முதலாளித்துவம் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் பாசிசத்தால் பாதுகாக்கப்படுகிறது. பாசிசம் முதலாளித்துவத்தை அழிவிலிருந்து பாதுகாக்கும் ஆயுதமாகிறது. இதை அனைவரும் புரிந்து கொண்டால் மக்கள் ஆயுதத்தை முதலாளித்துவத்திற்கு எதிராகத் திருப்பி அதை முறியடிக்க முடியும். முதலாளித்துவம் அதன் வளர்ச்சி நிலையில் இன்று நவீன தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது.

capitalism and povertyநவீன தாராளமயத்தில் பில்லியனர்கள் எனப்படும் பெரும்பணக்காரர்களுக்கு சாதகமான முறையில் உலகின் பொருளாதாரமும், அரசின் அதிகாரங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆளுகையில் வீழ்ந்துள்ளன. நிதி மூலதனங்கள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து ஒன்றாகி சர்வதேச நிதி மூலதனமாகி முழு முற்றுரிமையைப் பெற்றுள்ளன. இதனால் தேசங்களின் இறையாண்மை காவு கொடுக்கப்படுகிறது. அரசுகள் அதிகாரமற்ற கைப்பாவைகளாகின்றன.

தேசங்களின் இறையாண்மையே முற்றிலும் பறிக்கப்படும் போது மாநிலங்களின் நிலைமையை சொல்லவே வேண்டாம். கூட்டாட்சித் தத்துவம் கொலை செய்யப்பட்டு மாநிலங்கள் முற்றிலும் அடிமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

சர்வதேச நிதி நிறுவனங்கள் தேச அரசுகளின் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. அதன்படி அரசு நேரடியாக முதலீடு செய்யக் கூடாது, சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்க வேண்டும், விவசாயிகளுக்கு, சிறு உற்பத்தியாளர்களுக்குத் தரப்படும் மானியங்களைக் குறைக்க வேண்டும். அரசின் விலை நிர்ணயக் கொள்கையை நிறுத்த வேண்டும். அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் பணக்காரர்களுக்கான வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்றவற்றை அதிகப்படுத்தக் கூடாது. அரசு மொத்த ஜிடிபியில் 3% க்கு மேல் கடன் வாங்கக் கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இவற்றை மீறினால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. இப்படித் தான் வெனிசுலாவிலும், பொலிவியாவிலும் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

ஆளும் அரசுகள் சர்வதேச நிதி நிறுவனங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதால் மக்களுக்கான அடிப்படை செலனவினங்களைக் குறைக்கின்றன. முதலாளித்துவ அரசுகள் எளிய மக்களையே பெருமளவில் பாதிக்கும் மறைமுக வரியையே அதிகப்படுத்துகின்றன. இதனால் அன்றாடத் தேவைகள் நிறைவேறாமல், அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்கப் பெறாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அரசு 3%க்கும் மேல் கடன் வாங்கினால் அது தனியார் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பறித்து விடுமாம், இவ்வாறு நவீன தாராளமயத்தின் கொள்கைகள் அரசாங்கத்திற்கான மலிவுக்கடனைத் தடுத்து பெருமுதலாளிகள் மட்டுமே மலிவுக்கடன் பெறுமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. பெருமுதலாளிகள் தங்கள் சொந்தப் பணத்தை வைத்து மட்டும் தொழில் செய்வதில்லை, அவர்கள் மக்களிடமிருந்து நிதித் திரட்டும் வங்கிகளிடருந்து பெருமளவில் கடன் பெற்றே எந்தத் தொழிலையும் மேற்கொள்கின்றனர். அரசாங்கங்கள் கடன் இல்லாமல் வருவாயைப் பெறுவதற்காக அரசின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. ஒரு தேச அரசின் கடன் அதிகமானால் பன்னாட்டுத் தர நிறுவனங்கள், அந்நாட்டின் சந்தைக்கான தர மதிப்பீட்டைக் குறைத்து விடும். தர மதிப்பீடு குறைந்தால் அந்நாட்டின் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று அந்நாட்டின் சந்தையிலிருந்து வெளியேறி விடுவார்கள். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும்.

நவீன தாராளமயம் பணக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவதன் மூலமே அனைத்து பொருளியல் நெருக்கடிகளையும் சரி செய்ய முடியும் என்கிறது. ஆனால் ஒவ்வொரு பொருளியல் நெருக்கடியும் அது பொய் என்பதையே மெய்ப்பிக்கிறது.

இந்த நவீன தாராளமயக் கொள்கைகளைக் கடைபிடிப்பதால் தடையற்ற வர்த்தகம் என்ற பெயரில் தேசங்களின் பொருளாதாரத் தற்சார்பு அழிகிறது. நாட்டின் உள்நாட்டுத் தொழில்களும், விவசாயமும் நசிவடைகின்றன, வேலைவாய்ப்பின்மை அதன் உச்ச நிலையை அடைகிறது. நாட்டில் பொருளாதாரச் சமமின்மை அதீதமாகிறது. மூலதனத்தின் இலாப வீதத்திற்கும், கூலி வீதத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகமாவதால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. கூலி குறைவதாலும், வேலையின்மையாலும் மக்களின் நுகர்வும் குறைந்து விடுகிறது. இதனால் மிகையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படாமல் தேங்குகின்றன. இதைத் தற்காலிகமாக சரிசெய்ய கூலி உயர்த்தப்படலாம். ஆனால் லாபத்தின் பங்கு அணுவளவு குறைவதையும் முதலாளித்துவம் விரும்பாதாகையால் மக்களே மீண்டும் நெருக்கடிக்கு உட்படுத்தப்படுவர்.

பொருளாதார நெருக்கடியால் மக்களின் துயரமும், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கின்றன. பொருளாதார நெருக்கடியின் போது அரசின் ஆளும் வர்க்கம் ஜனநாயக முறையில் தங்கள் அதிகாரங்களைத் தக்கவைக்க இயலாதாகையால், தங்கள் அரசியல் அதிகாரத்தை நீடிக்க வைக்க அந்தந்த நாடுகளில் உள்ள பிற்போக்குச் சக்திகளுடன் கைகோர்க்கின்றனர். இந்தியாவில் நவீன தாராளமயம் இந்துத்துவம் எனப்படும் பிராமணியத்துடன் கைகோர்த்துள்ளது.

முதலாளித்துவ அரசுகளின் ஆளும் வர்க்கம் தாங்கள்தான் மக்களின் உண்மையான எதிரி என்பதை மறைத்து, மத, இன, மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பாகுபாடுகளைத் தூண்டி விட்டு வேற்று மதத்தை, இனத்தை, மொழியைச் சார்ந்த எளிய மக்களை எதிரிகளாக்குகின்றனர். அவர்களுக்கெதிரான வெறுப்பை, வன்முறையை விதைக்கின்றனர். அதிகாரத்தை மையத்தில் குவித்து பொருளாதார நெருக்கடிக்கெதிரான, அரசிற்கெதிரான மக்கள் போராட்டங்களை அடக்குமுறையின் மூலம் ஒடுக்குகின்றனர். இவ்வாறு முதலாளித்துவத்தின் கொடுமுகமாகிறது பாசிசம். தற்பொழுது இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து ஆளும் வர்க்கமான இந்துத்துவம், தன்னைக் காத்துக் கொள்ளவும் தன் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தி நீடிக்க வைக்கவும் இஸ்லாமியரை, சிறுபான்மையினரை இன அழிப்பு செய்வதற்கான பாசிச ஆயுதமாக ‘சி.ஏ.ஏ' எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி இரத்தக் களரியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிராமணிய - முதலாளித்துவ ஒட்டுண்ணியை முறியடிக்கவும் அதன் பாஸிஸக் கொள்ளை நோயிடமிருந்து நிரந்தரமாக வெற்றி பெறுவதற்கும் மார்க்ஸ் பரிந்துரைக்கும் அருமருந்தே தீர்வாகும். தடைகளைக் கடப்போம். அதை மக்களிடம் சேர்ப்போம்.

Pin It