periyamuz-logo

குஜராத் படுகொலையில் மோடிக்கு தொடர்பில்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு கூறிவிட்டது. எனவே மோடிக்கும் குஜராத்தில் 2002இல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலைக்கும் தொடர்பே இல்லை. மோடி புத்தரின் வாரிசு, அகிம்சையின் அவதாரம் என்று மோடிக்கு முகமூடி போடுகிறார்கள் - மோடி ரசிகர்கள்.

ராகவன் என்ற ஓய்வு பெற்ற பார்ப்பன காவல் துறை அதிகாரியின் தலைமையில் மோடி உள்ளிட்ட 63 நபர்கள் மீது வந்த புகார் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு விசாரணையை நேர்மையாக நடத்தியதா? இது முக்கிய கேள்வி.

• இஷான் ஜாப்ரி என்ற கொலையுண்ட முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மனைவி, குஜராத்தில் 12 மாவட்டங்களில் நடந்த படுகொலைகளுக்கு காரணமான மோடி, அவரது சக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 62 நபர்களை பட்டியலிட்டு, அவர்கள் மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

• விசாரணை நடத்திய ராகவன் தலைமையிலான புலனாய்வுக் குழு மோடியை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே தனது விசாரணையை நடத்தியது என்று ஜாக்கியா ஜாஃபரி மட்டுமல்ல, குஜராத்தின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் ஆர்.பி. சிறீகுமார், மோடியால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை துணை ஆணையர் சஞ்சீவ் பட், படுகொலை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய ‘தெகல்கா’ வார இதழ் செய்தியாளர் ஆஷிஷ் கேதான் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டினர்.

• கோத்ரா இரயில் பெட்டி எரிப்பு சம்பவம் நடந்த வுடன், மோடி விசாரணை ஏதும் நடப்பதற்கு முன்பே ‘பாகிஸ்தான் உதவியோடு முஸ்லிம்கள் நடத்திய திட்டமிட்ட சதி’ என்று அலறினார்.

அப்படி அறிவித்தவுடன், கோத்ராவுக்கு புறப்பட்ட மோடி, தீயில் இறந்துபோன கர சேவகர்கள் மற்றும் பயணிகள் உடலை சட்டத்துக்குப் புறம்பாக ஆர்.எஸ்.எஸ்.காரர் களின் கண் முன்னே ‘பிரேதப் பரிசோதனை’ நடத்த உத்தரவிட்டார். விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் பட்டேலுடன் தொலை பேசியில் பேசினார் மோடி. அவரும் கோத்ரா வந்துவிட்டார். இது நடக்கும் போதே அமைச்சர்கள் கூடி கலவரத்துக்கான சதித் திட்டங்களை தீட்டுகிறது. இறந்து போன கரசேவகர்களின் சடலங்களை விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கவும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் கும்பல், அந்த சடலங்களை கோத்ரா விலிருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அகமதாபாத்துக்கு சாலை வழியாக எடுத்துச் செல்லவும் அமைச்சர்கள் கூட்டம் அனுமதிக்கிறது. அரசு சாராத ஒருவரிடம் (ஜெய்சிங் பட்டேலிடம்) சடலங்களை ஒப்படைக்கும் முடிவு சட்டவிரோதமானது என்று , கோத்ரா மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜெயந்த்ரவி எதிர்த்தார். இதனால் மிக மோசமான வன்முறை வெடிக்கும் ஆபத்துகள் இருப்பது தெரிந்த பிறகும், இந்து மதவெறியைத் தூண்டிவிடும் நோக்கத்துடன் மோடி அதற்கு அனுமதி தருமாறு வற்புறுத்தினார்.

அன்று இரவே அகமதாபாத் திரும்பிய நரேந்திர மோடி, உயர் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்து வதைத் தடுக்கக் கூடாது” என்று உத்தரவிட்டார்.

• அடுத்த நாள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து முழு அடைப்புப் போராட்டத்தை மோடி அரசின் முழு ஆதரவோடு நடத்தியது. அன்று குல்பர்கா சொசைட்டி, நரோடாபாட்டியா ஆகிய இடங் களில் படுகொலையை ஜெய்தீப்பட்டேலும், மோடி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்த மாயாபென் கோட் னானியும் தலைமை ஏற்று நடத்தினார். (குற்றம் நிருபிக்கப்பட்டு இவருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது) சிறப்புப் புலனாய்வுக் குழு இந்தப் பின்னணி நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை.

• இந்தப் படுகொலைகள் நடந்த 2002, பிப்.27, 28 தேதிகளில் படுகொலைகளை தலைமையேற்று நடத்திய ஜெய்தீப்பட்டேலுக்கும் மோடிக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை புலனாய்வுக்குழு மோடியைக் காப்பாற்று வதற்காகவே விசாரணைக்கு ஏற்கவில்லை.

• மாநிலம் முழுதும் பதட்டம், கலவரம் வெடிக்கும் சூழ்நிலைகளை சுட்டிக் காட்டியும், நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவதை எச்சரித்தும் மாநில உளவுத் துறை அனுப்பிய தந்திச்செய்திகளை புறந்தள்ளியது விசாரணைக் குழு.

• கொலைகாரர்களுக்கு எதிரான தொலைபேசி உரையாடல், உளவுத்துறை மாநில அரசுக்கு அனுப்பிய எச்சரிக்கை தந்திகள் விசாரணைக்கு ஏற்கப்படாத நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தந்த சாட்சியங்களால்தான் இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது. மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பை உச்சநீதிமன்றம் சாட்சிகளுக்கு வழங்கியிருக்காவிடில், இதுவும் நடந்திருக்காது. மாநில அரசே சாட்சிகளை மிரட்டி குற்றவாளிகளை மோடியைப் போல் தப்பிக்கவிட்டிருக்கும்.

• பூர்வாங்க விசாரணை என்று கூறிக் கொண்டு மோடி உள்ளிட்ட 63 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யாமலே புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

மோடி ஒரே ஒரு முறை மட்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் பல இருந்தும் சிறப்புப் புலனாய்வுக்குழு எந்த குறுக்குக் கேள்வியும் கேட்காமல் அவரது வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்து கொண்டது. குற்ற நடவடிக்கை சட்டம் 161 ஆவது பிரிவின் கீழ் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் சட்டத்தின் பிடிக்குள் மோடி கொண்டுவரப்பட்டிருப்பார். 69 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, நெருப்பில் போட்டுக் கொளுத்திய கொலை வெறியாட்டம் பற்றி ஒரு முதலமைச்சர் 5 மணி நேரத்துக்குப் பிறகுதான் தனக்கு தெரிய வந்தது என்று கூறியதை புலன் விசாரணை நடத்திய ராகவன் குழு, எந்த சந்தேகமும் எழுப்பாமல் ஏற்றுக் கொண்டது தான் அதிசயம். ‘குல்பர்கா சொசைட்டி’ முஸ்லிம்கள் குடியிருப்பில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை மோடி ஆட்சி, மூடி மறைத்து குற்றவாளிகளை தப்பிக்கச்செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது என்று உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், இந்த கொலைகளை மூடி மறைப்பதற்கு உதவிய காவல்துறை அதிகாரியையே சிறப்பு விசாரணைக் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டது தான் இதற்கு அதே உச்சநீதிமன்றம் அனுமதித்தது.

• இந்த வழக்கில் விசாரணையை கண்காணிக்கவும், நண்பராக உதவிடவும் (அமிகஸ் கியுரே), ராஜி ராமச்சந்திரன் என்ற வழக்கறிஞரை உச்சநீதிமன்றம் நியமித்தது. சிறப்புப் புலனாய்வுக் குழு, மோடி மீது வழக்குப் பதிவு செய்வதற்கு முகாந்திரமில்லை என்று தப்பிக்க விட்டாலும், மதப்பகையை தூண்டிவிட்ட குற்றச்சாட்டில் மோடி மீது வழக்குப் பதிவு செய்திருக்க முடியும் என்று, அவர் தனது அறிக்கையில் கூறினார். ‘இந்துக்கள் வெளிப்படுத்தும் கோபத்தை தடுக்க வேண்டாம்’ என்று உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி கூறியதை வெட்டவெளிச்சமாக்கிய அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை புலனாய்வுக் குழு ஏற்கவில்லை. ஆனால், ‘அமிகஸ்கியுரே’வாக செயல்பட்ட ராஜி ராமச்சந்திரன், “இந்த போலீஸ் அதிகாரியின் சாட்சியம் உண்மைதானா என்பதை உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்திருக்க வேண்டுமே தவிர புலனாய்வுக்குழு அல்ல” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் பொறுப்புக்கு உச்சநீதிமன்றம் ஆர்.கே.ராகவனை நியமித்ததே சரியான தேர்வு அல்ல. ராஜிவ் கொலை நடந்தபோது, தமிழ்நாட்டில் காவல்துறை தலைமை அதிகாரியாக இருந்த அவருக்கு, ராஜிவ் பாதுகாப்புக்கான பொறுப்பு அளிக்கப்பட்டது. ராஜிவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதாக ராஜிவ் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி விசாரித்த ராகவன், வர்மா ஆணையத்தின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர். எனவே குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தந்த அறிக்கை ஒரு சார்பானது. அந்தக் குழு நடத்திய விசாரணை நேர்மையற்றது. மோடியை தப்பிக்கச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டது.

ஆதாரம் : (The Fiction and Fact Finding-மனோஜ் மித்தா நூல்)

Pin It

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வாக்காளர்களாக இருந்து என்ன பயன்? அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் பெண்களுக்கு முற்றாகவே மறுக்கப்பட்டுத்தான் வருகின்றன. 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம், பாதிக் கிணற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தொடர்ந்து ஆண் ஆதிக்க அரசியல் தலைவர்கள் தடைபடுத்தியே வருகிறார்கள்.

நாட்டின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மோடி, தனக்குத் திருமணமாகி, ஒரு மனைவி இருக்கிறார் என்ற உண்மையைக்கூட வெளிப்படுத்திடாமல் மறைத்து வைத்துள்ளார். மூன்று முறை சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிடும் விண்ணப்பப் படிவத்தில் இதை மறைத்துவிட்டு, இப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான விண்ணப்பத்தில் மட்டும் குறிப்பிடுகிறார். “மோடி ஏன் மறைத்தார்; இவர் பதவிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?” என்ற கேள்விகள் எதிர்முகாம்களில் முன் வைக்கப்படுகின்றன. நாம் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறோம். பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஒரு பெண் களத்தில் இறக்கப்பட்டு, அந்தப் பெண் மூன்று முறை தாக்கல் செய்த தேர்தல் விண்ணப்பப் படிவத்தில் தனக்குத் திருமணம் நடந்து, கணவர் இருப்பது பற்றி எதையும் குறிப்பிடாமல் மறைத்து, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தனக்கு திருமணமாகி, ஒரு கணவரும் இருக்கிறார் என்று அறிவித்து, தேர்தல் களத்துக்கு வந்திருந்தால், இந்த அரசியலும், சமூகமும், அந்தப் பெண்ணை அங்கீகரித்திருக்குமா? ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டு சிந்திக்க வேண்டிய கேள்வி இது. மதம் கட்டமைக்கும் ஒழுக்க மதிப்பீடுகள் பெண்களை மட்டுமே சுமை தாங்கிகளாக்கியிருக்கின்றன. சமூகத்தின் பார்வையில் பெண்தான் எப்போதும் குற்றக் கூண்டில் ஏற்றப்படுவாள். குற்றவாளிகளாக மாறி நிற்கும் ஆண்களே தீர்ப்புகளை தங்கள் ‘சாட்டை’களால் எழுதுகிறார்கள்.

33 சதவீதம் பெண்களுக்குத் தேவை என்று பேசிய கட்சிகளேகூட தேர்தல் களத்தில் பெண்களுக்கு எத்தகைய வாய்ப்புகளை வழங்கியிருக் கின்றன? அரசியலில் சோனியா, மம்தா, ஜெயலலிதா, சுஷ்மா என்று பெண்களின் தலைவர்கள் தானே அதிகாரத்தை தங்களிடம் வைத்துள்ளார்கள் என்று கேட்கலாம். குறியீடுகளாக நிற்கும் இந்தப் பெண் தலைமைகள், தங்கள் அதிகாரத்தின் வலிமையை பெண்களுக்காக பயன்படுத்த முடியாத நிலையில்தான் சமூகத்தின் அரசியல் பார்வை கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

சோனியா தலைமையிலான காங்கிரசு கட்சியே 413 வேட்பாளர்களில், 53 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்துள்ளது. 33 சதவீத ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும் என்றவர்கள், சட்டம் வராவிடிலும் அதை ஏன், தங்கள் கட்சியில் நடைமுறைப்படுத்தக் கூடாது? பெண்களின் சமத்துவம், உரிமைகள் மத பண்பாட்டுக்கு எதிரானது என்று இந்துமதப் பார்ப்பனிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிற கட்சி பா.ஜ.க.

அதன் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ்.சில் நேரடி உறுப்பினராகும் தகுதி பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. முன்னணி அமைப்புகளில்தான் பெண்கள் இருக்க முடியும். அந்த பா.ஜ.க. களமிறக்கியிருக்கும் 409 வேட்பாளர்களில் பெண்கள் 35 பேர் மட்டும்தான். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி, நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் ஒரு பெண்ணுக்குக்கூட வாய்ப்பு தரப்படவில்லை. (சிதம்பரம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டவரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவருக்கு மாற்றாக மனு செய்த அவரது மனைவி வேட்பாளராக்கப்பட்டுள்ளார்) தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பரப்புரையாளர்களாக தீவிரமாக செயல்பட்ட தமிழிசை, வானதி என்ற இரண்டு பெண்களுக்கும் போட்டியிடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவிட்டன. அதே போழ்து, ஆம் ஆத்மி கட்சி மட்டும், கூடுதலாக பெண் வேட்பாளர்களை களமிறக்கியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். 385 வேட்பாளர்களில் 57 பேர் பெண்கள். மனித உரிமை சுற்றுச் சூழல் உரிமை போராட்டங்களில் முன்னணியில் நிற்கும் பெண்கள், அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய முன்வரவில்லை. அடையாளங்களுக்காக குறைந்த எண்ணிக்கையில்தான் பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.

முலாயம்சிங் போன்ற பிற்போக்குவாதிகள், ஆண் இளைஞர்கள், பாலுறவு வன்முறையில் ஈடுபடுவதை பெரிய குற்றமாகக் கருதக் கூடாது என்று தேர்தல் கூட்டங்களில் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்க மறுத்து காதலர்களை பிரித்து வைப்பவர்கள், ஜாதி கடந்த திருமணங்களை மிரட்டி தடுப்பவர்கள், ஜாதிக் கலவரங்களை தூண்டிவிட்டு நடத்தக் கூடியவர்கள், இவர்கள் அனைவருமே பெண்களின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, பெண்களை மனிதர்களாகவே மதிக்க மறுக்கிறவர்கள்தான். இவற்றின் கடுமையான பாதிப்புகளை சுமக்க வேண்டியவர்களும் பெண்கள்தான்.

ஆனால், இந்த முக்கியமான பாலின சமத்துவம் தேர்தல் களத்தில் ஒரு பிரச்சினையாகக்கூட முன்வைக்கப்படுவதில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்களின் உரைகளுக்காக அழைத்து வரப்பட்டு, கடும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவோரும் பெருமளவில் பெண்கள்தான். பெண்களின் வாக்குகள் இவர்களுக்கு வேண்டும். ஆனால், பெண்களின் பிரதிநிதித்துவம் அவர்களுக்கு கசக்கும். இந்திய ஜனநாயகத்தின் அரசியல் திருவிழாக்களானாலும் சரி, கொண்டாடப்படும் மதத்தின் திருவிழாக்களானா லும் சரி, பெண்கள் பார்வையாளர்கள்தான்! தீர்மானிப்பவர்கள் அல்ல; எத்தனை காலம் தொடருவது இந்த அநீதி?

“ஆணும் பெண்ணும் சமஉரிமை இல்லாத உலகில், சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?” - பெரியார்.

Pin It

கருத்து மாறுபாடுகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்தால் அதை வெளியிடவே கூடாது என்ற போராட்டங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இந்து மதம் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தில் வெளிவரும் நூல்கள் இந்தியாவில் வெளியிடவே கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்கள் மிரட்டுகிறார்கள். உடனே நூல் திரும்பப் பெற்று விடுகிறது. ‘இராமன்-கிருஷ்ணன் ஒரு புதிர்’ என்று அம்பேத்கர் எழுதிய நூலை திரும்பப் பெறக் கூறி மராட்டியத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கலவரத்தில் இறங்கினர். ஆனால், பெரும்பான்மை மக்களை “சூத்திரர்கள்”, “அடிமை கள்”, “பிராமணரின் வைப்பாட்டிப் பிள்ளைகள்” என்று கேவலமாக இழிவு செய்யும் மனுசாஸ்திரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரலை எந்த மானமுள்ள தமிழனும் எழுப்பத் தயாராக இல்லை. கோயில் கருவறைக்குள் கடவுளிடம் நெருங்கி, கடவுளுக்கு அர்ச்சனை செய்யக்கூடிய உரிமை பிறப்பால் இழிவான ‘சூத்திரர்-பஞ்சமர்க்கு’ கிடையாது என்று சட்டப்படி உறுதி செய்யப்பட் டுள்ளதைப் பற்றி எந்த “மற”த் தமிழனுக்கும் மானம் பீறிட்டுக் கிளம்புவதில்லை. அதே கோயிலுக்குள் அதே கேவலத்தை ஏற்றுக் கொண்டு கர்ப்பகிரகத்துக்கு கைகட்டி வெளியே தலை தாழ்த்தி நிற்கிறான்.

மாறுபட்ட கருத்துகள், கலை களாக, திரைப்படங்களாக எழுத்து களாக வரவே கூடாது என்ற கருத்து, கருத்துரிமையைப் பறிப்பதாகும். பெரியார் தனது படத்தை எதிரிகள் செருப்பாலடித்தபோதுகூட, “நன்றாக அடியுங்கள்; அதன் மூலம் என் கருத் துகள் பரவும்” என்றுதான் கூறினார்.

வடிவேலு நடித்து வெளிவர இருக்கும் ‘தெனாலி ராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் என்ற தெலுங்கு மன்னரை அவமதிக்கும் கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக தமிழ்நாட்டில் ‘தெலுங்கு பேசுவோர் சங்கம்’ என்ற அமைப்பினர் தொடை தட்டி போராடக் கிளம்பிவிட்டார்கள். நடிகர் வடிவேலு, கிருஷ்ண தேவராயர் என்ற பெயரைக்கூட படத்தில் உச்சரிக்கப்படவில்லை என்று கூறுகிறார்.

உண்மையில் கிருஷ்ண தேவராயர், பார்ப்பன அடிமையாகவே ஆட்சி செய்த மன்னன். கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் முதலமைச்சராக இருந்தது ‘சாளுவ திம்பரசு’ எனும் பார்ப்பனர். மன்னனின் குலகுரு தாதாச்சாரி எனும் வேதியப் பார்ப்பான். அப்பையத் தீட்சதர், பெத்தண்ணா, தெனாலி ராமன் ஆகிய பார்ப்பனர்கள், அரசவைக் ‘கவி’கள்!

காலம் முழுதும் “பிராமணர்” களுக்கே பொன் பொருளைக் கொட்டி யழுது பல அக்கிரகாரக் குடியிருப்பு களை உருவாக்கித் தந்தவர் கிருஷ்ண தேவராயர். கிருஷ்ண தேவராயருக்கு ஆண் வாரிசு இல்லை. தனது மகள் வயிற்றுப் பேரனாகிய ‘திருமலை ராயன்’ எனும் 6 வயது சிறுவனை தத்து எடுத்து வளர்த்து, தனது வாரிசாக முடிசூட்டத் திட்டமிட்டார். கிருஷ்ணதேவராயரை ஏமாற்றி சுரண்டி வந்த பார்ப்பனர்களே இதற்கு எதிராக சதி செய்தனர். முதலமைச் சராக இருந்த ‘சாளுவத் திம்மரசு’ என்ற பார்ப்பானே தனது மகன் வழியாக விஷத்தை சாப்பிடக் கொடுத்து, முடிசூட்டப்படவிருந்த சிறுவன் திருமலைராயனை சாகடித்து விட்டான். செய்தி அறிந்த கிருஷ்ண தேவராயர் அதிர்ச்சியில் உறைந்தார். நீதி விசாரணை நடத்தி கொலை காரர்களை கண்டறிந்து தண்டிக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் மற்றும் அவனது மகன் உள்ளிட்ட மூன்று பார்ப்பனர்களே சதிகாரர்கள் என்பது கண்டறியப்பட்டது. ஆனாலும், பார்ப்பனர்களைக் கொலை செய்வது பாவம்; ‘மனு சாஸ்திர’த்துக்கு விரோதம்; ‘பிரம்மஹத்தி தோஷம்’ வந்துவிடும் என்று அஞ்சி மரண தண்டனை விதிக்க கிருஷ்ண தேவ ராயன் பயந்தார். கொலைகாரர்களின் கண்களை மட்டும் பறிக்குமாறு உத்தர விட்டார். பேரன் மரணத்தால் நிலை குலைந்து கி.பி.1530இல் இறந்தார். இந்த வரலாறு பெருமைக்குரியதா? பார்ப்பன அடிமையாக வாழ்ந்தவர்கள் அதுவும் அரசர்களாக மக்களை சுரண்டி கசக்கிப் பிழிந்தவர்கள் எல்லாம், போற்றுதலுக்கு உரியவர் களா? ‘தெலுங்கர்’ என்பதாலோ, ‘தமிழர்’ என்பதாலோ, ‘கன்னடர்’ என்பதாலோ அது எந்த மொழி அரசனாக இருந்தாலும் அரசர்களை விமர் சிக்கவே கூடாது என்பது என்ன நியாயம்?

“தெலுங்கு பேசுவோர்” சங்கங்கள் இப்படி மொழி வெறிக் கண்ணோட் டத்தில் ஆர்த்தெழுவது அறிவுடைமை யாகாது!

நூல்கள், திரைப்படங்கள், இலக்கி யங்களில் மாறுபட்ட கருத்துகளே வரக்கூடாது; எரிப்போம்; தடுப்போம் என்று தொடை தட்டுவது கருத்து விவாதங்களை அறவே ஒழித்துவிடும். எந்தத் தரப்பிலிருந்து இந்தக் குரல் வந்தாலும் அது ஆர்.எஸ்.எஸ். பாசிச சிந்தனைதான் வன்மையான கண்டனத்துக்கு உரியது!

Pin It

‘நேர்மையாளர்’, ‘நடுநிலையாளர்’ என்ற வேடத்துக்குள் பதுங்கிக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியத்தைப் பரப்பி வருபவர்

‘துக்ளக்’ சோ. மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருவதோடு, பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும் மோடிக்காக ஆதரவு திரட்டினார். தீவிர அத்வானி ஆதரவாளராக இருந்து அதற்கு நன்றிக் கடனாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றவர்தான் ‘சோ’. தனது ‘துக்ளக்’ ஆண்டு விழாவுக்கு மோடி, அத்வானி இருவரையும் அழைத்து ஒரே மேடையில் ஏற்றி ‘சமரச’ தூதுவராக, தன்னை அடையாளம் காட்டிவர். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமான ஆலோசகராக உள்ளார். மோடியின் முதல்வர் பதவி ஏற்பு விழாக்களில் தவறாது பங்கேற்பவர், ஜெயலலிதா. ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்பு விழாவிலும் பங்கேற்றார் மோடி. இந்த நெருக்கத்தின் இணைப்புப் பாலமாய் நிற்பவர், ‘துக்ளக்’ சோ, மோடி பிரதமராக வேண்டும்; அவருக்கு வாய்ப்பு இல்லையேல் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று தனது பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருகிறார். இப்போது வெளிப்படையாக பா.ஜ.க. கூட்டணி அமைத்த பிறகும், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கும், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பா.ஜ.க. கூட்டணி கட்சிகள், ‘துக்ளக்’ சோவின் இந்த பச்சைப் பார்ப்பன அறிவிப்பைக் கண்டு திகைத்துப் போய் நிற்கின்றன. கடந்த வாரம் சென்னை வந்த மோடியை, நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தவரும் இதே ‘துக்ளக்’ சோ தான்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பிரபல வழக்கிறஞர் பிரசாத் பூஷண், சென்னையில் ஏப்.14 ஆம் தேதி அளித்த பேட்டியில், ‘துக்ளக்’ சோ ஜெயலலிதாவின் ‘பினாமி’யாக செயல்படும் செய்தியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு ஊடகங்கள், சோவின் முகத்திரையைக் கிழிக்கும் இந்த செய்தியை கட்டுப்பாடாக இருட்டடிப்பு செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை செய்தியாளர்களிடம் கூறிய பிரசாத் பூஷன், அவர் ‘சோ’ ராமசாமி அல்ல; ‘சோர்’ (தமிழில் திருடன்) ராமசாமி என்று கூறினார். பிரசாத் பூஷன் வெளியிட்ட செய்தி என்ன?

ஜெயலலிதாவின், ‘உடன்பிறவா’ சகோதரி சசிகலாவுடன், ஜெயலலிதாவுக்கு கருத்து மாறுபாடு ஏற்பட்டு, போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றியது அனைவருக்கும் தெரியும். ‘சசிகலாவுக்கும் தனக்கும்’ எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அத்துடன் சசிகலா இயக்குனராக இருந்த ‘மிடாஸ்’ (மதுபான தயாரிப்பு நிறுவனம்) உள்ளிட்ட, பல நிறுவனங்களிலிருந்து இயக்குனர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். அப்போது அந்தப் பதவிகளில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் ‘துக்ளக்’ சோ. மீண்டும் சசிகலா, போயஸ் கார்டனுக்கு திரும்பியபோது, ‘துக்ளக்’ சோ, தனது பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டு, சசிகலாவிடம் ஒப்படைத்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இத்தகவலை பிரசாந்த் பூஷன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது தவிர, ‘துக்ளக்’ சோவுக்கு வேறு பின்னணிகளும் உண்டு. ‘துக்ளக்’ சோவின் தந்தை ஆத்தூர் சீனிவாச அய்யர். இவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ‘சாராய வியாபாரியாக’ கொழுத்த இராமசாமி உடையார் நடத்திய ‘ஓரியன் கெமிக்கல்ஸ்’ என்ற நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தவர் இராமசாமி உடையார். ‘கோல்டன் ஈகில்’ என்ற பெயரில், (ஜி.ஈ.டி.) தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றையும் தொடங்கினார். அந்தத் தொலைக்காட்சி நிலையம், எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோ வளாகத்திலே செயல்பட்டது. அந்த தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ‘துக்ளக்’ சோ. இந்த தொலைக்காட்சியில் எஸ்.வி.சேகர், கங்கை அமரன் போன்றோர் பங்காற்றினர். பின்னர், இந்த அலைவரிசையை விஜய் தொலைகாட்சி நடத்தி வந்த கருநாடக ‘சாராய அதிபர்’ மல்லையா வாங்கினார். இப்போது மல்லையாவிடமிருந்து ஸ்டார் நிறுவனம் அதை வாங்கியுள்ளது. ‘துக்ளக்’ சோவின் தந்தை ஆத்தூர் சீனிவாசன் இறந்தபோது வெளிவந்த மரண விளம்பரத்தில் உடையார் நிறுவனத் தலைவராக அவர் இருந்ததும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதாவை தனது ஏட்டில் தொடர் கட்டுரைகளை எழுத வைத்து, அவரை கட்டுரையாளராக அறிமுகப்படுத்தியவர் ‘துக்ளக்’ சோ. அதற்குப் பிறகுதான் அவர் அ.இ.அ.தி.மு.க. அரசியலுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It

பா.ஜ.க. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணி யில் காஞ்சி காமாட்சியம்மன் இருப்பதாக அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயி லில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி உலக நன்மை வேண்டி ஸ்ரீதச மஹா வித்யா ஹோமம் தொடங்கியது. மார்ச் 23 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலர் முரளிதர ராவ், தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன் பிரசாதத்தை கோயில் பிரதான அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி எடுத்துக் கொண்டு மார்ச் 26 ஆம் தேதி டெல்லியில் உள்ள மோடியை  சந்தித்து கொடுத்துள்ளார். பிரசாதத்தில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டுப் புடவையும் இருந்துள்ளது.

இந்த பட்டுப் புடவையை கொண்டு சென்ற நடராஜ சாஸ்திரி, “இந்தப் புடவையை உங்கள் மனைவியிடம் கொடுங்கள்” என்று மோடியிடம் கூறினாராம். சற்று மௌனம் காத்து, பின்னர் வியந்துபோய் நரேந்திர மோடி பிரசாதத்தை பெற்றுக் கொண்டாராம். அம்பாள் பக்தரான நரேந்திர மோடி, காமாட்சியம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதையும், அதை அவரது மனைவியிடம் கொடுக்குமாறு கூறியதையும் காமாட்சியம்மனின் உத்தரவாக எடுத்துக் கொண்டார். அதன் பிறகே வேட்புமனு தாக்கலின்போது, தனது மனைவியின் பெயரை குறிப்பிட்டார் என்று அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து நடராஜ சாஸ்திரியிடம் கேட்டபோது, நரேந்திர மோடியை சந்தித்ததும், அவருக்கு அம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதும் உண்மை. இதன் பின்னரே அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டு மனைவி பெயரைத் தெரிவி துள்ளார் என்றார் அவர்.  ‘தமிழ் இந்து’ நாளேடு (ஏப்.15) இதை வெளியிட்டுள்ளது.

Pin It