தமிழின் முதல்காப்பியம் என்ற பெருமைபெற்ற சிலப்பதிகாரம், தன் காப்பியக் கட்டமைப்பாலும் எடுத்துரைப்பாலும் உலகின் வேறெந்த மொழியிலும் காணக் கிடைக்காததோர் முன்மாதிரிக் காப்பியம் என்ற பெருமையினைப் பெறுகின்றது.

வாய்மொழிக் காப்பியம், எழுத்து மொழிக் காப்பியம் என்ற வரையறைகளைக் கடந்து இரண்டின் பிணைப்பாலும் இயன்றதோர் புத்தாக்கப் படைப்பாகச் சிலப்பதிகாரம் திகழ்வது கற்போர்க்குப் பெருவியப்பினை அளிக்கின்றது.

இக்காப்பியத்தின் தனித்தன்மை யானதோர் அகக் கட்டமைப்பை உணர்ந்தே நம் முன்னோர்கள் இதனை இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்றும் முத்தமிழ்க் காப்பியம் என்றும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் பலவாறாகப் பல அடைகளோடு அடையாளப்படுத்த முனைந்தனர்.

எந்தவொரு இலக்கியப் படைப்பும் தான் தோன்றிய காலத்தின் சமூகச்சூழல், தேவை இவற்றோடு மட்டும் முழுமை பெற்று விடுவதில்லை. அது ஒவ்வொரு காலத்தின் தேவைகளுக்குத் தகுந்தவாறு மீண்டும் மீண்டும் மறுவாசிப்புக்கு உள்ளாகி எப்பொழுதும் தன்னை ஒரு நிகழ்கால இலக்கியமாக நிலைநிறுத்திக் கொள்கிறது. என்பார் பேராசிரியர் க.பஞ்சாங்கம்.

அந்த வகையிலிலேயே சிலப்பதிகார இலக்கியமும் தமிழ்ச் சமூகம் இருபதாம் நூற்றாண்டில் எதிர்கொண்ட பல்வேறு சமூக அரசியல் சூழல்களுக்கு ஏற்பப் பல்வேறு வாசிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

இந்திய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்று சென்ற நூற்றாண்டில் செல்வாக்கு செலுத்திய அத்தனை இயக்கங்களுக்கும் இடமளிக்கும் வகையில் சிலப்பதிகாரம் பல்வேறு வாசிப்பு மற்றும் விளக்கங்களைப் பெற்றுள்ளது. இனிவரும் காலத்து சமூக அரசியல் சூழல்களுக்கும் இடமளித்து புதிய வாசிப்புகளுக்கும் களமாக அமையத்தக்க இலக்கியமாக சிலப்பதிகாரம் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.

இலக்கிய வாசிப்பு என்பதனைத் தனிமனித வாசிப்பு, சமூகத்தின் வாசிப்பு என்று வகைப்படுத்த முடியும். தனிமனித வாசிப்புகளைவிட சமூகத்தின் வாசிப்பு என்பது காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. சிலப்பதிகாரம் தமிழ்ச் சமூகத்தின் வாசிப்பில் பல்வேறு காத்திரமான தாக்கங்களை சமூக, அரசியல், படைப்புத் தளங்களில் நிகழ்த்தியுள்ளது.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திற்கு முன்னும் பின்னும் கண்ணகி என்ற பெண் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று ஒரு அடையாளமாக, ஒரு குறியீடாக ஒரு தொன்மமாக மாற்றம் பெற்றுள்ளாள். மொழி எல்லைகளை, நாட்டு எல்லைகளைக் கடந்தும் கண்ணகித் தொன்மம் பரவலாக்கம் பெற்றுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

புதுச்சேரிக் கவிஞர் வை.இராமதாசு காந்தி ஓர் இலக்கியச் செயற் பாட்டாளர், தமிழ் மரபுக் கவிதைகளில் நல்ல தேர்ச்சி உடையவர், புதுச்சேரி, தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளோடு இணைந்து செயல்படக் கூடிய துடிப்புமிக்க தமிழ் ஆர்வலர். இலக்கிய நண்பர்களை இணைப்பதிலும் ஆற்றுப் படுத்துவதிலும் இடையறாத ஆர்வமுடையவர் பல்வேறு இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ள பெருமைக் குரியவர்.

அனைத்திற்கும் மேலாக வள்ளலார் வழி ஒழுகும் பண்பாளர். அவரது வாழ்க்கைத் துணை திருமதி விசயலட்சுமி அமைமையார் போற்றி ஒழுகும் வள்ளலார் வாழ்வியலுக்கு என்றும் துணைநிற்பவர். அந்த வகையில் என்னைப் பெரிதும் கவர்ந்தவர்.

கவிஞர் வை.இராமதாசு அவர்களின் இலக்கியப் படைப்பு வரிசையில் ஏழாவது இலக்கியப் படைப்பு சிலம்பு கூறும் சீரிய அறம் என்ற இந்நூல். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரத்தை இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் வாசிப்புக்கு உரியதாக மறுஆக்கம் செய்துள்ளார் இராமதாசு காந்தி. சிலப்பதிகாரத்தின் மூன்று காண்டங்களில் வஞ்சிக் காண்டத்தைத் தவிர்த்து புகார், மதுரைக் காண்டங்களின் கதைப்போக்கினையும் கருத்துச் செறிவினையும் காப்பிய அழகுகளாம் கற்பனை, உவமை, உருவகங்களையும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வாரியெடுத்து தமது எளிமையான கவிதை நடையில் இன்றைய இளந் தலைமுறையினரும் வாசித்துச் சுவைக்கத் தக்க வகையில் சிலம்பு கூறும் சீரிய அறம் என்ற இக் காப்பியத்தை உருவாக்கி அளித்துள்ளார்.

நூலின் இறுதியில் சிலப்பதிகாரக் கதைச் சுருக்கத்தினை அறுபத்தெட்டு இனிமை வாய்ந்த சந்தப் பாக்களில் வடித்துள்ளமை நூலுக்கு ஒரு மணிமகுடம்.

அகவற் பாக்களால் முத்தமிழ்க் காப்பியமாகப் படைத்தளித்த காப்பியப் புலவன் இளங்கோவின் கவிதைகளை எழுத்தெண்ணி வாசித்து அதன் கவிநலத்திலும் கவிநயத்திலும் தோய்ந்து மூலநூலின் பெருமைக்கு எந்த விதத்திலும் ஊறுநேர்ந்திடா வகையில் சொற்களைச் செதுக்கிச் செதுக்கிச் சிலம்புக்குப் புதுவடிவம் கொடுத்துள்ளார் இராமதாசு காந்தி. அகவற் பாக்களை விருத்தப் பாக்களாகவும் சந்தப் பாக்களாகவும் மாற்றிப் புதுக்கோலம் புனைந்ததில் புதுவைப் புலவர்கள் பாவேந்தர், தமிழ்ஒளி கவிதை நடைகளின் சாயல் மிளிர்வது பாராட்டத் தக்கது.

கவிஞர் இராமதாசு காந்தி அவர்களின் கவிப்பெருக்கின் பெருமைக்கு நூல் முழுமையுமே அத்தாட்சி என்றாலும் சான்றாக ஒருபாடலை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் இருந்தும் இராமதாசு காந்தியின் சிலம்பு கூறும் சீரிய அறம் நூலிலிருந்தும் தருகின்றேன். வழக்குரை காதையில் வாயிற் காவலன் கண்ணகியின் வருகையை பாண்டிய மன்னனுக்கு உரைக்கும் பகுதி இது. இரண்டு பகுதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வீர்! சுவைத்துணர்வீர்!

சிலப்பதிகாரம்

அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் 40 
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே

சிலம்பு கூறும் சீரிய அறம்

வாயிலில் மங்கை வளர்தெழு கனலாய்
தாயவள் கூந்தல் தலைவிரி கோலம்
கையொரு சிலம்பும் காரிகை அவள்தன்
மெய்யுடல் குருதி மேலவள் கறையாம்
வேல்கை கொண்ட வெற்பெனும் கொற்றவை
சேல்விழி தடக்கை சினந்தவள் தோற்றம்
சப்த கன்னிகையில் சன்னதி இளையோள்
ஒப்பிலாப் பிடாரி உற்றவோர் தோற்றம்
ஞால இருளில் நன்னடம் புரியும்
கோல விழியாள் கொற்றவை தோற்றம்
அன்றவள் அப்பால் அழலொடு நடமிடும்
பொன்தாள் காளி புதுப்பொழில் கொண்டவள்
தாருகா சூரன் தன்மார் பிளந்த
நேரிடை துர்கா நீள்கண் கனலாள்
வாள்கண் சினமும் வரிசிலம் பவள்கை
தாள்நிலம் நில்லா தளிர்மகள் இவளே!
கணவனை இழந்த காரிகை தானும்
காண நின்றாள் கடைவாய் உள்ளாள்

சிலப்பதிகாரத்தை மறுஆக்கம் செய்வதில் சவாலான பகுதிகள் அரங்கேற்றுக் காதையும் கானல்வரியும். கவிஞர் இராமதாசு காந்தியின் சிலம்பு கூறும் சீரிய அறம் என்ற இந்நூலை வாசித்துக் கொண்டே வருகையில் அரங்கேற்றுக் காதையையும் கானல்வரியையும் வாசிக்கத் தொடங்கும்போதே பதட்டமும் பதைபதைப்பும் என்னைப் பற்றிக் கொண்டன.

இளங்கோவடிகளின் கவிதைச் சுவையைக் கருத்தாழத்தை நுண்மாண் நுழைபுலத்தை இந்தக் கவிஞர் இளங்கோவடிகளுக்கு இழுக்கு நேராமல் சிலம்பைச் சிதைக்காமல் புதுவடிவம் தந்திருக்க வேண்டுமே என்ற தயக்கத்தோடு வாசிக்கத் தொடங்கினேன். வாசித்தேன்.. சுவாசித்தேன்.. ரசித்தேன்.. மகிழ்ந்தேன்.

கவிஞர் இராமதாசு காந்தி இந்தப் படைப்பில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டார் என்பதற்கு இந்நூலின் அரங்கேற்றுக் காதையும் கானல்வரிகளுமே சாட்சி. சொல்லழகும் பொருளழகும் மிளிர கவிதைகள் இந்நூலில் களிநடம் புரிகின்றன. இந்த அணிந்துரையை நான் கவிதைகளால் நிரப்பிவிட விரும்பவில்லை. கவிதைகளை நீங்கள் நூலின் அகத்தே நுழைந்து வாசித்துக் கொள்ளுங்கள்.

ஒரு மூலநூலை எவ்வளவுதான் கைதேர்ந்த இருமொழிப் புலமையுள்ள ஒரு படைப்பாளி மொழிபெயர்த்தாலும் மூலநூலின் எல்லா ஆழ அகலங்களையும் ஒரு படைப்பாளியால் அப்படியே கொண்டுவந்துவிட முடியாது.

அது மூலநூலின் கவிதைகளுக்கே உரிய தனிச்சிறப்பு. மறுஆக்கங்களிலும் இதே நிலைமைதான் கவிதையின் உள்ளடக்கங்களை மறுஆக்கம் செய்வதுபோல் மூலநூலின் கவிதைகளை வேரோடும் வேரடி மண்ணோடும் கொண்டுவந்துவிட முடியாது. இந்நூலும் அதற்கு விதிவிலக்கல்ல.

இசை, நாடக நுணுக்கங்களோடும் நாட்டுப்புற வரிப்பாடல் சந்தங்களோடும் நாட்டுப்புறக் கலைவடிவ ஆடற்சந்தங்களோடும் ஒரு நிகழ்த்துகலை வடிவம் போல் படைக்கப்பட்ட சிலப்பதிகார முத்தமிழ்ப் படைப்பை காலத்திற்கேற்ப ஒரு இயல்தமிழ் படைப்பாக மாற்றி,

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கடிய சந்தம் பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகின்றான். ஒரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும். 

(மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதம், முன்னுரை: மகாகவி பாரதியின் கூற்றுக்கேற்ப கவிஞர் இராமதாசு காந்தி எளிய சொற்களோடும் எளிய நடையிலும், அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய சந்த நயங்களோடும் இக்காலத்துத் தமிழ் மக்களுக்கு நன்கு விளங்கும்படியான காவியம் ஒன்றனைச் செய்து தந்துள்ளார். தமிழுலகம் கவிஞரின் தமிழ்ப்பணியினை என்றென்றும் போற்றிப் பாராட்டி மகிழும் என நான் நம்புகிறேன்.)

- முனைவர் நா. இளங்கோ

Pin It