udyai 400கவிதை என்பது வெறும் வார்த்தைகளின், எழுத்துகளின் சேர்க்கையல்ல, இயற்கையாக உள்ளத்தில் எழும் எண்ணங்களின் - உணர்வுகளின் வெளிப்பாடாகும்.

‘உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்

            உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

            தெரிந்து ரைப்பது கவிதை’

என்று கவிமணி உரைப்பதும் அதுதான்.

வில்லாற்றல் வீரனுக்கு வெற்றி; பெண்டிர் விழியாற்றல் காதலுக்கு வெற்றி; தேனைச் சொல் லாக்கித் தருவதுதான் புலவருக்கு வெற்றி.  இந்த ஆற்றலைப் பெற்றுள்ள புலவர் உதயை மு.வீரையன் தம் கவிதைகளில் சமுதாயத்துக்குத் தேவையான கருத்துக்களை புதிய எண்ணங்கள் பூத்துக் குலுங்கும் வண்ணமலர்த் தோட்டமாக அளித்துள்ளார்.

பொதுவாகக் கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தால் இறகுகள் இல்லாமலேயே வானத்தில் பறப்பவர்கள், மண்ணில் இருந்து கொண்டே விண்ணைத் தொடுபவர்கள், நீரில் இறங்காமல் கரையில் நின்று கொண்டே கடலின் ஆழத்தையும், நீளத்தையும் அளந்து விடுபவர்கள்.

ஆனால் கவிஞர் உதயை மு. வீரையன் கவிதைகள் நாட்டில், சமுதாயத்தில் நிலவும் அவலங்களை, ஏற்றத்தாழ்வுகளை, இழிவுகளை, எதிர்த்துச் சீறும் புயலாய், பூகம்பமாய் புறப்படுகின்றன.  எல்லையாய் வெடிக்கின்றன.

‘என் கவிதை பொய்ம்மைக்கு எதிரான புயல்’ என்று அவரே குறிப்பிடுகிறார்.  இவர் கவிதை களில் பாரதி, பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புத்தர், வள்ளுவர், வள்ளலார், இராமானுஜரைப் பார்க்கிறேன்.

இந்தக் கவிதை நூலுக்கு சிலம்பொலி செல்லப்பன் அளித்துள்ள அணிந்துரை சிறந்த ஆராய்ச்சி உரையாகும்.  ஆசிரியரின் எழுத்தாற்ற லையும், தனித்தன்மையையும் ஆழ்ந்து படித்து ஆராய்ந்து எழுதியுள்ளார்.  அரசியல், அறிவியல், வரலாறு, சமூகம், இயற்கை, வாழ்வியல் பற்றிய அறிவுப் பூர்வமான சிந்தனைகளை அலசியுள்ளார்.

சங்க இலக்கியங்களோடும், பாரதி, பாரதி தாசன், வள்ளுவர், வள்ளலார் பாடல்களோடும், குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழோடும் ஒப்பிடுகிறார்.  மேலும் இந்தக் கவிதைகள், ‘பல்வேறு மொழிகளினிடத்தும், நாட்டினரிடத்தும் சென்றடைய வேண்டும்’ என்றும், ‘பள்ளி, கல்லூரி மாணவர்கட்கு பாட நூலாகத் திகழ்ந்திட வேண்டும்’ என்றும் அவரின் உள்ளக் கிடக்கையை உவகையுடன் வெளிப்படுத்தி யுள்ளார்.

“கவிஞர் உதயை மு.வீரையன் வாழ்வியல் நிலைகள் அனைத்திலும் காலூன்றி கவிதை படைத்துள்ளார்.  செய்திகளைப் புதிய புதிய கோணங்களில் சொல்வதில் இவர் வல்லவரா யுள்ளார்.  பகுத்தறிவு நிலை பெற, மூடப் பழக்க வழக்கங்கள் முறிபட, சாதிமத பேதமற்ற சமுதாயம் நிலவிட, எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான சமவுடைமை தோன்றிட, தொழிலாளர் நலம் ஓங்கிட, ஆதிக்க சக்திகள் அழிபட, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் குரல் ஒலித்திட இந்தக் கவிதைகள் வழி வகுத்துள்ளன...” என்று அணிந் துரையில் தமிழறிஞர் செல்லப்பனார் அடை யாளம் காட்டியுள்ளார்.

‘இவர் போன்ற கவிஞர்களுடைய கவிதைகள் கைவாள்களாக மாறினால்தான் மண்டிக் கிடக்கும் மதப்புதர்களை வெட்டி அழிக்க முடியும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

‘சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு

தன்னில் செழித்திடும் வையம்’

என்று பாரதியும்,

‘இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி

இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’

என்று பாரதிதாசனும் பாடிச் சென்றனர்.

பாரதி குழந்தைகளைப் பார்த்து, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று ஏன் பாட வேண்டும் என்பதற்கு பாரதியார் அளிக்காத விளக்கத்தை இந்தக் கவிஞர் கூறியுள்ளார்.

‘நாட்டில் பெரியவர்க்குச் சொன்னால் - அந்த

நாய்வால் நிமிராது பாப்பா

பாட்டில் உனக்குச்சில சொல்வேன் - என்

பரிதாபம் நீகேளு பாப்பா’

சாதிக்கு நீதி சொல்லும் மனுநீதி, மதநீதி, மனுதர்மம், வருணாசிரம அடிப்படையில்தான் சாதீய ஏற்றத்தாழ்வுகள் வலுவூன்றி நிற்கின்றன என்பதால் இக்கவிஞரும் மனுநீதியை, மதநீதியைச் சாடியுள்ளார்.

“மனிதன் என்று சொன்னால் போதும்

மதங்கள் எதற்காக? - சாதி

மதங்கள் எதற்காக?”

என்றும்,

“நீதியைக் கொன்றுபோடும்

நெஞ்சத்தைப் பிரித்து வைக்கும்

சாதியை மறுக்க வேண்டும்-

சமத்துவம் பெருக்க வேண்டும்”

என்றும் கவிதை முழங்குகிறது.

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலும் ஆங்கே உரத்து ஒலிக்கிறது; அவர்கள் இல்லாமல் உலகம் ஏது?

“சோலை வனத்தைச் செய்து கொடுத்தவன்

பாலை வனத்தில் பயணம் போகிறான்”

என்றும்,

“பள்ளங்கள் மேடுகள் இந்த நாட்டில்

பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டில்”

என்றும்

இன்றைய நிலையை எடுத்துப் பாடுகிறார்.  பலர் சாக்கடைப் புழுக்களாகவும், சிலர் பூந்தோட்ட வண்டுகளாகவும், பலர் சுமைதாங்கிகளாகவும், சிலர் சுகம் தாங்கிகளாகவும் உள்ளனர்.  சிறைச் சாலைகளில் நான்கு அவர்களுக்குள் நிலவும் சமத்துவம், சகோதரத்துவம் கூட நாட்டில் இல்லை.  பிணக் கிடங்குகளில் காணப்படும் சமத்துவம் கிராமங்களில் இல்லை.

‘விடிய வேண்டிய பொழுதுகள் எல்லாம்

கோழி கூவிட காத்துக் கிடக்கின்றன’

என்றும்,

‘கடலுக்குக் கரைபோட்டால்

கணநேரம் நிலைக்காது’

என்றும்,

‘வாழ்க்கை முட்டையை அடைகாக்கின்ற

வறுமைப் பறவைகளே’

என்றும்,

‘கலங்கரை இல்லா விட்டால்

கலம்கரை அடைவதில்லை’

என்றும்,

‘எண்ணெய் இல்லாமல்

எங்கள் இதயம் எரிகிறது’

என்று வரும் கவிதை வரிகள் கற்பனை வார்த் தையும், மனித இனம் செல்ல வேண்டிய தொலை வையும் காட்டுகிறது.

இந்த நூற்றாண்டின் இணையற்ற படு கொலையான இலங்கைத் தமிழர் என்னும் ஈழத்தமிழர்களைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் யார்? இவரும் பாடுகிறார்.

‘கடலில் உள்ள நீரெல் லாமே

கண்கள் உதித்ததுவா?

காற்றெல் லாமே எங்கள் தமிழர்

ஆவி கலந்ததுவா?’

என்று கேட்கிறார்.  இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடையாதா?

‘உலகமெலாம் பறக்கின்ற பறவை கட்கும்

ஒரு கூடும் இருக்கிறதே! அதைப்போல் இந்த

உலகமெலாம் திரிகின்ற தமிழ ருக்கும்

ஒரு நாடு வேண்டாமா?’

என்று உலக சமுதாயத்துக்கு வினா தொடுக்கிறார்.  இன்று உலகமெல்லாம் அகதிகளாகத் திரிகின்ற தமிழினம் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கவிஞர்களுக்கு உள்ள நெஞ்சுரம் இவருக்கும் இருக்கிறது என்பதைப் பல பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

‘எனது பாடல்

பாதிக்கப்பட்ட மக்களையே பாடும்;

எனது பேனா

ஒடுக்கப்பட்ட உண்மைகளையே தேடும்;

எனது எழுத்து

அடிமைப்பட்டோர் விலங்கினை முறிக்கும்;

எனது குரல்

உண்மைக்காகவே ஓங்கி ஒலிக்கும்’

என்பது இவரது கொள்கை முழக்கமாக இருக்கிறது.  இறுதியாக ‘மன்னிக்க வேண்டும், என்னால் என்னை விற்க முடியாது’ என்று பிரகடனம் செய்கிறார்.

‘புலவர்’களைப் பற்றிய இவரது கவிதையில் சில கேள்விகளை முன் வைக்கிறார்.

‘கடவுள் / நிலவு / மலர் / மங்கை

இவைகளை மட்டுமே / எழுதி எழுதி

புரவலர்களைச் சரணடைந்த

புலவர்களே! உங்களைத்தான்...

இந்த உலகில் / இவைகளைத் தவிர

வேறொன்றும் இல்லையா?’

என்று கேட்டுப் பல்வேறு காட்சிகளை முன் நிறுத்துகிறார்.  புலவர்களும், கவிஞர்களும் சிந்திக்க வேண்டியவை.  சமூக ஆர்வலர்கள் சந்திக்க வேண்டியவை.

இறுதியாக, ‘உதயை மு. வீரையன் கவிதைகள்’ அழகான ஓவியங்கள்.  இவை தூரிகையைக் கொண்டு வண்ணக் குழம்புகளால் தீட்டப்பட்டவை அல்ல.  எண்ணங்களால் வடிக்கப்பட்டவை.  அற்புத சிற்பங்கள் உளி கொண்டு செதுக்கப்பட்டவை யல்ல.  எழுத்துக்களால் செதுக்கப்பட்டவை.

உதயை மு.வீரையன் கவிதைகள்

வெளியீடு:மணிவாசகர் பதிப்பகம்,

31, சிங்கர் தெரு, பாரிமுனை,

சென்னை - 600 108

விலை:ரூ.225/-