முன்னுரை

iraianbu bookசமகாலத்தில் வாழும் மக்களையும், நாட்டின் இறையாண்மையையும் உயிர்மூச்சாகக் கருதி ஒரு படைப்பாளன் தன் படைப்புகளை வெளியிடுகிறான். உலக உயிர்களின் ஆதாரமாய் விளங்குபவள் பெண். தன் வலிமையை குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் சமூக வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணிப்பவள் பெண். இன்றைய சூழலில் பெண்ணியம் பேசும் பெண்களும் சமூக அடக்குமுறைகளையும் அவள் சார்ந்த சமூக வேறுபாடுகளையும் கடந்தே குரல் கொடுத்து வருகின்றனர். வெ.இறையன்பு அவர்களின் சிறுகதைகளில் பெண்களின் நிலையை அவர்களின் பாத்திரப் படைப்புகளின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

உறவுகள்

               உறவுகள் என்பது ஒரு சமுதாயத்தின் சுருங்கிய அமைப்பாக செயல்படுவதாகும். அடிப்படையில் உறவுகள் இன்றி தமிழர் சமுதாய அமைப்பே இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உறவுகளிடையே வேறுபாட்டை உண்டாக்கலாம். ஆனால் அவை பொதுவெளியில் எப்போதும் வெற்றி பெறுவதில்லை. பெண்களின் மனநிலை ஒரு கண்ணாடி போல அனைத்து சமூகச் சிக்கல்களையும் ஆராய்ந்து உரிய தீர்வுகளையும் வெளிப்படுத்துவதாக அமையும். பெண்ணின் கண்ணையும் கழுத்தையும் கவர்ந்தவளாக அன்புக்குரியவளாக இருப்பவளே பெண் என்பதை பாரதிதாசன்

கற்றவளே ஒன்று சொல்வேன் உன்

கண்ணைக் கழுத்தைக் கவர்ந்தவன் நாதன்1

எனக் குறிப்பிடுகிறார். அத்தை என்னும் சிறுகதையில் வளமான வசதி படைத்த சகோதரியை உபசரிப்பதும், வறுமையில் உழலும் சகோதரியை நிராகரிப்பதும் அவரது சித்தரிப்பில் காண முடிகிறது. இதன்மூலம் ஆண்சமூகத்திடம் பெண்கள் என்ற பார்வையையும், பொருளாதர ஏற்றத்தாழ்வு மனநிலையும் புரையோடிப் போயிருப்பதை உணர்த்துகிறார். “அத்தை அடிக்கடி வாங்க அடுத்தமுறை நிறைய கதை சொல்லனும”;2 என்று பெண் குழந்தை கேட்பது சமூக மறுகட்டமைப்பாக அமைகிறது.

உளவியல்

மனிதன் தன் உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்தும் போது அது வேறுவகையில் மடைமாற்றம் செய்யப்படுகிறது. கணவன், மனைவி, பிள்ளைகள் என அவரவர்களைப் புரிந்து கொண்டு அனுசரித்து வாழ்வதே நல்ல இல்லறமாக அமையும். குடும்பத் தலைவி தன் குடும்ப சூழலைப் புரிந்துகொண்டு அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். “கிஷோர் வார்ததையை அளந்து பேசு அப்பா கிட்டயாவது மரியாதையா நடந்துக்க சரளா படபடத்தாள்”3 அன்னை தன் பிள்ளையை நல்ல குணம் நிறைந்தவனாக வளர்க்கப் பாடுபடுகிறாள். புிள்ளைகளின் உள்ளம் சார்ந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதர நிலையை புரிந்து கொண்டு, “ஒவ்வொரு பைசாவையும் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்னு பசங்களுக்குப் புரியனுங்க. அப்பதான் நம்மோட அருமை அவர்களுக்குத் தெரியும்”4 என்று புரிய வைக்க மயக்கம் என்ற கதையில் சரளா என்ற பாத்திரம் பெருமை கொள்ள வைக்கிறது.

புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்

புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர் 5

பாரதிதாசன் பெண்களைப்பற்றி கணவன்களின் கருத்தாகப் பதிவு செய்துள்ளதை மாற்றும் விதத்தில் மனைவியின் அன்பு மாறாமல் உபசரிக்கும் குணம் அவனது உடல்நிலை சரியில்லாத போது கணவனின் மனதில் நிழலாடுகிறது என்ற யதார்த்தத்தை உணர வைக்கிறார். அடம் பிடிக்கும் தன் மகனை திருத்த வேண்டும். மயக்கம் வந்ததாக நடித்து மனமாற்றம் ஏற்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

பொருளாதார சிந்தனைகள்

மனித வாழ்க்கைக்கு அடித்தளமே பொருளாதரம் தான். குடும்ப வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஆதாரமாக அமைவது பொருள். தன் தேவைகளையும் குடும்பத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் உண்டு. இந்தியா ஆன்மீகம் புதைந்திருக்கும் பூமி. இங்குப் பெண்களைக் கடவுளாக வணங்கும் நிலையும் உண்டு. அடிமையாகப் பார்க்கும் வழக்கமும் உண்டு. பெண்களின் சமூக, பொருளாதார நிலைகளே அவர்களை உயர்த்திட தடைக்கல்லாக இருப்பதாகக் கருதினார். அதனை தவிர்த்திட,

மனமெண்ணும் பெண்ணேவாழி நீ கேளாய்

நின்னொடு வாழுநெறியு நன் கறிந்திடேன்6

பெண்களின் வாழ்க்கையை அடிமை நிலையிலிருந்து விடுவித்து உயர்ந்த நிலைக்கு முன்னேற்றிட அரும்பாடுபட்டவர் பாரதி. கைமுறுக்குக்காரி என்னும் கதையில் கணவனை இழந்த பொன்னம்மா என்ற பெண் தன் பிள்ளைகளை குறையெதுவுமின்றி வளர்க்க முறுக்கு வியாபாரம் செய்வதை பல பெண்களுக்கு முன்னுதாரணமாகக் காட்டுகிறார். கல்வியறிவு இல்லாத பெண்களும் இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் தன் குடும்பத்தைக் காப்பற்ற உழைக்கத் தவறுவதில்லை.

ஆளுமைத் திறன்

‘ஆள்’ என்பதன் அடியாக பிறந்தது ஆளுமை. இஃது ஆளுதிறனைக் குறிக்கிறது. எண்ணம், உணர்வு, அறிவு, ஆற்றல் ஆகியவற்றை ஒழுங்கமைத்து தன்னைக் கட்டமைத்துக் கொள்ளுவதும் இடம், காலம், சூழல், விளைவு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு திறமாக அவற்றைக் கையாளுகின்ற விழிப்புணர்வையும், செயல் திறனையும் ஆளுமை என்று கூறுவது பொருந்தும். “உள்ளத்திறன் பெற்றுள்ள மனிதனுக்கும் அவன் வாழ்ந்து வளரும் சூழ்நிலைக்கும் இடைே நிகழும் இடைவினையின் விளைவாக எழும் தனித்தன்மையே அவனது ஆளுமை” எனப்படுகிறது என்பர் பிரீமென். “ஒரு மனிதன் தன் பாராம்பரியத்தாலும், சூழ்நிலையாலும் பெற்றுள்ள உள்ளார்ந்த மனப்போக்குகள், உளத்துடிப்புகள், செயல் முறைகள், உடல் வேட்கைகள் மற்றும் இயல்பூக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பே ஆளுமையாகும்” என்பர் உட்வொர்த். ஒரு மனிதன் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் இடம் அவன் வாழும் சூழ்நிலையும், உள்ள மனப்போக்குமே ஆகும்.

இல்லறத்தில் தொடங்கி அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முற்படக் கூடியவளாக பெண் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறாள். தன்னையும் தான் சார்ந்துள்ள சமுதாயத்தையும் மகிழ்ச்சியில் வைத்துக் கொள்ளும் வசீகரத் தன்மை கொண்டவளாக விளங்குகிறாள். “அவளைப் பார்க்கும் போதே அலுவலகம் உற்சாகப்படும். தொற்றிக்கொள்ளும் புன்னகையுடன் அவள் நடந்துபோகையில் பலரையும் உற்சாகம் பற்றிக் கொள்ளும்”7 காதல் என்பது கம்பீர ஆண்மை அவசியமென்று மாலினியின் காதலை அலட்சியப்படுத்தி நல்ல வரனை மணம் செய்து கொள்வது காதலை விடவும் நிச்சயிக்கப்படும் திருமணமே நிலைபெற்றதாக குறிப்பிடுகிறார். உலக உயிர்கள் அதனையொத்த பிறவற்றோடு பிணைந்து இணக்கமற வாழ வேண்டும். அதுவே அறிவின் மகுடம் என்பதை திருவள்ளுவர்;

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு8

என்ற குறள் மூலம் விளக்குகிறார். பேண்ணிடம் பணி, மேலாண்மை, நிர்வாகம் ஆகிய பல நிலைகளில் நேர்மை குணம் அவளை மேன்மையடையச் செய்யும் என்பதை உணர முடிகிறது.

துணிவுடன் பெண் செயல்பட வேண்டும். அச்சப்படக்கூடாது என்று பெண்ணின் மனதைரியத்தை வெளிப்படுத்துவதாக கதை அமைந்துள்ளது. “இந்த அபத்தத்தை நிறுத்துங்கள். போதும் உங்கள் போலித்தனம்”9 என்று அபர்னா என்ற கதாபாத்திரம் மூலம் பெண்களின் ஆளுமைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

முடிவுரை

சமூக நடப்புகளை வெளிப்படுத்துவதில் சிறுகதைகளின் பங்கு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. வெ.இறையன்பு அவர்களின் சிறுகதைகளில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட வேண்டும் என்பதையும், சமூக அக்கறை கொண்டவர்கள் பெண்கள் என்பதையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. குடும்ப உறவுகளைப் பேணிக் காத்து சமுதாய வளர்ச்சிக்கு பெண்கள் அளப்பறிய பங்காற்றுவதை இவரது சிறுகதைகள் மூலம் அறிய முடிகிறது.

சான்றெண் விளக்கம்

  1. பாரதிதாசன் - பாரதிதாசன் கவிதைகள் பக்-106
  2. வெ.இறையன்பு – நின்னினும் நல்லன் பக்-22
  3. மேலது
  4. மேலது
  5. பாரதிதாசன் - பாரதிதாசன் கவிதைகள் பக் - 97
  6. பாரதியாரின் காதல் தத்துவப் பாடல்கள் கவிதைகள் (ேஊடீர்) பக் -40
  7. வெ.இறையன்பு – நின்னினும் நல்லன் பக்- 14
  8. திருக்குறள் - எண் : 426
  9. வெ.இறையன்பு – நின்னினும் நல்லன் பக்-30

- கோ.பிரியா,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம்-7

Pin It