தந்தை பெரியார் அவர்கள், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலம் முதல் அவரது இறுதி மூச்சு வரை, அச்சட்டத்தை எதிர்த்து வந்தார்.

ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளைக் கொண்ட அரசியலமைப்புச் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தை 1957ஆம் ஆண்டு நடத்தினார். அப்போராட்டத்தில் 3000-க்கும் அதிகமானோர் சிறையிலடைக்கப்பட்டனர்.

அவ்வாறு சிறையில் 18 மாதங்களைக் கழித்த பெரியாரியலாளர் வெ. ஆனைமுத்து அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, 1988ஆம் ஆண்டு வெளிவந்த நூல், ‘Federalism in Peril’ (ஆபத்தில் கூட்டாட்சி) என்னும் இந்த நூலாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் (Preamble) குறிப்பிட்டுள்ளது போல இந்தியா என்பது உண்மையிலேயே ஜனநாயகக் குடியரசா என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்நூல்.

Federalism In Perilஅரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அவை என்பது பெரும்பான்மையாக நிலக்கிழார்கள் மற்றும் வணிகர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாக இருந்தது. 1946 தேர்தலின்போது, இந்தியாவில் மாகாணங்களில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் வெறும் 14% பேர் மட்டுமே.

அந்த 14% - இல் இருந்து, நான்கில் ஒரு பங்கு, அதாவது இந்திய மக்கள் தொகையில் வெறும் 4% மட்டுமே மத்திய நாடாளுமன்ற அவைக்கு வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவர்.

இந்த அவை எப்படி இந்தியாவின் அனைத்து சமூகங்கள் மற்றும் வர்க்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதியாக இருக்க முடியும் ?

பலதரப்பட்ட மக்களைக் கொண்ட இந்தியவிற்கான ஒரே அரசியலமைப்புச் சட்டத்தினை இந்த அவை எவ்வாறு இயற்ற முடியும் என்பது முக்கியமான விவாதம். இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதிக்கும் காரணிகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது இந்நூல்.

குறிப்பாக, இந்தி எவ்வாறு அரசியலமைப்பின் மூலம் திணிக்கப்பட்டுள்ளது என்பதையும், இந்தி பேசாத மக்கள் எவ்வாறு இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது இந்நூல்.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான பல உறுப்புகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. நெருக்கடிநிலைப் பிரகடனம், மையப்படுத்தப்பட்ட அகில இந்தியப் பணிகள் ஆகியவை எவ்வாறு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இயங்குகின்றன என்று பல செய்திகளை விவாதிக்கும் இந்நூல் இவற்றுக்கு எல்லாம் மாற்று என்ன என்ற தீர்வையும் முன்வைக்கிறது. ஒரு மாற்று அரசியலமைப்புச் சட்டத்தை (People’s Constitution) ஏற்படுத்துவதே அத்தீர்வு.

தன்னாட்சி பெற்ற மாநிலங்கள், பொதுவுடைமைப் படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் பங்கீடு, மதச்சார்பற்ற கல்வி, பெண் மற்றும் ஆண் இருபாலருக்கான சம உரிமைகள் போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட அரசியலமைப்பை இந்நூலில் ஆசிரியர் முன்வைக்கிறார்.

பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து மாநில அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் போக்கினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. “எந்த ஒன்றையும் திணிப்பது எதிர்ப்பை உண்டாக்கும்; பாகுபாடு வேற்றுமையைப் புகுத்தும்” என்ற உண்மையை உணர்த்தும் இந்நூலிலுள்ள செய்திகள் விவாதிக்கப்படுவதும், இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதும் காலத்தின் தேவை.

Pin It