உலகம் அளாவிய சிக்கல்களுக்கு நல்லறிஞர்கள் தீர்வுகாண வேண்டும்!

காற்று இயற்கையிலுள்ளது; நீர் இயற்கையில் கிடைப்பது; உணவு இயற்கையாகவும் செயற்கையாகவும் உருப்பெறுவது.

இப்போது எங்கும் நல்ல காற்று இல்லை. மலை, ஆறு, கடல், தரை இங்கெல்லாம் கிடைத்த காற்று அழுக்காகி விட்டது; ஆற்று நீர் அழுக்காகிவிட்டது. தரையில் உள்ள குளம் குட்டை நீர், ஏரி நீர் அழுக்காகிவிட்டது. இப்படி இவற்றை அழுக்குப்படுத்தியவர்கள் மாந்தர்கள்; விலங்குகளோ, பறவைகளோ, மற்றவகை உயிரினங்களோ அல்ல.

மனிதன் எவ்வளவு முயற்சித்தாலும் 100, 125 ஆண்டுகளே வாழமுடியும்.

அந்த மனிதன், மற்றவற்றை வென்று தனக்கு மட்டும் உரிமையாக்கி நல்வாழ்வு வாழ்வதாகக் கருதி காடுகளை அழித்தான்; மழை குறைந்தது. மலைகளையும் குன்று களையும் தனதாக்கி, காற்றைக் கெடுத்தான்; கனிமங்களைக் கொள்ளையடித்தான்.

இன்றைய உலகில் 720 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.

இவர்கள் குடிக்க - குளிக்க - வேளாண்மை செய்ய - தொழில்சாலைகளை இயக்க - பண்டங்களை உருவாக்க - உணவு சமைக்க - அலுவலகங்களை நடத்த - நீர் ஒரு கட்டாயத் தேவை.

உலகில் உள்ள 100 பங்கு நீரில் 97 பங்கு உப்பு நீர்; கடல்களிலும், மாபெருங் கடல்களிலும் இது உள்ளது.

மீதியுள்ள 100இல் 3 பங்கு நீர் நல்ல நீர். இதில் வட துருவம், தென்துருவம் என்கிற இரண்டு முனைகளிலும் 3இல் 2 பங்கு நீர் உள்ளது. அது பனிப்பாறையாக உள்ளது. 3இல் 1 பங்கு நீர் நல்ல நீர் மட்டுமே மனிதப் பயன்பாட்டுக்கு உள்ளது.

இரண்டு துருவங்களிலும் உள்ள பனிக்கட்டி உடைந்து உருகிவிடும் என அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள்.

இப்போது தென்துருவத்திலுள்ள பனிக்கட்டி உடைந்து விட்டதாக 12-11-2011 புதன் அன்று அமெரிக்க செட்டலைட் (Sattelite) கண்டுபிடித்துள்ளது. அப்படி உடைந்த பகுதி 6,000 சதுர கிலோ மீட்டர் பரப்பு உள்ளது. அது நகருகிறது.

அதே தென்துருவத்தில் 1956இல் 32,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள பனிக்கட்டி உடைந்ததாகவும், 1986இல் 9000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள பனிக்கட்டி உடைந்த தாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு பெரும்பரப்பில் கட்டியாக உள்ள நல்ல தண்ணீர் உருகும். ஆனால் மனிதப் பயன்பாட்டுக்கு அது எப்போது கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும் என்பது கேள்விக்குறி. (“The Hindu”, 13.7.2017).

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி பரப்பு 33 விழுக்காடு நிலப்பரப்பு காடுகளாகக் காக்கப்பட வேண்டும்.

இன்று 17 விழுக்காடு பரப்புகூடக் காடுகளாக இல்லை.

காடுகள் அழிக்கப்பட்டால் நாடு அழியும்; மக்கள் துன்புறு வார்கள்; வனம் வாழ் உயிர்கள் அழியும்; காற்று மண்டலம் தூய்மை கெட்டு, கரிக்காற்று அதிகமாகும். மாந்தன் மூச்சு விடவே திணர வேண்டும். இன்றே நல்ல காற்றைத் தேடி அலைகிறோம்.

காற்று மண்டலம் கெட்டுவிட்டது என்றால் என்ன?

ஒவ்வொரு 10 இலட்சம் காற்றுத் துகள்களிலும் (Gas Molecules) 350 காற்றுத்துகள் கரிக் காற்று வீதம் (Carbon Dioxide) கலந்திருந்தால், அந்தக் காற்று முழுவதும் கெட்டு விட்டது என்று பொருள். அதை 1950 முதல் ஆய்வு செய்து, 1990 உறுதி செய்தார்கள். (“The Hindu”, 27.6.2017).

இப்படிப்பட்ட கேடு ஆசியாவில் மிக அதிகம்; பசுபிக் பகுதியிலும் அதிகம்.

அதாவது வெப்பத்தின் அளவு இங்கு 6 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை ஏறிவிட்டது.

இதனால் பின்கண்ட கேடுகள் வரும் :

1. மழை பொழிவு 20 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை குறையும்;

2.  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்;

3. ஆசியப் பகுதியில் 25 கடற்கரை நகரங்களில், கடல்களின் நீர்மட்டம் ஒரு மீட்டர் உயரம் உயரும் (“தினமலர்”, 17.7.2017, சென்னை). நிற்க.

பணம் மட்டுமே மாந்த வாழ்க்கையின் முதன்மைத் தேவை என்பதாக ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். பணம் தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளாது. அதைப் பெருக்க உழைப்புத் தேவை; நிறையப் பணம் தேட நிறைய உழைப்புத் தேவை; உழைப்பாளர்கள் தேவை. கருவிகளை இயக்கவும் உழைப்பாளர்கள் தேவை. உழைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பணம் - அவரவர் உழைப்புக்கு ஏற்பப் பங்கு போடப்பட வேண்டும். அது நடக்கவில்லை.

அப்படிப்பட்ட நடப்பு நேற்றைய சோவியத் இரஷ்யாவில் 70 ஆண்டுகள் நீடித்தது.

அமெரிக்கா திட்டமிட்டு அங்கு ஊடுருவி, 1980இல் அதை உருக்குலைத்தது.

அமெரிக்கா தம் நாட்டு இயற்கை வளங்களை அப்படியே காப்பாற்றிக் கொண்டு, மத்திய தரைக்கடல் - அரபு எண்ணெய் வளநாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா முதலான வளரும் நாடுகளின் வளங்களைச் சுரண்டுகிறது.

சப்பான், இங்கிலாந்து முதலான நாடுகள் - இந்தியாவில் மகிழுந்து, சிற்றுந்து, சுமைஉந்து முதலான வாகனங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளைத் தொடங்கி - நிலம், நீர், மின்சாரம் இவற்றைக் கொள்ளை கொள்ளுகின்றன; சுற்றுச் சூழல் கேடு வளர இவை உந்துசக்தியாக இருக்கின்றன. ஆனால் தமிழகம் இங்கிலாந்தின் “டெட்ராய்ட்” (னுநனசடிவை) என்று பெருமையாகப் பீற்றிக் கொள்கிறோம். இவற்றால், நல்ல நீரும், மின்சாரமும் எவ்வளவு - எப்படிப் பாழாகின்றன என்ப தைத் தமிழக மக்களும் அரசும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்திலுள்ள நீர்ப்பற்றாக்குறை பற்றி, 2017 முதல் “சிந்தனையாளன்” ஏட்டில் தொடர்ந்து எழுதுகிறோம்.

2017இலேயே குடிநீருக்குத் தமிழக மக்கள் திண்டாடு கிறார்கள்.

காவிரி நீர் உரிமை, முல்லைப் பெரியாறு நீர் உரிமை, பாலாறு நீர் உரிமை ஆகியவை முறையே கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களைப் பொறுத்து நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகும். இவை தொடர்பான வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களுக்கு இன்றுவரை ரூபா 40 கோடி தமிழக அரசு செலவு செய்துள்ளது. வழக்குகள் எப்போது முடியும் என்றே தெரியாது.

ஆனால் தமிழக ஏரிகள், குளங்கள், குட்டைகள் இவற்றை ஆழப்படுத்துவதும், இவற்றுக்கு நீர்வரத்து - நீர்ப்போக்கு இவற்றுக்கான வாய்க்கால்களைத் தூர்வாருதலும் நாம் - நம் தமிழக அரசு செய்ய வேண்டியவை.

இருப்பதைப் பாதுகாப்போம்; வரவேண்டிய உரிமை களுக்குப் போராடுவோம்!

பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் நிலத்தடி நீர் 2 மீட்டர் முதல் 6 மீட்டர் வரை கீழே சென்று விட்டது.

காவிரிப் பாசனப் பகுதி பசுமை காணாத பகுதியாகிவிட்டது. சென்னைப் பெருநகர மக்களும், மற்ற மாவட்டங்களிலுள்ள சிற்றூர் மக்களும் குடிநீர் கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள்.

உலக அளவில் பருவ மழை பொய்த்துவிட்டதால், உலகில் 50 நாடுகளில் 2025ஆம் ஆண்டில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் (“தினத்தந்தி”, 25.7.2017, சென்னை).

தமிழகம் நீர்ப்பற்றாக்குறைக்கும், சுற்றுச்சூழல் கேட்டுக் கும் உள்ளாகித் தத்தளிக்கப் போவதைத் தடுத்து நிறுத்திட வாரீர்!

Pin It