திராவிடத் தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் ஆதிக்கத்தை முறியடிப்போம்! மாநில தன்னாட்சியை முன்னெடுப்போம்!! என்ற முழக்கத்துடன் 18.03.2023 அன்று மாநில சுயாட்சிக்கான மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தி முடித்திருக்கிறது.

பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, சிறுபான்மையின தலைவர்கள் நிறைந்த மேடை. கருஞ்சட்டைகளாலும், ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களாலும் நிறைந்த அரங்கம். திராவிட, சனநாயக, பொதுவுடைமை சிந்தனை மரபு கொண்ட தலைவர்களின் உரைகள். இன வெறுப்பு, சாதி வெறுப்புக்கு எதிரான முழக்கங்கங்கள்.

சங்க பரிவாரங்கள், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, இனவாதிகள் ஆகிய எதிரிகளை குறி வைத்த இலக்குகள். ஆதித்தமிழ் மக்களின் அடையாளத்தை முன்னிறுத்திய வரலாற்று சான்றுகள். கல்வி – வேலை – அதிகாரம் – சொத்துரிமையில் சமூக நீதி, சமூக சமத்துவம், சனநாயக உரிமைகள், சாதி வேறுபாடு ஒழித்தல், இயற்கையைப் பாதுகாத்தல், பாலின சமத்துவம், சமூக நீதித் தலைவர்களின் அடையாளங்கள், மாநில உரிமைகளை முன்னிறுத்திய சுமார் 29 தீர்மானங்கள் ஆகியவற்றின் வழியில் மாநாடு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியல் திசை வழியை கைக் காட்டியது.drivida tamizhar katchi meetingமாநாட்டில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் மீது ஒன்றிய அரசால் நிகழ்த்தப்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்கான ஒற்றைத் தீர்வாக முதல் தீர்மானமான 'மாநில சுயாட்சி சட்டம்' முன் வைக்கப்பட்டது.

இந்திய ஒன்றியம் முழுவதும் பார்ப்பனியத்தால் சாதி – மொழி – பாலின – சிறுபான்மை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களும், பெண்களும் இரண்டாம் நிலை குடிமக்களாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் பார்ப்பனிய வகைபாட்டில் சூத்திரர்கள்.

இந்திய ஓன்றிய ஆட்சி பரப்பிற்குட்பட்ட இருபிறவி சாதி (பார்ப்பண, சத்திரிய, வைசிய) அல்லாத அனைத்து மக்களும் (தேசிய இனங்கள்) இந்திய ஒன்றியத்தால் அரசுரிமை மறுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். பார்ப்பனிய பேரரசு இவர்களை சாதி, தேசிய அடிப்படையில் ஒடுக்குகிறது.

ஆரிய – திராவிட போராட்டத்தின் விளைவாக பல தேசிய இனங்களாக, மொழிக் குழுக்களாக சிதறுண்ட திராவிட மரபினத்தின் அனைத்து மக்களும் சாதியடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களாக, மொழியின அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்பிற்குள் இறையாண்மை அதிகாரம், அரசுரிமை, சனநாயக உரிமைகள் இல்லாத காரணத்தினால் பிறவி சூத்திரர்களான ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் அனுதினமும் பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கிறவர்கள் இயற்கையாக அவர்கள் பேசுகிற மொழியின அடிப்படையில் தேசிய இனங்களாக ஒன்றிணைந்தாலும் மாநில அரசு என்கிற கட்டத்தை தாண்ட முடியவில்லை. சில தேசிய இனங்களுக்கு மாநில நிலை கூட கிடைக்கவில்லை. ஒன்றிய ஆட்சியமைப்பும், அரசமைப்பும் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சனநாயகத்தையும் நமக்கு மறுத்துள்ளது.

சாதியடிப்படையில் உயர்ந்தவர்கள் பெற்றிருக்கிற அதிகாரம், செல்வம், கல்வி, வசதி, சொத்து உரிமைகள், மொழியுரிமைகள், அரசுரிமைகள் அனைத்தும் பெரும்பான்மையான மக்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரான பேராட்டத்தில் முகிழ்த்த கோட்பாடுகள்தான் சமூக நீதி, சமத்துவம், சனநாயகம் போன்றவை.

இந்த அரசுரிமை மறுப்பிற்கான அடிப்படையாக இருப்பது சாதியக் கட்டமைப்புதான். சூத்திரர்கள், பஞ்சமர்கள் தீட்டானவர்கள். அவர்களது மொழியும் தீட்டானது என்பதே பார்ப்பனிய சித்தாந்தம். பிறப்பின் அடிப்படையில் உரிமை மறுக்கப்பட்ட தீண்டத் தகாத மக்களுக்கு அரசுரிமையும் கிடையாது என்பதுதான் பார்ப்பனிய சித்தாந்தம்.

பார்ப்பனிய இந்திய கட்டமைப்பிற்குள் புனிதமாக, கடவுளின் மொழியாக கருதப்படும் சமற்கிருதத்தை பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் பேசக் கூடாது என்று செயற்கையாக உருவாக்கப்பட்ட உயர்சாதி மொழியான இந்தி இந்திய ஒன்றியத்தின், ஆரிய வர்த்த மாநிலங்களின் அலுவல், ஆட்சி மொழி. ஆரிய வர்த்தத்தில் இந்தி ஆதிக்கத்தால் மக்களின் தாய்மொழிகள் வழக்கொழிந்து வருகின்றன. பிற மாநிலங்களில் இறுதி சடங்கு நிலையில் இருக்கின்றன. இந்தி அல்லாத பிற மொழிகள் அனைத்தும் இந்திய ஒன்றியத்தைப் பொறுத்தவரை இரண்டாம் நிலை மொழி.

சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினம் சார்ந்த மக்களான 1500-ற்கும் மேற்பட்ட மொழியினங்களின் தாய் மொழி நீச மொழி. தீண்டத் தகாத மொழி. புனிதமற்றது.

பார்ப்பனர்களின் தேவ மொழியான சமற்கிருதம் புனிதமானது. சமற்கிருதத்தின் கள்ளக் குழந்தையான இந்தி அரசு, அலுவல் மொழி. பிறவி பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளுக்கு வழிபாடு நடத்த முடியும் என்கிறது பார்ப்பனிய சட்ட நடைமுறை.

பலபடித்தான சாதிய படிநிலை அமைப்பு ஒரே மொழி பேசுகிற மக்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் சாதி அடிப்படையில் ஒடுக்கிற நடைமுறையையும், சிந்தனையையும் கொண்டதாக உள்ளது.

பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட ஒன்றிய நிலப்பரப்பு அளவிலான பார்ப்பனரல்லாத மக்களை பிராந்திய அடிப்படையில் ஒருவரையொருவர் வெறுக்கக் கூடியவர்களாக மாற்றியுள்ளது. இத்தகைய நடைமுறைகள் பாரப்பனிய பேரரசின் ஒடுக்குமுறையை இனங்காணுவதை தடை செய்கிறது.

பார்ப்பனியத்தின் இத்தகைய சாதிய, தேசிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, பெரும்பான்மையான மக்களை பிரதிநிதித்துவம் செய்வது மாநில, ஒன்றிய ஆட்சிப் பரப்பு அரசுகள் தான். மக்களோடு நேரடி தொடர்புள்ள இந்த அரசுகள் பல வழிகளில் இந்த மக்களுக்கான சமூக நீதியை கிடைப்பதற்கு வழி வகை செய்கின்றன. ஒன்றியத்திடம் உரிமைக்கான போராட்டங்களை நடத்துகின்றன.

கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரம், நலத்திட்டங்கள் அனைத்தையும் சொந்த மக்களுக்கு உறுதி செய்பவைகளாக இருப்பவை மாநில அரசுகள்தான். மாநில அரசுகளுக்கு இருக்கின்ற குறைந்த பட்ச அதிகாரங்களை வைத்தே பெரும்பான்மையான மக்களின் வாழ்நிலை, மனித வளம் இன்று மேம்பட்டுள்ளது.

இந்நிலையில் பார்ப்பினிய பேரரசு இயற்கையாக உருவாகின்ற இறையாண்மை அதிகாரங்கள் மாநில அரசுகள் பெறுவதை தடுத்து நின்று கொண்டு இருக்கின்றது. இத்தகைய நிலை இந்த மண்ணில் சாதி, மொழி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை அனுதினமும் பாதுகாக்கிறது.

மையப்படுத்தப்பட்ட பார்ப்பனிய பேரரசே பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பெண்களுக்கான உரிமைகளை மறுப்பதற்கான அடிப்படை. சமூக நீதி, சனநாயக உரிமைகள், தேசிய நீதி பெறுவதற்கு தடையாக இருப்பது மையப்படுத்தப்பட்ட ஒன்றிய ஆட்சி முறையே.

மாநில அரசுகளின் சமூக நீதி, மக்கள் நலன் திட்டங்களுக்கு தடைபோடுவது, ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் பிறவி பார்ப்பனர்களை அனைத்திலும் நிறைப்பது, கல்வி உரிமைகளை காவு வாங்குவது, வரி உரிமைகளை கொள்ளையடிப்பது, இயற்கை வளங்களை தாரை வார்ப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுனர்கள், நீதிமன்றங்கள் வழியில் கட்டுப்படுத்துவது என அனைத்தும் தழுவிய அளவில் மக்களின் உரிமைகளை பறிக்கின்ற சனநாயக மறுப்பு அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது.     

பார்ப்பனிய பேரரசு சம்மு - காசுமீர் மக்களுக்கு மாநில உரிமைகளைக் கூட இன்று பறித்துள்ளது. மக்களின் சனநாயக நிறுவனங்களை முடக்கியுள்ளது. அரசியலமைப்பின் இத்தகைய பறிப்பு அதிகாரம் இந்திய அரசியலமைப்பு எதேச்சதிகார தன்மையுடையது என்பதை நடைமுறையில் உறுதி செய்கிறது.

 சனநாயகத்தை நேசிக்கின்ற அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் இத்தகைய ஒடுக்குமுறைக்கு தீர்வாக மாநில உரிமைகளை பாதுகாப்பது, கூட்டாட்சியை பாதுகாப்பது, தேசிய இனங்களுக்கு தன்னுரிமையை உறுதி செய்வது, சுய நிர்ணய உரிமையை உறுதி செய்வது, விடுதலை பெறுவது, மாநில சுயாட்சி என பல்வேறு தீர்வுகளை முன் வைக்கின்றன. ஆனால், இத்தகைய தீர்வுகளை வெகு மக்கள் அரசியலாக்குதவற்கான நிலையில் பின் தங்கியிருக்கின்றன.

ஆளுநருக்கு எதிராக, ஒன்றிய அதிகார குவிப்பிற்கு எதிராக, கூட்டாட்சி முறைப் பறிப்பிற்கு எதிராக, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்காக பேசுகிறவர்கள் இதன் தீர்வாக மாநில சுயாட்சியை பேசுகிறார்கள். ஆனால் நடைமுறைப் படுத்துவதற்கான மாநில, இந்திய அளவிலான செயல்திட்டங்கள், அரசியல் ஓர்மை என்பது இல்லை.

தமிழகத்தில் மாநில சுயாட்சியை அரசியல் திட்டமாக வைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தாலும் அதனை தற்போது தீர்வாக முன் வைத்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. இந்தியா முழுவதற்கும் மாநில சுயாட்சிக்கான அரசியல் முன்னணியை உருவாக்குகின்றன நடைமுறை அதனிடம் இல்லை. ஆனால், அனுதினமும் ஒன்றிய அடக்குமுறைக்கு ஆளாகி, அதோடு போராடி நின்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மீண்டெழும் மாநில சுயாட்சி மாநாட்டின் வழியில் திராவிடத் தமிழர் கட்சியும், அதன் தலைவர் தோழர்.வெண்மணி அவர்களும் துணிச்சலாக பார்ப்பனியத்தின் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் அரசியல் தீர்வாக 'மாநில சுயாட்சி' அறைகூவலை விடுத்துள்ளார்கள்.

சனநாயகத்திற்காக, மாநில உரிமைகளுக்காக, ஒற்றை மயப்படுத்தலுக்கு எதிராக, தாய்மொழி உரிமைக்காக, சாதி ஒழிப்பிற்காக போராடுபவர்கள் இந்த முழக்கத்தை அரசியல் செயல் திட்டமாக மாற்ற வேண்டும். சனநாயகத்தை பாதுகாக்க விரும்புகிறவர்கள் இந்திய ஒன்றியம் முழுவதிலும் ”மாநில சுயாட்சி” முழக்கத்தை கொண்டு செல்ல வேண்டும். மாநில சுயாட்சி பல அரசமைப்புகளை உருவாக்க வேண்டும். அது ஒன்றே சாதி, தேசிய அடிப்படையில் ஒடுக்கப்படுபவர்களுக்கு சனநாயக தீர்வாக அமையும்.

- மலரவன்

Pin It