வெள்ளையர் காலத்தில், சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்குமிடையே 1924இல் காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 1974இல் அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றுதான் இருந்தது.
தமிழ்நாடு 01.11.1956இல் தனித்தமிழ் மாநில மாகிவிட்டது. 1974இல் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. காவிரிநீர் ஆண்டுக்கு 361 கோடி கனஅடி சராசரியாக தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசால் விடப்பட்டது.
1974இல் கர்நாடகம் போதிய நீர் விடவில்லை. எனவே, தஞ்சை மாவட்ட காவிரி பாசனப் பகுதி விவசாயிகள், உரிய அளவு நீர் பங்கீடு கோரி, கர்நாடக அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அப்போது தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்த கலைஞர் அவர்கள், பிரதமர் இந்திராகாந்தியின் விருப் பப்படி, தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் வழக்கை அவர்கள் திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்தினார். அதனால்தான், கர்நாடகத்தின் கைஓங்கியது.
கர்நாடகத்தில் 1918-1920 வாக்கில் கட்டப்பட்டது, கிருஷ்ணராஜசாகர் அணை. அதற்கு கண்ணம்பாடி அணை என்றும் பெயர்.
அந்த அணையைத் தவிர, மேற்கொண்டு காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணையைக் கட்ட வேண்டுமானால், அதற்கு இந்திய மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டும்; அத்துடன் காவிரியின் கீழ்மடையிலுள்ள தமிழ் நாட்டு அரசின் ஒப்புதலையும் பெறவேண்டும்.
ஆனால், கர்நாடக அரசு
1. கபினி அணையை 1959இல் கட்டியது. அப்போது தமிழ்நாட்டை ஆண்ட காமராசர் அதைத் தடுக்கவில்லை.
2.ஏரங்கி அணையைக் கர்நாடக அரசு 1964இல் கட்டியது. அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் அதைத் தடுக்கவில்லை.
3. அவருடைய ஆட்சிக்காலத்திலேயே, 1965இல் சுவர்ணவதி அணையைக் கர்நாடக அரசு கட்டியது. அதையும் தடுக்கவில்லை.
4. 6.3.1967இல் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. தி.மு.க. ஆட்சிக்காலத் தில் 1968இல் ஏமாவதி அணையைக் கர்நாடக அரசு கட்டியது. “எத்தனை அணைகளை வேண்டுமானாலும் கர்நாடகம் கட்டிக்கொள்ளட்டும்! ஆனால் தமிழகத்திற்குத் தரவேண்டிய அளவு நீரை தந்தே ஆகவேண்டும்” என்று வீரவசனம் பேசினார், கலைஞர் கருணாநிதி.
இப்படி மேலே கண்டவாறு தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியும், தி.மு.க. ஆட்சியும் காவிரி நீர் உரிமையைக் கோட்டைவிட்டு விட்டு - அதாவது தும்பை விட்டு விட்டு ஓடுகிற மாட்டின் வாலைப் பிடிப்பது போல, தி.மு.க. ஆட்சியும், அ.தி.மு.க ஆட்சியும் எந்தக் கட்டத் திலும் ஒன்றுபட்டு நின்று இந்திரா காந்தி காலத்திலோ, ராஜீவ்காந்தி காலத்திலோ, பி.வி. நரசிம்மராவ் காலத் திலோ மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து தட்டிக்கேட்க வில்லை.
தி.மு.க. செய்தது எல்லாம், 1989-1991 ஆட்சியின் போது, பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து “காவிரி நடுவர் மன்றம்” அமைத்தது ஒன்றுதான் உருப் படியான பணி. அதன் இறுதித் தீர்ப்பைக்கூட இந்திய அரசுப் பதிவு இதழில் (Government of India Gazettee) வெளியிட, 2011 வரையில் தி.மு.க. முயற்சிக்கவில்லை. அத்துடன் 270 கோடி கனஅடி நீரைப் பங்கிட்டுத்தர, கர்நாடக அரசு 1974இல் முன்வந்த போதும் எம்.ஜி.ஆருக்கு அஞ்சி, அப்போது தி.மு.க. அரசு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடத் தவறிவிட்டது.
அதேபோல், மேலே கண்ட ஒப்பந்தத்தில் 1979இல் அ.தி.மு.க. ஆட்சியின் போது கையெழுத்துப் போட எம்.ஜி.ஆர். தவறிவிட்டார்.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டுக் காவிரி பாசனப் பகுதியைப் பாலைவனமாக ஆக்கியதுதான் 50 ஆண்டைய தி.மு.க.- அ.தி.மு.க. ஆட்சியில் நாம் கண்ட பயன்.
2011-2016 அ.தி.மு.க. ஆட்சியில் செல்வி. செயலலிதா இரண்டு உருப்படியான சாதனைகளைப் புரிந்தார்.
1. முல்லைப் பெரியாறு அணையில் அதன் உச்சக் கட்டக் கொள்ளளவு 152 அடிவரை உயர்த்தக் கோரி, 146 அடியாக உயர்த்திப் பெற்றார்.
2. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைப் பல ஆண்டுகள் கழித்து, 2014இல் இந்திய மத்திய அரசு பதிவு இதழில் வெளியிடச் செய்தார்.
இப்போது, 29.6.2017 அன்று கர்நாடகம் ஏறக்குறைய ஒரு மணிக்கு மூவாயிரம் கனஅடி நீர் விடுவதாக அறி வித்தது. ஆனால், 05.07.2017 வரையில் காவிரி நீர் ஒகேனக்கல் அணைக்கே வந்துசேரவில்லை. இது பற்றி இடைவிடாமல் பிரதமருக்குக் கடிதம் எழுதுவ தோடு இப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக் கொண்டார்.
அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரியின் குறுக்கே புதியதாக மேகதாட்டு அணையைக் கட்டு வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் கர்நாடக அரசு செய்த பிறகு, “மத்திய நீர்வள ஆணையம் கர்நாடகத்துக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது” என்று மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதிக்கு மடல் எழுதுவதோடு முதல மைச்சர் நிறுத்திக் கொண்டார். மேகதாட்டு அணை என்றால் மேக = ஆடு + தாட்டு என்றால் = தாண்டும் காவிரி = ஆடு தாண்டும் காவிரி என்றுதான் பொருள். அவ்வளவு குறுகிய இடத்தைக் கூடவிடாமல், கர்நாடகம் தமிழகத்துக்கு நீர்வரக்கூடிய எல்லா வழிகளையும் அதற்கே வைத்துக் கொள்ள எத்தனிக்கிறது. மேகதாட்டு அணை, கிருஷ்ணராஜ சாகாரைவிடப் பெரிதாம்.
இதில் காங்கிரஸ் - பாரதிய சனதா - மதச்சார்பற்ற சனதா என்கிற எந்த வேறுபாட்டையும் கர்நாடக அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டவில்லை; எந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிப் பாகுபாடு பார்க்க வில்லை.
ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்நாட்டைப் பாழடித்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், இந்தச் சூழ்நிலையிலும் பிரிந்தே நிற்கின்றன. இது கண்டனத்துக்குரியது.
உடனடியாக தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வினரும், எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க.வினரும் ஒன்றிணைந்து - இந்த ஒரு சிக்கலிலாவது, தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களையும், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 பேரையும் உடனடி யாக தில்லிக்கு நேரில் அழைத்துச் சென்று 1. குடியரசுத் தலைவர், 2. தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, 3. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 4. இந்திய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோரையும்; தில்லியிலுள்ள நாளிதழ்களின் ஆசிரியர்களையும் நேரில் கண்டு தமிழ்நாட்டின் காவிரி நீர்ப் பங்கீடு உரிமையை உறுதிசெய்யும் வண்ணம், 1.காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தல், 2. அவ்வப்போது இருப்பு உள்ள நீரில் தமிழகத்துக்குரிய பங்கைக் கர்நாடகம் திறந்துவிட ஆவன செய்தல் வேண்டுமென்று, எல்லாக் கட்சியினரையும் குறிப்பாகத் தமிழக ஆளும் கட்சியி னரையும் வற்புறுத்தி வேண்டிக் கொள்கிறோம்.