ஊடகங்கள் பா.ஜ.க.வின் ஊதுகுழல்களாக மாற்றப்பட்டு வருகின்றன. பா.ஜ.க. - மதவெறிக் கொள்கைகளை தனிப்பட்ட முறையில் ஏற்க விரும்பாத ஊடகவியலாளர்களை பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க.வினர் மிரட்டி வருகிறார்கள்.

• 17 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்தும் வீரபாண்டியன் தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்கள் உரிமைகள் - மதவெறி சக்திகளின் ஆபத்து பற்றி கருத்து தெரிவித்தார். அதன் காரணமாக அவர் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என்று. தமிழ்நாடு பா.ஜ.க. ‘சன்’ தொலைக்காட்சி நிறு வனத்துக்கு கடிதம் எழுதியது; சன் தொலைக் காட்சியும் பணிந்தது; வீரபாண்டியன் நிறுத்தப்பட்டு விட்டார்.

• ‘இந்து’ ஏட்டின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சித்தார்த்த வரதராஜன். கடந்த அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகிவிட்டார். “கொள்கை ரீதியாக மோடியை ‘இந்து’ எதிர்க்கிறது. ஆனால், தேசிய அரசியலில் வளர்ந்து வரும் மோடிக்கு உரிய முக்கியத்துவம் ‘இந்து’வில் தரப்படவில்லை. இதற்கு சித்தார்த் வரதராஜன் பின்பற்றிய நெறிமுறைகளே காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார் ‘இந்து’வின் தலைமை ஆசிரியராக மீண்டும் பொறுப் பேற்றுள்ள இரவி. பத்திரிகை அதிபர்கள் எந்தப் பிரச்சினைக்கும் விலை கொடுக்கத் தயாராக இல்லை. ஆபத்து என்றால் சரணடைந்துவிடுவார்கள் என்கிறார், சித்தார்த் வரதராஜன்.

• இந்துத்துவா எதிர்ப்புக் கட்டுரைகள் எழுதியதற்காக ‘ஓப்பன்’ ஆங்கில் வார இதழில் அரசியல் பிரிவு ஆசிரியர் ஹர்தோஷ்சிங்பால் பதவி விலகுமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மோடியை மட்டுமல்ல, ராகுல் காந்தியையும் அரசியல் ரீதியாக விமர்சித்து எழுதி வந்தவர் இவர். அரசியல் அழுத்தம் காரணமாகவே நான் நீக்கப்பட்டேன் என்கிறார் ஹர்தேஷ்சிங்.

• ரிலையன்ஸ் அம்பானி குழுமத்தால் நடத்தப்படும் 18 ஊடகங்களில் ஒன்று ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை. மோடிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று 18 ஊடகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மோடியை உயர்த்திப் பிடிக்கும் அனைத்து பதிவுகள், ஆவணங்களைப் பயன்படுத்துவதோடு, மோடிக்கு எதிரான கருத்துகளை முறியடிக்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நெருக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ‘ஃபோர்ப்ஸ்’ இதழின் 4 ஆசிரியர்களில் ஒருவரான இந்திரஜித் குப்தா, கடந்த ஆண்டு பதவி விலகிவிட்டார்.

• சமூக வலைதளங்களில் ஒன்றான ‘டிவிட்டர்’ செய்திப் பிரிவு தலைமை ஆசிரியராக இருப்பவர் ரஹீல்குர்ஷித். அவர் எப்போதோ பல ஆண்டுகளுக்கு முன்பு மோடியை விமர்சித்து பதிவேற்றியதைத் தேடிப் பிடித்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. ஆதரவு சக்திகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன. ‘அவுட் லுக்’ ஏடு, இத் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் மிரட்டப்படுவது இப்போதே தொடங்கிவிட்டது. இவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் என்னவாகும்?

Pin It