வழக்கம் போல தோழர்கள் கை விட நண்பர்களும் அன்பர்களும் கரம் கோர்த்து நடத்திய "எதிர்காற்று" எங்கும் எப்போதும் தன் இயல்பை இழக்காமல் அட்டகாசமாக வீசியது.
இந்த புத்தகத்தை என் அத்தை அருள் மணிக்கும்... அக்கா அருள் மொழிக்கும் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். எதிர் காற்று எழுதும் போது நம்மோடு இருந்த அவர்கள் நூலாக வெளிவரும் போது இல்லை. காலம் பறித்துக் கொண்ட அந்த இரு இதயங்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 40 நொடிகளில் அக்காவின் குரலில் "அறிவுக்குட்டி"யும்... அத்தையின் குரலில் "குட்டிப்பைய"னும் வந்து வந்து போனது இதய இம்சை.
எழுதுவது சுலபம். ஆனால் அதை புத்தகமாக்குவது எப்போதுமே சவாலான விஷயம். அந்த வகையில் இது எனது ஏழாவது சவால். ஆம். எதிர் காற்று எனது ஏழாவது நூல். அதுவும் வெளியிடப்பட்ட நூலுக்கு நாமே அறிமுக கூட்டம் வைப்பது இன்னும் சவாலான விஷயம். ஆனால் தம்பி உடையானே படைக்கஞ்சான்... நான் தம்பிகள் உடையான். படை தான் அஞ்சும். ஒரு பக்கம் நண்பர்கள்... ஒரு பக்கம் தம்பிகள்.. ஒரு பக்கம் தோழிகள்... ஒரு பக்கம் பொது வெளியில் மட்டும் அல்ல...பொதுவாகவே மேன்மை குணம் கொண்டவர்கள் என சிறிய கூட்டமாக இருந்தாலும் சீரிய கூட்டமாக அமைந்தது பெருமைக்குரிய ஒன்று. 30 பேருக்கு தான் திட்டம். 50 பேர் வந்து விட்டார்கள். அப்படி என்றால் எதிர்காற்று வெற்றி விழா தான். "வெற்றி"யின் விழாவும் தான்.
மம்மி டாடி... மாமா அத்தை... கவிக்குயில்... சரண்... சே.. ஸ்வேதா... மோனிஷ் என வீட்டு மனிதர்கள் ஒருபோதும் நம்மை விட்டு விடுவதில்லை. பேரன்புகள்.இந்த நூல் படைப்பு குழுமத்தின் பெருமைமிக்க வெளியீடு என்று தான் நண்பர் ஜின்னா அடிக்கடி சொல்வார். அந்த வகையில் எதிர் காற்று எனக்கும் பெருமைமிகு படைப்பு தான். ஏனெனில் இதில் ஒரு கிளாசிக் தன்மையை உணர முடியும். படிக்கும் யாவரும் தங்களை உள்ளிருக்கும் கதாபாத்திரங்ளோடும் சம்பவங்களோடும் சுலபத்தில் இணைத்துக் கொள்ள முடியும். எப்போது படித்தாலும்... அப்போதைக்கான படைப்பாக இருப்பதால் எதிர்காற்று முப்போதும் ஸ்பெஷல் தான்.
நெல்லையில் இருந்தாலும்.. "நீங்க போங்க ஜி.. உங்களோடு நான் இருக்கிறேன்" என்ற எங்கள் அமரின் பேரன்புக்கு இந்த நிகழ்வை சமர்ப்பிக்கலாம்.
இந்த அரங்கத்துக்கு ஏற்பாடு செய்த கதிரவன் சாருக்கும் VRK -பாலு சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்வை அதியமான் குழுமத்தில் ஒருங்கிணைத்து நடத்தி தொகுத்து வழங்கிய எனதருமை தம்பி கவிஞர் காதலாரா...வழக்கம் போல சங்க இலக்கியமும் சொந்த இலக்கியமுமாக அற்புதமாக நகர்த்தினான். ஏற்றம் இறக்கம் என்று இடைவெளியில் திரைக்கதை சேர்க்கும் யுக்தியில் இம்முறையும் தான் வல்லவன் என்று நிரூபித்தான். சின்ன வயதிலேயே பெருந்தன்மை வாய்ப்பது அரிது. தம்பி அரியவன்.
அன்பன் கவிஞர் விவெ நிகழ்வை வெகு இயல்பாக ஆரம்பித்து வைத்தார். சும்மா மூஞ்சை கிறுக்கி வைக்காமல்... ஒரு மோனலிசா ஓவியமாக... சிறு புன்னகை... ஒரு சிரிப்பு என பூ மலர்வது போல மேடையை மலர்த்திய மெல்லிய பேச்சு. சூப்பர் விவெ.
நூலை வெளியிட்டு தலைமையுரை ஆற்றிய கரு. பாலா அவர்கள்... தனக்கு பேச தெரியாது என்று தான் பேசவே ஆரம்பித்தார். ஆனால் நன்றாகவே பேசினார். மெல்லிய பேச்சு. அலுங்காத உடல் மொழி. வாசிப்பின் விசாலம்... வாசிப்பின் நேசிப்பு... வாசிப்பின் நீட்சி என்று தலைமையுரையை தகவமைத்து... அப்படியே எதிர்காற்றில் கொண்டு வந்து நிறைத்தார். நிறைந்தார். அவருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். வாசிப்பு தான் மனிதனை மேம்படுத்துகிறது. அதன் வழியாக அவன் ஒளியாகிறான். மற்றவருக்கு வழி ஆகிறான். பாலா சார் ஒரு நல் வழி. பின் தொடரலாம்.
எதிர்காற்றில் கவித்துவம் மிகுதி என்பதை மெல்லிசை புன்னகையில் குறிப்பிட்டார். பின் வந்த பதிலுரையில்... காதலாரா அது தான் எதிர்காற்றின் பலம் என்றான். ஆம்... உரைநடையில்... தெரிந்தே தான் கவித்துவம் கலந்திருக்கிறேன். ஏற்புரையில் சொல்ல மறந்ததை இந்த உரையில் சேர்த்துக் கொள்கிறேன். எதிர் காற்று நாவலே பிரேக் தி ரூல்ஸ் தான். (ha haa ha)
நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கிய பாலமுருகன் சார் "சிப்ஸ் உதிர் காலம்" வழியாகத்தான் பழக்கம். இதயத்தில் இருந்து பேசினார். அவர் இதயம் தான் பேசியது என்றே நம்பினேன். அத்தனை உயிர்ப்பு.. அத்தனையும் உண்மை. மனம் மகிழ்வதை அவர் முகம் காட்டி கொடுத்தது. எனது "மரம்" கட்டுரையை பிரிண்ட் எடுத்து 200 க்கும் மேற்பட்ட மாணவ மணிகளிடம் சேர்த்த பெருந்தகை அவர். அவரது அப்பா பெயரில் ஒரு நூலகமே ஆரம்பித்திருக்கிறார். அப்படி என்றால் புத்தகத்தின் மீதும் அப்பாவின் மீதும் அவர் கொண்ட அளப்பரிய அன்பை நேசிப்பை நெருக்கத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இப்போதும் கூட அவர் நூலகத்துக்கு சென்றால் இலவசமாக மர கன்றுகளை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகலாம் என்ற ஏற்பாட்டுக்கு பின் என் மர கட்டுரை இருப்பதை சுட்டிக்காட்டினார். சுற்றம் சூழ்ந்து வாழ்த்தியது போல உணர்ந்தேன். என் எழுத்தின் இலக்கு சரியாக தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நம்பினேன்.
நான் எழுதும் எல்லாவற்றையுமே அவ்வப்போது அவருக்கு அனுப்பி வைப்பது பழக்கம். படித்து பாராட்டி... அவர் கருத்தை அழகாக வெளிப்படுத்துவார். ஊக்கம் கொடுப்பார். விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தமைக்கு சிறு மனம் நிறைந்த பெரு வானம் விரிக்கும் இந்த பறவையின் லட்சம் சிறகடிப்பு. பாலா சார்... பாலமுருகன் சார் இருவருமே வால்பாறைக்காரர்கள். நெஞ்சில் ஈரமும்.. மனதில் பச்சையும் கொண்ட உச்சிமலை காற்றுகள். கைகள் விரித்து படபடத்தேன். மெய் சிலிர்க்க மேகம் முட்டிய நினைப்பு மனதில்.
வாழ்த்துரைக்கு இரண்டு கால் பூங்கொத்தாக வந்திருந்தார் சிவகுமார் சார். கவிஞர்... எழுத்தாளர்... புகைப்படக்காரர்... பயணி... இயற்கை விரும்பி... பறவை நேசன்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். சொற்களில் வாழ்ந்தவர். சொன்னால் செய்யும் செயல் என்று தான் உணர்கிறேன்.
பழனியில் இருந்து வருகிறவர் கொஞ்சம் தாமதம் ஆகும் என்று நினைத்தால்... அவர் தான் கோவைக்காரர்களை முந்திக் கொண்டு வந்து சேர்ந்திருந்தார். எடுத்துக் கொண்ட வேலையில் இருக்கும் அக்கறை... கொடுத்த வாக்கில் இருக்கும் நேர்மை... அவர் மீது மரியாதையை மென்மேலும் கூட்டுகிறது.
அது என்னவோ தெரியவில்லை. இலக்கிய கூட்டம் என்றாலே பொதுவாகவே மூஞ்சியில் லேகியம் வடிய...பேவென பார்த்து முறைத்துக் கொண்டே... இறுகிய உடல் மொழியில் சிரிப்புனா என்ன விலை என கேட்பது போல இருப்பது பலரின் வழக்கம். ஆனால் சிவகுமார் சார் சிரித்துக் கொண்டே பேசினார். சிக்கனமாக பேசினார். அரவணைக்கும் உடல்மொழி. இலக்கிய தரத்திலான இன்முகம். இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று தோன்றியது. எதிர்காற்றை சுற்றி சுற்றி தான் பேசினார். டாபிக் தவறவில்லை. புத்தக அறிமுகத்துக்கு வந்து விட்டு அதை எழுதியவனை பாராட்டாமல் எப்படி.... என்று ஆரம்பமே பாராட்டில் தான் இருந்தது. நேர்மறை சிந்தனையே நல் இலக்கியத்துக்கு வழி என்ற கோட்டில் அழகான கம்பீரமான நடை. எது தேவையோ அதை பேசினார். எது வேண்டுமோ அதை வடித்தார். நிகழ்வு வெற்றி பெற ஆரம்பித்த இடம் இது தான். நன்றிகள் சார்.
அடுத்து வாழ்த்துரை வழங்கியவர்... எனது நண்பர் சன்மது. அபார நினைவாற்றலோடு நாவலில் வரும் சில காட்சிகளின் புள்ளி விவரங்களை அடுக்கினார். அரங்கம் அதிசயித்தது. சில இடத்தில் ஆசிரியர் உடல் மொழி வந்து விட்டாலும்... பல இடங்களில் அறிவியலாளரின் அடுக்கு மொழி கலை கட்டியது. எதிர்காற்றை நான்காக பிரித்து வகைமைப்படுத்தி.... உள் உணர்வுகளோடும்... உளவியல் பகுப்பாய்வோடும்... தொடர்பு படுத்தியது பாராட்ட பட வேண்டியது. எதிர்காற்று உளவியல் கூறுகளின் வழியே பல வளைவுகளை எதிர் கொண்டிருப்பதை உள்ளபடியே உள் வாங்கி இருக்கிறார். மேடை பேச்சில் நல்ல முன்னேற்றம். கொஞ்சம் சிரித்து புன்னகையோடு இருந்தால்... இன்னும் பல மேடைகளில் பேச்சு மடல் எழுதலாம். நன்றிகளும் வாழ்த்துகளும் நண்பரே.
அடுத்து சிறப்புரைக்கு வந்து விட்டோம். தோழி பூங்கொடி.... கதை சொல்லி..... சிறார் எழுத்தாளர்... மேடை பேச்சாளர்.. என பன்முகம் கொண்டவர். எதிர்காற்று நாவலை ஒரே இரவில் முழுக்க படித்து விட்டு கதையை தனி தனியாக பிரித்து பேசிய பூங்கொடி தான் இந்த சிறப்புரைக்கு சரியான தேர்வு என்று நினைத்தேன். பூங்கொடியும் நான் தான் பேசுவேன் என்று எதிர் காற்று வீசும் நாளுக்கு காத்திருந்தார்.
உடுமலைக்கருகே இருந்து தன் இரு குழந்தைகளோடு நமக்காக வந்திருந்தார். அதற்கே முதற்கண் நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.
வழக்கம் போல ஏறி இறங்கும் குரலோடு... இடையிடையே பாடல் வேறு.. என உடல்மொழியிலும் வார்த்தைக்கேற்ற நளினம்.... நாடகம்...அட்டகாசமான பேச்சு....என ஒரு நிகழ்த்துக் கலையை நிகழ்த்தினார். அரை மணி நேரம் தாண்டிய பேச்சு. ஆரவாரம் குறையாமல் அடித்தேறிய மூச்சில்... அன்பும் அக்கறையும் உணர முடிந்தது. நட்புக்கு செய்யும் மரியாதையை தன் பாணியில் தன் மொழியில் நிகழ்த்திய லாவகம் எதிர்காற்றில் இசை கோர்த்தது. பேச்சு சுவாரஷ்யத்தில் அவ்வப்போது கதையை விட்டு வெளியே போனாலும்... வந்து சேர்ந்த இடம் எதிர்காற்றின் மையமாக இருந்தது மகிழ்வானது. தொடர்வோம் தோழமையே. பூங்கொடிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். தொடர்வோம்.
இறுதியாக ஆனால் உறுதியாக நன்றியுரை இருந்தது. பேசியது எங்கள் கடைக்குட்டி வெடிகுண்டு- கவிஞர் சுகன் சேகுவேரா. சும்மாவே அடிப்பான். எதிர் காற்றில் கேட்கவா வேண்டும். சுழற்சி முறையில் போட்டு தாக்கினான். வழக்கம் போல வெடி குண்டுகளை வார்க்தையில் சுருட்டி அவன் வீசி எறிந்த இடமெல்லாம்... சமதர்மம் பூத்த எதிர்காலம் தான். வாழ்த்துக்கள் டியர். லவ் யூ.
மொத்தத்தில் எதிர்காற்றுக்கு நியாயம் செய்தாயிற்று.
இந்த நிகழ்வு கூட கவிஜிக்கான நிகழ்வாக நான் பார்க்கவில்லை. எதிர் காற்று என்ற ஓர் அற்புதமான படைப்புக்கான நியாயமாக தான் பார்க்கிறேன். அதன் வழி தான் இந்த கூட்டமும்... இவர்களின் சொல்லாட்டமும்.
"எதிர்காற்று" நிஜமா புனைவா... உண்மை சம்பவமா.... உள்ளே இருக்கும் அந்த வெற்றி யார் என எல்லாருக்குமே யோசனை இருந்தது. கேள்வியாகவும் இருந்தது. உள்ளிருக்கும் நாயகன் "வெற்றி"யை "கவிஜி"யாக பார்க்கும் போக்கு கதை போக்கின் படி வந்து விட தான் செய்யும். எழுதுகிறவன் முதலில் தன்னிடம் இருக்கும் நாயகனை தான் எடுப்பான். பிறகு அவனை சுற்றி அவன் கண்டா நாயகர்களை சேர்த்து கட்டமைப்பான். அப்படித்தான்... இந்த வெற்றி. இந்த வெற்றி பாத்திரத்தில் நானும் இருக்கிறேன். நீங்களும் தான் இருக்கிறீர்கள். வாழ்வை என்னவென்று புரிந்து கொள்ள முயற்சிக்கும் எந்த ஒரு நுட்பம் வாய்ந்த மனிதனும் தான் இருக்கிறான். தேடல் கொண்ட... லட்சியம் கொண்ட.... ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டும் என்ற ஆசை கொண்ட... அன்பு கொண்ட.... காதல் கொண்ட... சாத்தானை எதிர்க்கும் மனிதம் கொண்ட... கோபத்தை வெல்லும் போராட்டம் கொண்ட எந்த மனிதனும் வெற்றி தான். தோழி பூங்கொடி பேசுகையில் கதைப்படி வெற்றியை... அப்பா அம்மா இல்லாத பையன் என்று சொல்ல.. அதே நேரம் மேடையில் கை என் பக்கம் நீண்டு விட.... வீட்டுக்கு வந்ததும் என் அம்மா சண்டை போட ஆரம்பித்து விட்டது. பிறகு... அயோ மீ.. அது வெற்றி. கதாபாத்திரம். நான் இல்ல. எழுதினவன் தான் நான். எழுதப்பட்டது என்னை அல்ல என்று விளக்க வேண்டியதாகி விட்டது. இது தான் கதாபாத்திர வெற்றி என்று நினைக்கிறேன். வெற்றியின் வெற்றி.
கதையின் மையம்... மூன்று மரணங்களின் வழியே தன் ஒற்றை வாழ்வை கண்டடையும் அந்த காட்டாற்றை அனைவருமே விட்டு விட்டது தான் சிறு வருத்தம். மற்றபடி ஆற்றோரம் அமர்ந்து ஆகாயம் பார்த்தது போல தான் நிகழ்வு. நன்றிகள் நண்பர்களே.
நல்ல மனம் வாழ்த்தியிருக்க... கள்ள மௌனங்கள் ஒளிந்து கொண்டன. எல்லாம் தாண்டி... ஐயா ஜெயபால் அவர்கள் சொன்னார்கள்.
"ஐயா... நீங்கள் உங்கள் பாதையில் ஓடிக்கொண்டே இருங்கள்.. எல்லாரும் பின் வரும் காலம் வெகு சீக்கிரத்தில்..." என்றார்.
அவர் அன்புக்கு நன்றிகள். ஆனாலும்... பின் வருவோர் பற்றிய எந்த யோசனையும் நமக்கில்லை. நமக்கு உடன் வருவோர் பற்றி தான் அக்கறை. எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வந்திருந்து ஒளிப்பதிவு செய்து தன் சேனலில் பதிந்து விட்ட ஐயா ஜெயபால் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
ஸ்பீக்கர் கொடுத்து உதவிய அண்ணன் ராஜேந்திரன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
மொத்த தோழர்களின் சார்பாக வந்திருந்த ஞானி சாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
நான் எப்போதும் சொல்வது தான். எனது வாழ்வு நண்பர்களால் ஆனது. அவர்கள் இன்றி இந்த எதிர் காற்று வீசியிருக்காது. அந்த வகையில் நிகழ்வுக்கு வந்திருந்து நடத்தி சிறப்பித்த என் நண்பர்கள் அன்பர்கள் நண்பர்களின் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
கல்லூரி நண்பன் அப்படியே காலம் முழுக்க நண்பன் கோபி வந்திருந்தான். மது... விக்கி... தினேஷ்... தோழர் ஜான் பூபதி...தோழர் கங்காதர்.. தோழர் கீதா டீச்சர்... அறிஞர் கோமளா... இவர்களோடு எப்போதும் என்னோடு இருக்கும் கமல்... கவி... வேலு.. சரண்.. என்று நண்பர்கள் தோளோடு தோள் நின்று எதிர்காற்றை எதிர் கொண்டார்கள். தம்பு...புருசோத் மாஸ்டர்... தம்பி மகி... டாக்டர் ஹரி...கார்த்திக்கின் நண்பர்கள்...ஆசிரியர்கள்... என வந்திருந்த அனைவருக்கும்... டியர் சுகன் சொன்னது போல முத்தமிட்டு நன்றிகள் கூறுகிறேன். அன்பே வாழ்வின் அடித்தளம். அதன் மீது கட்டப்படும் இலக்கியம் மானுட பண்பாட்டின் அங்கம்.
மாப்பிளை ஜெ பி... இழுத்து போட்டு வேலை செய்து வழக்கம் போல மச்சானுக்கு தோள் கொடுத்து விட்டார். நன்றிகள் ஜேபி.
காட்டுக்குள் நத்தை மனது
ஓடைக்குள் காட்டின் வளைவு
யானை ஆகிட தான் இந்த கனவு
- கவிஜி