தொல்லியல்

Tholliyal Suvadugalஅண்மைக் காலமாகத் தமிழகத்தில் நடைபெற்றுவரும் தொல்லியல் ஆய்வுகளும் அகழ்வாய்வுகளும் பழந்தமிழ் நாட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டினையும் நாகரீக வளர்ச்சியினையும் கலை மேம்பாட்டினையும் கைத்தொழில் திறத்தினையும் பல ஆதாரங்களால் விளக்குகின்றன. இவற்றுள் சில ஆதாரங்கள் நமது பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப் பெற்றிருக்கிற செய்திகளோடு பெரிதும் ஒத்திருக்கின்றன. குடிமக்கள் மேற்கொண்டிருந்த பலவகைப்பட்ட கைத்தொழில்களின் நுணுக்கங்களும் வாழ்வியல் முறைமைகளும் இவ் அகழ்வாய்வுகளின்வழிப் புலப்பட்டன. அழகான ஒப்பனையுடன் உண்டாக்கப்பெற்ற மட்பாண்டங்கள், அரிய கலைத்திறன் கொண்ட சுடுமண் பொம்மைகள், பலவகையான இரும்புக் கருவிகள், கண்ணாடியாலும் பல வண்ணக் கற்களாலும் ஆக்கப்பட்ட அழகிய மணிகள், தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களால் ஆக்கப்பெற்ற சில பொருட்கள் முதலான தொல்பொருட்கள் இவ்அகழ்வாய்வுகளின் வழி நமக்குக் கிடைத்தன. அக்கால மக்கள் இப்பொருட்களை உண்டாக்கப் பயன்படுத்திய மூலப்பொருட்கள், கிடைத்தவிதம் அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுணுக்கங்கள், சாதனங்கள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் இப்பொருட்களின் வழி நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

'விழுப்புரம் மாவட்டத் தொல்லியல் சுவடுகள்' என்ற தலைப்பில் புதுச்சேரிப் பேராசிரியர் தமிழ்மாமணி முனைவர் நா. இளங்கோ அவர்கள் அரிய நூலொன்றினைப் படைத்துள்ளார். இந்நூலின் என்னுரையில் பேராசிரியர் தமது தொல்லியல் களப்பயணங்கள் குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார்.

தொல்லியல் வரலாறு சார்ந்த என்னுடைய களப்பயணங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. 1975 -1979ஆம் ஆண்டுகளில் நான் மயிலம் தமிழ்க் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்ற காலத்தில் எங்களுக்குக் கல்வெட்டுகள், செப்பேடுகள், நடுகற்கள், கோயிற்கலை தொடர்பான பாடங்கள் கல்விப் புலத்தில் இடம்பெற்றிருந்தன 1977இல் என்னுடைய தொல்லியல் பயணம் திருநாதர் குன்று நிசீதிகைக் கல்வெட்டு ஆய்விலும் பனைமலைக் கோயில் கோயிற்கலை ஆய்விலும் தொடங்கியது. தொடர்ந்து மயிலம் கல்லூரித் தோழர்களோடு விழுப்புரம், செஞ்சி, வந்தவாசிப் பகுதிகளில் களப்பயணங்கள் தொடர்நதன. 1983இல் தாகூர் கலைக் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தபின் களப் பயணங்களில் நான் என் மாணவர்களையும் இணைத்துக் கொண்டேன். 1977இல் தொடங்கிய பயணம் நாற்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்து இந்த 2022 லும் தொடர்கின்றது.

இவ்வாறு பல்வேறு தொல்லியல் களப்பயணங்களில் தமக்கு ஏற்பட்ட ஆய்வு அனுபவங்களையும் தாம்கண்ட இடங்களின் விபரங்களையும் ஆய்வு நோக்கில் அனைவரும் அறிந்து மகிழ அவர் நூலாக ஆக்கித்தந்திருப்பது பெருமைக்குரியதும் பாராட்டுதற்குரியதும் ஆகும்.

திருவக்கரை - கல்மரங்கள்

திருவக்கரையின் நில அமைப்பைக் குறித்த ஆய்வுத் தகவல்கள், கல்வெட்டுகள், தேவராம், திருப்புகழ்ச் சான்றுகளின் வழியாகத் திருவக்கரையின் ஊர்ப்பெயராய்வு என்று தொடங்கும் கட்டுரை 1985இல் திருவக்கரையில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வு பற்றிய செய்திகளோடு தொடர்கின்றது. மேலும் அங்குள்ள கற்றளிப் பெருமானடிகள் உறையும் கோயிலைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அக்கோயிலின் தனிச்சிறப்புகளை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கின்றது.

கல்மரங்கள் தொல்லுயிரின் எச்சங்களே என்பதை அறிவியல் ஆய்வு உண்மைகளின் வழியாக விவரிப்பதோடு ஆய்வாளர்கள் கல்மரங்களின் காலத்தைக் குவார்ட்டர்னரிக் காலம் என்று குறிப்பிடுவதையும் பதிவு செய்கின்றார். அறிவியல் அணுகுமுறையிலான இக்கட்டுரை அனைவரும் பயன்பெறும் வகையில் நுணுக்கமான தகவல்களோடு அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது.

கானமர்செல்வி என்ற கொற்றவை.

மனிதனுடைய அச்சத்தின் காரணமாகக் கடவுள் பிறந்தார் என்று தொடங்கி சிலப்பதிகாரம், சங்க நூல்களாகிய அகநானூறு, பொருநராற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல் போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள கொற்றவையே தமிழர்களின் முதல் தாய்த்தெய்வம் என்பதை விளக்கிச் சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது. மேலே கூறிய தாய்த்தெய்வம் தோன்றிய விதத்தை மிகவிரிவாக எடுத்துக்கூறி பிரம்மாண்டச் சிற்பம் உடையார்நத்தம் என்னும் சிற்றூரின் காப்புக்காட்டுப் பகுதியில் இன்றும் உள்ளது என்பதையும் இதனை ஒத்ததோர் சிற்பத்தைத் தாணிப்பாடி மோட்டூரிலும் காணலாம் என்பதையும் விளக்கியுள்ளார், ஐயா அவர்கள்.

பெருங்கற்காலக் கல்வட்டங்களை ஒட்டிய இடத்தில் உடையார்நத்தம், தாணிப்பாடி மோட்டூர் ஆகிய இரண்டு இடங்களிலும் தாய்த் தெய்வத் தொல்சிற்பங்கள் கிடைப்பதனைக் கொண்டு நாம் சில முடிவுகளுக்கு வர இயலும் என்று கூறி ஐந்து கருதுகோள்களைக் கூறுகிறார்.

  1. மக்கள் வாழ்விடங்களுக்குப் புறத்தே காட்டுப் பகுதியில் இறந்தவர்கள் தாழியிலிட்டுப் புதைக்கப்பட்டனர்.
  2. தாழிகள் புதைக்கப்பட்ட இடத்தில் கல்வட்டங்கள் முதலான பெருங்கல் அடையாளங்கள் உருவாக்கப் பட்டன..
  3. பெருங்கல் அடையாளங்களைச் சார்ந்து மனித உருவொத்த வழிபாட்டுப் பாறைகள், சிற்பங்களாக நிறுவப்பட்டன.
  4. நிறுவப்பட்ட மனித உருவொத்த பாறைச் சிற்பங்கள் வழிபாடு மற்றும் சடங்குகளுக்கு உட்படுத்தப் பட்டன.
  5. குறுங்காடுகளில் நிறுவப்பட்ட மனித உருவொத்த பாறைகள் பெண்உருவாக, தாய்த்தெய்வமாக வழிபடப்பட்டன.

இக்கருத்துக்கள் பல களப்பயணங்களின் ஆழங்கால் பட்டமையின் விளைவாகத் தோன்றிய கருத்துக்களாகும். பேராசிரியரைப் பாராட்டுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.

கீழ்வாலை ஓவியங்கள்

கீழ்வாலை ஓவியங்கள் 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் நாள் அனந்தபுரம் கோ.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வோவியங்கள் தமிழ்நாட்டு ஆனைமலையில் உள்ள ஓவியங்களைப் போலவும் மத்தியபிரதேசம் ஓளரங்காபாத்துக்கு அண்மையில் பிம்டெக் என்னும் இடத்தில் காணப்படும் ஓவியங்களைப் போலவும் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தென்னிந்தியாவில் இவ்வாறான ஓவியங்கள் காணப் பெறுவது வியப்புக்குரியதாகும். இக்கட்டுரையில் நூலாசிரியர் அவர்கள் தமிழகத்தின் புதிய கற்காலம், பெருங்கற்காலம் இரண்டையும் விளக்கி, கரிக்கையூர், வெள்ளரிக் கோம்பை, செத்தவரை, வேட்டைக்காரன் மலை போன்ற ஊர்களில் ஒரே வண்ணத்தில் ஓவியங்கள் வரையப் பெற்றுள்ளதைச் சொல்லி, பாறை ஓவியங்கள் எங்கெங்குக் கிடைத்தன என்பதையும் விளக்கியுள்ளார். மேலும் புதுவை மாநில ஆட்சித் தலைவராக இருந்த திரு. பி.எல். சாமி அவர்கள் கீழ்வாலை ஓவியத் தொகுப்பில் உள்ள குறியீடுகள் சிந்துவெளி எழுத்துக் குறியீடுகளே என்று அறிவித்ததையும் விளக்கமாகக் குறிப்பிட்டு உள்ளதும் பாராட்டுதற்குரியது ஆகும்.

 அறிஞர்கள் திரு. இராசு பவுன்துரை, திரு. ஐராவதம் மகாதேவன், திரு. டாக்டர் கே.வி. இராமன், திரு. இரா நாகசாமி, ஆய்வறிஞர் திரு இரா மதிவாணன் ஆகியோர் கருத்துக்களைக் கூறியதோடு ஹீராஸ் பாதிரியார், பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலா, ரஷ்ய நாட்டு நார்சோ, அறிஞர் எச்.டி. சங்காலியா, சேவியர் தனிநாயகம் அடிகளார் ஆகிய அறிஞர்களின் கருத்துக்களையும் எடுத்துக் கூறியுள்ளார். படங்களைச் சேர்த்திருப்பது மேலும் சிறப்பாக உள்ளது. பாராட்டுகள்.

பெருமுக்கல் வரலாறும் தொன்மையும்,

பேராசிரியர், இக்கட்டுரையில் பெருமுக்கல் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள அரிய செய்திகள் பலவற்றை எடுத்துக்கூறி விளக்கம் அளித்துள்ளார். தொல்லியல் துறை இயக்குனர், ஐராவதம் மகாதேவன், பூரணச் சந்திர சிவா மூவரும் பாறைக் கற்செதுக்கு ஓவியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நான்கு எழுத்துக்களைப் படித்தமையை எடுத்துக்கூறி, ஐயா அவர்கள் அதிலுள்ள மூன்று எழுத்துக்கள் தமிழி எழுத்துக்களே என்று உறுதியாகக் கூறுவது சிறப்புடையதாகும். பெருமுக்கல் கல்வெட்டுகள் அறுபதின் கருத்துக்களையும் விளக்கமாகவும் விரிவாகவும் குறிப்பிட்டுள்ளமை ஆய்வாளர்களுக்குப் பயன்படும் செயலாகும். அங்குள்ள கோட்டையைக் குறித்த ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் செய்தியையும் விளக்கியுள்ளார். ஆசீவக மதம் பற்றிப் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் கருத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது பாராட்டுதற்குரியது.

தொண்டூர், நெகனூர்ப்பட்டி

தொண்டூர், நெகனூர்ப்பட்டி கல்வெட்டுகள் தமிழிக் கல்வெட்டுகளே. திருநாதர் குன்று, பறையம்பட்டு ஆகிய இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகள் வட்டெழுத்துக்களின் தொடக்கக் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறியிருப்பது இளம் ஆய்வாளர்களுக்கு எம்முறையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. விண்ணாம்பாறை திருமாலையும் காஞ்சிபுரம் சொன்ன வண்ணம் செய்த பெருமாளையும் ஒப்பிட்டுக் காட்டி ஏனைய பள்ளிகொண்ட நிலையையும் விளக்கியிருப்பது பாராட்டுதற்குரியது.

நெகனூர்ப்பட்டிக் கல்வெட்டின் முதல் வரியின் இறுதி எழுத்தினை ஆய்வாளர் சு.இராசவேலு அவர்கள் -ழ்- என்பதை -ய்- என வாசித்துள்ளார். ஆய்வாளர் எம்.டி. சம்பத் அவர்கள் இரண்டாம் வரியின் இறுதி எழுத்தை -உ- என்று படித்துள்ளார், ஆனால் அங்கு இருப்பது -ரு- வாகும். இவற்றை எடுத்துக் கூறி விளக்கி இருப்பது சிறப்புடையதாகும். நூலின் இப்பகுதி இளம் ஆய்வாளர்கள் பலரின் நூலையும் கட்டுரையையும் படித்துத் திருத்தமாக ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. சேஷாத்திரி ஸ்ரீதரன் பொருள்கொண்ட விதம் தவறுடைத்து என்று பேராசிரியர் இளங்கோ ஐயா அவர்கள் கூறுவது மிகவும் சரியே. சூடாமணி நிகண்டில் “கந்தி“ என்பது பெண்துறவியைக் குறிக்கிறது. பிராமணப் பெண்ணைக் குறிக்கவில்லை

'திருநாதர்குன்று' எனும் கட்டுரையின் தொடக்கத்தில் செஞ்சிப் பகுதியில் சமணம் என்ற தலைப்பில் நூலாசிரியர் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளார். இங்கு இடம்பெற்றுள்ள நிசீதிகைக் கல்வெட்டில்தான் முதன்முதலில் -ஐ- என்ற உயிரெழுத்து பயன்படுத்தப் பெற்றதையும் மெய்யெழுத்துக்களில் புள்ளி இடப்பெற்றுள்ளதையும் விளக்கமாக் குறித்துள்ளார். 'மண்டகப்பட்டு முதல் குடைவரை' என்ற கட்டுரை அங்கிருக்கும் கல்வெட்டு, கட்டடக் கலையின் நுட்பங்கள், வரைபடம், குடைவரையின் வளர்ச்சி, கல்வெட்டின் பொருள் அனைத்தையும் தெளிவாக விளக்கி எழுதியுள்ளமை பாராட்டுக்குரியது. 'பனைமலை மலைக்கோயில்' கட்டுரை, பனைமலைக்கு நேரில் சென்று பார்த்த உணர்வைத் தருகிறது. சிற்பம், கட்டடக்கலை, கொற்றவை, ஓவியம், பல்லவக் கிரந்தம் அனைத்தையும் விளக்கமாகவும் விரிவாகவும் எழுதியுள்ளார்.

'திருவிழிச்சில்' கட்டுரை, சாளுவன் குப்பம் – திருவிழிச்சில் முருகன் கோயில் தென்பட்டவிதம் குறித்தும் அகழ்வாய்வு மேற்கொண்டோர் யார்? யார்? அதனால் வெளிப்பட்டவை, கலைநேர்த்தி மிக்க சுண்ணப் பூச்சுடன் கூடிய மண்சிலையின் பகுதிகள், குரவைக் கூத்தாடும் பெண்களைக் கொண்டுள்ள சுடுமண் பலகை, சுடுமண் நந்தி, பச்சைக்கல் சிவலிங்கம், கருங்கல் வேல் இவையெல்லாம் திருவிழிச்சில் அகழ்வாய்வில் கிடைத்தன என்பதனை விளக்கியதோடு அங்குள்ள கல்வெட்டு குறித்தும் தொல்லியல் அறிஞர்கள் பங்கு கொண்டமை குறித்தும் விடாமல் சிறப்பாக எழுதியுள்ளார்.

நிறைவாக இந்நூலில்

  1. திருவக்கரையின் நில அமைப்பு, கல்மரங்களின் காலம், மரங்கள் கல்லாக மாற்றம்பெற்றமை குறித்த அறிவியல் விளக்கங்கள், கல்மரங்களின் தனிச்சிறப்பு இவற்றை விவரிப்பதோடு திருவக்கரை ஊர்ப்பெயராய்வு, கோயில் வரலாறு, கோயிலின் தனிச்சிறப்புகள் எனப் பல அரிய தகவல்களோடு இக்கட்டுரை அமைந்துள்ளது.
  2. தாய்த்தெய்வத் தோற்றம், இலக்கியங்களில் பயின்று வருபவை, இன்று நமக்குக் கிடைக்கும் விசிறிப்பாறையே தமிழர்களின் தொன்மைத் தாய்த் தெய்வம் எனச்சொல்லி நிறைவு செய்கிறார்.
  3. உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஒன்றான சிந்துவெளி நாகரிகம் என்பது தமிழர்களின் நாகரீகமே என்பது ஹீராஸ் பாதிரியார், பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலா, ரஷ்ய நாட்டு அறிஞர் நார்சோ, எச்.டி.சங்காலியா, சேவியர் தனிநாயகம் அடிகளார் முதலான அறிஞர்களின் கருத்தாகும். என்பதை எடுத்துச் சொல்லி அவர்கள் கருத்துக்கு வலு சேர்க்கிறது கீழ்வாலை ஓவியத்தில் உள்ள குறியீடுகள் என்று நிறைவு செய்கிறார்.
  4. பெருமுக்கல் கல்வெட்டுகள், கீறல் ஓவியங்கள் அறுபது கல்வெட்டுகளின் கருத்துரைகள் என அனைத்தையும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார் . ஆசீவகத்திற்கும் பெருமுக்கலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கருதுகோள்களாகும் என்று கூறி நிறைவு செய்கிறார்.
  5. தொண்டூர், நெகனூர்ப்பட்டி, செஞ்சி இங்கெல்லாம் சமணம் பரவியிருந்த தன்மைகளையும் சமணம் குறித்துப் பல தகவல்களையும் விளக்கமாகவும் விரிவாகவும் மிகவும் சுவைபட எழுதி உள்ளது பாராட்டுதற்குரியது.
  6. திருநாதர் குன்றில் மூன்று கல்வெட்டுகள் கிடைத்தன. இக்குன்று ஆயிரத்து எழுநூறு ஆண்டுப் பழைமையுடைய வரலாற்றைக் கொண்டது என்று கூறி, கல்வெட்டுகள் சொல்லும் செய்திகளை விளக்குகிறார். திருநாதர் குன்று தமிழகச் சமண சமய வரலாற்றிலும் தமிழி என்ற தொல்லியல் வரலாற்றிலும் மிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது என்பதை எடுத்துக் கூறியுள்ளார். இங்குதான் கல்வெட்டில் -ஐ- என்ற எழுத்தைப் பார்க்கிறோம் என்பதனையும் இத்துடன் 24 தீர்த்தங்கரர்களைப் புடைப்புச் சிற்பமாக ஒரே இடத்தில் வெட்டுவித்த கலைக் கருவூலமாகும் என்று நிறைவு செய்கிறார்.
  7. செங்கல் இல்லாமலும் மரம் இல்லாமலும் உலோகம் இல்லாமலும் சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா, சிவன், விஷ்ணுவிற்கும் விசித்திர சித்தன் என்னும் முதல் மகேந்திரவர்மனால் இந்த இலட்சிதன் குடைவரைக் கோயில் அமைக்கப் பெற்றது என்பதை அங்குள்ள கல்வெட்டால் அறிகிறோம். சங்க கால மன்னர்களின் கோயில்கள், மகேந்திரவர்மனின் பட்டப்பெயர்கள், குடைவரையின் கட்டடக்கலை நுட்பங்கள், பல்லவர்களின் கலைகள் அனைத்தையும் விளக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  8. இராஜசிம்மன் பனைமலைக் கோயில் குறித்துச் சிறப்பான விளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளதோடு இவன் எங்கெங்குக் கோயில் கட்டினான் என்பதையும் கோயிற்கலைகள் குறித்தும் ஓவியம் குறித்தும் கோயில் கலை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதையும் நீர்நிலை ஏற்படுத்தியதையும் வெகு சிறப்பாக எழுதியுள்ளார்.
  9. சாளுவன்குப்பம் என்ற திருவிழிச்சில் முருகன் கோயிலை அகழ்வாய்வு வழியாக வெளிக்கொணர்ந்தமை, ஆய்வாளர்களின் பெயர்கள், அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி நிறைவு செய்கின்றார்.

தமிழ்மாமணி முனைவர் நா.இளங்கோ ஐயா அவர்களைக் கடந்த 50 ஆண்டுகளாக அறிவேன், சிறந்த பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், சிறப்பாக வழக்காடு மன்றங்களை நடத்துபவர். அவரது ஆய்வரங்கப் பொழிவுகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. கேட்டார் பிணிக்கும் சொல்லாற்றலோடும் எளிமையும் இனிமையும் வாய்ந்த அழகுத்தமிழில் அவையினர் மனம்கொள்ளும் வகையிலும் பேசுவதில் அவர் வல்லவர். அவரின் சொற்பொழிவுகள் சிறந்த கருத்துக்களைக் கொண்ட கருத்துக் கருவூலமாய்த் திகழும் என்பது அனைவரும் அறிந்ததே. அவர், புதுவை, தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று தமிழ்த் தொண்டு ஆற்றுபவர்.

காஞ்சி மாமுனிவர் பட்டமேற் படிப்பு மையத் தமிழ்த்துறையிலும், தாகூர் கலைக் கல்லூரியிலும் வரலாற்றுப் பேரவை நடத்தும் கூட்டங்களிலும் என்னைப் பங்கு கொள்ளச் செய்தவர். இந்நிகழ்ச்சிகளுக்கு உரிய நன்றியையும் வணக்கத்தையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

 அனைத்துக்கும் மேலாகத் தம் மாணாக்கர்கள் மீது அன்பும் பாசமும் உடையவர். எப்பொழுதும் மாணவர்களின் நலனையே விழையும் பேராசிரியர் நா.இளங்கோ, மாணவர்கள் உடனான தமது வரலாற்றுப் பயண அனுபவங்களின் பிழிவாக இந்நூலை வெகு சிறப்பாக எழுதியுள்ளார். அரிய வரலாறு மற்றும் தொல்லியல் தகவல்களின் திரட்டாக ஒவ்வொரு கட்டுரையும் முழுமை பெற்றுள்ளது. அவருடைய பேச்சைக் கேட்டு நான் எப்படிப்பட்ட உணர்வுவைப் பெற்றேனோ அதைப் போன்றே இந்நூலைப் படிக்கும்போதும் உணர்வு பெற்றேன். ஊன்றிப் படித்தேன், சுவைத்தேன். உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை. நா.இளங்கோ ஐயா அவர்கள் திருமாலவன் திருவருளால் நலம் பல பெற்று வாழ்க! மேலும் நூல்களைத் தருக! வளர்க அவர்தம் தமிழ்த் தொண்டு!

- புலவர் ந.வேங்கடேசன், கல்வெட்டு ஆய்வறிஞர், புதுச்சேரி

Pin It