ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வாக்காளர்களாக இருந்து என்ன பயன்? அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் பெண்களுக்கு முற்றாகவே மறுக்கப்பட்டுத்தான் வருகின்றன. 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம், பாதிக் கிணற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தொடர்ந்து ஆண் ஆதிக்க அரசியல் தலைவர்கள் தடைபடுத்தியே வருகிறார்கள்.

நாட்டின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மோடி, தனக்குத் திருமணமாகி, ஒரு மனைவி இருக்கிறார் என்ற உண்மையைக்கூட வெளிப்படுத்திடாமல் மறைத்து வைத்துள்ளார். மூன்று முறை சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிடும் விண்ணப்பப் படிவத்தில் இதை மறைத்துவிட்டு, இப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான விண்ணப்பத்தில் மட்டும் குறிப்பிடுகிறார். “மோடி ஏன் மறைத்தார்; இவர் பதவிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?” என்ற கேள்விகள் எதிர்முகாம்களில் முன் வைக்கப்படுகின்றன. நாம் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறோம். பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஒரு பெண் களத்தில் இறக்கப்பட்டு, அந்தப் பெண் மூன்று முறை தாக்கல் செய்த தேர்தல் விண்ணப்பப் படிவத்தில் தனக்குத் திருமணம் நடந்து, கணவர் இருப்பது பற்றி எதையும் குறிப்பிடாமல் மறைத்து, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தனக்கு திருமணமாகி, ஒரு கணவரும் இருக்கிறார் என்று அறிவித்து, தேர்தல் களத்துக்கு வந்திருந்தால், இந்த அரசியலும், சமூகமும், அந்தப் பெண்ணை அங்கீகரித்திருக்குமா? ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டு சிந்திக்க வேண்டிய கேள்வி இது. மதம் கட்டமைக்கும் ஒழுக்க மதிப்பீடுகள் பெண்களை மட்டுமே சுமை தாங்கிகளாக்கியிருக்கின்றன. சமூகத்தின் பார்வையில் பெண்தான் எப்போதும் குற்றக் கூண்டில் ஏற்றப்படுவாள். குற்றவாளிகளாக மாறி நிற்கும் ஆண்களே தீர்ப்புகளை தங்கள் ‘சாட்டை’களால் எழுதுகிறார்கள்.

33 சதவீதம் பெண்களுக்குத் தேவை என்று பேசிய கட்சிகளேகூட தேர்தல் களத்தில் பெண்களுக்கு எத்தகைய வாய்ப்புகளை வழங்கியிருக் கின்றன? அரசியலில் சோனியா, மம்தா, ஜெயலலிதா, சுஷ்மா என்று பெண்களின் தலைவர்கள் தானே அதிகாரத்தை தங்களிடம் வைத்துள்ளார்கள் என்று கேட்கலாம். குறியீடுகளாக நிற்கும் இந்தப் பெண் தலைமைகள், தங்கள் அதிகாரத்தின் வலிமையை பெண்களுக்காக பயன்படுத்த முடியாத நிலையில்தான் சமூகத்தின் அரசியல் பார்வை கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

சோனியா தலைமையிலான காங்கிரசு கட்சியே 413 வேட்பாளர்களில், 53 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்துள்ளது. 33 சதவீத ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும் என்றவர்கள், சட்டம் வராவிடிலும் அதை ஏன், தங்கள் கட்சியில் நடைமுறைப்படுத்தக் கூடாது? பெண்களின் சமத்துவம், உரிமைகள் மத பண்பாட்டுக்கு எதிரானது என்று இந்துமதப் பார்ப்பனிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிற கட்சி பா.ஜ.க.

அதன் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ்.சில் நேரடி உறுப்பினராகும் தகுதி பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. முன்னணி அமைப்புகளில்தான் பெண்கள் இருக்க முடியும். அந்த பா.ஜ.க. களமிறக்கியிருக்கும் 409 வேட்பாளர்களில் பெண்கள் 35 பேர் மட்டும்தான். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி, நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் ஒரு பெண்ணுக்குக்கூட வாய்ப்பு தரப்படவில்லை. (சிதம்பரம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டவரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவருக்கு மாற்றாக மனு செய்த அவரது மனைவி வேட்பாளராக்கப்பட்டுள்ளார்) தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பரப்புரையாளர்களாக தீவிரமாக செயல்பட்ட தமிழிசை, வானதி என்ற இரண்டு பெண்களுக்கும் போட்டியிடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவிட்டன. அதே போழ்து, ஆம் ஆத்மி கட்சி மட்டும், கூடுதலாக பெண் வேட்பாளர்களை களமிறக்கியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். 385 வேட்பாளர்களில் 57 பேர் பெண்கள். மனித உரிமை சுற்றுச் சூழல் உரிமை போராட்டங்களில் முன்னணியில் நிற்கும் பெண்கள், அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய முன்வரவில்லை. அடையாளங்களுக்காக குறைந்த எண்ணிக்கையில்தான் பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.

முலாயம்சிங் போன்ற பிற்போக்குவாதிகள், ஆண் இளைஞர்கள், பாலுறவு வன்முறையில் ஈடுபடுவதை பெரிய குற்றமாகக் கருதக் கூடாது என்று தேர்தல் கூட்டங்களில் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்க மறுத்து காதலர்களை பிரித்து வைப்பவர்கள், ஜாதி கடந்த திருமணங்களை மிரட்டி தடுப்பவர்கள், ஜாதிக் கலவரங்களை தூண்டிவிட்டு நடத்தக் கூடியவர்கள், இவர்கள் அனைவருமே பெண்களின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, பெண்களை மனிதர்களாகவே மதிக்க மறுக்கிறவர்கள்தான். இவற்றின் கடுமையான பாதிப்புகளை சுமக்க வேண்டியவர்களும் பெண்கள்தான்.

ஆனால், இந்த முக்கியமான பாலின சமத்துவம் தேர்தல் களத்தில் ஒரு பிரச்சினையாகக்கூட முன்வைக்கப்படுவதில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்களின் உரைகளுக்காக அழைத்து வரப்பட்டு, கடும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவோரும் பெருமளவில் பெண்கள்தான். பெண்களின் வாக்குகள் இவர்களுக்கு வேண்டும். ஆனால், பெண்களின் பிரதிநிதித்துவம் அவர்களுக்கு கசக்கும். இந்திய ஜனநாயகத்தின் அரசியல் திருவிழாக்களானாலும் சரி, கொண்டாடப்படும் மதத்தின் திருவிழாக்களானா லும் சரி, பெண்கள் பார்வையாளர்கள்தான்! தீர்மானிப்பவர்கள் அல்ல; எத்தனை காலம் தொடருவது இந்த அநீதி?

“ஆணும் பெண்ணும் சமஉரிமை இல்லாத உலகில், சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?” - பெரியார்.

Pin It