்சாரம் செய்தாலும்’ அதனால் யாருக்கு எவ்வளவு துன்பம் நேரிட்டு வந்தாலும் விவசார ஸ்திரீகளும் நம்மவர்களேயானதால் அவர்கள் விஷயத்தில் அனுகூலமாயிருக்க வேண்டு’மென்று சிபார்சு பேசினதும் ‘தேவதாசித் தொழில் போய்விட்டால், மதம் போய் விடும்’ என்றதும் இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால் திரு. ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகத் தொழிலை நிறுத்தச் சட்டம் செய்ய வந்து விடுவாரே என்று ஆத்திரப்பட்டதும், ‘மித்திரன்’ தேவதாசி மசோதாவால் தேவதாசித் தொழிலுக்கு ஒன்றும் குந்தகம் ஏற்பட்டு விடவில்லை என்று தேவதாசிகளுக்கு வியாக்கியானம் செய்து மறுபடியும் அதே தொழிலில் இருக்க உற்சாகத்தையும் தைரியத்தையும் ஆசையையும் ஊட்டுவதையும் பார்த்தவர்களுக்கு நாட்டின் ஒழுக்கத்திற்கோ சுயமரியாதைக்கோ, விடுதலைக்கோ இத் ‘தேசீயப் பத்திரிகை’களும், ‘தேசீயவீரர்’களும் அனுகூலமாக இருப்பார்களா என்பதும் இவர்களுடன் யோக்கியர்கள் வந்து வேலை செய்ய முடியுமா என்பதும் தானாகவே விளங்கும்.
(குடி அரசு - கட்டுரை - 10.02.1929)