'தடை செய்யப்பட்ட கதைகள்' எனும் நூலின் தலைப்பே நமக்குக் கதைகள் குறித்த ஒரு முன்னறிவிப்பைச் செய்கிறது. ஆறு சிங்கள எழுத்தாளர்களின் பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. அனைத்து கதைகளையும் சிங்களத்தில் இருந்து நேரடியாக எம்.ரிஷான் ஷெரீப் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவர் ஈழத் தமிழராக இருக்கும் காரணத்தால், சிங்கள மக்களின் கலாச்சாரம், இலங்கை நிலவியல் மற்றும் அரசியல் சூழல் குறித்த புரிதலும் ஓர்மையும் கொண்டுள்ளதால், மொழிபெயர்ப்பும் வாசிக்க அணுக்கமாக உள்ளது.
ஒரு கதை ஏன் தடை செய்யப்படுகிறது? கதை என்றாலே அது புனைவுதானே..! பிறகு ஏன் அரசோ - ஓர் அமைப்போ - ஒரு குழுவோ வெறும் புனைவைத் தடுக்க நினைக்கிறது? கலாச்சாரக் காவலர்களுக்கும் - அரசுக்கும் - நன்றாகத் தெரியும் - அந்த 'வெறும்' புனைவானது - ஒரு தலைமுறை வாசகர்களையே - மக்களையே - மாற்றிவிடும், உத்வேகம் கொள்ளச் செய்யும் சக்தி கொண்டது என்று..! ரஷ்யப் புரட்சி காலத்தில் மாக்சிம் கார்க்கியின் 'தாய்' புதினம் ஏற்படுத்திய தாக்கம் போல..!
உலகம் முழுக்க தடை செய்யப்பட்ட புனைவுகள் சிலவற்றை எடுத்துப் பார்த்தால், ஒரு புனைவு ஏன் தடை செய்யப்படுகிறது என்ற புரிதல் நமக்கு எளிதாகக் கூடும். ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய 'யூலிசிஸ்' (Ulysses) அதன் கலாச்சார அதிர்ச்சித்தன்மை காரணமாக அதீத பாலியல் ரீதியிலான ஆபாசப் படைப்பு என்ற குறை கூறிச் சில காலம் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்டிருந்தது. சல்மான் ருஷ்டி எழுதிய 'சாத்தானின் சொற்கள்' (The Satanic Verses) புதினம் இசுலாமிய மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என (இந்தியா உட்பட) பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. தஸ்லிமா நஸ்ரினின் 'லஜ்ஜா' (Lajja) என்ற நாவல் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைப் பேசியதாக வங்கதேச அரசால் தடை செய்யப்பட்டது. அதுபோல விளாதிமிர் நபோகோவின் 'லோலிதா' (Lolita), ஜார்ஜ் ஆர்வெல்லின் '1984', டான் பிரௌனின் 'த டாவின்சி கோட்' (The Da Vinci Code), நம் தமிழகத்தில் பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மேற்சொன்ன பட்டியலிலிருந்தே நாம் புரிந்து கொள்ள முடியும் - ஓர் அரசோ - ஒரு மத நிறுவனமோ - ஒரு சாதிக் குழுவோ தங்களது கொள்கைகளுக்கும், தாம் பரப்பி வரும் கருத்துகளுக்கும், தாம் முன்வைக்கும் பண்பாட்டு - கலாச்சார விழுமியங்களுக்கும் மாறுபட்ட - முரண்பட்ட மாற்றுக் கருத்தியலை ஒரு பிரதி பேச முற்படுகையில், அது அந்த அமைப்பைப் பதற்றமுறச் செய்கிறது. அந்தப் பதற்றமும் அதன் விளைவான தன் இருப்பின் மீதான பயமும் அப்பிரதியின் மீதான தடையாக மாறுகிறது.
ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்து, தேர்வு செய்து தொகுத்துள்ள இத்தொகுப்பில் உள்ள கதைகளும் அதே அச்சத்தைச் சிங்கள ஆளும் அரசுக்கு, சிங்கள பௌத்த அதிகார மையத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதைக் கதைகளை வாசிக்கையில் புரிந்து கொள்ள முடிகிறது.
இத்தொகுப்பின் கதையாசிரியர்களில் ஒருவரான 'அஜித் பெரகும் திஸாநாயக' தனது இருபது வயது தொடக்கத்தில் இலங்கை ராணுவத்தால் கடத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகச் சித்திரவதை முகாமில் அரசியல் கைதியாகச் சிறைவைக்கப்பட்டுள்ளார். அதேபோல் 'ஷக்திக சத்குமார' என்ற எழுத்தாளர் 2019ஆம் ஆண்டு பௌத்த பிக்குகளால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுப் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கதைகள் மட்டுமின்றி அவற்றை எழுதிய எழுத்தாளர்களுமே அரசால் - இராணுவத்தால் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்பதை நூலில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் குறிப்புகள் வழியே அறிந்து கொள்ள முடிகிறது.
'சரத் விஜேசூரிய'வின் மூன்று கதைகளுமே சிங்கள வாழ்சூழலில் ஆண் - பெண் உறவுச்சிக்கல்களை - குறிப்பாகப் பாலியல், பால் இச்சை, தன்னிச்சையான பால் தேர்வு - குறித்து வெளிப்படையாகவும் நுட்பமாகவும் கதைக்கிறது. சிங்களப் பேரினவாத பௌத்தத் துறவிகள் அதிகாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய 'கலாச்சார அதிர்ச்சி' ஏற்படுத்தும் அல்லது உடல்ரீதியான உயிரியல் உண்மையை அப்பட்டமாகப் பேசும் கதைமொழி நிச்சயம் அவர்களுக்கு உவப்பானதாக இருக்காதுதான். இன, மத, மொழி அரசியல் தாண்டித் தொகுப்பில் தனிமனித உறவுகள், உணர்வுகள் குறித்தும் 'உடலரசியல்' குறித்தும் எடுத்தாண்ட கதைகள் சரத் விஜேசூரியவுடையது.
'நீலச்சுழி' என்ற 'கே.டி.தர்ஷன'வின் கதையானது, சிங்கள பௌத்த ஆதிக்க வர்க்கம் இசுலாமியர்கள் மீது தொடுக்கும் வன்முறைகள் மீதான இடதுசாரிகளின் பார்வையை - எதிர்வினையை அல்லது எதிர்வினையின்மையை மாறுபட்ட கதை சொல்லல் முறையில் முன்வைக்கிறது.
'உதார ஸ்ரீருவனின்' 'இருள்' கதை இராணுவத்திடம் சிறுவனான தன் மகனைப் பறிகொடுத்த ஒரு கிராமத்துத் தாயின் வலியைப் பேசுகிறது.
'அஜித் பெரகும் திஸாநாயக' தனது 'வெள்ள நிவாரண முகாம்' என்ற கதையில், கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நிவாரண முகாமின் போதாமையை - அடிப்படை வசதிகள் கூட இல்லாத அவலத்தை - பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை 'சந்தன - நயனா' தம்பதிகளின் தனிப்பட்ட அனுபவத்தின் வழி எடுத்துவைக்கிறார்.
ஓர் இடதுசாரி செயற்பாட்டாளரைக் கைது செய்யும் சிங்கள அரசின் காவல்துறை அவரை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தும் சித்திரவதைகளை விலாவாரியாகக் காட்சிப்படுத்துகிறது 'ருவன் எம்.ஜயதுங்க' எழுதியுள்ள 'வாக்குமூலம்' என்ற சிறுகதை. கதையின் ஊடாகவே கோடாரிக்காம்பாய் மாறி துரோகமிழைக்கும் சக தோழர் ஒருவரையும் குறிப்பிடுவதோடு - அதனால் ஏற்பட்ட மனச்சலிப்பின், சுயபச்சாதாபத்தின் விளைவாக - கதைசொல்லியும் பிற தோழர்களைக் காட்டிக் கொடுக்கும் மனநிலைக்கு வந்து சேர்வதோடு, பின்னர் 'ஜெர்மானியர்களால் துயரங்களை அனுபவித்த யூதர்கள், தமது கோபத்தைப் பாலஸ்தீனர்கள் மீது காட்டுவதைப் போன்று, பௌத்த அடையாளத்தோடு ஏனைய இனத்தவர் மீது தாக்குதல் மேற்கொள்ளும்' நிலைக்குத் தள்ளப்படுவதை விவரிக்கும் கதைக்களம் ஒரு நேர்மையான வாக்குமூலமாகவே அமையப்பெற்றுள்ளது.
அதே எழுத்தாளர் எழுதிய 'நாதனின் நேசமிகு விழிகள்' என்ற கதையில், யாழ்ப்பாணத்தில் 1983இல் சிங்கள இராணுவத்தால் 'மிருகத்தனமாக' குடும்பமும் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளியேறும் கதைசொல்லியும் அவரது குடும்பமும், புலம்பெயர்ந்து இங்கிலாந்துக்குச் சென்று, அங்குச் சுய சாதியில் ஒரு கணவரை வரித்துக்கொண்டு அவனது கொடுமை தாளாமல் பிரிந்து வந்து, பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகப் புலம்பெயர் சூழலில் உள்ள புலி முகவர்கள் வழியே நிதி திரட்டி அனுப்புவது, போராட்டங்கள் நடத்துவது என்று தாய்நாட்டிற்காகச் செயல்படும்போது, நிதி திரட்டி அனுப்பும் கோகிலன் என்பவனின் துரோகத்திற்கும் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்டு இறுதிப் போருக்குப் பின்னர் ஒரு வெறுமைக்குள் ஆட்பட்டுத் தாம் வசித்த யாழ் பகுதியை மீளத் தன் தாயுடன் வந்து பார்வையிடுதலோடு கதை முடிகிறது.
இக்கதையின் ஊடாகவே சிங்கள இராணுவ வெறியாட்டம், புலம்பெயர் வாழ்விலும் தொடரும் சாதி, புலிகளின் பெயரால் புலம்பெயர் சூழலில் நடத்தப்பட்ட தனிநபர் மோசடி, சாமானிய தமிழ் - சிங்கள மக்களுக்கிடையிலான உறவு, ஈழச்சூழலின் சாதிய கட்டமைப்பு, ஈழத்தில் போர்க்களத்தில் பாடுபடுவதோடு தமது வசதியான வாழ்நிலையை ஒப்பிட்டுப் புலம்பெயர் அகதிகளுக்கு ஏற்படும் குற்றவுணர்ச்சி, ஒரு கட்டத்தில் போரின் மீது ஏற்படும் சலிப்பு விடுதலைப்புலிகள் மீது மடைமாறுவது, ஒரு நாட்டை உருவாக்குவதற்கான போராட்டம் இறுதியில் கைவசமிருந்த ஒரு துண்டுக் காணியையும் காணாமல் போக்கிய அவலம், இறுதிப் போருக்குப் பின் ஏற்பட்ட அரசியல் சூழல் மாற்றத்தில் ஈழத்தின் உயர்சாதியினரே வட மாகாணத் தலைமை ஏற்பது, போர் வெகுமக்களிடமும் - ஏன் - போராளிகளிடமுமே ஏற்படுத்திய வெறுமை என்று ஒரு பெரும் புதினத்திற்கான பாரிய நிகழ்வுகள் கொண்ட சிறுகதையிது.
'ஷக்திக சத்குமார'வின் இரண்டு கதைகளுமே சிங்கள பௌத்த விகாரைகளின் இருண்ட உலகத்தைக் காட்டுவதாக உள்ளன. மூத்த துறவிகள், இளந்துறவிகள் மற்றும் சிறார்கள் மீது நிகழ்த்தும் பாலியல் சுரண்டலை முகத்தில் அறைந்தாற்போன்று முன்வைக்கிறது. பௌத்த விகாரைகள்தான் இப்படி கொடியவர்களின் கூடாரமாகப் போனதென்று என்.ஜி.ஓ (NGO) நிறுவனத்தில் பணிபுரியும் அண்ணன் ஒருவரின் அறையில் சென்று தங்கும் 'கஸான்' என்ற மாணவன் அங்கும் அதே வகையிலான கொடுமையை உணர்கிறான். இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களும் பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்படுவதை எடுத்துவைக்கிறார் இக்கதைகளில்..! மேலும் வெளியுலகிற்குக் கண்ணியமான துறவிகளாகப் புத்தரின் உபதேசங்களை ஆற்றும் துறவிகள் உள்ளுக்குள் ரகசியமாகச் செய்யும் பாவங்களைப் பட்டவர்த்தனமாகவும் அதற்கேயுரிய அழகியலோடும் முன்வைக்கிறார். 'தடை செய்யப்பட்ட பகுதி' கதையில் இளந்துறவியுடன் இணக்கமாகப் பழகும் பாம்புக்குட்டி என்ற குறியீடு நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில கதைகள் தேவையற்று நீள்கிறது (குறிப்பாகச் சரத் விஜேசூர்யவின் கதைகள்) என்ற பொருட்படுத்தத்தக்க குறைகளைத் தவிர கதைத் தேர்விலும் சரி, மொழிபெயர்ப்பிலும் சரி எக்குறையுமில்லை.
மிருகத்தனம் கொண்ட இன எதிரியாகவே அடையாளம் காணப்பட்ட சிங்கள வாழ்வியலின் இயல்பான மனிதத்தன்மை மிக்க பகுதிகளை இக்கதைகளின் வழியே நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. நமக்குச் சார்ந்த பகை உணர்ச்சி மட்டுமே மேலோங்கியிருக்கும் சிங்கள வெகுமக்கள் வாழ்வியல் மீது பரிதாப உணர்ச்சியும் சக மனிதர் என்ற இயல்புணர்ச்சியும் ஏற்படச் செய்விக்கிறது இத்தொகுப்பு. இலக்கியம் (மொழிபெயர்ப்பின் வழி) செய்ய வேண்டியது அதைத்தானே..!
தடை செய்யப்பட்ட கதைகள் - சிங்கள சிறுகதைகள் - தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப் - வம்சி புக்ஸ் வெளியீடு - வலைதளம்: www.vamsibooks.com - மின்னஞ்சல்:
- அன்புச்செல்வன்