திருப்பூரைக் களனாக வைத்து சுற்றுச்சூழல் பற்றி அதிகம் தாங்கள் எழுதுவது ஏன்?

90களில் தமிழகச் சூழலில் பின் நவீனத்துவம் சார்ந்த விஷயங்கள் நிறைய பேசப்பட்டன. பின் நவீனத்துவம் விளிம்புநிலை மக்களைப் பற்றியும் அவர்களின் இலக்கியங்கள் பற்றியும் அதிக அக்கறை கொள்கிறது, அந்த வகையில் தலித், பெண்கள், சுற்றுச்சூழல் வாதிகள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் உட்பட பல விளிம்புநிலையினர் பற்றிய இலக்கியம் உலகம் முழுவதும் வெளியானது .அந்த வகையில் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை தனி பிரிவாக சமூக செயல்பாட்டிலும் எழுத்திலும் வெளிவந்தது.

நான் திருப்பூருக்கு 90 களின் ஆரம்பத்தில் திரும்பிய போது திருப்பூர் பின்னலாடை சார்ந்து வணிகம் சிறப்பாக இருந்தது ஆனால் திருப்பூரில் ஜீவநதியான நொய்யல் மாசுபட்டு இருந்தது. நமக்குத் தேவை சுற்றுச்சூழல் பாதுகாப்பா அல்லது அன்னிய செலவாணியா என்பது பற்றிய முக்கியத்துவத்தை ஒரு விவாதமாகக் கொண்டு நான் ” சாயத்திரை “ நாவலை எழுதினேன். அது தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு பெற்றது பின்னால் ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பற்றி சில நாவல்கள் எழுதினேன் இன்னும் எளிமையாக பொதுமக்கள்,, மாணவர்களிடம் இந்த பிரச்சனைகளை பற்றி சொல்வதற்காக எளிமையான கட்டுரைகள் எனக்கு உதவின அந்த வகையில் தான் என் பத்துக்கு மேற்பட்ட சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன

நீங்கள் சூழலியல் குறித்து எழுதிய காலத்தில் இருந்து இன்றுவரை சூழலியல் நெருக்கடி எப்படி இருக்கிறது?

இப்போது இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது.ஓரடி மூன்னே ஈரடி பின்னே பாணிதான். திருப்பூர் போன்ற வணிக நகரங்களின் சுற்றுச்சூழல் சிரமங்கள் பற்றி எழுத துவங்கினேன் ஆனால் இன்றைக்கு உலகம் சூடாகிக் கொண்டிருப்பது. அது சார்ந்த பிரச்சனைகள் என்று தீவிரமாக உள்ளது. அது சார்ந்த நிறைய விவாதங்களும் எழுப்பப்படுகின்றன. தீர்வுகள் என்ற ரீதியில் சிலவை முன் வைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை சார்ந்து நிறைய பேசும் எழுதும் எழுத்துக் கலைஞர்கள் அதிகமா இருக்கிறார்கள்.. இது மக்களிடம் சாதாரணமாக விழிப்புணர்வாகக் கொண்டு செல்வதற்கு கூட பயன்படலாம்

நகரமயமாக்களின் விளைவாய் திருப்பூர் நகரம் எவ்வாறு உள்ளது?

உலகம் முழுக்க நகரமயமாக்கலும் மக்களுடைய இடப்பெயர்வும் மிக முக்கியமான விஷயங்களாக இந்த நூற்றாண்டில் இருக்கின்றன. அந்த வகையில் பெரும் தொழிற்சாலைகள் உள்ள நகரங்களுக்கு மக்கள் கிராமங்களில் இருந்து இடம்பெறுகிறார்கள். நகரங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் கூடுகிறார்கள் வேலைக்காக... அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் சில சமயம் கூடி வருகின்றன கொஞ்சம் சம்பளம் அதிகமாக கிடைக்கும் சூழல் இருக்கிறது. ஆனால் தொழிலாளி என்ற நிலையில் அவர்களுடைய நிலை கேவலமாக இருக்கிறது அடிப்படையான தொழிலாளர் உரிமைகள் கூட இல்லாமல் அவர்கள் கொத்தடிமைத் தனத்திற்கு சுலபமாகச் சென்று விடுகிறார்கள். உலகமயமாக்கல் என்பது சாதாரண தொழிலாளிகளை கொத்தடிமைத் தனத்திற்கு சென்று விட்டது. பெண்களையும் குழந்தைகளையும் இன்னும் கேவலமாக்கி வெற்றி பெற்றிருக்கிறது. நகரமயமாக்கல் மூலமாக நகரங்கள் நரகங்கள் ஆகி கொண்டு இருக்கின்றன

காலநிலை மாற்றம் குறித்து சர்வதேச ஊடகங்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?

சர்வேச ஊடகங்கள் இன்றைய காலநிலை மாற்றம் பற்றி நிறைய செய்திகளை தருகின்றன .எல்லாம் பயமுறுத்துகிற செய்திகள். மக்களிடம் ஒரு வகையில் உணர்வு ரீதியாக பல விஷயங்களை எழுப்புகின்றன. அதேசமயம் விழிப்புணர்வுக்காக நிறைய செயல்பாடுகள் துவங்கி இருக்கிறனர் ஆனால் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் பொதுவான சமூக சேவை நிறுவனங்களுக்கு ஆதரவாக இல்லை. சமூக சேவை நிறுவனங்கள் பெரும்பாலும் சிறுபான்மையின மக்களால் நடத்தப்படுவதால் ஒன்றிய அரசு அவர்களை நசித்துப் போக விட்டார்கள் அவர்களின் நடவடிக்கைகள் குறைவாகத்தான் உள்ளன. ஆனாலும் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு என்ற அளவில் பல கார்ப்பரேட்டுகள் இந்த வகை செயல்பாடுகளில் அக்கறை கொண்டிருக்கிறார்கள். அரசும் ஓரளவு இதற்கு நிதி உதவி ஒதுக்கி விழிப்புணர்வு பிரச்சாரமாக கொண்டு செல்கிறது அவை போதாது. கொரோனா காலத்தில் இது சார்ந்த மக்களின் விழிப்புணர்வு அதிகமாக இருந்தது ஆனால் அவர்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிற போது செக்கு மாடாக மாறிப் போய்விட்டார்கள் .ஊடகடங்களின் செய்திகளை விட மக்களின் உணர்வுகள் வெவ்வேறு வடிவங்களாக மாறியுள்ளதைக் குறிப்பிட வேண்டும்

உலக இலக்கியத்தில் காலநிலை இலக்கியம், பசுமை இலக்கியம் என்கிற வகிமை தீவிரமாக உணர்ந்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் முன்பு குறிப்பிட்ட மாதிரி பின்நவீனத்துவ விஷயங்கள் சார்ந்து இலக்கியமும் விவாதங்களும் பசுமை இலக்கியம் சார்ந்த முன்னெடுப்புகளில் அதிகம் இருந்தன. எல்லாம் மொழிகளிலும் இது சார்ந்த நிறைய படைப்புகள் வருகின்றன . விஞ்ஞானிகள் இவற்றை கணிக்கலாம். எழுத்தாளர்கள் இவற்றை எழுத்தின் மூலமாக வெளிப்படுத்தலாம். உணர்த்தலாம் .அரசியல்வாதிகளும் அரசாங்களும் செயல்பாட்டில் அக்கறை எடுக்க வேண்டும்

சாதிக்கும் சூழலுக்கும் பற்றிய முரண்பாடு பற்றி சொல்லுங்கள்

சாதி சமூகமாக இந்திய சமூகம் இருக்கிறது அது அதிலிருந்து விடுபட முடியாது அதுவும் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் மதவாத அக்கறை சாதி சமூகத்தை இறுக்கமாக்கி உள்ளது. சாதி ரீதியாக தொழில் மற்றும் தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் அந்த அமைப்புகளுக்குள் கொண்டு போக பல முயற்சிகள் நடக்கின்றன. சமூகச்சூழலில் நடவடிக்கைகளில் சாதி எப்படி இயங்குகிறது என்பதை பற்றி நிறைய ஆய்வுகள் வந்துவிட்டன எந்த சூழலாக இருந்தாலும் அதில் சாதி சார்ந்த அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன

கொரோனா பெரும் தொற்று சமீப காலங்களில் மக்கள் இடத்தில் சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறதா?

கொரோனா காலகட்டத்தில் அதற்கான விழிப்புணர்வும் , அக்கறைஉணர்வும் இருந்தன. ஆனால் இந்திய சமூக சூழலில் அரசாங்கம் அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளாக இருக்கிற காரணத்தினால் எல்லாம் முடங்கி போய்விட்டன மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த அவசரங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி ஓடச் செய்கின்றன பெரும் அபாயங்களை எதிர்கொண்டு தான் சாதாரண மக்கள் இருக்கிறார்கள்

சூழலியலுக்கும் மொழிக்கும் இடையிலான உறவை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழ் பசுமை சார்ந்த மொழி. அது மண்ணில் வேரூன்றி நின்று திணைக் கோட்பாடையும் உருவாக்கி சிறந்த சூழலியல் மொழியாக உருவெடுத்திருப்பதை நாம் பல ஆய்வுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். மற்றும் சூழலியல் சார்ந்த செயல்பாடுகளில் தமிழ் மொழியின் பங்கு இலக்கியத்தில் சங்க கால முதல் தீவிரமாகவே இருக்கிறது. இந்த அளவுக்கு வேறு மொழிகளில் இல்லை என்றே சொல்லலாம்

உங்களின் 25 நாவல்களில் ”சிலுவை“ முகியமானது. பக்க அளவில் பெரியது. அது பற்றி..

300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.

சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது.

அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..

“சிலுவை“ நாவல் இருபத்தைந்தாவது நாவலாகவும், என் நூறாவது புத்தகமாகவும் அமைகிறது.

சுடுமணல், நைரா, , அந்நியர்கள் போன்ற நாவல்களில் வட மாநிலத்தவரின் ஆதிக்கத்தை பற்றி பேசும் நீங்கள் அதே சமயம் அவர்களின் வாழ்வில் சிக்கல்களையும் அவற்றோடு பதிவு செய்வதை எப்படி புரிந்து கொள்வது?

வடமாநிலத்தார் தமிழகத்தில் வாழ்வது குறிப்பாக திருப்பூரில் லட்சக்கணக்கில் தொழிலாளர்களாக தொழில் சார்ந்து அலைவது பற்றி என்னுடைய பல படைப்புகள் தெரிவித்து இருக்கின்றன. ஆனால் நீங்கள் சொல்லும் அப்படி ஒரு கோணம் அதில் வெளிப்பட்டிருந்தால் அதற்கான நான் வருத்தப்படுகிறேன். அவர்களின் ஆதிக்கம் என்பதை பற்றி எல்லாம் சொல்வதை விட அவர்களின் மீது ஏற்படும் மன அழுத்தங்களையே நான் இப்போது அதிகம் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

வடமாநிலத்தவர்கள் திருப்பூரில் பின்னலாடை தொழில் சார்ந்து முதலாளிகளாக விளங்கி செய்யும் ஆதிக்கம் ஒருபுறம் இருக்கிறது. ஆனால் இந்த பகுதியின் ஆதிக்க சாதிகளின் போக்கில் அவருடைய ஆதிக்கம் எடுபடவில்லை அதேசமயம் இங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் அவர்கள் ஊரில் சாதிய அடுக்குகளை தவிர்க்க இங்கு வந்து தொழிலாளிகளாக அடைக்கலமாகி உள்ளார்கள். அவர்கள் பகுதியில் சரியான தொழில் அமையாததும் வறுமையும் காரணமாக இருக்கிறது. சாதி ரீதியாக கொடுமைகள், ஆணவக் கொலைகள் போன்றவை எல்லாம் அவர்களை இந்த பக்கம் துரத்தி விடுகிறது. நிச்சயமாக அவர்கள் மீது கரிசனமும் இருக்கிறது .ஆனால் அவர்களின் ஆதிக்கம் பற்றி நான் சொல்லவில்லை அப்படி என் கோணம் எழுத்தில் வெளிப்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தமே தெரிவிக்கிறேன்

இன்றைய சூழலில் உங்கள் கதாபாத்திரங்களான நெசவாளர்களின் வாழ்வியல் என்னவாக இருக்கிறது. சப்பரம், தறிநாடா நாவல்களிலும் பின்னால் சிலுவை நாவலிலும் நெசவாளர்கள் வாழ்க்கையைச் சித்தரிக்கிறீர்கள். அவர்களின் வாழ்வியலை சித்தரித்திருக்கிறீர்கள். முன்பு சப்பரம் தறிநாடா போன்றவற்றில் அவர்களின் வாழ்க்கை சித்திரங்கள் உள்ளன.

நெசவாளர்கள் வாழ்வில் சார்ந்து நான் தொடர்ந்து பல பதிவுகளை கதையின் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் வெளிப்படுத்தி வருகிறேன் அவர்களுடைய வாழ்க்கை சிக்கல்களையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் பெரிய அளவில் தொழிற்சங்கரீதியாக போராடாமல் இருப்பதும் சாதி ரீதியாக போராடுவதும் அவர்களை தனிமைப்படுத்துவதையும் அவர்களுடைய போராட்டங்கள் வெற்றி பெறாமல் போவதையும் பற்றி தறிநாடா போன்ற என் நாவல்கள் பேசுகின்றன. சிலுவை நாவல் ஒரு நெசவாளர் கிறிஸ்துவ குடும்பத்தைப் பற்றி தான் நாலைந்து தலைமுறை பற்றிப் பேசுகிறது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நிலைமை எடுத்துக் கொள்வோம் கைத்தறி நெசவு நசித்து போய் விட்டது அந்த இடத்தில் செய்றகை இழை பம்பர், கோரா, செயற்கைப்பட்டு போன்றவை வந்து விட்டன அவர்கள் செயற்கை இழை நெசவில் நிறைய சம்பாதித்தார்கள். இதை நான் கொங்கு பகுதி நெசவாளர்களை மையமாக வைத்தது தான் சொல்கிறேன் மற்ற பகுதி நெசவாளர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் பம்பர் கோரா பட்டு நெசவில் நல்ல கூலி பெற்று திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் கைத்தறி ஐட்டங்களும் வேறு சில ஐட்டங்களும் விசைத்தறியில் போடப்பட்டு அங்கு உற்பத்தி செய்யப்படுவது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. .இது தவிர வழக்கமாக நம் வயிற்றில் அடிக்கிற குஜராத் நெசவாளர் விஷயத்திலும் அக்கறை எடுத்துக் கொண்டு சிரமப்படுத்துகிறது. குஜராத்தில் ஏராளமான விசைத்தறி பணிக்கூடங்கள் உள்ளன. அவை மூலமாக பம்பர் ,கோரா போன்றவற்றின் பல வகையான துணிகள் நெய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன, இதனால் இங்குள்ள நெசவாளர் வாழ்க்கை நசிந்து போய் விட்டது .அவர்கள் பனியன் கம்பெனி தொழிலுக்கும் விசைத்தறிக்கும் போக வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டார்கள். இது திருப்பூரில் பனியன் கம்பெனி தொழிலாளுடைய நிலை கூட. பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மத்திய அரசு வழங்குகிற சலுகைகள் மற்றும் துணி இறக்குமதிகள் காரணமாக திருப்பூர் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்ட திருப்பூரில் நெசவாளர்கள் நசிந்து போய் இருக்கிறது

உங்களுடைய நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களில் நாடகப் பிரதிக்கும் ஒரு இடம் இருக்கிறது ஒரு நாடக நூல் வெளியிட்டு இருக்கிறீர்கள். உங்கள் நாடக செயல்பாடுகளை பற்றி சொல்ல முடியுமா?

மணல் வீடு என்ற தலைப்பில் என்னுடைய நாடகங்கள் ஒரு தொகுப்பாக வந்திருக்கின்றன இவற்றில் பெரும்பாலும் வானொலி நாடகங்கள் நவீன உத்திக்காக எடுத்துக் கொண்ட சில மையங்கள் இந்த தொகுப்பில் உள்ளன. எங்கள் பகுதி நாடக முயற்சிகள் நவீன நாடகம் என்ற வகையில் இருக்கின்றன. எங்கள் பகுதி இலக்கிய வறட்சி மிக்க பகுதி என்று யாரும் சொல்லி விடக்கூடாது என்று பல்வேறு வகையான இலக்கிய நடவடிக்கைகளில் இறங்க வேண்டி இருக்கிறது அதில் ஒரு பங்கு தான் நாடக முயற்சிகள். நவீன நாடகங்கள் சார்ந்து இயங்கிய பட்டியலில் அய்னஸ் கோ முதல் சங்கரப்பிள்ளை, ஞானராஜசேகரன் வரை பல பெயர்கள் உண்டு. தொடர்ந்து நவீன சிறு நாடகங்களை இயக்க அக்கறை கொண்டிருக்கிறேன்

- சுப்ரபாரதிமணியன்

நேர்காணல் - கன்னிவாடி மு.காயத்திரி (அமெரிக்கன் கல்லூரி, மதுரை)