தமிழ்ப்பெருமக்களே! இளைஞர்களே!

தமிழ் மாவட்டங்களில் ஓடுகிற பெரிய ஆறுகள் 17; சிறிய ஆறுகள் 99.

இவற்றில் இன்று நீர் ஓடவில்லை; 30 ஆண்டு களாகக் காவிரியில் நீர் ஓடவில்லை.

இதற்கு முதலாவது காரணம் தாமிரபரணி, வைகை இரண்டு ஆறுகள் மட்டுமே தமிழகத்தில் தோன்று கின்றன; தென்தமிழ் மாவட்டங்களில் ஓடி மக்கள் குடிநீரும், பாசன நீரும் பெறப் பயன்படுகின்றன.

காவிரி போன்ற பல ஆறுகள் குடகு, கர்நாடகாவில் தோற்றம் பெற்று, காவிரி ஓட்டத்தில் கர்நாடகத்தில் நான்கு நீர்நிலைகளை நிரப்பிவிட்டு, அப்புறம் வழியும் நீர் தமிழ்நாட்டுக் காவிரிக்கு விடப்படுகிறது.

ஒரே மாநிலமாக - கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் நான்கும் 1953, 1956 வரையில் இருந்தன.

1953இல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா பிரிந்தது; 1.11.1956இல் கர்நாடகம், கேரளம், தமிழகம் பிரிந்தன.

காவிரி நீர்ப்பங்கீட்டுத் தகராறு, தி.மு.க. ஆட்சியில் 1974இல் தோன்றியது. இந்திராகாந்திக்கு தி.மு.க. 1969இல் கைகொடுத்தது.

1972ஆம் ஆண்டில் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தவுடன், எந்த ஒரு சிக்கலைப் பற்றி நிலைப்பாடு களை எடுப்பதிலும், மத்திய அரசிடம் அழுத்தம் தரு வதிலும்-கலைஞர் மு. கருணாநிதியும் - எம்.ஜி.ஆரும் - பிறகு கலைஞரும் செல்வி செயலலிதாவும் ஒன்றாகச் சேர்ந்து சென்று-இந்திராகாந்திக்கோ, ராஜீவ் காந்திக்கோ அழுத்தம் தரவில்லை.

1989 - 1990இல் பிரதமர் வி.பி.சிங்குக்கு அழுத் தந்து, தி.மு.க. ஆட்சி, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்திட ஏற்பாடு செய்தது.

அதேபோல் 2011-16 ஆட்சிக் காலத்தில் செயலலிதா, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை இந்திய அரசு அறி விக்கை (Government of India Gazette)யில் வெளி யிடச் செய்தார்.

அ.தி.மு.க. - தி.மு.க. இரண்டு கட்சிகளும் 1974 முதல் பிரிந்து நின்றே செயல்பட்டதுமின்றி, 1) ஏரிகளுக்கு நீர்வரத்து வாய்க்காலைத் தூர்வாருவது, 2) ஏரிகளி லிருந்து பாசனத்துக்கு நீர்போகும் வாய்க்காலைத் தூர் எடுப்பது, 3) ஏரிகளின் பரப்பளவு ஆக்கிரமிக் கப்படாமல் காப்பது, 4) ஏரிகளின் உட்புறத்துப் பரப்பில் 2 அடி, 3 அடி ஆழத்துக்கு மண்ணை வெட்டி ஏரிக் கரைகளில் கொட்டுவது, 5) ஏரிக்கரைகளில் மரங்களை வளர்ப்பது, 6) வரத்து, போக்குவாய்க்கால்களைத் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது ஆகிய இவ்வளவு பணிகளையும்-கடந்த 50 ஆண்டுகளாகத் தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சிகள் செய்யாமல் மக்களின் வரிப் பணத்தைக் கூட்டாகவும், தனியாகவும் கொள்ளை அடித்தன.

இன்று பெரிய ஏரிகள் 18,789-ம்; சிறிய ஏரிகள் 20,413-ம் - ஆக 39,202 ஏரிகளிலும் - பாசனத் துக்கோ, குளிப்பதற்கோ, மக்களும், ஆடு மாடுகளும் நீர்குடிப்பதற்கோ வக்கின்றி வறண்டு கிடக்கின்றன.

இவற்றைத் தூhவாரச் சொல்லித் தமிழக அரசுக்கு அழுத்தம் தந்து தமிழ்ப் பெருமக்களும், தமிழக இளைஞர்களும் போராடுவது முதலாவது பணி.

இவற்றைப் பற்றிக் கவலைப்பட்டு “ஆறுகள் மீட்சி இயக்கத்தார்” (Movement to retrieve T.N. Rivers)) சென்னையில், 28.6.2017 புதன்கிழமை கூடி, கரிச னத்துடன் விவாதித்து, “இந்திய நீர்வள மீட்பாளர்” எனப் பெயர் பெற்ற இராசேந்திர சிங், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி. கோபால கவுடா மற்றும் வேளாண் சங்கத் தலைவர்களும், “இந்தியக் குடி மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான நீரைக் காக்க முயலுவோம்” என முடிவெடுத்துள்ளனர். இது பாராட்டுக்கு உரியது.

“2016-2017இல் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியைப் போக்குவோம்” எனவும் இவர்கள் சூளு ரைத்துள்ளனர்.

தமிழகப் பெருமக்களும், தமிழக அரசினரும் இப்படிப்பட்ட வழிகாட்டிகளைப் பயன்படுத்திக் கொண்டு, மழைநீரைத் தேக்கிட எல்லாம் செய்வது உடனடியான - தலையான பணி. ஏன்?

காவிரிக்கு கர்நாடக அரசு, கிருஷ்ணசாகர் அணை யிலிருந்து 29.6.2017இல் 2,346 கன அடி நீர் திறந்துவிட்டது. உடனே கர்நாடக விவசாய சங்கத்தினர் அனைவரும் கூடி, 30.6.2017, “காவரிக்குத் தண்ணீர் தராதே!” என்று கோரிப் போராடுகின்றனர்.

கருநாடக வேளாண் தலைவர்கள் எப்போதும் தங்கள் உரிமைக்கு ஒன்றுபட்டுப் போராடுகிறார்கள். அந்த நல்ல பாடத்தை நாம் கற்கவில்லையே!

இன்று, கர்நாடகாவில் காங்கிரசுக் கட்சி ஆட்சி நடக்கிறது. ஆனால், “காவிரிக்குத் தண்ணீர் தரக் கூடாது” என்று காங்கிரசு, பாரதிய சனதா, மதச்சார் பற்ற சனதா ஆகிய எல்லாக் கட்சிகளின் முன்னாள் முதல்வர்களும், இந்நாள் முதல்வரும் ஒன்றுசேர்ந்து, “காவிரி நீர் ஆணையம் அமைக்காதே!” என்று கோரி, மத்திய அரசுக்கு அழுத்தம் தருகிறார்கள்.

அதேபோல், “முல்லைப் பெரியாறு அணையில் 146 அடிக்குமேல் நீரை உயர்த்தக்கூடாது” என்று கோரி, கேரளாவில், காங்கிரசு, இடது கம்யூனிஸ்டு, வலது கம்யூனிஸ்டு, பாரதிய சனதா ஆகிய எல்லாக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து போராடுகிறார்கள்; தில்லிக்குச் சென்று அழுத்தம் தருகிறார்கள்.

தமிழக வாக்கு வேட்டைக் கட்சிகளுக்குப் பொறுப்பும் அக்கறையும் இருந்தால் - “நீர்ப்பங்கீடு உரிமைச் சிக்கலை நீக்கிடு” என்று கோரி - ஒன்றுபட்டு - ஒரே குரலில் தமிழக ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் தில்லிக்குச் சென்று மோடி அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கோரிப் போராட வேண்டும்.

தமிழர்களுக்கு உடனே வேண்டியவை மழை நீரைத் தேக்கி வைத்திட ஏற்ற ஏரிகள் - குளங்கள் - குட்டைகள்.

அப்போதுதான் மக்கள் செழிப்படைவார்கள்; வேளாண்மை சிறப்படையும்; ஆடு, மாடுகள் பெருகும்; குடிநீர் பற்றாக்குறை தீரும்.

எனவே, இக்கோரிக்கைக்கு எல்லோரும் முன் னுரிமை தாருங்கள்!

Pin It