ஷார்ல்ஸ் போதலெர் நவீன கவிதையின் தந்தை என்று உலக கவிஞர்களால் புகழப்படுபவர். ”தீமையின் மலர்கள்” என்ற அவரது கவிதைத் தொகுதியை க்ரியா வெளியிட்டுள்ளது. பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு நுட்பமான ஆழ்மனத்தின் தமிழ் மொழியை நேர்த்தியாக அழகாக மொழியாக்கம் செய்திருப்பவர் குமரன் வளவன், பின்னுரையில் எந்தக் கவனிப்பும் அற்ற தமிழ்ச் சூழலில் கவனிக்கப்பட வேண்டிய காத்திரமான படைப்பொன்றைக் குறிஞ்சியாய் மலர்த்தியுள்ளார்.

charles bothelerஅடர்ந்த மூட்டமான வாழ்க்கை மீது தங்கள் பாரத்தை ஏற்றும் மனச்சோர்வை விசாலமான துயரங்களைப் பொருட்படுத்தாமல் பலம்மிக்க இயற்கை கொண்டு அமைதி சூழ்ந்த ஒளிமயமான களங்களை நோக்கி எழும்பக் கூடியவனே மகிழ்ச்சியானவன். அவன் எண்ணங்களோ காலைவேளை வானம்பாடிகள்போல் விண்ணை நோக்கி மேலெழும்பும். அவனோ வாழ்க்கைக்கும் மேல் பறந்து திரிவான். பூக்களின் பேசாத பொருட்களின் மொழி அறிவான்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஊடாக மனிதன் அளப்பரிய சாதனைகளைப் படைத்தப் பின்னரும் வாழ்வு, மரணம், நோய், மூப்பு, ஆண் பெண் உறவு, குடும்ப உறவு போன்ற நுட்பமான கருத்தியல்களில் குழப்பம் நிறைந்தவனாகவே இருக்கிறான். தற்செயல் நிகழ்வுகளை அதன் முதிர்ந்த முரண்பாட்டு சங்கிலித் தொடர் பிணைப்பைப் புரிந்து கொள்ள லாயக்கற்றவனாக இருக்கிறான். விளைவு தற்கொலைகள், கொலைகள், மனப்பிறழ்சி, மனச்சோர்வு.

தன் வாழ்வின் துயரங்களைப் புரிந்துகொள்ள வரலாற்றின் தொடர்ச்சியின் ஒரு பகுதியை முழுமையாக எண்ணி தான், நான், நாம் என்ற தன்னிலையின் குழப்பத்தில் அவர்கள், அவைகள்,  மற்றமைகளின் தாக்கத்தைத் தாங்கிக்  கொள்ள முடியாத தகிப்பில் துடிக்கிறான்.

புற உலகின் கொடூரமான கரங்களில் கரும்புச் சாறு இயந்திரத்தினுள் சிக்குண்ட தனியர்கள் தாங்கள் சக்கையாவதைச் சகிக்காமல் இழந்த சாரத்தை உள்ளேற்ற இலக்கியத்தை, கலையைத் தேடுகிறார்கள். மிகச் சிறந்த தன்னிலைகள் கலையை, இலக்கியத்தை உருவாக்குகிறார்கள்.

தீமையின் மலர்களில் அகச்சிக்கலில் ஓயாது புலம்பும் மனிதர்களுக்கு உற்சாகத்தைத் துளியளவு சந்தோசம் மகிழ்ச்சியான வாழ்வாக்கிப் பார்க்க பெரும்முயற்சியின் ஆக்கமாகிறது.

“அறுவடையால் நிரம்பிய களஞ்சியங்களையும் தேவதைகளில் வாக்குகளை வெல்லக்கூடிய வண்ணமும் வடிவமும் கொண்ட மலர்களையும் அவன்முன் வைக்க வேண்டும்.

கொத்து ஒன்று ஆயிரம் மலர்களாக மகிழ்ச்சியான நிலவொளி அதில் வண்ணங்கள்

கண்ணீர் பெருகி

மனசுயெனப் பொழிந்தது

என் அழகே, முத்தங்களாய் உன்னை

உண்ணப் போகும் புழுக்களிடம் சொல்

சிதைந்துபோன என் காதல்களின்

வடிவமும் தெய்வீக சாரமும் என்வசம்தான் என்று”

நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களால் கோர்க்கப் பட்ட பௌர்ணமிக்கு மாலை சூடிய மகிழ்வை அடைவான் வாசகன். குமரன் வளவனுக்கு இந்த நூல் ஒன்றுக்காக மட்டும் தமிழ் சமூகம் கடமைப் பட்டிருக்கிறது. 

Pin It