ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்' என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)

2013ஆம் ஆண்டில் ஷேல் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தார்கள். 3.25 கிலோமீட்டருக்கு கீழே மண்ணுக்குள் இருக்கிற வண்டல் மண் பாறை இடுக்குகளிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை ஷேல் எரிவாயு என்பார்கள். இதையும் மேலே கூறிய தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் எடுப்பார்கள். ஒரு கிணற்றுக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர், 16 டேங்கர் மணல், 634 ரசாயனங்கள் கலந்து படுவேகமாக இந்த நஞ்சுக் கலவையை அந்த கிணற்றுக்குள் செலுத்தி, ஒரு செயற்கை பூகம்பத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் அந்தக் கிணற்றுக்குள் ஒவ்வொரு அங்குலத்தின் மீதும் 600 கிலோ அளவிலான எடை இறங்கும்.

இதிலிருந்து வெளிவரும் எரிவாயுவை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு, அந்த அபாயகரமான கழிவு நீரை அப்படியே நிலத்தின்மீது விட்டு விடுகிறார்கள் இந்த நஞ்சு நீர் நிலத்தடி நீரில் கலந்து நீர்த் தொகுப்பை நஞ்சாக்குகிறது. இந்த நீரை ஆழ்துழாய் கிணறுகளில் பிடித்து குடித்தால் பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இந்த அபாயகரமான கழிவுநீர் நிலத்தின் மீது தேங்கியிருக்கும்போது அதில் கலந்துள்ள பென்சீன் மீது சூரிய ஒளி பட்டால் போதும், அது ஆவியாகி காற்றில் பரவி அதைச் சுவாசித்தால் ரத்தப் புற்று நோய் வரும். பல நாடுகளில் மக்கள் குடியிருப்பு களுக்கு 60 கிலோமீட்டருக்கு அப்பால்தான் எரிவாயு எடுக்கிறார்கள். ஆனால் இங்கு அப்படியல்ல. கதிராமங்கலத்தை சுற்றி 11 கிணறுகள் அமைத் திருக்கிறார்கள். கதிராமங்கலத்தில் மட்டும் 3 கிணறுகள் அமைத்திருக்கிறார்கள். குழந்தை களுக்கும், மக்களுக்கும் இந்த எண்ணெய் கிணறு களால் பாதிப்பு ஏற்படும் என்பது ஓ.என்.ஜி.சிக்கும் நன்றாகத் தெரியும். கதிராமங்கலத்தில் 22 மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 224 குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாக பிறந்திருக்கிறார்கள். அதனால்தான் கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.

ஷேல் மீத்தேன் எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு மட்டும்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 2017 மார்ச் மாதத்திற்குள் 3.25 கிலோமீட்டர் ஆழத்திற்கு எண்ணெய் கிணறு அமைக்கவும் இந்திய ஆயில் லிமிடெட் ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதுவரையில் அவர்களால் போட இயலாத அளவுக்கு நாம் போராடி தடுத்து நிறுத்தியிருக் கிறோம். ஆனால் இது போதாதென்று நேரடியாக நிலங்களை எண்ணெய் நிறுவனங்களுக்குப் பிரித்து கொடுத்து, அதில் என்ன வேண்டுமானாலும் 15 ஆண்டுகளுக்கு எடுத்துக்கொள் என்ற திட்டத்தையும் இப்போது அறிவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின்படி டெல்டா மாவட்டங்களில் எல்லா வகையான ஹைட்ரோகார்பன்களும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து, எந்த விலைக்கு வேண்டுமானாலும், எந்த நாட்டுக்கு வேண்டு மானாலும் விற்றுக் கொள்ளலாம். இந்த அனுமதியைத்தான் நெடுவாசலிலும், காரைக் காலிலும் ஜெம் லேபரட்டீஸ் நிறுவனத்துக்கு அளித்தார்கள். இப்போது மக்கள் போராடி அதைத் தடுத்திருக்கிறார்கள்.

இப்போது ஒற்றை உரிமம் (sngle license) என்ற திட்டத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள். பெட்ரோல் எடுக்க, எரிவாயு எடுக்க, நிலக்கரி எடுக்க என எல்லாவற்றுக்கும் ஒரே உரிமம் பெற்றால் போதும். இது மிக அபாயகரமானது. கருத்து கேட்பு என்பதே கிடையாது. 110 கிணறுகள் அமைக்கும் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். இது சீர்காழி மாதானத்திலிருந்து, ராமநாதபுரம் பெரியபட்டிணம் வரையில் 110 கிணறுகள் அமைக்கக் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இவை அத்தனையும் ஷேல் மீத்தேன் கிணறுகள் அமைக்கத் திட்டமிட்டிருக் கிறார்கள். மீத்தேன், அணு உலை போன்றவை ‘ஏ’ பிரிவை (red category) சேர்ந்தவை. இந்தத் தொழில்களுக்கு அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்காமல் முடிவு எடுக்க இயலாது. ஆனால் மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என டெல்லிக்காரன் சொல்கிறான். 14.05.2017 அன்று ஓ.என்.ஜி.சி. சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பிய கடிதத்தில் நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்தி ஷேல்தான் எடுக்கப்போகிறோம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் மரக்காணத்திலிருந்து வேதாரண்யம் வரையிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க 24 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டம் குறித்து செய்திகள் வெளியானதை நாம் அறிந்திருப்போம். இந்தத் திட்டத்துக்கு மே 3ஆம் தேதி டெண்டர் பிரிக்கப்படுவதாக இருந்தது. ஓ.என்.ஜி.சி., கெயில் மற்றும் ஆறு பன்னாட்டு நிறுவனங்கள் டெண்டர் கேட்டார்கள். ஆனால் இது போதாது இன்னும் நிறைய நிறுவனங்களை ஈர்க்க வேண்டுமெனத் தேதியை தள்ளி வைத்துவிட்டார்கள்.

3 கிலோமீட்டர் ஆழத்தில் ஒரு கிணறு அமைத்தால் அதற்குள் குழாய்கள் சென்று அதன் எல்லாப் பக்கங்களிலும் மூன்று கிலோ மீட்டருக்கு அனுப்பப்படும். ஆக ஒரு கிணற்றின் ஆக்கிரமிப்புக்குள் 36 சதுர கிலோ மீட்டர்கள் வந்துவிடும். இதனால் அந்த நிலத்திற்குள் பல தொலைவுக்கு ரசாயனம் பரவும். இதெல்லாம் போதாதென்று பெட்ரோலிய சுரங்க உரிமம் (Petroleum Exploration Licence (PEL) and Petroleum Mining Lease) என்று எதை வேண்டுமானாலும் எடுத்து இந்த மண்ணை நாசப்படுத்த 35 கிணறுகள் அமைக்க ஐந்து மாவட்டங்களில் அனுமதி அளித்திருக்கிறார்கள். இந்தக் கிணறுகள் ஐந்தாயிரம் சதுர கிலோமீட்டரில் அமையவுள்ளது. வெவ்வேறு பெயரில் இந்த மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு இதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் வாய்மூடிக் கிடக்கிறது.

ஓ.என்.ஜி.சி. செயல்பாடுகளால் நம்மைக் காவிரி டெல்டா பகுதியில் இன்னும் 20 வருடம் விட்டு வைத்தாலே அதிகம் என்றுதான் கருதுகிறேன். காவிரிப் படுகை இல்லாமல் தமிழகம் வாழாது. காவிரியில் தண்ணீர் வந்தவரை தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரிலிருந்துதான் 60 விழுக்காடு அரிசி வந்து கொண்டிருந்தது. இப்போது காவிரி தண்ணீர் வராமல் 34 விழுக்காடுதான் இங்குக் கிடைக்கிறது. இதுவும் காலியாகிவிட்டால் நம்முடைய உணவுக்கு வெளியில் கையேந்த வேண்டிய நிலைதான் ஏற்படும். கொள்ளிடத்தில் இருந்து பல பகுதிகளுக்கு குடிநீர் தரப்படுகிறது. சென்னைக்கு வீராணத்திலிருந்து குடிநீர் வருகிறது. டெல்டாவின் முக்கிய மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகள் இந்தத் திட்டங்களால் காணாமல் போகும்.

ஓ.என்.ஜி.சிக்கு இங்கே 712 கிணறுகள் இருக்கிறது. அதில் 183 கிணறுகள் செயல்பட்டுக் கொண் டிருக்கிறது என்று ஓ.என்.ஜி.சி. நிர்வாகமே கூறுகிறது. ஆனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமோ 219 கிணறுகளுக்குத்தான் எங்களிடம் அனுமதி பெற்றார்கள். அதில் இப்போது 71தான் செயல்படுகிறது. அதற்கும் இப்போது உரிமம் இல்லை என்று சொல்கிறது. ஆக எந்த உரிமமும் பெறாமல் இரவும், பகலும் கள்ளத்தனமாக உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதைத் தடுத்து நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுத்துப் பூர்வமாக மனு அளித்தும், அவர்கள் மேலிட உத்தரவுகளுக்குப் பயந்து நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். அதிகம் அழுத்தம் கொடுத்தால் எங்களைத்தான் கைது செய்கிறார்கள்.

இது எல்லாம் போதாது என்று கூறி கடலூர், நாகை மாவட்டத்தின் 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம், பெட்ரோல் சுத்திகரிப்பு மண்டலம் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார்கள். கதிராமங்கலத்தில் 2008ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வு இந்தத் தண்ணீர் குடிக்க ஏற்றது என்று கூறியது. 2013ஆம் ஆண்டில் கண்டுபிடிக்க இயலாத அளவு தண்ணீரில் மாசு கலந்திருக்கிறது என்று ஆய்வு கூறியது. 2017ஆம் ஆண்டில் வந்த ஆய்வு இந்தத் தண்ணீர் பயன்படுத்தத் தக்கதல்ல என்று கூறிவிட்டது. இத்தனைக்கும் அங்கு ஒரு ஆலை கூட கிடையாது. 0.5 கிராம் அளவில் கச்சா எண்ணெய் நீரில் கலந்தால் சகித்துக் கொள்ளலாம். ஆனால் கதிராமங்கலத்திலோ 1.7 கிராம் அளவுக்குக் கலந்திருக்கிறது. இங்கிருந்து மக்கள் வெளியேற வேண்டிய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெரிய இன அழிப்புத் திட்டத்தை நம்மீது தெரிந்தே நடத்துகிறது இந்திய அரசு. ஈழத்தில் குண்டுகளை வீசி மக்களை அகதிகள் ஆக்கினார்கள். அதற்குப் பதிலாக இங்கு இதுபோல ஆறுகளை முடக்கி மக்களை வெளியேற்றப் பார்க்கிறார்கள். நிலத்தடி நீரைப் பாழாக்கி பயன்படுத்த முடியாத அளவுக்கு மாற்றும் யுக்தியையும் இந்திய அரசு கையாண்டு கொண்டிருக்கிறது. உயிரோடு இருக்கிற ஒரு மனிதனுக்கு அவனது ரத்த நாளங்களை வெட்டுவதும், ஆற்று நீரை முடக்குவதும் சமமானது என்றுதான் கூற வேண்டும்.

கதிராமங்கலத்தை சுற்றியிருக்கிற பகுதிகளில், போராட்டம் நடக்கிற பகுதிகளில் துணை ராணுவத்தினர் 2000 பேரை இறக்கியிருக்கிறார்கள். இதெல்லாம் எங்கேயோ வட கிழக்கு மாநிலங்களில், காஷ்மீரில்தான் நடக்கும் என்று கருத வேண்டாம். காவிரிப் படுகையில், தமிழ்நாட்டில் நடக்கிறது. டெல்லியில் நடத்த வேண்டிய ராணுவக் கண்காட்சியை இங்கே ஏன் நடத்துகிறார்கள்? இந்தப் பகுதியில் 47 நாடுகள் ராணுவத் தளவாடங்களை அமைத்து உற்பத்தி செய்யவிருக்கிறார்கள். இந்தப் பகுதி நாம் நடமாடக் கூட இயலாமல் ராணுவ மயமாக்கப்படவிருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலை முழுவதையும் இந்திய அரசு எடுத்துக் கொள்கிறது. தமிழக அரசுக்கு இனி அதில் அதிகாரம் கிடையாது.

இந்திய பார்ப்பனியம் மனமகிழும் வகையில் தமிழக அரசும் இவையெல்லாவற்றுக்கும் ஒத்துப்போகிறது. மற்ற பெரிய கட்சிகள் கூட அதிகபட்சமாக மாநில சுயாட்சி உரிமைகள்தான் கேட்குமே தவிர தன்னுரிமை-தன்னாட்சி உரிமை பற்றி பேசாது. மாநில சுயாட்சி உரிமை என்பது நிதி, நிர்வாக உரிமையைத்தான் அளிக்குமே தவிர இன உரிமையைப் பெற்றுத்தராது. அதில்தான் தன்னாட்சி உரிமை அடங்கியிருக்கிறது. மிக முக்கியமான நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரியார் அப்போதே தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டுமென்று சொன்னார். அது அப்போதே நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால் நமக்கு இந்த சிக்கல்களே வந்திருக்காது. ஆனால் இப்போது விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டியத் தேவை ஏற்பட்டுவிட்டது. இந்தத் தேவையை உணர்ந்து அம்பேத்கரிய இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், மார்க்சிய-லெனினிய இயக்கங்கள், தங்களை விரிவுபடுத்திக்கொண்டு, தங்களுக்குள் நெருங்கி வர வேண்டும். தமிழ்நாட்டின் தன்னுரிமையை மீட்க வேண்டியத் தேவை இருக் கிறது. இந்த ஒற்றை அரசியலைத் தவிர இன்னொரு அரசியல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

செய்தி தொகுப்பு : பிரகாசு

Pin It