மூத்த கவிஞர்....தொடர் வாசிப்பாளர்...... இதயத்தில் இருந்து விமர்சிப்பவர்.... சிந்தனைக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்பவர்..... பேச்சாளர்.... நல்ல கவிதைகளை யார் எழுதினாலும் அவர்களை பாராட்டி ஊக்குவிப்பவர்... கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் கவிதைகளோடும் கவிதை மனதோடும் வாழ்ந்து வருபவர்.......நல்ல கதை சொல்லி........மேடை பேச்சில் தனக்கென ஒரு பாணியைக் கொண்டவர்... சிரிக்க சிரிக்க பேசி சிந்திக்க வைப்பவர்....

எங்கள் கவிஞர் "காமு" அவர்களின் முதல் கவிதை நூல் "கொஞ்சம் தாமதமாக" விற்கு பிறகு ஒரு நீண்ட நெடிய கால கட்டத்துக்கு பின் இரண்டாவது கவிதை நூல் "நிமிர் சுடர்" 21.08.2022 அன்று- கோவை வெரைட்டி ஹால் - சாலையில் உள்ள வாங்கி ஊழியர் சங்கத்தில் வெளியிடப்பட்டது.

kaamu book releaseபேராசான் தோழர் ஜீவா பிறந்த நாளில் நிகழ்ந்த இந்த நிகழ்வு அறிவுக்கு நெருக்கம். தமிழுக்கு கிறக்கம். அரங்கு நிறைந்திருந்தது. ஆவல் மிகுந்திருந்தது.

முதலில் மிக்ஸர்... பிறகு இனிப்பு தந்தார்கள். அதனோடு காஃபி. நா நிறைத்தது. அந்த கோப்பை... மனதுள் மலர் தோட்டம் விரித்தது.

செவிக்கு விருந்தும்... அறிவுக்கு மருந்தும் என்று ஒரு கொண்டாட்ட மனநிலை தான் நமக்கு. ஒரு புது எழுத்தாளன் போல அவர் முகத்தில் இருந்த படபடப்பு ரசிக்கும் படியாக இருந்தது. வயது வித்தியாசம் எப்போதும் யாரிடமும் பார்க்க மாட்டார். பார்த்தும் வந்து கை கொடுத்து... சிரிக்க பேசி புன்னகையை நமக்கும் பூசி விடுபவர். நேற்றும் கூட நிகழ்வு நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற படபடப்பு.... நெற்றியில் இருந்தாலும்... கண்களில் கல்யாணத்தை நடத்துவது போன்ற பொறுப்பு பொறி.

புத்தக வெளியீடு நிகழ்த்துவது... கல்யாணத்தை நடத்துவதை விட கடினம் என்கிறேன்.

கவிஞர் ஓடியன் லட்சுமணன்... தோழர் கோட்டியப்பன்... தோழர் ஞான குமார்... கவிஞர் நான்சி கோமகன் உடன் கவிஜியும்... பெற்றுக் கொள்ள "நிமிர் சுடர்" கவிதை நூல் சுடர் ஏந்தியபடி வெளியிடப்பட்டது.

யார் புத்தகம் வெளியிட்டாலும்... வந்திருந்து வாழ்த்தி பேசி... கை தட்டி... தோள் தட்டி... உற்சாகம் கொடுத்து போகும் காமு சார் தனது நூலை வெளியிட்டு நம்மை மொழியால் அறிவால் தமிழால் மகிழ்வித்தது மனம் நிறைவு.

நினைத்தால் புத்தகம் போட்டு விடும் கத்துக்குட்டி மனநிலை உள்ள கால கட்டத்தில் இத்தனை தெரிந்தும் இத்தனை தெளிந்தும்... இரண்டாவது நூலுக்கு அவர் எடுத்துக் கொண்ட கால வடிவம் தரமானது. தனித்துவமானது.

முதல் நிகழ்வாக ரமணி சார் வரவேற்புரை நிகழ்த்த... வழக்கம் போல வாய் நிறைந்த தலைமை உரையை நிகழ்த்தினார் தோழர் K.S.

இவர் பேச ஆரம்பித்தாலே... நிறைய தரவுகள் வந்து அது பாட்டுக்கு விழும். நம் மனதுக்குள் இனம் புரியாத மகிழ்வு. அறிவுக்கு தீனி போடுவதில் சீனி டப்பா. சிரித்துக் கொண்டே சிக்சர் விளாசும் பேச்சுக்கு எப்போதும் நான் முதல் வரிசை மாணவன் தான். ஒவ்வொரு முறையும் அகம் நிறைய செய்திகளை அள்ளிக் கொண்டு வந்து விடலாம். இம்முறையும் அப்படியே வந்தேன். காமு சாரின் நுண்ணறிவு குறித்து நுட்பம் குறித்து... நூலில் இருந்து பல கவிதைகளை எடுத்து முன் வைத்து புன்னகையோடு தன் பார்வையை வைத்தது அலாதி.

அதுவும் அந்த "எறும்பு கூட முந்தி செல்லும் குண்டு குழி சாலையில் எதற்கு வேகத்தடை" என்ற கவிதை குறித்து பேசியது அரசியல் அப்ளாஸ்.

ஆர்வம் மேலோங்க அடுத்து யார் என்று காத்திருந்தோம்.

அடுத்து வாழ்த்துரைக்கு வந்தவர் கவிஞர் மீனாட்சி சுந்தரம்.

இவர் மீது ஒரு வகை கிரேஸ் எப்போதும் இருக்கும். பேச பேச இவர் காட்டும் மேற்கோள்கள் வசீகரமானவை. தமிழை அழுத்தம் திருத்தமாக பேசிக்கொண்டிருக்கையில் சட்டென பேஸ் வாய்ஸில் ஆங்கிலத்தில் கவிதைகளை சுட்டி காட்டுவார். சொக்கி போகும் கேட்கும் நொடி. T. S எலியட்டை எப்போதும் தோளில் வைத்திருப்பார். பார்க்க பார்க்க சொற்கள் ஆங்கில தேசத்துக்குள் பறக்கும் மேஜிக் இவரின் சொற்களாலும் நிகழும். நிகழ்ந்தது.

செத்து போன ஆலய மணி 9 மணிக்கு அடிக்கையில் மனிதர்கள் வட்டமாக நடந்தார்கள் என்று மேற்கோள் காட்டிய கவிதையில் மனதுள் ஆலயமணி சப்தமும் மானுட காலடிகள் சத்தமும். பின் வரும் விமர்சகர்கள் தேடி தோண்டி எடுக்கட்டும். அவர்களுக்கு வேலை வேண்டும் என்று... ஏகப்பட்ட குறிப்புகள் மேற்கோள்கள் சொல்லி...அதன் மூலமாக கா மு சார் அவர்களை பாராட்டி அவரின் கவிதைகள் குறித்து... அவரோடு அளாவுதல் குறித்து.... அவரின் தீவிர வாசிப்பு திறன் குறித்து... அரங்கை இன்னும் ஆவலாக்கி போனார்.

காமு சார் எல்லாம் தாண்டி மிக சிறந்த ரசிகர். அவரிடம் நீங்கள் யார் என்று கேட்டால் அவர் அதைத்தான் சொல்வார் என்றார். மனம் முழுக்க ஆமோதித்தோம். அவர் ரசனையை நான் கேட்டிருக்கிறேன். என்னோடு எத்தனையோ முறை பகிர்ந்திருக்கிறார். பரவசம் வந்தால் அதை பரவசத்தோடு உடனே அலைபேசியில் அழைத்து பகிர்ந்து கொண்டால் தான் அவருக்கு நிம்மதி. அவர் பகிர்வு வந்தால் தான் நம் சிந்தைக்கு அமைதி.

அடுத்து வந்த தோழர் கரீம்... சிரித்த முகத்தில் சிரித்துக் கொண்டே வழக்கம் போல தேன் பேச்சை தன் பேச்சாக்கினார். போர்டியம் இல்லாத மைக்... நிற்பதற்கும் பேசுவதற்கும் மேடையில் சிறு சிக்கலை தரும். அப்படி மேடைக்கும் பேசுபவருக்குமான இணக்கத்தை ஆரம்பிக்க சில நொடிகள் பிடித்தன. ஒரு மாதிரி செட்டில் ஆகி பிறகு சொற்கள் வெடித்தன. பேச வைத்திருந்த கவிதைகளை முன்பு பேசியவர்கள் பேசி விட.... அதையும் சொல்லி ஆனாலும் அடுத்தடுத்த கவிதைகளால் காமு சாரை அலங்கரித்து சென்றார்.

கம்யூனிஸ்ட் காதலிக்க மாட்டான். அவனுக்கு இரும்பு சட்டை மாட்டி விடுவார்கள் என்று சிரித்துக் கொண்டே பேச்சு வந்தது. ஆனால்... நல்ல கம்யூனிஸ்ட் காதலனாகத்தான் இருப்பான் என்ற எதிர் வீச்சும் வந்தது. ரசிக்கும் படியான காதல் வரைபடம் அரங்கத்தில் தவழ்ந்தது. காதலே ஜெயம் தான் நம் கட்சி. நம் காட்சி.

அடுத்து கவியன்பன் பாபு சார் பேசினார்.

இவர் பேசினாலே அது வசீகரம் தான். இவரின் அறிமுகம் இல்லாத போது இவரைப் பார்த்தாலே பயந்து கொள்வேன். சிடு சிடு மனிதரோ என்று கூட ஒரு வகை எண்ணம். ஆனால் பேசி பழகிய பிறகு... இவர் போல இருக்க வேண்டும்.. பணிவும் அறிவும்... பண்பும் தெளிவும்.. என்று ஒரு ரோல் மாடல் இவர். இவரை பார்ப்பதற்கே முன் வரிசையில் அமர்வது எனது விருப்பம். மனதுக்குள் ஒரு தெம்பு வரும். ஒரு தீக்குச்சி போல. எங்கே எப்படி எதை கொளுத்துவார் என்றே தெரியாது. கொங்கு மொழியில்.. சிங்க பாவனை தான்... உச்சரிப்பும் உணர்வு தரிப்பும். இன்னும் கொஞ்சம் நேரம் பேசுங்களேன் என்று கூட கேட்டு விடலாம். அப்படி ஓர் உரை வீச்சு. எடுத்துக் கொண்ட கண்டெண்ட்டில் இம்மி பிசகாமல் உள்ளே நுழைந்து தீர்க்கம் செய்வார்.

காமு சார் நூலைப் பற்றிய இவரின் பேச்சும் பாவனையும்.... மனதுக்கு இனிமை சேர்த்தது.

"நீ " என்ற சொல் பற்றிய விளக்கத்தை... ஒரு விளக்கை துடைத்து பளிச் ஆக்குவது போல ஆக்கினார். பிறகு அதில் ஒற்றை சுடர் என இந்த நிமிர் சுடரை ஏற்றி விட்டு கிளம்பி விட்டார். வந்தால் வந்த வேலை மட்டும் தான். மற்ற வேலைக்கு நான் எதற்கு என்பது போல ஓர் உடல்மொழி. அப்படி ரசித்தோம். தமிழில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக இருக்கின்றன போன்ற செய்திகளோடு.. சிந்தனையில் விதைகள் தூவி சென்றார்.

அடுத்து நாடக கலைஞர் திலீப் சார்.

நீண்ட கேசத்தில் ஆளே மாறி இருக்கிறார். நன்றாவும் இருக்கிறது. நீண்ட கேசம் வளர்ப்பதில் எனக்கும் ஆர்வம் இருப்பதால்... பார்த்ததும் பச்சக் என பிடித்துக் கொண்டது. வழக்கம் போல அவர் சொற்களை முந்திக் கொண்டு அவரின் உடல் மொழி கதகளி ஆடியது. காமு சார் உங்களை புடிச்சாரா நீங்க காமு காரை புடிச்சீங்களா என்று விளையாட்டாக அவரின் மகள் கூறுவதை சொன்ன போது... காமு சார் உடன் அவருக்கு இருக்கும் நெருக்கம் நமக்கு புரிந்தது. இந்த நூல் வெளிவர முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

திலீப் சார் பேசுகையில்... அந்தந்த நேரத்தில் வாழு என்ற தத்துவத்தை முன் வைத்து பேசினார். படித்தால் படி. படம் பார்த்தால் படம் பாரு. தேநீர் குடித்தால் தேநீர் குடி. வாழ்க்கை இனிக்கும். கவிதை போல என்பது அவரின் தீர்க்கம். மனம் முழுக்க நம்பினோம்.

அடுத்து சிறப்புரை. தஞ்சை காற்று... கோவையில் வீச கண்டேன்.

நெல்லாடிய ஊரில் இருந்து சொல்லாடல் கொண்டு வந்திருந்தார் கவிஞர் அகிலா அவர்கள். எல்லாரும் எல்லாமும் பேசி விட... இருந்தும் இல்லாமை ஒரு போதும் என்னிடம் இல்லை என... நூல் ஆக்கம் குறித்தும் நூலாசிரியரின் குழந்தை மனம் குறித்தும் பேசியது சிலாகிப்பு. ஒவ்வொரு சொல்லும் இதயத்தின் ஆழத்தில் இருந்து எழுந்தது. நூல் ஆக்கத்தில் ஒரு பாதி திலீப் சார் என்றால் மறுபாதி அகிலா அவர்கள். மிக அற்புதமான கவிதை தேர்வுகள். தன் பணிகளுக்கு இடையேயும் காமு சார் கவிதைகளுக்கு மதிப்பு கொடுத்து.... அதற்கு நேரம் ஒதுக்கி... கோர்த்து கொடுத்த கொடையை பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்த நூலின் தலைப்பு "நிமிர் சுடர்" இவரால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது நூலின் முகம் பிரகாசிக்கும் முகவரி.

அடுத்து ஏற்புரைக்கு வந்த காமு சார் உணர்ச்சி வயப்பட்டவராக இருந்தார். பட வேண்டும் அது தானே கவிதை கற்றுக் கொடுத்திருக்கிறது.

அவர் சிறு வயதில் எழுதிய கவிதைகள் எல்லாம் கவிதைகள் தானா என்ற சந்தேகம் இருந்திருக்கிறது. அதுதான் அவரின் மேதமைக்கு சான்று. எடுத்தோம் கவிழ்த்தோம் இல்லை அவரின் மொழி. எடுத்து வளர்த்து நிமிர்ந்த சுடர். அப்படி தான் அத்தனை கவிதைகளையும்... கவிஞர் அகிலாவும் திலீப் சாரும் கொஞ்சம் கொஞ்சமாக எது தேவை இது வேண்டாம் என்று பார்த்து பார்த்து பேசி பேசி நகர்த்தி நூலாக்கி இருக்கிறார்கள் என்று பெருமை பொங்க பேசினார்.

சிறு புன்னகையில்... மனதில் ஒரு சிறுவனை சுமந்து கொண்டு அவர் ஏற்ற ஏற்புரை நெகிழ்வு.

கவிஞர் அகிலா அவர்களைப் பற்றி பேசுகையில்.... அவரின் கணவர் பற்றியும் பேசி ஆக வேண்டும். கவிஞர் பேசிக் கொண்டிருக்க கணவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். முதலில் ஒரு புகைப்படக்காரர் என்றுதான் நினைத்தோம். பிறகு தான் தெரிந்தது. அவர் பேச இவர் புகைப்படம் எடுக்க அதுவே ஒரு கவிதை போல தான் இருந்தது. சல்யூட் கிருஷ்ணமூர்த்தி சார்.

அடுத்து நன்றியுரைக்கு வந்த Mrs. காமு சார் இதயத்தில் இருந்து பேசினார். இலக்கிய மனம் தாண்டி அவருக்கு இளகிய மனம். முகத்தில் பூரிப்பு. உள்ளத்தில் பேரமைதி. கணவன் மனைவி எல்லாம் தாண்டி அவர்கள் நண்பர்கள் என்று புரிகையில்.... காமு சாரின் கவிதைகள் இன்னும் இன்னும் அர்த்தம் ஆகின.

கை கூப்பினோம்.

- கவிஜி

Pin It