“வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்” – ஜெயகாந்தன்
தொடக்க விலாசம்
ஒரு புதினத்தின் ஊடாக வாழ்வியலைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் தாண்டி, அதனை உணர முடியும் என்பதை வலியுறுத்திச் செல்கிறது ஜி. நாகராஜனின் 'குறத்தி முடுக்கு' புதினம்.
அது எப்படி? உணர்ந்தால் தானே கற்க முடியும் என்ற கேள்வி எழும்புவது எனக்குக் கேட்கிறது. சரிதான். உணர்ந்து கற்பது எத்தனை பேர்? கற்றல் கேள்விக்குறிதான். ஆனால், எல்லோராலும் உணர முடியும். அவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், ஆழ்மனம் அதன் உணர்வை, உண்மையை ஏற்காமல் போகாது.
அப்படியான உண்மையையும், உணர்வையும் ஆழ்மனத்திற்குப் புரியவைக்கும்படியான படைப்பே குறத்தி முடுக்கு. இந்நூலின் முகப்பிலேயே ஆசிரியர், “நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முழுமையுந்தானே சொல்லியாக வேண்டும்” என்று கூறி ஆவலைக் கிளப்பிவிட்டார்.
மேலும், “நம்மிடையே தர்க்கம் எதுவும் வேண்டாம்” என்பதை, “இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்று வேண்டுமானால் கேளுங்கள்; இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்? என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள்” என்று சீரிய பார்மையை முன்வைத்துவிட்டார்.
இந்த வாசகத்தைப் படித்துவிட்டு, முழுமூச்சுடன் இப்புதினத்தைப் படித்து முடித்த பிறகு முதல் கேள்வியே என்னுள் எழுந்தது: ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இதற்கான விடலையும் ஓரளவிற்குப் புரிந்துகொண்டேன். அப்புரிதலை நான்கு விலாசங்களாக இக்கட்டுரை அடையாளம் காட்டுகிறது.
மரபுவழிப்பட்ட தமிழ்ச் சமூகம், பரத்தையர் என்ற சட்டகத்திற்குள் வைத்திருக்கும் இனத்தை களங்கமாகவும், தீட்டாகவும், பழியாகவும் பார்க்கும் விதம் இன்றும் தொடர்வது, நவீனயுக மாற்றத்தில் இன்னும் நாகரிகமடையாதவைகளுள் ஒன்று.
சொல்லப்போனால், சங்ககாலத்தில் பரத்தையர்கள் தங்களுக்குள்ளேயே இற்பரத்தை, காதற்பரத்தை என்ற வகைமைக்குள் ஒருமித்த “பரத்தையர் ஒழுக்கம்” என்ற ஒழுக்கக் கருத்தியலுடன் வெளிப்படையாக வாழ்ந்தார்கள். ஆணாதிக்கத்தைச் சட்டையே செய்யாதவர்கள். தலைவிக்கும் பரத்தைக்கும் குழந்தைப் பெற்றெடுப்பதைத் தவிர யாவிலும் ஒற்றுமையே நிலவியது. ஏக்கம், அன்பு, உடைமை, இன்னும் பல...
இப்படி மரபுச் சமூகம் வரையறுத்த விலைமகளிரை, காமக்கிழத்தியரை, கொண்டி மகளிரை, கணிகையரை, அதாவது பரத்தையரை நவீனப் பார்வையில் வெளிப்படையாக இப்புதினத்தில் காட்டுகிறார் ஆசிரியர் ஜி. நாகராஜன்.
குறத்தி முடுக்கு – திருநெல்வேலி சீமையில் நயினார் குளம் இடத்தைச் சார்ந்த ஒரு வீதி.
இந்த வீதியின் பின்னணியில்தான் கதை தொடங்கி நகர்கிறது. ஆசிரியரே கதைசொல்லியாக இருந்து, தன் வாழ்க்கைச் சம்பவங்களில் பாலியல் தொழிலாளர்களின் ஊடுருவல் எந்த அளவிற்கு மகிழ்ச்சி, கவலை, ஏமாற்றம், தத்துவம் போன்றவற்றுக்கு உள்ளாக்கியுள்ளது என்பதை விவரிக்கிறார்.
கதாப்பாத்திர விலாசம்
- தங்கம்: ஆசிரியர் விரும்பிச் சென்ற பெண். இரண்டாவது முறையும் ஆசிரியர் செல்கையில், பலமுறை பார்த்தது போல முகமலர்ச்சியுடன் வரவேற்று உபசரித்தவள். முன்பொருமுறை நடந்த திருமணக் கசப்பால் வாழ்க்கையில் தடுமாறியவள்.
- செண்பகம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டும், தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசை கொண்டவள். கர்ப்பவதியாக இருந்தபோதும் கிழவனின் ஆசையால் உடல் அல்லலுற, அசையாமல் கிடந்தவள். காலவசத்தால் கர்ப்பம் கலைந்தது. ஆத்திரம் கொள்ளாமல் அடுத்தவேளை சோற்றுக்கு அமைதிகொண்டு, அரைமணி நேரம் கழித்து வாசல் வந்தவனை உள்ளே விட்டு, கதவு தாழிட்டு வரவேற்றாள்.
- மீனாட்சி: செண்பகத்துடன் தோழியாய் இருந்தவள். பாலியல் தொழிலில் இரு பால்ய சகோதரிகளாய் இவளும் செண்பகமும். தாயம் ஆடிப் பொழுதுபோக்குபவர்கள். கொஞ்சம் வாய்துடுக்கு. போலிசாரிடம் வாய்விட்டதால் ஒருமுறை மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்தார்கள்.
- மரகதம்: பாலியல் தொழிலில் செண்பகத்துக்குப் பக்கத்து வீட்டுக்காரி. பதினாறு வயது பருவப்பெண். காசு கேட்டுத் தொல்லை செய்யும் காதலனைக் கொண்டவள். காதலனும் பொய்யெனத் தெரிந்து கண்கலங்கி நின்றவள்.
- செல்லம் & அச்சுதன்: செண்பகம், மீனாட்சியின் உரிமையாளர் செல்லம். போலீசுக்கு மாமூல் கொடுப்பது, தன் வீட்டிற்கு வரும் தலைவர்களிடம் காசு வாங்கிப் பெண்களிடம் அனுப்புவது போன்ற வேலைகளைச் செய்யும் உழைப்பாளி. சில சமயம், இருவருக்கும் முடியாத நிலையில் தன்னையே இரண்டு, மூன்று ரூபாய்க்கு ஒரு பொழுதுக்கு அடமானம் வைப்பாள் செல்லம். செல்லத்தின் தம்பி அச்சுதன் கணக்குவழக்குப் பார்ப்பதில் எடுபிடி.
- நடராஜ்: தங்கத்தின் முன்னாள் கணவன். காசுக்காகத் தன் மனைவியையே ஒரு பொழுதுக்கு ஒருவனிடம் விற்றவன்.
- சில அத்தான்கள் கதையில் அவ்வப்போது எட்டிப்பார்ப்பார்கள். பாலியல் பெண்களின் மேலாளராகச் செயல்படும் உத்தமன்கள்.
தத்துவ விலாசம்
- பாலியல் தொழில் செய்யும் பெண்களைக் கதாப்பாத்திர விலாசத்தில் கண்டதுபோல், ஒவ்வொருவரும் தனக்குள் ஒரு வலியைச் சுமந்து வாழ்கின்றனர். இவர்களை ஆசிரியர் நியாயப்படுத்தவில்லை. இவர்களின் நியாயத்தைச் சொல்கிறார்; அவ்வளவுதான்.
- ஆசிரியரின் காதல் மீதான பார்வை வாசகனுக்குத் தெள்ளத் தெளிவாக இப்புதினத்தின் வழி புரியும். காதலின் அடுத்த படிநிலை கல்யாணம் தான் என்று நம்பிக்கொண்டிருக்கும் பலருக்கு, காதல் வேறு, கல்யாணம் வேறு என்ற சித்தாந்தத்தை முன்வைக்கின்றார்.
- குடும்ப அமைப்பை காதல் என்ற நிலையின் வளர்ச்சிப் படிநிலைகளாகப் பார்க்கும் நபர் நானில்லை என்கிறார். “தினம் தினம் சைக்கிளை வாடகைக்கு எடுப்பதை விட, ஒரு சைக்கிளை சொந்தமாக வாங்கிவிடுவது சிறந்தது” என்ற கோட்பாடுதான் திருமணம் பற்றிய ஆசிரியரின் புரிதல். இதன் மூலம் அவரின் காமம் பற்றிய இச்சைப் புரிய வருவது மட்டுமேயன்றி, ஒருவகையில் உளவியல் ரீதியாகப் பார்க்கையில் மனிதப் பார்வையின் உண்மைத் தன்மையும் இதுவே என்று நம்மால் உணர முடியும்.
- ஆண் – பெண் சேர்க்கையை (உடலுறவினை) ஒரு தெய்வீக நிகழ்ச்சியாகப் பார்க்காமல், காதலின் மகத்துவம் என்று கருதாமல், அன்றாடம் நடக்கும் தினசரி வேலைகளைப் போலவே இதையும் கருதலாம், நான் கருதுவேன். தவிர அதற்கு ஒரு அர்த்தத்தைக் கற்பிப்பது என்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்கிறார் ஆசிரியர்.
- ஆசிரியர் ஜி. நாகராஜன் கம்யூனிஸ்டு பார்வைகளைத் தன் எழுத்துகளில் ஒளிவுமறைவாகச் சொல்வது, ரகசியம் பேணுவது, ஒரு “இக்கு” வைத்துச் சொல்வது என்ற கட்டமைப்பெல்லாம் தகர்த்தார். எதையும் வெளிப்படையாக உண்மைத் தன்மையுடன் எழுதுவதை முதற்கட்டமாக இலக்கிய நடையில் வைத்துள்ளார் என்பது இந்தக் குறத்தி முடுக்கு புதினத்தின் வழி தெரிகிறது.
அதற்கு நூல் முழுதும் சான்று. இருப்பினும், எல்லாவற்றிலும் மேல், புதினத்தின் இறுதிட்டத்தில் தங்கத்தின் நினைவோடு ஆசிரியர் விடுதியில் உறங்கும் வேளையில் வரக்கூடிய சிந்தனைகள்... அப்பப்பா... வேறு ஒருவன் தன்னை அந்த இடத்தில் அப்பழுக்கற்ற ஆஜானுபாகுவாகக் காட்டியிருக்கக்கூடும். ஆனால், ஜி. நாகராஜன் அப்படி அல்ல... என்ன நிகழ்வு நடந்தேறியது என்ன படித்து ருசியுங்கள் நண்பர்களே!
- திருமணத்தில் ஏமாந்த தங்கம், கருக்கலைப்பால் மனம் நொந்த செண்பகம், வாய்துடுக்காய்ப் பேசி மொட்டையடிக்கப்பட்ட மீனாட்சி, காதல் மொழியில் மயங்கி காதலனால் கைவிடப்பட்ட பதினாறு வயது மரகதம், பணத்திற்காய் எதையும் செய்யும் செல்லம் என்று ஜி. நாகராஜன் பார்த்த கதாபாத்திரங்கள் மேற்கண்ட காரணத்தால் பாலியல் தொழிலுக்கு வரவில்லை. அவர்கள் பாலியல் தொழிலிலேயே இத்தனை ஏமாற்றம், வலிகள். இவர்களின் நிலைமை ஒரு ஆவணம்.
- குறத்தி முடுக்குக்கு முழுப்பெயர் “வள்ளிக்குறத்தி முடுக்கு”. இந்த முடுக்கில் ஒரு தேவயானை வந்தாள் என்று தனக்கேயுரிய பாணியில் தேவயானை கதாபாத்திரத்தை முன்வைத்து, பாலியல் தொழிலாளர்களின் முடிவு அவர்களாலேயே எடுக்கப்படுவதில்லை என்ற கருத்தியலை அழகாகத் தேவயானை மூலம் சொல்லியிருக்கிறார்.
மேற்கோள் விலாசம்
குறத்தி முடுக்கு புதினத்தில் சில வசனங்கள் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகும் நெஞ்சை விட்டு அகலவில்லை. அவற்றுள் இரண்டு:
- “விபச்சாரம் செய்வது குற்றமில்லை போலும், விபச்சாரத்துக்கு அழைப்பதுதான் குற்றம் – இதுதான் போலீசார் விசாரணை முறை.”
- “அவள் என்னை ஏமாற்றியது சிறியதொரு நிகழ்ச்சி, அவள் எனக்கு அளித்த இன்பம் பெரியதொரு நினைவு.”
இந்த வசனங்களை மேற்கோள் என்ற வகைமைக்குள் அடக்கக் காரணம், இந்த நூலின் தன்மையை வாசகர்கள் அறிவதற்கே!
முடிவு விலாசம்
- தீர்க்கமான கருத்தியலை நேர்த்தியாகச் சொல்லி விளக்கியுள்ளார் ஆசிரியர்.
- பாலியல் தொழிலாளர்களின் பல்வேறு கோணங்களினாலான வாழ்வியல் முறைமையை நம்மால் உணர முடியும்.
- ஆசிரியர் தனக்கேயுரிய கம்யூனிஸ்டு பார்வையிலான எழுத்துகளும் கதையாடல்களும் மட்டுமின்றி, சம்பவங்களில் இடம்பெறும் இடங்களின் சூழலிலும் வர்ணனையிலும் தன் உத்தியைக் கையாண்டுள்ளார்.
- இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு எனக்குள் தோன்றிய வாசகம் “உன்னுடைய வலி, பிறருக்கு வெறும் வார்த்தை தான்” ஒரு வாசகனாக இதை உணர்ந்தேன். இப்புதினம் படிக்கும் உங்களுக்கும் அதே எண்ணம் தோன்றும். பிறகு, இப்படி வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்று பேசுபவரிடம், இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்? என்று எப்படி கேட்க முடியும்? இந்த கற்பனை எழுத்துகளின் மத்தியில் சூழப்பட்ட நவீன இலக்கிய உலகில் கொஞ்சம் வெளிப்படை எதார்த்த எழுத்துகளில் திளைப்போம். குறத்தி முடுக்கு அதற்கு வழிவிடும்.
நூல்: குறத்தி முடுக்கு
ஆசிரியர்: ஜி. நாகராஜன்
முதல் பதிப்பு: 1963
வகை: புதினம்
- ஹரிஸ் வெங்கடேஸ்