"பாட்டையா"வில் ஆறு சிறு கதைகள். ஒவ்வொன்றும் ஆறு போல ஓடும் கதைக் களங்கள்.
கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் ஆசிரியரின் பலமே அது தான். தனித்து தெரியாத நிழல் போல கதை நெடுக வழி நடத்திக் கொண்டே வருகிறார். ஒரே மூச்சில் படித்து விட முடிகின்ற சின்ன நூல் தான். ஆனால் தாக்கம் பெரியது. தர்க்கம் பேசும் ஒவ்வொரு கதையும் தினமும் நடக்கும் வாழ்வின் தீவிரம்.
எளிய மனிதர்களின் சுலப வழிகளின் பாரம் பெரியது. அது பற்றி பேசும் ஒவ்வொரு கதையும் அபாரம். அபி சாரின் மொழி இலகு மொழி. நேரடியாக பேசிவிடும் வீறு நடை. பேருந்தில் காதும் காதும் வைத்தது போல பேசிக்கொண்டே சென்று விடும் தூரம்."பாட்டையா" என்ற முதல் கதை பறையைப் பற்றி பறை சாற்றுகிறது. பறை அடிப்பதில் இருக்கும் நுட்பம்... அது கொண்ட உப கருவிகளின் பெயர்கள்... அதன் நீட்சி... சதங்கையோடு கொண்ட ஆட்டம் என்று போகிற போக்கில் பறை பற்றிய எல்லாவற்றையும் வகுப்பெடுத்து விடுகிறார். பாட்டையா எனும் பெரும் மனிதனின் கலை எப்பேற்பட்டது... அனுபவமில்லாத நாயகனின் வஞ்சமும் அதன் மூலம் அவன் பயிலும் கலையின் உயரமும்... இறுதியில் என்னவாகிறது என்று இலை மிதக்கும் நதி போல காட்டி விடுகிறார். அதில் ஒரு காதல்... காதலின் வழியே அரங்கேறும் அன்பின் பிடிப்பு. காதலை கூட சூசகமாக சூட்சுமாக வெளிப்படுத்தும் நாயகி.. அவள் யார் என்ற கதையின் முடிச்சு.. என்று கதை எங்குமே தடைபடவில்லை.
தாகம் கொண்ட தேடலுக்கு பாட்டையாவின் ஆட்டமும் விடாப் பிடியும் பெரும் தீனி.
பறை எதற்கெல்லாம் அடிக்கப்படுகிறது.. அதை எப்படி அடிப்பது.. அதன் நெளிவு சுழிவு என்ன... என்று அந்த சத்தத்தை கூட எழுத்துக்கு மாற்றி இருக்கும் வலிமை.. அபி சாரின் எழுத்தனுபவம். கையில் துண்டை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் கால்களை அசைத்தபடியே பாட்டையா ஆடும் ஆட்டம்.. கலை நேர்மை. எந்த காரியத்துக்கு எந்த சத்தம் தர வேண்டும் என்ற லயத்தின் லாடம் பற்றிய விவரிப்பு அட்டகாசம். தாள கதி... இதற்கு இது தான் என்பது தான் வித்தைக்காரன் சித்து. வேகம் கூட விவேகமும் கூட வேண்டும் கலைக்கு. அடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவர் இன்னொருவரை கண்களாலே... உடல் மொழியாலே... சூசகமாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல அடியின் போக்கை கொண்டு போக வேண்டும் என்கிற நுட்பம் அலாதி. எடுத்துரைத்த பாங்கு சிலாகிப்பு.
அடுத்த கதை பெண்ணுரிமை பற்றியது. இஸ்லாம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக கால காலமாக நடக்கும் சில சம்பிரதாயங்களை முன் நிறுத்தி அதை திருத்தும் வேலையை ஒரு பெண்ணே செய்வதாக இருக்கிறது. வெகு அற்புதம். மாமியார் மருமகள் என்றாலே கண்றாவிகளாக சண்டையிட்டுக் கொண்டும் பனிப்போரில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டும் தான் இருக்க வேண்டுமா. மருமகளுக்காக நிற்கும் மாமியார். மாமியாருக்கு மகுடம் சூட்டும் மருமகள் என்று பெரும்பாடம்... கூடவே இஸ்லாம் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கம் குறித்த கேள்வியும் இந்த "சஹாபி"
"ஒப்பனைக்காரன்" திருநங்கை உலகத்தை பேசுகிறது. மிக மெல்லிய கோட்டில் எழுத பட்ட கதை இது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அர்த்தநாரியாக இருக்கும் நாயக பாத்திரப்படைப்பு வெகு நேர்த்தி. படபடவென கதைக்குள் இறங்கி விடும் மொழிக்கு அலங்காரம் தேவை இல்லை. இது அரிதாரம் பூசிய சிறுகதை வனப்பு. இறுதிக்காட்சியில் ஒரு சினிமா ஷாட். மறுநாளில் இருந்து ஊர்மக்கள் என்னாவாகிறார்கள் என்பது இயல்பென்றாலும்... இயல்பை சொல்லியும் எம் போன்ற வாசகனை திருப்தி படுத்தும் கலை அபிசாரின் கதை வளம்.
இந்தா... இப்ப வந்தரென் என்று சொல்லி ஓடி காணாமலே போன நண்பனை அறிவேன். எங்கும் எதிலும் உன்னை ஜெயிக்காமல் விட மாட்டேன் என்று சொல்லும் நண்பனை அறிவேன். சொல்வது ஒன்றுமாக செய்வது ஒன்றுமாக இருக்கும் நண்பனை அறிவேன். "மகிழம்பூ"வில் நட்புக்கு மாலையிடம் பாத்திரங்கள். நட்பாகவே வாழ்வை சூடிக்கொண்ட சித்திரங்கள். மனம் நெகிழ செய்த மகிழம்பூ ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான உறவு. நட்பு பாராட்டும் இந்த கதையில்... மெல்ல மெல்ல விடுபடும் திரை விலகும் காட்சிகள் அடுத்தடுத்து அட போட வைக்கும்.
யார் எங்கு போனாலும் அவரவர் மனம் தான் அவர். யார் எங்கு இருந்தாலும் அவரவர் குணம் தான் அவர்.... என்று "நெருப்புக்கு திசை இல்லை" போட்டு வாட்டி விட்டது. நேர்மையின் வீரியம் யாஸ்மினிடம். சாமியின் குளறுபடி அவன் அண்ணனிடம். மற்றபடி மீண்டும் ஒரு காதல் கதையும் உள்ளே இருக்கிறது.
"வினைப்பயன்" கதை... இந்த நூலில் சற்று வித்தியாசமானது. கதைக்களமே வேறு. படிக்க படிக்கவே யூகித்து விட்டாலும்... உன் கை ஒருவர் மீது படிக்கிறது என்றால் இன்னொரு கை உன் மீது படியும் என்று சுற்றி வளைத்து வாழ்வின் ஸ்திரத்தை சித்திரமாக்கி காட்டி விட்டார். இன்றைய குடும்ப வாழ்வின் பெரிய பிரச்சனை பற்றிய அறிவியல் தீர்வு அலசப்பட்டிருக்கிறது. அவசியம் தான்.
எப்படி பார்த்தாலும் "பாட்டையா" தான் எனக்கு இந்த நூலில் ஆகச் சிறந்த கதையாக தெரிகிறது.
முத்து வீரனின் ஓரடி இரண்டடி மூன்றடி....பறை அடிக்கேற்ப ஆடிக் கொண்டிருப்பது பாட்டையா மட்டுமா என்ன.. படித்துக் கொண்டிருக்கும் இந்த ஏட்டய்யாவும் தான். இந்த நாளை இனிய நாளாக்கிய "பாட்டையா"வுக்கு நன்றிகள். நூலை அனுப்பி வைத்து இந்த கொண்டாட்டத்தை எனக்களித்த எங்கள் அபி சாருக்கு வாழ்த்துகள்.
பேரன்புகள் சார்.
நூல் : பாட்டையா
ஆசிரியர் : பொள்ளாச்சி அபி
வெளியீடு : ஒரு துளிக் கவிதை - புதுவை
நூலுக்கு : 98946 02948
- கவிஜி