தமிழ் மண் மீதும் மக்கள் மீதும் ஆறாக் காதல் கொண்ட கணியன்பாலன் தன் ஆய்வுக்களமாக சங்ககால இலக்கியங்களை மேற்கொண்டது இந்தத் தமிழ்நாடு செய்த தவப்பயன். எல்லோரும் ஏற்றுப் போற்றும் வண்ணம் கால நிர்ணயம் செய்தது மட்டுமல்ல, சங்ககாலத்தின் திட்பநுட்பங்களை எடுத்துக் காட்டியதும் தமிழின் தொன்மை, தன்னரிகல்லாத தனிச்சிறப்பு, பொருள்முதல்வாத முற்போக்குக் கொள்கை, இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தது போன்றவற்றை மறுக்கவொண்ணா வகையில் நிறுவியதும் உயர்தனிச் சிறப்பாம்.

அறிவுப் பெட்டகமாக ஏற்கனவே ஐந்து ஒப்பற்ற அரிய பெரும் நூல்களை ஆக்கி அளித்த மூதறிஞர் கணியன் பாலன் அவர்களின் ஆறாவது நூல் ‘சாதியின் தோற்றம் – வட இந்தியாவும் பழந்தமிழகமும்’ ஆகும்.

ஆதியில் சாதி இல்லை, பாதியில் வந்த கொடிய நச்சரவு, இன்று மக்களைப் பிடித்துள்ள பெருநோய். நல்லறிஞர் பலர் சாதிக்கொடுமையை நீக்க அரும்பாடு பட்டாலும் வேரூன்றிவிட்ட சாதிப்பேய் இன்னும் நீங்கிவிடவில்லை. சாதியை நீக்கும் பல சட்டங்கள் ஏட்டளவிலேயே உள்ளன.

kaniyan balan book on casteபார்ப்பனச் சமூகம் படிப்படியாக அடைந்த மாற்றங்களையும் கீழ்நிலையில் இருந்த அச்சமூகம் எப்படி தன்னை ஆதிக்கமிக்க ஓர் உயர்நிலைச் சமூகமாக மாற்றிக் கொண்டது என்பதையும் ஆசிரியர் நன்கு விளக்குகிறார்.

ஆரிய இனக்குழுச் சமூகத்தில் தொடக்கத்தில் கண ஆட்சிமுறைதான் இருந்தது. அன்று தனிச்சொத்துரிமையோ, அரசோ, வர்க்கங்களோ இல்லை. கூட்டு உழைப்பின் மூலமே உற்பத்தி செய்யவோ, இரைதேடவோ முடியும். கிடைத்ததை கூட்டாக உண்டு வாழ்ந்தார்கள். தாயின் வழியில்தான் அறியப்பட்டார்கள். அதன் பின் அவர்கள் துவாபர யுகத்தில் இந்தியா வந்த பொழுதும் கண ஆட்சிமுறைதான் இருந்தது. ஆனால் அன்று கால்நடைகளே செல்வமாக இருந்தது.

அதன்பின் ஆரியர் கிழக்கு நோக்கிக் சென்று கங்கைக் கரையில் குடியேறினர். வேளாண்மை, கைத்தொழில், வணிகம் முக்கியமாக ஆனது. தனியுடமை வளர்ந்தது. தாய்வழிச்சமூகம் அழிந்து தந்தைவழிச் சமூகம் தோன்றியது. பெண் அடிமை ஆனாள். தொழில் தோன்றியிருந்தாலும் பரம்பரைமுறை இல்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல தொழில் செய்தனர்.

நாளடைவில் தொழில் அடிப்படையில் வகுப்புகள் உருவாகியது. புரோகிதத் தொழில் செய்தோர் ஒரு வகுப்பாக ஆயினர். அது சாதி அல்ல. பிறப்பால் பார்ப்பனன் ஆகாமல் அறிவு, திறமை, ஒழுக்கம் உடையவர் பார்ப்பனன் ஆகலாம். சமற்கிருத மொழி பழக்கத்தில் இல்லை. சத்திரியர் பார்ப்பனனைவிட உயர்ந்தவர்கள். பார்ப்பனர்கள் தாழ்ந்தவர்களாகவே இருந்தனர். மௌரியர் ஆட்சி முடியும்வரை இந்நிலை நீடித்தது.

கி.மு. 187ல் புசியமித்திரன் என்ற பார்ப்பனப் படைத்தளபதி மகத அரசைக் கைப்பற்றினான். இந்த பார்ப்பன வம்ச ஆட்சியிலும், பின்னர் ஏற்பட்ட குப்தர் ஆட்சியிலும் பார்ப்பனர் உச்சநிலையை அடைந்தனர். பார்ப்பனர் அரசாளக்கூடாது. கத்தி பிடிக்கக்கூடாது என்பதை உடைத்தனர். பார்ப்பனர் அரசனைவிட உயர்ந்தவராக ஆக்கப்பட்டனர். வருணத்தைச் சாதியாக்கினர். சாதிகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கினர்.

பார்ப்பனரை உயர்த்த மனுசுமிருதி திட்டமிட்டு எழுதப்பட்டது என்று கூறும் ஆசிரியர் அதன் சிற்சில பகுதிகளைத் தந்துள்ளார்.

ஆரிய மரபுக்கு மாறானவகையில் பார்ப்பனர் சேனாதிபதி, அரசர் ஆகலாம்.

பார்ப்பனனுக்கு தீமை ஏற்பட்டால் அரசை எதிர்பார்க்காது அவனே தண்டிக்கலாம்.

இரு பிறப்பாளர்க்குப் பேரிடர் ஏற்பட்டால் பார்ப்பனர் ஆயுதம் ஏந்தலாம்

கற்றவன், கல்லாதவன் ஆனாலும் பார்ப்பனன் தெய்வம். இழிந்த பார்ப்பனனுக்கும் மரியாதை செய்ய வேண்டும்.

சூத்திரர்-பெண்கள் குறித்து மனு கூறுவன.

சூத்திரனுக்குக் கல்வி, செல்வம் கூடாது. சூத்திரன் வேதம் ஓதினால் நாக்கை வெட்ட வேண்டும். பார்ப்பனனுக்கு அடிமையாக இருக்கவே சூத்திரன் படைக்கப்பட்டான். சூத்திரன் தொழில் மூன்று சாதிக்கும் பணி செய்வதுதான்.

பெண்கள் தந்தை, கணவன், மகன் சார்ந்தே இருக்க வேண்டும்.

பார்ப்பனர் ஆதிக்கமிருந்தால் அங்கு சாதி வேற்றுமையும் படிநிலையும் இருக்கும்.

பழந்தமிழகத்தின் சங்ககாலம் கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை உள்ள காலம். இனக்குழுகாலத்தில் குலத்தின் இராணுவத் தளபதியாக இருந்தவர்கள்தான் சேர, சோழ, பாண்டியர் ஆயினர். இவர்கள் முதுகுடி, தொல்குடி எனப்பட்டனர். அன்று கணத்தலைவராக இருந்தவர் வேளிர் ஆகினர். இவர்களுக்குள் திருமண உறவு இருந்தது.

காரவேலன் கூறியதுபோல் தேவைப்பட்டபொழுது தமிழ் அரசுகளின் கூட்டணி ஏற்பட்டது. இப்பழந்தமிழ்ச் சமூகம் பண்டைக்காலம் முதலே மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம், பொருள் உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் சிறந்திருந்தது. வளர்ச்சிபெற்ற நகர அரசுகள் இருந்தன. அதனால் மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றியது. எண்ணியம், பூதவாதம், வைசேடிகம், ஆசிவகம் போன்றவையும் அவற்றைத் தோற்றுவித்த சான்றோர்களும் தோன்றினர்.

சங்ககாலத்தில் சாதி இல்லை. குடிகள் இருந்தன. இது தொழில் பிரிவு. உடன்போக்குத் திருமணம் சாதி இல்லை என்பதைக் காட்டுகிறது.

இப்பகுதியில் ஆசிரியர் சில சிறந்த ஆய்வு முடிவுகளைக் கூறுகிறார்.

புலையர், இழிசனர், தாழ்ந்தவர் அல்ல. அந்தணர் வேறு. பார்ப்பனர் வேறு. தமிழர் வேள்வி, ஆரிய வேள்விக்கு மாறுபட்டது. உயிர்க்கொலை இங்கு கொடையானது. பார்ப்பனர் நாலம் வகுப்பில்தான் இருந்தனர். புரோகிதம் செய்யும் தனி மரபு உருவாகவில்லை. பாணர், புலையர், குயவர் போன்றோர்கூட புரோகிதம் செய்தனர். நிலதானம் பார்ப்பனருக்கு வழங்கப்படவில்லை.

சங்கம் மருவிய காலம் கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை. அக்காலத்தில் தோன்றிய 18 கீழ்க்கணக்கு நூல்களையும் ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார். குறிப்பாக அக்காலத்தில் தோன்றிய திருக்குறளிற்கும் மனுசுமிருதிக்கும் உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு போன்றது என்கிறார்.

சங்ககால வகுப்பு என்பது தொழில் அடிப்படையில்தான் இருந்தது. பிறப்பின் அடிப்படையில் இல்லை என்பதை ஆசிரியர் விளக்குகிறார். திருமூலர் ‘ஒன்றே குலம்’ எனக் கூறுவதால் அன்று சாதிப்பிரிவு இல்லை. தொழில் அடிப்படையில் வகுப்பு மட்டுமே இருந்தது என அறியலாம். இருப்பினும் 12, 13ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் சாதி வேறூன்றவில்லை. நாயக்கர், விசயநகரர் காலத்தில் சாதிப் படிநிலை, தீண்டாமை போன்றவை தோன்றின.

களப்பிரர் காலத்தில் ஏற்பட்ட பேரழிவைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் பார்ப்பனர் நிலக்கொடைபெறத்தொடங்கியதையும் பாலி, பிராகிருத, சமற்கிருத மொழி ஆதிக்கத்தையும் விளக்குகிறார். களப்பிரர் கலி அரசாக பார்ப்பனர் கொடையை அபகரித்ததாக வேள்விக்குடி செப்பேடு கூறுவது தவறு. களப்பிரர் பார்ப்பனர்களுக்கு தாராளமாக நிலத்தைப் பிரமதேயமாக வழங்கினர் என்பது வரலாறு என கணியன்பாலன் கூறுவது பூலாங்குரிச்சிக் கல்வெட்டால் உறுதிப்படுகிறது. வேள்விக்குடி செப்பேடு கற்பனைப்புனைவு என ஆசிரியர் கூறுவது சரியான கணிப்பு.

களப்பிரர் காலத்தில் கேரளாவில் பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்டது. சமற்கிருத மொழி செல்வாக்கு பெற்றது. இந்தச் சூழ்நிலையில் கேரளாவில் நம்பூதிரி பார்ப்பனர் குடியேறி செல்வாக்குப்பெற்றனர். பலலவர், கடம்ப அரசர் காலத்தில் கேரளாவில் பார்ப்பனர் குடியேறினர்.

பரசுராமன் கடலிலிருந்து புதிய நிலத்தை உருவாக்கி 14 கோத்திரம் சார்ந்த 36000 பார்ப்பனர்களுக்கு வழங்கியதாகக் கேரளோற்பத்தி கூறுகிறது. தொடர்ந்து பார்ப்பனக் குடியிருப்புகள் ஏற்பட்டன. சிறு குறு ஆட்சியாளர்கள் பார்ப்பனர் ஏற்பிசைவை விரும்பினர். கேரளாவில் பார்ப்பனர் மதிப்பும் செல்வாக்கும் உடைய சமூகமாக மாறினர். ஒருவர் அரசராக ஆகுவதற்கு பார்ப்பனரின் வேள்விச் சடங்கு தேவை என்ற நிலை ஏற்பட்டது.

நம்பூதிரி குடும்பத்தில் மூத்தவன் மட்டுமே நம்பூதிரிப் பெண்னைத் திருமணம் செய்ய உரிமையுடையவன். நாயர், அமபலவாசி போன்ற சமூகப்பெண்கள் நம்பூதிரி ஆண்களோடு உறவுகொள்ளும் “சம்பந்தம் முறை”, சில நாட்கள் மட்டுமே குடும்ப உறவு கொள்ளும் ‘கேட்டு கலியாணம்’, நாயர் அமபலவாசி சமூகத்தில் இருந்துவந்த ‘மறுமக்கள் தாயமுறை’ போன்ற பொருந்தா முறைகளை உண்டாக்கிப் பல குழப்பங்களை நம்பூதிரிகள் ஏற்படுத்தினர்.

நாயர் முதலிய சமூகப் பெண்ணோடு இரவில் உறவு கொள்ளும் நம்பூதிரி பகலில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பான். நாயர் முதலிய சமூகத்தார்க்கு குடும்பமோ, வாரிசோ இல்லாத நிலை. பிரமதேயம் முதலிய உடமைபெற்ற நம்பூதிரி பார்ப்பனன் கோயில் சொத்துக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டான்.

பார்ப்பனர் குழுக்கள் தங்கள் குடியிருப்புகளைக் கோயிலை மையமாகக் கொண்டு உருவாக்கி, கேரளாவின் பெரும்பகுதி நிலபுலன்களையும் செல்வவளத்தையும் உடைய, அரசியல் அதிகாரமும் சமூகச் செல்வாக்கும் கொண்ட ஆதிக்கச் சமூகமாக ஆகியது. ஆறுகள் பாயும் வளமான இடங்களில் பார்ப்பனக் குடியேற்றம் நடைபெற்றது. கேசவன் வேலுதட் எழுதிய நூலில் கூறப்பட்ட 32 பார்ப்பனக் குடியிருப்புகள் அன்றி ஆசிரியர் திருவத்தூர் கோயில் கல்வெட்டு, கொல்லூர் மடம் செப்பேடு மூலம் பார்ப்பனக் குடியிருப்பு ஏற்பட்டதைக் குறிப்பிடுகிறார்.

கோயிலில் தலைமை குரு தந்திரி, செயலாளர் போத்துவான், பூக்கள் தூய்மைப் பணிக்கு வாரியர் போன்றோர் இருந்தனர். நடனம் ஆடும்பெண், இசைப்பணி செய் சாக்கியர், நட்டுவனார் ஆகியோர் அம்பலவாசி எனப்பட்டனர். பார்ப்பனர்க்கு அடுத்த நிலையில் நாயர், பணிக்கர், சர்மா, மேனன் முதலியோர் இருந்தனர். இவர்கள் தனிச்சாதி ஆயினர். அமபலவாசிகள் கொட்டிகள் எனப்படும் மேளம் அடிப்பவர், நடனமாடும் பெண், இசைக்கலைஞர்/சாக்கியர் அனைவரும் தனிச்சாதி ஆயினர். சம்பந்தம் முறை உறவால் இவர்களில் நாயர் முதலிடம் பெற்றனர். படைத்தலைவர் சிலர் ஆட்சியர் ஆகி வர்மா எனவும் பணிக்கர் எனவும் தனிச்சாதி ஆயினர்.

நம்பூதிரி பார்ப்பனர்களுக்குள்ளும் உயர்ந்தவர் ஆத்யா, கீழ்நிலை ஆச்யா பிரிவுகள் ஏற்பட்டது. அகமணமுறையும், படிநிலையும் சாதியைப் பாதுகாத்தது. பார்ப்பனியக் கருத்தியலைப் புகுத்துவதும், சாதியைக் கட்டமைப்பதும் நம்பூதிரி பார்ப்பனர்களின் நோக்கமாக இருந்தது. அரசு அதிகாரமிக்க பார்ப்பனரின் நாலுதளி அமைப்பும் நடைமுறையில் இருந்தது. கேரளாவில் தாம் உருவாக்கிய அனைத்துச் சாதியினரையும் சூத்திரர் என்றே அழைத்தனர். சத்திரியர் என்பார் இல்லை.

சாதிகள் இயற்கையாகத் தோன்றவில்லை. அவை செயற்கையாக உருவாக்கப்பட்டவை. பார்ப்பனர் எங்கு செல்வாக்கு பெற்றார்களோ அங்கு சாதிகளும் படிநிலையும் தீண்டாமையும் தோன்றி விட்டது என்பது வரலாறு. அதற்காகவே பிரம்மசூத்திரம் முதல் மனுசுமிருதி வரையான நூல்கள் உருவாக்கப்பட்டன. பண்டைய நூல்களில் இடைச்செருகல்கள் செய்யப்பட்டது. தொழில்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டிருந்த குடி சாதியாக மாறியது.

சாதிச் சங்கங்கள் கட்சியாக மாறி ஆட்சியிலும் பங்கு பெறுகின்றனர். தேசிய தமிழ்த் தலைவர்கட்கு சாதிவர்ணம் பூசப்படுகிறது. இது தமிழ்நாட்டின் இன்றைய நிலை. விசம்போல் ஏறியுள்ள சாதியை மாற்ற என்ன வழி என்பதை நூலின் முத்தாய்ப்பாக நண்பர் பாலன் கூறுவது கவனிக்கத் தக்கது.

தொழிற்துறை வளர்ச்சி போதிய அளவு இல்லாதிருப்பது சாதிகள் இருப்பதற்கான முதற்காரணம். இன்றைய தமிழ்ச் சாதி தமிழ்க்குடியாக மாறவேண்டும். சமூக நல்லிணக்கம், சமத்துவம் அவற்றிடையே உருவாக வேண்டும், உயர்வுதாழ்வும் தீண்டாமையும் ஒழிய வேண்டும். கலந்து உண்ணுதல் பெருக வேண்டும்.

தமிழ்நாட்டில் 89 விழுக்காட்டு மக்கள் பேசும்மொழி தமிழ். தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய உணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியப் பெருமிதம் சாதிய உணர்வை மட்டுப்படுத்தி ஒற்றுமையை உருவாக்கும். இதற்கு இடையூறாக உள்ள ஆங்கிலவழிக் கல்வி மோகம் குறைந்து எங்கும் எதிலும் தமிழ் நிலவ வேண்டும்.

தமிழ், தமிழகம், தமிழர் உயர்வுக்கு ஆசிரியர் கணியன்பாலன் கூறும் மேற்கூறிய கடமைகள் நனவாக வேண்டும்.

சாதியின் தோற்றம் அதன் கொடிய விளைவுகள் பற்றிய ஓர் ஆவணமாக இந்நூல் திகழ்கிறது. சமூக இயல் பாடத்தில் இந்த அரிய ஒப்புயர்வற்ற நூல் இடம்பெற வேண்டும்.

இக்காலச் சமுதாயத்திற்கு இன்றைய தேவை கருதி இந்நூலைப் படைத்தளித்த நண்பர் கணியன்பாலன் அவர்களை மனமாரப் பாராட்டி மகிழ்கிறேன்.

- செ.இராசு, முனைவர், புலவர், முன்னாள் தொல்லியல், கல்வெட்டியல் துறைத் தலைவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

Pin It