22 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே டிசம்பர் 13 இல், இந்திய நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதற்கும் இதற்கும் வேறுபாடுகள் உண்டென்றாலும், இரண்டும் தாக்குதல்கள்தான்!

புதிய நாடாளுமன்றக் கட்டிடம். கடந்த மே 28ஆம் தேதி திறக்கப்பட்டது. மிகுந்த எழிலோடும் பாதுகாப்புகளோடும் கட்டப்பட்டு இருப்பதாகச் சொன்னார்கள். பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தை விட மூன்று மடங்கு பெரியதாம். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல மடங்கு குறைவாக இருந்திருக்கிறது!

அதனால்தான் நான்கு கட்டப் பாதுகாப்புகளைத் தாண்டி இரண்டு பேர் உள்ளேயும், நான்கு பேர் வெளியிலுமாக, ஒரு பதற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இரண்டு பேர் நாடாளுமன்ற அவைக்குள்ளேயே குதித்து வண்ணப் புகைக் குண்டுகளை வீசி இருக்கிறார்கள்.smoke in parliamentஅவர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் வருவதற்கு, பாஜகவின் எம்.பி பிரதாப் சிம்கா பரிந்துரைக் கடிதம் கொடுத்துள்ளார். அவர் மீது எந்த விசாரணையும் இதுவரையில் நடைபெறவில்லை. இன்றும் அவர் உறுப்பினராகத் தான் தொடர்கிறார். ஆனால் ஏன் இப்படிக் குறைபாடு ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பிய கனிமொழி உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் அவையிலேயே இல்லாத திமுகவைச் சேர்ந்த, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபனும் இடை நீக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார். பிறகு அது தவறாக நடந்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால், நாடாளுமன்ற உறுப்பினராகவே இல்லாதவரைக் கூட, அவையிலிருந்து இடை நீக்கம் செய்தாலும் செய்வார்கள்.

இது ஒரு கட்டிடத்திற்கு ஏற்பட்ட ஆபத்தில்லை. இந்தியாவுக்கே அறைகூவல் விடுத்திருக்கிற ஆபத்து. ஆனால் இது குறித்து விளக்கம் சொல்வதற்கு, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அவைக்கு வரவே இல்லை.

அவைத் தலைவர், இது வெறும் வண்ணப் புகைக் குண்டுதான். அதாவது பட்டாசு மாதிரி என்பது போல விளக்கம் சொல்கிறார். அது என்ன மாதிரியான குண்டு என்பது வேறு செய்தி. எப்படி அதனை அவர்கள் அவைக்குள் எடுத்துக் கொண்டு வர அனுமதிக்கப்பட்டார்கள் என்பதுதான் முதல் கேள்வி.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இனி நம் முன் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த வழி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஒன்றிய அரசின் இன்றைய ஆளும் கட்சியைப் படுதோல்வி அடையச் செய்வது மட்டும்தான்.

- சுப.வீரபாண்டியன்

Pin It