கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கார்க்கியின் படைப்புகள் பல தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் அவரின் தாய் நாவலானது முக்கிய இடத்தைப் பெறுகிறது. தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் அதிகமுறை மொழியாக்கமும், பதிப்பும் செய்யப்பட்ட இரஷ்ய நாவல் 'தாய்' என்பது குறிப்பிடத்தக்கது. அம்மொழிபெயர்ப்புகளை அறிமுகம் செய்வதோடு, அதிக முறை மொழியாக்கம் செய்யப்பட்டதற்கான பின்புலத்தையும், மொழிபெயர்ப்பின் தாக்கத்தினால் தமிழ் நாவல் போக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

maxim gorkyதமிழ் மொழிபெயர்ப்பில் தாய் நாவல்

தமிழில் தாய் நாவல் ஐந்து முறை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் மொழிபெயர்ப்பு காலனிய காலத்தில் ‘அன்னை (1946)’ எனும் பெயரில் ப.ராமஸ்வாமி என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதன் பிறகு இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்த மொழிபெயர்ப்பாளர் தொ.மு.சி.ரகுநாதனால் 1952ஆம் ஆண்டு மொழியாக்கம் செய்யப்பட்டு ஸ்டார் பிரசுரத்தின் வெளியீடாக வெளியானது. இந்நாவலை சோவியத் இரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பகத்திற்காக தொ.மு.சி.ரகுநாதன் 1975ஆம் ஆண்டு மீண்டும் மொழியாக்கம் செய்துள்ளதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். இவ்விருமொழிபெயர்ப்புகளும் ‘தாய்’ என்ற தலைப்பிலேயே வெளியாகின. இருப்பினும் தொ.மு.சி.யின் முதல் மொழிபெயர்ப்பை ஒப்பிடுகையில் இரண்டாவது மொழிபெயர்ப்பு பல்வேறு திருத்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. இவை தனியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.

முல்லை முத்தையாவின் மொழியாக்கம் ‘அம்மா (1956)’ எனும் பெயரில் இன்ப நிலைய வெளியீடாகவும், சிவனின் மொழியாக்கம் ‘தாய் (2019)’ எனும் பெயரில் கலா நிலைய வெளியீட்டிலும் வந்துள்ளன. தமிழ் மொழிபெயர்ப்புகளை மூல நாவலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, அவை சுருக்கமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது. இறுதியாக சத்யாவின் மொழியாக்கத்தில் ‘தாய்’ நாவல் 2021ஆம் ஆண்டு பொன்னுலகத்தின் பதிப்பில் வெளியானது. இவற்றைத் தவிர கலைஞர் கருணாநிதியின் ‘தாய் காவியம் (2004)’ தழுவல் மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளது.

தாய் நாவல் தமிழ்ச்சூழலில் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டதற்கான காரணம்

காலனிய காலம் முதல் தற்காலம் வரை தாய் நாவலானது மொழிபெயர்ப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆங்கில அரசின் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்நாவலை முதலில் மொழியாக்கம் செய்தவர் ப.ராமஸ்வாமி ஆவார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவருக்கு மக்களிடையே காலனிய ஆட்சிக்கு எதிராகச் சுதந்திர உணர்வை ஊட்ட முற்போக்கு இலக்கியங்கள் தேவைப்பட்டன. அதன் அடிப்படையிலேயே ஆங்கிலமறிந்த ப.ராமஸ்வாமி பிற மொழி இலக்கியங்களையும், போராளிகளின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார். குறிப்பாகத் ‘தான் பிரீன் (Dan Breen)’ ‘மைக்கேல் காலின்ஸ் (Michael Collins)’ போன்ற போராளிகளின் வரலாற்றை ஆங்கில அரசின் தடையை மீறி மொழிபெயர்த்தார். இதனை,

“அயர்லாந்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த சிலரைப் பற்றித் தமிழில் எழுத வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. 1932ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடம் திருச்சி சிறையில் மூன்றாவது வகுப்புக் கைதிகளாக என்னோடு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருந்து வந்தனர். அவர்களில் ஆங்கிலப் படிப்பு இல்லாதவரே பெரும்பாலோர். அவர்களுக்காக நான் தமிழில் எழுதிய நூல்களிலே அயர்லாந்தைப் பற்றியவை மூன்று; ‘மைக்கேல் காலின்ஸ்’ சரித்திரம், டெரன்ஸ் மாக்ஸ்வினியின் ‘சுதந்திரத்தின் தத்துவங்கள்’, ‘தான் பிரீன்’ சரித்திரம். இந்த மூன்றில் முந்தியவை இரண்டும் முன்பே வெளிவந்துவிட்டன. 1947 வரை நம் நாடு அடிமைப்பட்டிருந்ததால், ‘தான் பிரீன்’ சரிதையை வெளியிட இயலவில்லை, ஏனெனில் இதற்கு ஆதாரமான மூல நூல் இந்திய நாட்டினுள் வரக் கூடாதென்று கடற் சுங்கச் சட்டத்தின்படி ஆங்கில அரசாங்கம் தடை செய்திருந்தது”1

எனத் தான் பிரீன், மைக்கேல் காலின்ஸ் ஆகிய நூல்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதன் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. இதன் தொடர்ச்சியாகவே அன்னை நாவலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. காலனிய ஆட்சிக்காலத்தில் 'தாய்' நாவலுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்ததையும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்நாவலை இரகசியமாக வாசித்ததையும் ‘சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா (2018)’ எனும் நூலின் முன்னுரையில் இளவேனில் குறிப்பிட்டுள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனினும் ப.ராமஸ்வாமி 'தாய்' நாவல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டமைக்கான காரணத்தை முன்னுரையில் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ஆனால் நாவலின் முன் பகுதியில்,

“இந்த நூலில் வரும் பேவலைப் போன்ற உண்மை ஊழியரான நண்பர் வே.வீரபாகு அவர்களுக்கும் எங்களோடு உழைத்துவந்த சகல தொண்டர்களுக்கும்”2

என விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் 1950களின் பிற்பகுதியில் இடதுசாரி இயக்கங்கள் பண்ணையடிமை முறைக்கு எதிராகத் தீவிரமான போராட்டத்தைக் கையிலெடுத்ததோடு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் பொருட்டு முற்போக்குச் சிந்தனை கொண்ட இலக்கியங்களை இரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தனர். அதே போல் முற்போக்கு இலக்கியங்களைப் படைக்க வேண்டிய தேவையும் தமிழ்ச்சூழலில் உருவானது. இதன் ஒரு பகுதியாக இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்த தொ.மு.சி.ரகுநாதன் 'தாய்' நாவலை மொழியாக்கம் செய்ததுடன், கார்க்கியைப் பின்பற்றி ‘பஞ்சும் பசியும் (1953)’ எனும் நாவலையும் தமிழில் எழுதினார். 'தாய்' நாவல் ஏற்கெனவே ‘அன்னை’ எனும் பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை மீண்டும் மொழிபெயர்ப்பு செய்தமைக்கான காரணத்தை தொ.மு.சி.ரகுநாதன் ‘முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் (1994)’ எனும் நூலில்,

“ப.ரா. என்ற ப. ராமஸ்வாமி (இவர்தான் நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மாக்சிம் கார்க்கியின் ‘மதர்’ என்ற நாவலை ‘அன்னை’ என்ற தலைப்பில் சுருக்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்; தாய் என்ற தலைப்பில் நான் செய்தது முழுமையான மொழிபெயர்ப்பு”3

எனக் குறிப்பிட்டுள்ளார். ப.ராமஸ்வாமியும் தமது மொழி பெயர்ப்பில் சிறு பகுதிகள் விடுபட்டு இருப்பதை அன்னை நாவல் மொழிபெயர்ப்பு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். எனினும் பிற்காலங்களில் முழுமையாக மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற எண்ணம் ப.ராமஸ்வாமிக்கு இருந்துள்ளதையும் அம்முன்னுரையின் வழியாக அறிய முடிகிறது. ப. ராமஸ்வாமி மற்றும் தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோரின் மொழியாக்கத்திற்குப் பிறகு முல்லை முத்தையாவின் மொழிபெயர்ப்பு ‘அம்மா (1956)’ எனும் பெயரில் வெளிவந்தது. ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்பு நாவல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இம்மொழிபெயர்ப்பு 'தாய்' நாவலின் சுருக்கமாக அமைந்துள்ளது. குறைந்தவிலையில் இந்நாவலை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற நிலையில் இம்மொழியாக்கம் நடைபெற்றுள்ளதை ‘அம்மா (1956)’ நாவலின் பாராட்டுரையில் ப.ஜீவானந்தம்,

“கார்க்கியின் இந்த ஒப்பற்ற இலக்கியம் நண்பர் ப.ரா. வால் 'அன்னை' என்றும், தோழர் ரகுநாதனால் 'தாய்' என்றும் ஆங்கிலத்திலிருந்து முழுவடிவில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 'அம்மா' மூலம் அன்பர் முல்லை முத்தையா சிறிய அளவில் ஆனால் கதைக்கோவை சிதையாமல், எளிய, இனிய நடையில், கார்க்கியின் நாவலைத் தமிழாக்கி, தமிழ் மக்களுக்கு அளிக்கிறார். அளவில் சுருங்கி விலையில் மலிந்து வருவதால் 'அம்மா' ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் கரங்களை அலங்கரிப்பாள் என்பதில் ஐயமில்லை”4

எனக் குறிப்பிட்டுள்ளதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ப.ராமஸ்வாமியின் மொழிபெயர்ப்பு ரூபாய் 25க்கும், ரகுநாதனின் மொழிபெயர்ப்பு ரூபாய் 8க்கும், முல்லை முத்தையாவின் மொழிபெயர்ப்பு ரூபாய் 2-க்கும் அன்றைய காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு இம்முடிவுக்கு வரலாம்.

முல்லை முத்தையாவின் மொழிபெயர்ப்பைப் போல சிவனின் மொழிபெயர்ப்பும் 'தாய்' நாவலின் கதைச் சுருக்கமாக அமைந்துள்ளது. ப.ராமஸ்வாமி மற்றும் தொ.மு.சி.ரகுநாதன் போல அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில் ‘தாய் (2019)’ நாவல் மொழிபெயர்ப்பில் சிவன் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மூன்று மொழியாக்கங்கள் இருக்கின்றபொழுது சிவன் ஏன் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார் என்ற வினாவிற்கு நேரடியான சான்றாதாரங்கள் அவரின் மொழிபெயர்ப்பில் கிடைக்கவில்லை. ஆனால் சிவனின் மற்ற மொழிபெயர்ப்பு பணிகளைப் பார்க்கும்பொழுது உலகப் புகழ்பெற்ற புனைகதைகளைத் தமிழ் வாசகர்களுக்குச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் தாய் நாவலையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளதை விளங்கிக்கொள்ளமுடிகிறது. எடுத்துக்காட்டாக உலக இலக்கிய வரிசை எனும் பெயரில் தஸ்தாயெவ்ஸ்கி, ஹோமர், அலெக்ஸாண்டர் டூமாஸ், லியோ டால்ஸ்டாய், சார்லஸ் டார்வின், ஹெர்மன், ஜார்ஜ் எலியட் மற்றும் மார்க் ட்வைன் போன்றவர்களின் பல படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

தமிழில் இறுதியாக சத்யாவின் மொழியாக்கத்தில் 'தாய்' நாவல் வெளியானது. இதற்கு முந்தைய மொழிபெயர்ப்புகளில் காணப்பட்ட குறைபாடுகள் இம்மொழியாக்கத்தில் சரி செய்யப்பட்டுள்ளன. பல மொழிபெயர்ப்புகளுக்கு மத்தியில் தாய் நாவலை மீண்டும் மொழியாக்கம் செய்ததற்கான காரணத்தை சத்யா மொழிபெயர்ப்பாளரின் குறிப்பில்,

“ஆகப்பெரிய வெற்றியடைந்த ஒரு புத்தகத்தை மீண்டும் மொழியாக்கம் செய்வது ஒரு பெரும் சிக்கல் நிறைந்த வேலை. அப்படி ஒன்றை வெளியே சொல்லுவதும் கூட பெரும் சங்கடத்தைக் கொடுக்கும், வெளியே சொல்லும்போதெல்லாம், ‘புதுசா என்னத்தை கிழிக்கப் போற’ என்ற கேள்விகள், பல்வேறு வடிவங்களில், பல்வேறு நாகரிகப் பூச்சுகளுடன் பளபளப்பாய் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளில் இம்மியளவும் பிழையில்லை. அந்தளவுக்கு 'தாய்' நாவல் முந்தைய தலைமுறையின் சொத்தாக மாறிப்போன ஒன்று. ஏன் கலைஞர்கூட 'தாய்' நாவலைத் தழுவி, ‘இளைஞன்’ என்ற படம் எடுத்தார். அப்படி இருக்கையில் 'தாய்' ஏன் மீண்டும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற கேள்வி எனக்குள்ளேயே கூட இருந்தது உண்மைதான். இருப்பினும் அறுபது வருடங்கள் கழித்து மீண்டும் 'தாய்' நாவலை மொழிபெயர்க்க அதன் உட்கருத்தும் அதைப் புதிய வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேராசையும்தான் காரணமாய் இருந்தது”5

maxim gorky thaai novelஎனக் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்து வரும் கால மாறுதல்களுக்கு ஏற்ப தமிழில் பிற மொழிகளின் தொடர்பால் புதிய சொற்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்ப்பில் பயன்படுத்திய பல சொற்கள் இன்று பயன்பாட்டில் இல்லை. இக்கால மாற்றத்திற்கு ஏற்ப இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்து வாசகர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற சத்யாவின் எண்ணம் வெளிப்படுகின்றது. மேலும் சத்யா இம்மொழிபெயர்ப்பில் ஈடுபட மற்றுமொரு காரணமாக அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்ற இடதுசாரியக் கொள்கையும் முக்கியக் காரணம் எனலாம்.

'தாய்' நாவல் மொழிபெயர்ப்புக்குப் பிந்தைய தமிழ் நாவல் போக்குகள்

தமிழில் 'தாய்' நாவல் மொழி பெயர்க்கப்பட்ட பின்னர், பல இடதுசாரி எழுத்தாளர்கள் கார்க்கியைப் பின்பற்றி சோசலிச எதார்த்தவாத நாவல்களைப் படைக்கத் தொடங்கினர். அவற்றுள் முதன்மையானவர்களாக தொ.மு.சி.ரகுநாதன், கு.சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ் போன்றோரைக் குறிப்பிடலாம். இப்படைப்புகள் கற்பனைவாதத்தை தவிர்த்து எதார்த்தவாதத்திற்கு முதலிடம் கொடுத்தது. சமூகத்தில் காணப்பட்ட விளிம்புநிலை மக்கள், தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள் இந்நாவல்களில் தலைமைக் கதாபாத்திரங்களாகத் திகழ்ந்தனர். இலக்கியம் என்பது சமூக எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதுடன், வர்க்கச் சார்புடையதாகவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வைச் சுட்டுவதாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்து தமிழ் இலக்கியச் சூழலில் நிலைபெற்றது.

தமிழின் முதல் சோசலிச எதார்த்தவாத நாவல் ‘பஞ்சும் பசியும்’ ஆகும். இந்நாவலைப் படைத்துத் தமிழில் முற்போக்கு இலக்கியம் தோன்றக் காரணமாக இருந்தவர் 'தாய்' நாவலை இருமுறை மொழியாக்கம் செய்த தொ.மு.சி.ரகுநாதன் ஆவார். 1953ஆம் ஆண்டு வெளிவந்த இந்நாவல் அரசின் தவறான ஜவுளிக் கொள்கையாலும்
தாதுலிங்க முதலியார் போன்ற பெருமுதலாளிகளின் சுரண்டலாலும் பாதிக்கப்பட்ட நெசவாளர்களின் வாழ்கையையும், அச்சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தையும் மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. இந்நாவலில் இடம் பெற்றுள்ள ஊர்வலக் காட்சி, 'தாய்' நாவலில் வரும் ஊர்வலக் காட்சியுடன் ஒத்துக் காணப்படுகிறது.

கு.சின்னப்ப பாரதியின் சர்க்கரை நாவல் ஏழை கரும்பு விவசாயிகள் மற்றும் கரும்பாலைத் தொழிலாளர்களின் மீதான முதலாளித்துவத்தின் சுரண்டலையும் அதற்கு எதிராக அவர்கள் ஒன்றிணைந்து போராடி உரிமைகளைப் பெறுவதையும் எடுத்துரைக்கிறது. தாகம் நாவல் நிலவுடைமை சமூகத்தின் கொடுமைகளைப் பிரதிபலிக்கின்றது. இக்கொடுமைக்கு எதிராக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து போராடுவதைக் காட்சிப்படுத்துகிறது. இப்படைப்புகள் கார்க்கியிடமிருந்து பெற்ற உந்துதலால் உருவானவை என்பதை,

“மகத்தான ரஷ்யப் புரட்சி உருவாக்கிய உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முன்மாதிரி இலக்கியக் கர்த்தாவாக மலர்ந்த கார்க்கி வகுத்த அந்தப் பாதை எமக்கு வழிகாட்டும் பாதை. அதனால்தான் இந்த மூன்று நாவல்களும் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வரவேற்பைப் பெறுகின்றன”6

என கு. சின்னப்ப பாரதி ‘நானும் எனது எழுத்தும் (2001)’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். மேற்கு வங்கத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் கள ஆய்வு செய்து எழுதப்பட்ட நாவல் சுரங்கம் ஆகும். இந்நாவல் அம்மாநில மக்களின் பண்பாட்டைப் பிரதிபலிப்பதுடன், சுரங்கத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை எடுத்துரைத்தது.

டி.செல்வராஜின் தோல் நாவல் திண்டுக்கல் மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர்களின் துயரங்களையும், தலித் மக்கள் சாதிய அமைப்புகளால் ஒடுக்கப்படுவதையும் சித்தரிக்கின்றது. நெல்லை மாவட்ட தலித் விவசாயக் கூலி மக்களின் ‘மரக்கால்’ போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் 'மலரும் சருகும்' ஆகும். இந்நாவல் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பிரதிபலிப்பதுடன், அம்மக்களுக்கு எதிரான சாதிய சுரண்டலையும் வெளிக்காட்டுகிறது.

டி.செல்வராஜின் நாவல்கள் 'தாய்' நாவல் மொழிபெயர்ப்பு தாக்கத்தால் உருவானவை என்பதற்கான அகச்சான்றுகளை அந்நாவல்களில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக தோல் நாவலில் வரும் வேலாயுதம், இருதயசாமி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொழுது அவர்கள் படிப்பதற்காக சங்கரன் அன்னை நாவல் மொழிபெயர்ப்பைக் கொண்டுவந்து கொடுக்கிறான். வேலாயுதம் சிறையில் பாவெலைப் பற்றியும், அவனது அன்னை மற்றும் தோழர்களைப் பற்றியும் எடுத்துரைப்பது இருதயசாமிக்குப் புது அனுபவமாகப் படுகின்றது.

பஞ்சும் பசியும் நாவலில் வரும் மணி, வடிவேலு முதலியார், சர்க்கரை நாவலில் வரும் வீரன், தோல் நாவலில் இடம் பெறும் ஓசோப்பு, தாகம் நாவலில் வரும் கந்தன், மாயாண்டி போன்ற கதாபாத்திரங்களில் 'தாய்' நாவலின் நாயகன் பாவெலின் சாயல் தென்படுகிறது. இவர்கள் அனைவரும் சாதாரண மக்களாக இருந்து இடதுசாரி இயக்கத் தோழர்களின் தொடர்பால் போராளிகளாக மாற்றம் அடைந்தவர்கள். இத்தகைய சான்றாதாரங்களைக் கொண்டு தாய் நாவல் மொழிபெயர்ப்புகளினால் தமிழில் சோசலிச எதார்த்தவாத நாவல்கள் தோற்றம் பெற்றது எனலாம்.

சான்றெண் விளக்கம்

ப. ராமஸ்வாமி (மொ.பெ)., தான் பிரீன்,1953, ப.5.

ப.ராமஸ்வாமி (மொ.பெ)., அன்னை, 1946, ப.3.

தொ.மு.சி.ரகுநாதன்., முற்போக்கு இலக்கிய இயக்கங்கள், 1994, ப.22.

முல்லை முத்தையா., அம்மா, 1956, ப.iv.

சத்யா., தாய், 2021, முன்னுரை.

நா. சந்திரசேகரன்., நானும் என் எழுத்தும், 2001, ப.72.

துணை நூல்கள்

ராமஸ்வாமி. ப (மொ.பெ)., அன்னை. ஸ்டார் பிரசுரம், திருச்சிராப்பள்ளி, 1946.

ரகுநாதன், தொ.மு.சி (மொ.பெ)., தாய். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2003.

ரகுநாதன், தொ.மு.சி (மொ.பெ)., தாய். ஸ்டார் பிரசுரம், சென்னை, 1952.

ரகுநாதன், தொ.மு.சி (மொ.பெ)., தாய். முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1975.

முல்லை முத்தையா (மொ.பெ), அம்மா. இன்ப நிலையம், சென்னை,1956.

சிவன் (மொ.பெ), தாய். கலா நிலையம், சென்னை, 2019.

சத்யா (மொ.பெ), தாய். பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர், 2021.

ராமஸ்வாமி. ப (மொ.பெ)., தான் பிரீன். மணிமேகலை பதிப்பகம், மதுரை, 1953.

ராமஸ்வாமி. ப (மொ.பெ)., வாழ்க்கை. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1956.

சந்திரசேகரன். நா., நானும் என் எழுத்தும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2001.

ரகுநாதன். தொ.மு.சி., முற்போக்கு இலக்கிய இயக்கங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை: 1994.

- கா.தங்கதுரை, முனைவர் பட்ட ஆய்வாளர்,

& நெறியாளர்: த.ஜெகதீசன், தமிழ் உதவிப் பேராசிரியர், இந்திய மொழிகள் துறை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி, உத்திரப் பிரதேசம்.